kausalya 500ரசனை என்பதே காலத்துக்குத் தகுந்தாற் போல மாறிக் கொண்டே இருப்பது தான். 
 
இந்த மானுட வாழ்வில் ஒன்றை விட ஒன்று மேலானதாகவே இருக்கும். மனதின் வழியே நோக்குகையில் அது மாயத்தின் வழியே நம்மை நோக்கும் என்பது மனோதத்துவம். எல்லாவற்றையும் தாண்டி நாம் என்று நம்பக்கூடிய நம் ஞாபகத்தில் கடந்த கால நினைவுகளின் தாக்கம் தான் எப்போதும் நம்மை இயங்க வைப்பதாக நம்புகிறேன். பார்வை, ரசனை, விருப்பம், கோபம், ஆசை, வெறி, காமம், குரோதம், வக்கிரம், காதல், நட்பு, கலவி என்று அது மாறிக் கொண்டே வரும். அப்படி மாறிக் கொண்டே வருவதில் தான் அதன் சுவாரஸ்யத் தன்மை தலைமறைவாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. 
 
"சிண்ட்ரெல்லா" என்ற இந்தத் தொடரில் எனக்குப் பிடித்த, என்னை பாதித்த, என்னை அலைக்கழித்த, என் தனிமைகளை காலாட்டிக் கொண்டே நகர்த்திய பெண் நட்சத்திரங்கள் பற்றி தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தேவிகாவில் ஆரம்பித்து சீதாவுக்கு வந்து இளவரசியில் நின்று கனகாவில் முகாமிட்டு ரம்பாவில் ரசனையிட்டு இப்போது கௌசல்யாவுக்கு வந்திருக்கிறது. சினிமாவின் தாக்கம் இன்றி என் வாழ்வில் எதுவுமே நிகழ்ந்ததில்லை. சினிமாவோடு ஒன்றியே தான் என் வாழ்வு அமைந்திருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் மீது கொண்டுள்ள மோகம் எனக்கு அளப்பரிய சக்தியைத் தருகிறது. சினிமா பார்த்து கெட்டுப் போனேன் என்று யாராவது சொன்னால் அது வடிகட்டிய பொய். கெட்டுப் போவது என்று ஒன்றே இல்லை. எல்லாம் பழக்கம், வழக்கம் தான். உலகப் பண்பாட்டை, பல்வேறுபட்ட கலாச்சாரங்களை, நியதிகளை, நீதிகளை, ரசனைகளை, படைப்புகளை, கிரியேட்டிவ் தன்மையை, இந்த வாழ்வின் பொருள் பதிந்த பிடிப்புகளை, வற‌ட்சிகளின் மேற்பரப்பு தாண்டிய ஈரத் தேடல்களை என்று நுட்பத்தின் திறவுகோல்களை எல்லாம் நான் சினிமாவில் இருந்து தான் கற்றுக் கொண்டேன். ஆக, இக் கட்டுரை தகும்.
 
கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கிறேன். இரண்டாம் நாள் என்று நினைக்கிறேன். ஒரு சீனியர் கும்பல் என்னை அழைத்து ராக்கிங் செய்கிறார்கள். அப்போது நிகழ்ந்த அடுத்தடுத்த பேச்சு, பிடித்த நடிகைக்கு வந்து நின்றது. நான் 'கௌசல்யா' என்று கூறினேன். அப்போ கௌசல்யா டேபில் சொல்லு என்று சொல்லி ஹேஹேவென கத்த ஆரம்பித்து விட்டார்கள். கரும்பு சாறு குடிக்க கசக்குமா...? நான், ஒன்னு கௌசல்யா, கௌசல்யா..... ரெண்டு கௌசல்யா கௌசல்யா கௌசல்யா.....மூணு கௌசல்யா கௌசல்யா கௌசல்யா கௌசல்யா என்று சொல்லிக் கொண்டே செல்கிறேன். அவர்கள் போதும் என்ற பிறகும் எனக்குப் போதவில்லை. நான் கௌசல்யாவை நிறுத்தவில்லை. இன்று வரை அந்தப் பெண்ணின் மீது கொண்ட மோகம் குறையவே இல்லை. பார்வை நகர்ந்திருந்தாலும் மனதுக்குள் அந்த சிணுக் நடை ஓயாமல் குட்டி நடை போட்டுக் கொண்டேயிருக்கிறது.
 
"ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள்....... உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா...." என்று ஒரு கல்யாண ஊர்வல நிகழ்வில் முரளி பாடுகையில்.... பாட்டின் ஆரம்ப வரி கேட்டவுடனேயே மணமகளோடு பேசிக் கொண்டு வரும் கௌசல்யா உள்ளே இருக்கும் தேடலையும், காதலையும் நொடியில் முகத்தில் கொண்டு வந்து, தடுமாறி, அமைதியாகி தவிப்புக்குள் செல்கையில் பதறி விடும் திரை. "காலமெல்லாம் காதல் வாழ்க" படத்தில் முரளியோடு சேர்ந்து நாமும் பதறியதை நான் நிஜமாகவே நம்புகிறேன். கௌசல்யா மாதிரி பெண்ணுக்கு அப்படி பதறிக் காத்திருப்பது தான் நியாயம்.
 
kausalya 455கோவையில் நான் பார்த்த முதல் படம் "பிரியமுடன்". அதில் விஜய் கிட்டத்தட்ட வில்லன் மாதிரி தான். ஆன்டி ஹீரோ. அவரிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் கௌசல்யாவை காலத்துக்கும் மறக்க முடியாது. கண்களில் அதே மென்சோகம் மின்ன சற்று பெரிய உதட்டில் எப்போது வேண்டுமானாலும் வந்து விடும் அழுகையோடு அந்த சதுர முகத்தை......இதழோரம் தவழும் சிறுபுன்னகையை........சற்று முன்னோக்கி இருக்கும் நெற்றி கொண்ட சிறுமி சாயலை காலத்துக்கும் சிலையாக்கிக் கொண்டே இருக்கலாம். சிற்பத்தின் நெளிவு சுளிவுகளோடு அமைந்திருக்கும் தோற்றம் அவரது. 
 
"ஆகாச வானில் நீயே என் ராணி... சோஜா சோஜா...சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே.......சோஜா சோஜா...சோஜா " 
 
சோகம் ததும்பும் இந்த பாடலில்... அவரவர் வீட்டில் ஒரு ஏஞ்சல் இருப்பாளே அப்படி ஒரு நெருக்கம் கௌசல்யாவிடம் வரும். அதுவும் மூக்குத்தி குத்தி இருக்கும் கௌசல்யாவின் முகம் பார்ப்பது.........பூந்தோட்டத்தில் காவல் காப்பது போல. அத்தனை மினுமினுப்பு அது. வானத்தை பளிச்சென துடைத்தபின் தோன்றும் கற்பனைக்கு ஈடு. எல்லா உடைக்கும் பொருந்தும் உடல் வாகு. எல்லை கடந்தும் கடத்தி வரலாம் அவள் உடைந்த பாகு. பிங்க் நிற உதட்டுக்காரி. பியானோ இசையை ஒளித்து வைத்திருக்கும் அவள் கண் சிமிட்டல்கள். 
 
அதை, " நதியே.......நைல் நதியே......" பாடலில் பிரபுதேவாவுடன் ஆடுகையில் கவனிக்க முடியும். ஆட்டத்தில் இடையில் கொஞ்சல், ரசனை, பொய்க் கோபம், இள மஞ்சள் மினுமினுப்பு, தேடல், குறும்பு என வித்தியாசமான வேறு வேறு முக பாவனைகள் கொடுக்கையில், திரை திணற முத்தமிடும் தீர்க்கம் வாய்ந்த தவிப்பு எனக்கிருந்திருக்கிறது.
 
'நேருக்கு நேர்' படத்தில் விஜயின் காதலை எதிர்கொள்ளும் ஆரம்பக் காட்சிகளில் குட்டைப் பாவாடையில் அந்த நடையும்.....சொல்லும் பொய்யும்.. பார்வையும்.. அகிலா.... அகிலா என்ற அப்பாடலில் காட்டும் பாவனைகளும், உடல் அசைவுகளும் அந்தி மழைக்குப் பின் பெய்யும் ஆதி மழை. விஜய்க்கு ஜோடியாக நடித்த அதே கௌசல்யா, "திருமலை" படத்தில் கிட்டத்தட்ட அண்ணி கதாபாத்திரத்தில் நடித்ததையெல்லாம் நான் வன்மையாகக் கண்டித்திருக்கிறேன். அதுவும் சீரியலுக்கு வந்ததையெல்லாம் எட்டி நின்று, வாழ்வின் பிசிறுகள் என்று வெட்டி வீழ்த்தி இருக்கிறேன்.
 
நல்ல உயரம். என் முன்னாள் தோழி எமிலியின் சாயலை ஒத்திருக்கும் கௌசல்யாவின் மொத்தமும். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே மாதிரி சதுர முகம். உயரத்திலும் அதே... அளவு. ஒரு நாள் கௌசல்யாவை டீவியில் பார்த்து விட்டு ஆர்வம் தாங்காமல் என் அம்மாவிடமே....."இந்தப் புள்ள அப்படி சிரிக்கும்...... இந்தப் புள்ள அப்டி ஆடும்... இப்டி பேசும்.....சினுக்கு சினுக்குனு நடக்கும் " என்று பேசி இருக்கிறேன். அம்மா சிரித்துக் கொண்டே சென்று விட்டார். பிறகு பல வருடங்களுக்குப் பின் அந்த நிகழ்வை யோசிக்கையில்தான், ஒரு பெண்ணின் மீதான தீரா ரசனைக்கு வெட்கம் இல்லை, பயம் இல்லை, உள்ளுணர்வு மட்டுமே என்று புரிந்து கொண்டேன்.
 
"கண்டு பிடி அவனைக் கண்டு பிடி..." பாடலில்... அசைவற்று அமர்ந்திருக்கிறேன். "இத்தனை அழகாய் இவள் இருந்தால் எத்தனை கவிதைகள் நான் எழுதுவது..." என்று என்னை நானே அசைத்துமிருக்கிறேன். 
 
"முகம் கொஞ்சம் நினைவிருக்கு.....அவன் முகவரி தெரியவில்லை....
முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய்த் திருடவில்லை... "
 
அதே பாடலின் இவ்வரிகளை கவிதையின் உச்சநிலை என்றே சொல்லலாம். அந்த வரிக்கு கௌசல்யா வாயசைத்ததில் அந்த வரிகளில் எல்லாம் தேன் சிந்தும் சித்தாந்தம் தானாகவே அமைந்து கொண்டதை வேறு எப்படி சொல்வது. ஜன்னலைத் திறந்தால் எதிர் வீட்டில் ஒரு மூக்குத்திப் பெண் இருப்பாளே, அப்படி ஒருத்தி தான் இந்தக் கௌசல்யா. பின்னிரவில் தூக்கம் வராமல் மொட்டை மாடியில் நடை போடும் ஹாஸ்டல் பெண்ணின் சாயலுக்கு கௌசல்யா தான் பொருத்தம்.
 
புடவைத் தலைப்பை கையில் படர விட்டு எப்போதும் மலை முகடுகளில்... பூந்தோட்டங்களில்.. காலைப் பனிக்குள்......ஊசி இலைக் காடுகளில்....தனித்துச் செல்லும் சாலைகளில்.... ஒரு மாயத் தன்மையோடு நடந்து கொண்டே இருக்கும் கௌசல்யாவை தேடிக் கொண்டே இருப்பது மெல்லிசைக்கு நிகர். அலைபேசியை எடுக்காமல் அடிக்க விட்டுக் கொண்டே இருக்கும் திக் திக் நொடிகளில்... வண்ணங்களில் சிரிக்கும் நினைவுகளை வாரி இறைக்கும் கௌசல்யாவுக்கு கடவுளின் சாயலும். 
 
ஒரு மணி அடித்தால் மட்டும் அல்ல, மறு மணி அடித்தாலும் உன் ஞாபகம் தான் கௌசல்யா... 
 
"வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை" என்ற வரி அவருக்கு இப்போதும் பொருந்தும். கொஞ்சம் வயதாகி, குண்டாகி..... சினிமாத் திரையின் வாசலில் வேண்டுமானால் மறைந்திருக்கலாம். என்னைப் போன்ற அழகிகள் கொள்ளைக்காரனின் நினைவுகளில் ஒருபோதும் மறைவதில்லை.
 
சிண்ட்ரெல்லாக்களை காலத்தின் படிக்கட்டுகளில் அப்படி அப்படியே விட்டு விட்டு வந்து விட வேண்டும். அதைத்தான் சிண்ட்ரெல்லாக்களும் விரும்புகிறார்கள்.
 
"அழகான சூரியன் கண்ணால் பேச... அலங்கார வெண்ணிலா கைகள் சேர....." 
 
சிண்ட்ரெல்லாக்கள் தொடரும்... 
 
- கவிஜி
Pin It