அங்கையன் கயிலாசநாதன் பல்துறைப் படைப்பாளியாவார். பல்வேறு கலை இலக்கியத் துறைகளில் தடம் பதித்தவர். அச்சுக்கலை, பத்திரிக்கைத்துறை, பதிப்புத்துறை, ஒலிபரப்புத்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மெல்லிசைப்பாடல்கள், மொழி பெயர்ப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றில் கால்பதித்து பங்காற்றியுள்ளார்.
'அங்கையன்' என்ற புனைப் பெயருடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட வை. அம்பலவாணர் கையிலாசநாதன் மண்டைத் தீவில் 14.08.1942-ஆம் நாள் பிறந்தார். மண்டைத் தீவு மகாவித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் சேர்ந்து கற்று தேர்ச்சி பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டதாரியாக தேறினார்.
1960களில் தமிழ் மொழி மூலம் பல்கலைக்கழகம் பட்டம் பெற்ற புதிய எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வளம் சேர்த்தனர். அவர்களுள்! தமிழ் எழுத்துலகின் முன்னணிக் சிற்பியாக விளங்கியவர் அங்கையன்.
இலங்கைப் பல்கலைக்கழகம் 1962 ஆம் ஆண்டு நடத்திய தமிழ்ச்சங்கம் குறு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'கடற்காற்று' நாவலுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
'ஈழநாடு' வார இதழிலும் 'வீரகேசரி' நாளிதழின் துணை ஆசியராக பணியாற்றினார்.
கொழும்பு பிரித்தானிய தூதரகத்தில் Common wealth Today என்ற ஆங்கில மாத இதழை 'சாம்ராஜ்யம் இன்று' என்ற பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.
இலங்கை ஒலிபரப்புக் காட்டுத் தாபனத்தில் தமிழ்ச்சேவைப் பிரிவில், நாடகத் தயாரிப்பாளராக 1972 ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு மார்ச்ச மாதம் வரை பணியாற்றினார். அங்கையன் இராசலட்சுமி என்பரைத் திருமணம் செய்து கொண்டார்.
அங்கையன் 'கடற்காற்று', 'செந்தணல்', 'சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்', 'சொர்க்கமும் நரகமும்;' முதலிய நாவல்களையும், 'வைகறை நிலவு', 'அங்கையன் கவிதைகள்' முதலிய கவிதை நூல்களையும், 'அங்கையன் சிறுகதைகள்', 'அங்கையன் கட்டுரைகள்' முதலிய நூல்களையும் எழுதி தமிழுலகுக்கு வழங்கிச் சென்றுள்ளார். அங்கையன் மெல்லிசைப் பாடல்கள் எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். அப்பாடல்கள் குறுந்தகடாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கில இலக்கியத்திலும், பிறமொழி இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு, பல வெளிநாட்டு இலக்கியங்களை மொழிப்பெயர்த்து தமிழுக்கு அளித்தவர். இவான் துர்கானோ (ஐஎயn வுரசபநழெஎ) வின் 'கரும்பூமி' என்ற நாவலை சிறப்பான முறையில் தமிழில் மொழிப்பெயர்த்து வழங்கியுள்ளார்.
சிங்கள எழுத்தாளர் திலக் ஜெயரத்ன எழுதிய 'எங்கள் அப்பா கண்டிக்குப் போய்விட்டார்' என்னும் பொருள்படும் சிங்கள நாடகத்தை அங்கையன் 'பிள்ளைமனம்' என்ற பெயரில் தமிழ் சேவைப் பிரிவில் நாடகமாக எழுதி தயாரித்தளித்தார். 'சமூக தீபம்' என்ற காலாண்டு இலக்கிய இதழை சில ஆண்டு காலம் வெளியிட்டார். 'உதயம் புத்தக நிலையம்' என்ற நிறுவனத்தின் மூலம் பல நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.
இவரது 'கடற்காற்று' நாவல் கடல் வாழ்வியலை யதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் சித்தரிக்கிறது. அவர் பிறந்து வாழ்ந்த மண்டைத் தீவுக் கிராமம் கடல் பகுதியாக இருந்ததால், கடல் வாழ்வியலை இயல்பாகவும், கலா ரசனையுடனும் சித்தரித்துள்ளது. மேலும், மண்டைத் தீவுக் கிராம மீனவர் வாழ்க்கை இந்த நாவலுக்கு கருவூலமானது. இந்நாவல் 'ஈழநாடு' இதழில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
“'கடற்காற்று' நாவல் மண்டைத் தீவினைச் சுற்றி நீலத்திரை கடல் சதா ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த நீலத்திரையிலே இழைந்துவரும் காற்றே கடற்காற்று. காற்றின் இதத்தை மட்டும் இங்கு நாம் அனுபவிக்கவில்லை. அந்தக் காற்றையெதிர்த்துத் தினசரி வாழ்வுக்காகப் போராடும் ஜீவன்களை எவரும் நினைப்பதில்லை. அப்படிப்பட்ட, அந்தப்போராடும் ஜீவன்களை மறந்துவிட்டவர்களுக்கு நினைவூட்டும் சின்னமாக இந்த நாவல் விளங்குகிறது” என இலக்கிய ஆய்வாளர் இ.நாகராஜன் தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.
'அங்கையனின் எழுத்தின் ஆதாரசுருதி சாமானிய மனிதனின் வாழ்வுதான். அவரின் மனம் அவர்களைத் தொட்டது. தேடியது. நேசித்தது. அவர்களின் அவல வாழ்வின் மூலாதாரங்களைத் தேடி, அழுக்கிடையேயுள்ள அவர்களின் பரிசுத்தத்தை அடையாளம் காட்டிற்று. தன் கதைகளின் நாயகராக்கிற்று. எதிர்க்குரலாக ஒலித்தது.”
மேலும் “கடற்காற்று தமிழில் கடல் வாழ்வினைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவல். தான் கண்டுணர்ந்து, தன்னைப் பாதித்ததை தன் படைப்புலகின் ஆதாரமாக்கினார். வாழ்வின் சாதாரண அடிமட்ட மக்களையும் அவர்களின் சூழலையும் போராட்டங்களையுமே தனது கதைக் கருவாகத் தேர்ந்தெடுத்துள்ளார். அங்கையனின் கதைகள் உயிர்ப்பும், தெளிவும், கருத்துச் செறிவும், கலை நுட்பமும் சோந்து பொலிந்து நிற்பதற்கு காரணம் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் கொண்ட பிரியமும் நேயமுமாகும்.” என ஈழத்து நாவலாசிரியர் செ. யோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.
'செந்தணல்' நாவல் கொழும்பு மக்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை மிக நுட்பமான முறையில் விவரித்துள்ளது. மேலும், யாழ்ப்பாணத்திலிருந்து தொழில் காரணமாகக் கொழும்பில் வாழ நேரும் மக்கள் எதிர்நோக்கும் பல்வகையான சமூகச் சிக்கல்களை இந்த நாவல் பேசுகின்றது. கொழும்பு நகரின் குடும்ப உறவு, அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், குடும்ப முறிவு போன்றவற்றை இந்த நாவலில் அங்கையன் சித்தரித்துள்ளார்.
“இலக்கியத்தின் சமூகப் பணி, ஒரு சமூகப் இப்படி இருக்கிறது என்று சித்தரிப்பதோடு நின்று விடுவதில்லை. எப்படி ஒரு சமூகம் இருக்க வேண்டுமெனக் சித்தரிக்காவிடின், எப்படி ஒரு சமூகம் இருக்கக் கூடாது என்றாவது சுட்டி நிற்க வேண்டும். அந்த வகையில் 'செந்தணல்' நாவல் உள்ளது” என யாழ்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளர், இலக்கியவாதி 'செங்கை ஆழியான்”, க. குணராசா தமது ஆய்வில் கூறியுள்ளார்.
தன் மனதில் உதித்த சொந்த கருத்துக்களை, தன்னிலை நடையோடு மக்களுக்காக எழுதும் எழுத்தாளர்கள் தான் எழுத்தாளர்களுள் சிறந்தவர்களெனக் கருதப்படுகின்றனர். இவற்றைத் தான் 'படைப்பிலக்கியம்' என்று இலக்கிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
“சமூகத்தின் தாக்கத்தினால் தனிமனித மன உலைச்சல்களையும் பிரத்தியட்ச வாழ்வியல் நோக்கங்களையும், அக உலகப் பார்வைகளின் தீட்சண்யத்தையும், சமூகப் பிரக்ஞையின் அடிப்படை உண்மை நிலைகளையும் வெகு நேர்த்தியாக 'சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும்' நாவல் நமக்குத் தொட்டுக் காட்டுகிறது”என ஈழத்து இலக்கிய ஆய்வாளர் கே.எஸ்.சிவக்குமாரன் தமது ஆய்வுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கையன் கவிதைகள் எளிய தமிழ் நடையில் அமைந்துள்ளன. பாமரனும் படித்து ரசிக்கக் கூடிய வகையில் தனது கவிதைகளை புனைந்துள்ளார். அவரது கவிதைகளில் மென்மை, இனிமை, அழகு மிளிர்கின்றது. அவரது அனைத்துக் கவிதைகளிலும் ஆத்ம சோகம் இழையோடி உள்ளதுடன், ஓசையும் இசைத் தன்மையும் பொதிந்துள்ளன.
தமது கவிதைகளில் சாதி இருளை மட்டுமின்றி தமிழ்ச்சாதியைப் பிடித்திருந்த அனைத்து அவலங்களையும் கண்டு மனம் நொந்து பாடியுள்ளார்.
“சாதி சமயப் பிராந்தியப் பேதம்
சாற்றும் இலக்கியம் யாவையும்
மோதி பொதுக்கியகற்றியே – பொருள்
மேன்மைகொள் நாட்டினை ஆட்சியை
ஓதியுணர்ந்தவர் யாவரும் - முன்னே
ஒன்றுதிரண்டு படைகொளப்
பாதை வகுத்தலே நன்று காண்!”
என்ற கவிதையில் சாதி, மத, பிராந்திய வேறுபாடுகளையும், பேதங்களையும் ஒழித்து அகற்றிட வேண்டும். நாட்டையும், ஆட்சியையும் கற்றவர்கள் முன்நின்று நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
“அங்கையன் தமது சிறுகதைகளில் மனித வாழ்வை, அதிலுள்ள பிரச்சினைகளை அவற்றுக்கு முகம் கொடுப்பதற்கான போராட்டங்களைத் தளமாக்கியுள்ளார். மேலும் தமது சிறுகதைகளில் அடிமட்ட மக்களது துன்ப துயரங்களையும், ஆசாபாசங்களையும், அம்மக்களது உணர்வுகளையும் நுணுக்கமான கலைத்துவத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.” என ஈழத்து மூத்த படைப்பாளர் நீர்வை பொன்னையன் கருத்துரைத்துள்ளார்.
அங்கையன் தாம் எழுதிய பிறகு படைப்புகள் தமக்குச் சொந்தமல்ல என்று கருத்துடையவர் எதை எழுதினாலும் எழுதிய அனைத்தும் பொது மக்களுக்குச் சொந்தம் என்று அறிவித்தார்.
“வாழ்வில் கலை ஏற்படுத்தும் பிணைப்பே நீடிக்கத்தக்கது. பல காலம் சிந்திக்கப்படக் கூடியது. வாழ்வுக்குக் கலை, குத்துவிளக்கு போன்றது. கலை இல்லாத வாழ்வு களை அற்றதாகவே இருக்கும்.”
“கலை என்பது செயல் திறமையைக் காட்டுவதும், அழகு ஏற்படும் வகையிற் செய்வதும் சுவைபயக்க வல்லதும் பற்றிய பல காரியங்களுக்கு உதவுவதுமான அறிவையும் ஆற்றலையுமே குறிப்பதாகும். ஆகவே, கலையிற் செயல், பயன், திறமை, அழகு, சுவை என்ற அம்சங்கள் உள்ளன” என அங்கையன் கலை குறித்து தமது கருத்தைப் பதிவு செய்து உள்ளார்.
அங்கையன், முக்கண்ணன், புதுமைப் பண்டிதன், லட்சுமிநாதன் முதலிய பல்வேறு புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்.
அங்கையன் 05.04.1976 அன்று வாகன விபத்தில் தமது 33 ஆவது வயதில் மரணமடைந்தார்.
“தண்ணிளித் தமிழைக் காத்துத்
தரணியிற் புகழிற் பூத்து
விண்ணுயிர் பெருமை சேர்த்து
விளங்கிடும் கவிஞன் தன்னை
எண்ணிய தமிழின் மக்கள்
இரங்கியே நிற்கும் போது
மண்ணிலே ஈரஞ்சேர
மாந்தர்கள் அழுவார் தாமே”
என்ற அவருடைய பாடலே அவருக்குப் பொருந்துவதாக ஆகி விட்டது. அவருடைய குரல் காற்றிலே கலந்து விட்டது. ஆனால், அவருடை கருத்துக்களோ மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றது.
இலங்கை வடகிழக்கு மாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் சார்பாக அங்கையனின் சிறுகதைத் தொகுப்புக்கும், 'சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்' என்ற நாவலுக்கும் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
அங்கையன் 15 ஆண்டுகளுக்குள் தனது படைப்பாற்றல் திறமைகளை வெளிப்படுத்தி அகால மரணமடைந்தார். அங்கையன் சாகாவரத்துடன் தமிழ் உள்ளவரை வாசகர் நெஞ்சங்களிலும், மெல்லிசைப் பாடல்கள் மூலம் காற்றின் ஓசையிலும் கலந்து வாழ்வார்.
அங்கையன் மறைந்த பின்னர் அவரது மனைவி இராசலட்சுமி அவரது 'செந்தணல்' 'சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்' என்ற இரு நாவல்களையும், 'அங்கையன் கதைகள்' என்ற சிறுகதைத் தொகைப்பையும் பதிப்பிட்டு வெளியிட்டார்.
“அறியாமை எனும் இருளை
அகற்றி வைத்த அரும் கவியே!
தீண்டாமை எனும் நோய்க்கு
திறமான மருந்தாகும் உண்பேனா!!
என அங்ககையனை நினைத்து கவிதை பாடியுள்ளார் கவிஞர் சண்முகநாதன்.
- பி.தயாளன்