• தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு 1957 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

• 1989இல் கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் இந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருடன் ‘குற்றப் பரம்பரையாக’ பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு நீதிக்கட்சி ஆட்சியில், அதிலிருந்து விடுவிக்கப்பட்ட வகுப்பினரையும் இணைத்து 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

• 1855ஆம் ஆண்டிலிருந்தே சென்னை மாகாணத்தில் தீண்டாமைக்கு உள்ளாகும் தாழ்த்தப்பட்ட வகுப் பினர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக கல்வி மான்யம் வழங்கும் விதிமுறைகள் (Grant in aid code) ஒன்று உருவாக்கப் பட்டது.

• கல்விக்காக அரசு நிதி உதவி தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் சிலவற்றுக்கும் கிடைக்கும் வகையில் 1906லும், 1913லும் மேற்குறிப்பிட்ட விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

• 1954இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. பெரியார் போராடினார் அதன் காரணமாக, அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் வழியாக ‘சமூக கல்வி அடிப்படையில்’ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சட்டத்தில் 15(4) பிரிவு சேர்க்கப்பட்டது.

இந்தப் பிரிவின் கீழ் பயனடைவோர் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு விடப்பட்டது. இந்த நிலையில் 1931ஆம் ஆண்டு இறுதி வடிவம் தரப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலையே கல்விக்கான சிறப்பு உரிமைகள் வழங்க பயன் படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அரசு ஆணை பிறப்பிக்கப் பட்டது.

• 1947ஆம் ஆண்டிலிருந்து பட்டியல் இனப் பிரிவுக்கு வழங்கப்படும் முழு கல்விக் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பல ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அரசிடம் வலியுறுத்தி வந்தன.

• 1954இல் தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சம்மேளனம், தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த காமராசரிடம் கோரிக்கை வைத்தது.

• ‘தீண்டப்படாதவர்களாக’ சலவைத் தொழிலாளர் சமூகம் இல்லை என்பதால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது சரியாக இருக்காது என்று கருதிய காமராசர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டாம், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப் படும் சிறப்பு உரிமைகளை வழங்க லாம் என்று முடிவு செய்தார்.

சலவைத் தொழிலாளர்கள் போலவே அவர்கள் நிலையில் உள்ள சமூகத்தினரையும் அடையாளம் கண்டு குறிப்புகளை அனுப்பி வைக்க பல்வேறு துறைகளுக்கும் முதலமைச்சர் காமராசர் உத்தர விட்டார். அப்போதுதான் பிற்படுத்தப்பட்டோரிலேயே மிகவும் பின் தங்கியிருக்கும் பல்வேறு வகுப்புகள் அடையாளம் காணப்பட்டு ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதுவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான தொடக்கம்.

• 1956ஆம் ஆண்டு, நேரு பிரதமராக இருந்த ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப் பட்டோருக்கான காகா கலேல்கர் குழு தமிழக அரசின் இந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தனது அறிக்கையில் ஆதரித்ததோடு இந்தப் பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

• இந்தப் பரிந்துரையின் அடிப்படை யில் காமராசர் ஆட்சி விரிவாக ஆய்வு செய்து 31.1.1957இல், அரசாணை ஒன்றின் வழியாக (எண்.353) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அங்கீகரித்தது. 1957 - 58 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 58 வகுப்புகளுக்கு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்குவதைப் போல கல்விச் சலுகைகளை மட்டும் வழங்க அரசு ஆணை பிறப்பித்தது.

• இந்த 58 வகுப்புகளின் எண்ணிக்கையை 39 ஆக குறைத்தது, தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட ஏ.என். சட்டநாதன் தலைமையில் நியமிக்கப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு. பட்டியலில் இடம் பெற்றிருந்த வேறு மாநில சமூகத்தினரை நீக்கியது.

• இந்தப் பட்டியல் அடிப்படையில் தான் 1989ஆம் ஆண்டு கல்விச் சலுகை மட்டுமே வழங்கி வந்த நிலையைக் கடந்து 20 சதவீதத்
தனி இட ஒதுக்கீட்டை கலைஞர் கொண்டு வந்தார். இதுவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவின் வரலாறு.

(தகவலுக்கு ஆதாரம்: கோ. அருணாசலம் எழுதிய ‘தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் - வரலாறும் வளர்ச்சியும்’ நூல்; என்.சி.பி.எச்., வெளியீடு)

கோ. அருணாசலம்

Pin It