1.            சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு என்ற பிரபலமான சொற்றொடரை இணையதளமும், விஞ்ஞான வளர்ச்சியும் தேவையற்றதாக்கி விட்டது. நீதிமன்றங்களைப் பற்றியும் நீதிபதிகளைப் பற்றியும் சட்ட உலகின் கதாநாயகர்களாக கூறப்படுகின்ற வழக்கறிஞர்களை விடவும் வழக்கின் தரப்பினர்களும், பொது ஜனங்களும் நிறையவே அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் வழக்கறிஞர்களுக்கான சட்டத்தை பற்றி அந்த அளவிற்கு தெரிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. வழக்கறிஞர்களுக்காக 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து கால சூழலும், அவசியமும் கருதி விவாதித்திட வேண்டிய கடப்பாடு உள்ளது.

supreme court 6002.            நீதிமன்றத்தின் பணி புதிய சட்டமியற்றுவதோ (அ) புதிய சட்ட கொள்கைகளை வகுப்பதோ அல்ல என்ற போதிலும் புதிய சட்ட விதிகளையும், அரசிற்கான கொள்கைகளை நெறியாள்கை செய்வதன் நீட்சியாக 1961-ம் வருடத்திய வழக்கறிஞர் சட்டத்திலும் புதிய திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சியே உச்ச நீதிமன்றத்தால் ‘மகிபால் சிங் ராணா’ வழக்கில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்பது ஒரு சில மூத்த வழக்கறிஞர்களின் வாதமாகும்.

                3.            உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து விசாரணைக்கு வரப்பெற்ற ‘மகிபால் சிங் ராணா’ வழக்கில் 5-7-2016 அன்று உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழான விவகாரங்களை பரிசீலனை செய்து வழக்கறிஞர் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரையை கோரியது. மத்திய சட்ட ஆணையமும் தனது 23-3-2017-ம் தேதியிட்ட 266-வது பரிந்துரையை அளித்துள்ளது. அதன் மீதான கருத்துக்களை தெரிவிக்கும் படி மத்திய சட்டத் துறை பார் கவுன்சிலை கோரியது. டெல்லியில் நடைபெற்ற பெறும் வழக்கறிஞர் போராட்டத்தின் காரணமாக இந்த பரிந்துரையை நிறுத்தி வைப்பதாக மத்திய சட்டத் துறை தெரிவித்தது. தற்போது மீண்டும் பார் கவுன்சிலின் கருத்துக்களை கேட்டுள்ளது.

4.            தற்போது மத்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மத்தியில் பொதுக் கருத்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் உள்ள படியே ஒரு பகுதி வழக்கறிஞர்கள் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பாக கொண்டு வரப்படும் திருத்தங்களின் மீது தான் அதிக கவலை கொண்டுள்ளதாகவும் மற்றொரு பகுதி வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் மூலம் செல்வாக்கு செலுத்த முடியாதததை குறித்து அதிருப்தியுற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. திறமைசாலியான வழக்காடிகளும், ஒரு சில நீதிபதிகளும் நினைத்தால் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞரை பலிகடாவாக்கிட இந்த புதிய சட்டதிருத்தம் வழிவகுக்கிறது என்று மற்றொரு பகுதியினர் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு சிலர் வழக்கறிஞர்களுக்கான பாராம்பரியமிக்க தனித்த உரிமையில் 3-ம் நபர்களின் அதிகாரத்தையும், தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று வாதிடுகின்றனர்.

5.            8-7-2017 அன்று நியூ டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசர் கேகர் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் பணிபுரிவதை வரவேற்று பேசினார். இதனையே அடிப்படையாகக் கொண்டு ஏதோ வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் பணியாற்ற அனுமதிக்கப்பட இருப்பதினால் இந்திய வழக்கறிஞர்களின் தொழில் நசிந்து விடும், தேசத்தின் இறையாண்மை பாதிக்கப்படும் என்று புதிய சட்ட திருத்தத்திற்கு எதிராக மற்றொரு கருத்தும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

                6.            பொதுவாக ஒரு சில வழக்கறிஞர்கள் மட்டுமே தவறிழைக்கிறார்கள். இவர்களால் தான் வழக்கறிஞர் தொழிலின் உன்னதமும், பெரும்பாலான வழக்கறிஞர்களின் நற்பெயரும் பாதிக்கப்படுகின்றது என சொல்லப்படுகின்றது. யதார்த்தத்தில் தவறிழைக்கும் ஒரு சில வழக்கறிஞர்களையும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் செயல்பாட்டில் சேர்ந்தும், அமைதியாய் இணைந்தும் பாதுகாக்கவே துணிகிறார்கள். சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி சட்டத்தின் பாதுகாப்பை ஒரு வழக்கறிஞர் பெறுவதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் வழக்கறிஞர் என்றால் அவர் நீதிமன்ற வளாகங்களின் கதாநாயகர் என்ற ரீதியில் சிறப்பு சலுகைகள் கோருவதை உரிமையாக வைத்துக் கொண்டுள்ளதினால்; பாதிக்கப்பட்டவரின் குரல் எப்போதாவது தான் கவனம் பெறுகின்றது.

7.            ஒவ்வொரு ஊரிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் தேர்தல் நடத்தப்படும் விதத்தையும், அந்த சங்கத்தின் நிர்வாகிகள் என்ன தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதனை கண்டுபிடிக்க முடியாது என்பதினால் தான் என்னவோ தற்போது உள்ளுர் வழக்கறிஞர் சங்கங்களின் நடவடிக்கையையும் அதன் வளர்ச்சியையும் கண்காணித்து மேற்பார்வை செய்திட மாநில பார் கவுன்சிலுக்கு புதிய சட்ட திருத்தம் அதிகாரம் அளிக்கின்றது. இந்த வழக்கறிஞர் சங்கங்களில் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றவர்கள் தான் மாநில பார் கவுன்சிலுக்கு நடைபெறும் தேர்தலில் நின்று திறமையால் வெற்றி பெறுகின்றார்கள்.

8.            வழக்கறிஞர்கள் மீதான தொழில் விதிமுறை மீறல் மற்றும் ஒழுங்கீனம் தொடர்புடைய குற்றச் சாட்டுகளை விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதே வழக்கறிஞர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட பார் கவுன்சில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளது. ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு டெல்லியில் அகில இந்திய பார் கவுன்சில் இயங்கி வருகின்றது.

                9.            வழக்கறிஞர் தொழிலையும் சட்டக்கல்வியையும் ஒழுங்குப்படுத்த கடமைப்பட்டுள்ள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைத் தவிர ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் 25 வருடத்திற்கு குறையாமல் அனுபவம் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்டம் சாராத கணக்கியல், வணிகவியல், மருத்துவ அறிவியல், நிர்வாகம், சமூகஅறிவியல், பொது ஈடுபாடுள்ள துறைகளில் சிறப்பு தகுதியுடையவர், அரசின் அதிகாரிகள் ஆகியோர்களை உயர்நீதிமன்றம் நியமனம் செய்திட வேண்டும் என்றும், இதே போல் மாநில பார் கவுன்சிலுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தொடர்ச்சியாக அடுத்த முறையும் போட்டியிட முடியாது என்றும் புதிய திருத்த சட்ட பிரிவு கூறுகின்றது. ஜனநாயக பூர்வமான முறையில் தேர்தல் நடத்தி அதன் மூலம் தனிச்சிறப்பு உள்ள நல்ல வழக்கறிஞர்களை பார் கவுன்சில் உறுப்பினர்களாக வழக்கறிஞர் சமூகம் ஒரு காலத்திலும் தேர்ந்தெடுக்காது என்று மத்திய சட்டக்கமிஷன் நினைத்திருக்கக் கூடும்.

10.          தற்போது மாநில பார் கவுன்சிலுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகின்றது. பல்வேறு மாநிலங்களில் இந்த தேர்தல் நடத்தப்படவில்லை என்று தெரிய வருகின்றது. இந்த மாநில பார் கவுன்சிலின்; காலம் உள்ள வரை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் பிரதிநிதி அகில இந்திய பார் கவுன்சிலிலும் பதவி வகிக்க தகுதியுடையவராக இருக்கின்றார். மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வழக்கறிஞர்களையும், சட்டம் படித்து விட்டு பெயரளவில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு பிற தொழில்களில் ஈடுபட்டு வருவோர்களைப் பற்றிய கணக்கெடுப்பை விரைந்து முடிக்க இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது. உரிய வழியில் முறையாக அல்லாது போலியாக வழக்கறிஞர் என கூறிக்கொண்டு தொழிலில் ஈடுபடுவோரை நீக்குவதற்காக அகில இந்திய பார் கவுன்சிலால் 2015-ம் வருடத்தில் கொண்டு வரப்பட்ட புதிய விதியின் கீழான கணக்கெடுப்பு முடிந்ததாக இன்றைய நாள் வரை அறிவிக்கப்படவில்லை. இது குறித்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் Transferred case (Civil) No.(s). 126/2015  ஆக விசாரணையில் இருந்து வருகின்றது.

                11.          வழக்கறிஞர்கள் மீதான புகார்களை விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட அதே வழக்கறிஞர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அவர்களின் பிரதிநிதிகள் இருவருடன் மாநில பார்கவுன்சிலின்; ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்படுகின்ற மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவரும் சட்டம் சாராத துறைகளில் சிறப்பு தகுதியுடையவர் இருவரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று புதிய சட்ட திருத்தம் கூறுகின்றது. மாநில பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் போது பாரபட்சமாகவும், பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் வழக்கறிஞர்கள் குறை கூறுகின்ற சூழ்நிலையில் தனிப்பட்ட நியமன உறுப்பினர்களும் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இடம் பெறக் கூடாது என மற்ற துறை வாரியான விசாரணை நடைமுறைகளை மேற்கோள் காட்டி வழக்கறிஞர்களும் வாதிடுகின்றனர். எந்த விசாரணை முடிவும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதே.

12.          உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் நியமன விவகாரத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் கோருகின்ற வழக்கறிஞர் சமூகம,; குறிப்பாக நீதிஅரசர்கள் தங்களை தாங்களே கொலிஜியம் முறையில் நியமித்து கொள்வதற்கு ஆட்சேபணை செய்து கருத்துக்கள் கூறுகின்ற வழக்கறிஞர் சமூகம், தங்களால் பிரத்தியோகமான முறையில் நடத்தப்படுகின்ற தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற தங்களின்; சக வழக்கறிஞர் பிரதிநிதிகள் தான் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தகுதியுடையவர்கள் என கோருவது ஏற்புடையதாக இல்லை. மேலும் இந்திய ஆட்சித்துறை, காவல்துறை பணிகளைப் போன்று இந்திய நீதித்துறை பணி துவக்கப்பட வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து அகில இந்திய அளவில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் பொழுது திறமையும் தகுதியும் இல்லாதவர் நீதிபதியாக நியமனம் செய்யப்படுகிறார் என்ற அவச் சொல்லும் தவிர்க்கப்படும்.

13.          ஒழுங்கு நடவடிக்கை (ம) விசாரணை நடைமுறைகளை மேம்படுத்திட, அதன் பெயரிலான மேல்முறையீடுகளில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்த்திட ஒழுங்கு நடவடிக்கை முறைகளையும,; சாட்சிகளின்                 குறுக்கு விசாரணையையும் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்வது மற்றும் வாதுரை கேட்கப்பட்ட உடன் வெளிப்படையாக உத்தரவுகளை திறந்த மன்றத்;தில் கூறிட வலியுறுத்துவது ஆகியவைகளை செயல்படுத்துவதன் மூலம் தட்டச்சு செய்யும் போது கேள்விகள் விடுதல், செல்வாக்கு செலுத்தும் தன்மை தவிர்த்தல், வழக்கு நடவடிக்கைகளில் வெளி நபர் செல்வாக்கு செலுத்துவதை அறவே ஒழித்தால் ஆகியவற்றை செய்திடக் கூடும்;. இதை வலியுறுத்துவதற்கு பதில் புதிய அதிகார அமைப்பை ஏற்படுத்துவது தேவையற்ற ஒன்று என்றுதான் தோன்றுகிறது.

14.          நடைமுறையிலுள்ள வழக்கறிஞர் மீதான புகார் விசாரணை முறையை திறம்பட மாற்றி அமைத்திட பல்வேறு வழிமுறை இருக்கின்ற போது, அதை விடுத்து மாற்று என கூறி அவசியமற்ற ஓர் அதிகார அமைப்பை உருவாக்குவென்பது, ஓய்வு பெற்றோருக்கும், வழக்கறிஞர் அல்லாதோர்க்கும் வழங்கப்படும் சலுகையாக தெரிகின்றது.

                15.          உச்ச நீதிமன்ற 4 நீதி அரசர்கள் கொண்ட அமர்வு கேப்டன் ஹரீஷ் உப்பல் வழக்கில் 17-12-2002 அன்று வழக்கறிஞர்கள் தவிர்க்க இயலாத நேர்வுகளில் ஒரு நாள் தவிர தொடர்ச்சியாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 141-ன் படி இந்த தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள். இந்த தீர்ப்பின் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிற்கு காரணமாக இருக்கும் போது அவர்கள் வழக்கறிஞர் பட்டியலிருந்தே நீக்கப்படுவதற்கு புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்கின்றது. இதே போல் எந்த ஒரு வழக்கறிஞர் சங்கமும் கூட்டாகவோ தனியாகவோ நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணிக்கக் கூடாது என்றும் புதிய சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.  வழக்கறிஞர்கள் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஈடுபடுவது தடை செய்யப்படவில்லை. மாறாக நீதிமன்ற வளாகத்தையும், நீதிமன்றங்களையும் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு உட்படுத்தக் கூடாது, சுய நலனுக்காக போராட்டத்தை தூண்டி தங்களது செல்வாக்கை காண்பிப்பதற்கு வழக்கறிஞர் குழுமம் வழக்கறிஞர் சங்கத்தை தவறாக பயன்படுத்துவது முறைப்படுத்த வழி காண்பிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் பல நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பை அறிவித்து விட்டு கட்சிக்காரர்களை ஆஜர் செய்து வழக்கு நடத்துவதும் நடக்கின்றது. மேலும் வழக்கறிஞர் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்காக அல்லாமல் அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வு வேண்டி வழக்கறிஞர் சங்கம் நேரடியாக போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது வீண் என்பதுதான் கடந்த கால படிப்பினை.

                16.          தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் புகார்தாரருக்கு 5 லட்சம் வரை இழப்பீடு வழங்கிடவும் புதிய சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது. மேலும் போலியாக பட்டம் பெற்று வழக்கறிஞராக தொழிலில் ஈடுபடுவோருக்கு 3 வருடம் சிறை தண்டனையும்,(பழைய சட்டத்தின் படி 6 மாதங்கள்) ஐந்து லட்சம் அபராதம் விதிக்கவும் புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்கின்றது. இந்த பிரிவையும் ரத்து செய்திட வழக்கறிஞர்கள் கோருவது அவர்களுக்கே வெளிச்சம்.

17.          பதவிக்கு வருபவர்கள் பதவியை தக்க வைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அதனை ஆதரிக்க அதே நிலையில் பதவியில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் எளிதில் மாற்ற முடியாத, மறுக்க முடியாத ஒன்றாகும். தேர்தலை மூடுமந்திரமாக நடத்திடுவதும் அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோரின் நடவடிக்கையும,; அவர்களின் ஆதரவாளர்களின் நடவடிக்கையும் சிதம்பர ரகசியமாகவே உள்ளது.   

18.          “விளக்கின் மயக்கத்தில் விழும் வீட்டில் பூச்சி” என்பது போல் தற்போது நடைமுறையில் உள்ள பார் கவுன்சிலுக்கு மாற்று என நினைத்து அதை விட மேலும் தீங்கை வழக்கறிஞர் சமுதாயத்திற்கு செய்திட விளைவோரின் செயலே புதிய சட்டத்திருத்தம் என வாதிடுவோர் அதில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்வதை விட்டு விட்டு புதிய சட்ட திருத்தத்தினை முற்றிலும் நிராகரிக்க வேண்டுவது சரியான ஒன்றல்ல.

19.          சட்டம் என்பது ஓடும் ஆற்றைப் போல என்பதை மறந்து, குழம்பிய குட்டையாக இருக்க வேண்டும் அதில் தான் மீன் பிடிப்போம் என கூறுவது சரியல்ல.

20.          “பிறர் கண்ணில் உள்ள துரும்பை பார்க்கும் முன் உன் கண்ணில் உத்திரத்தை எடு”. என்ற வேதாகம வசனம் நினைவுக்கு வருகிறது.

21.          சட்டங்கள் செல்வாக்கு   மிக்கோருக்கு வளையும் தருணங்களில் அந்த அமைப்பை குறித்து கேள்வி கேட்க முன் வரும் வழக்கறிஞர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு மாற்றை கொண்டு வர முயற்சிக்காமல் வழக்கறிஞர்கள் எதற்கும் அப்பாற்பட்டவர்கள் என்று கூறுவது சரியான ஒன்றல்ல. நீதித்துறையின் குறைகளை களைய எவ்வாறு நீதித்துறை அமைப்பு செயல்படுகிறதோ அது போலவே நீதித்துறையின் முக்கிய அங்கமான வழக்கறிஞர்களின் குறைகளை சுட்டி காட்டி நிவாரணம் பெற வழக்கறிஞர் அமைப்புகளோ போதுமானதாகும் என்று தோன்றுகின்றது. இதற்கு மாற்றான ஒன்றை முன்னெடுத்து செல்பவர்கள் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பிரச்சனையை அணுகுவது வேதனைக்குரியது.

- இ.சுப்பு & கே.ஜஸ்டின், வழக்கறிஞர்கள், தூத்துக்குடி

Pin It