18-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரதாப முதலியார் சரித்திரத்தில் மெல்லத் தவழத் தொடங்கிய தமிழ் நாவல் இலக்கியம், வளர்ந்து வளர்ந்து ஆற்றல்கள் பல பெற்றுப் பருவம் எய்தி, இந்த 21-ஆம் நூற்றாண்டில் பல சாதனைகளைச் செய்துவருகிறது.

மர்மங்கள் நிறைந்த கதையாய்த் தொடங்கிய நாவல், எதார்த்தத் திசையில் வளர்ந்து, வாழ்க்கையின் பல முரண்களாய், முரண்களின் மோதல்களாய், போராட்டங்களாய், நாட்டின் மேற்பரப்பு முழுவதும், மற்றபடி சமூக அடித்தளங்களின் ஆழங்கள் எங்கும் வியாபித்து வருவது இன்றைய சாதனை. இந்தச் சாதனைச் சிகரத்தின் படிக்கற்களாகத் தங்கள் வாழ் வையும், உழைப்பையும், ஆன்மாவையும் அர்ப்பணித்திருக் கிறார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிர நாவலாசிரியர்கள். ஒவ்வொரு நாவலாசிரியரிடமும் ஒரு தளம், ஒரு கோணம், ஒரு பார்வை, அதற்கான ஒரு மொழி, இவற்றின் வழியே அவரவர் தம் காலடியில் பரவிக் கிடக்கும் மண்ணின் அழகையெல்லாம் காட்சிகளாக தீட்டித்தரும் திறன்... நினைக்க நினைக்க வியப்புத் தருகின்றது.

1960-70களையட்டித் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் புதிய படைப்பாளிகளின் அணி களத்தில் இறங்கிப் பணி செய்யத் தொடங்கியது. எதார்த்தத் திசையைக் கவனிக்கும்போது கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ், பொன்னீலன், பிரபஞ்சன், சமுத்திரம், முதலியவர்கள் தத்தமக்குரிய வேறுவேறுபட்ட கலைப் பார்வையோடும், கலை நுட்பத்தோடும் தத்தம் பேனாவைக் கையாண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவர் பூமணி. சிறுகதைகளில் தொடங்கி நாவல்களில் நுழைந்து, பல விந்தைகளைச் செய்தவர் இவர். பிசிறற்ற காட்சித் தெளிவும், வளம் மிக்க மக்கள் மொழியும் அவரின் சிறப்புக்கள். அவருடைய முந்தைய காலப் படைப்பு களில் உச்சம் ‘நைவேத்தியம்’. வாசகப் பெரும்பரப்பை ஈர்த்த நாவல் அது.

சாதிகளின் ஒற்றுமை, ஒன்றுக்கொன்றின் அர வணைப்பு, அதனால் ஏற்படும் முன்னேற்றம் ஆகியன அவருடைய படைப்புகளின் பொதுவான மைய ஓட்டம். பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழல்களால் சமூகங்களின் ஒற்றுமை எப்படி வளர்ச்சியின் புதுக் குருத்துக்களாகத் தோற்றம் கொள்ளுகின்றது அல்லது சிக்கலுக்குள்ளாகுகின்றது என்பதே அவர் படைப்புகளின் மையம். இந்தப் பின்புலத்தோடு 2012-இல் வெளிவந்த ‘அஞ்ஞாடி’ நாவலை வாசிக்கும்போது பூமணியின் கலை நேர்த்தியும், கலை உத்திகளும் உச்சத்தை நோக்கி மேலும் உயர்ந் திருப்பதை வாசகர்கள் உணர முடியும்.

1050 பக்கங்கள் கொண்ட இந்தப் பெரு நாவலில் பூமணி கையாளும் இலக்கிய உத்தி புதுமையும், நேர்த்தியும் கொண்டது. எதையும் பூமணி தெளிவு படுத்திச் சொல்லவில்லை. கதையாகவும் நாவலில் எதுவும் இல்லை. பக்கம் பக்கமாகப் பரவிச் செல்வது கோவில்பட்டி வட்டாரக் கலிங்கல் என்னும் நிலப் பகுதியில் வாழும் மனிதர், புழு, பூண்டு, விலங்குகள், பறவைகள் என ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்றாகப் பிண்ணிப் பிணைந்து கிடக்கின்ற வாழ்க்கை. வாழ்க்கை அதன் சகல அர்த்தங்களுடனும், ஆழமான பேராறாக மெல்ல நகர்ந்து செல்கிறது.

எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா உயிரினங் களும் ஒன்றோடொன்று உரையாடுகின்றன. மனிதர் களும் இதர உயிரினங்களும் உரையாடுகின்றனர். இறந்தவர்களும் வாழுபவர்களும் உரையாடுகின்றனர். வேறுபாடற்ற இந்தப் பிரபஞ்ச மா சமுத்திரப் பின்னல் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாகக் கலிங்கலில் நகரும் அழுகுதான் நாவலாக விரிந்துகிடக்கிறது. இவை களினுள்ளே ஏற்றத்தாழ்வுகள் உண்டா? உண்டு. முரண்கள் உண்டா? உண்டு. மோதல்கள் உண்டா? உண்டு. ஆனாலும் காலம் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு முன்னேறிச் செல்கிறது என்று காட்டுகிறது நாவல்.

அஞ்ஞை என்பது அம்மை என்னும் சொல்லின் திரிபு. அது தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் ஒரு சிறிய கிளையாகவும் பல நேரங்களில் மனதில் பதிகிறது.

கலிங்கல் குடும்பர் சமூகத்தின், அதாவது அஞ்ஞாடி சமூகத்தின் ஒரு சிறுவன் ஆண்டி. ஆண்டியின் சமூகத்தை ஒட்டி வாழும் துணி வெளுக்கும் சமூகத்தைச் சார்ந்த சம வயதுச் சிறுவன் மாரி. இந்தியாவுக்கே உரிய வருண ஏற்றத்தாழ்வு ஆண்டியை உயர்சாதியாகவும், மாரியைச் சற்றுத் தணிந்த சாதியாகவும் காட்டுவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. இந்தச் சாதி ஏற்றத்தாழ்வைத் தாண்டி ஆண்டியும், மாரியும் ஒன்றாகப் பழகுவதுதான் நாவலின் உயிர்ப்புள்ள முதற் பகுதி.

ஆண்டி ஈரிணை ஏருக்குச் சொந்தமான, நாலு கட்டு வீட்டில் வாழும் சம்சாரியின் வாரிசு. ஊரின் பலர் அந்தக் குடும்பத்தை அண்டி உழைத்து வாழ்கிறவர்கள். அம்பாரம் அம்பாரமாக விளைபொருள்கள் அந்த வீட்டைச் சுற்றிக் குவிந்து கிடக்கின்றன.

மாரியோ கழுதையோடு கழுதையாக வாழும் ஒரு வெளுப்புக்காரன். இந்த இருவரும் வளர்ந்து இளைஞர் களாகித் திருமணம் செய்வது பெருகுவது சுவையான முதல் பகுதி.

திருமணமான பின்பும் இவர்களின் உறவு தொடர் கிறது. மாரி நோயுறும்போது ஆண்டி உதவுகிறார். மாற்றமில்லாத வாழ்க்கை தொடர்கிறது. அடுத்த தலைமுறையிலும் படர்கிறது.

அதன் பிறகு சண்முகம் நாடார், மாலையம்மாள் குடும்பம் கலிங்கலில் இவர்களோடு சேர்கிறது. சண்முக நாடார் வந்ததும் ஆண்டியை வித்தியாசப்படுத்திப் பேசுகிறார். இந்த வித்தியாசப்படுத்திய பேச்சு ஆண்டிக்கு கெட்ட கோபத்தை ஏற்படுத்துகிறது.

வருணம் சார்ந்த ஒரு பேருண்மையை மிக நுட்பமாக, அலட்சியமாக வெளிப்படுத்துகிறார் பூமணி. மாரியை எந்த மனக்கூச்சமும் இல்லாமல் தாழ்ந்த சாதி என்னும் உணர்வோடு கூப்பிட்டுப் பேசிப்பழகிவரும் ஆண்டி, சண்முகம் என்னும் நாடார் தன்னை வித்தியாசப் படுத்திப் பேசும்போது மட்டும் கெட்டக் கோபப் படுகிறார். இதுதானே வருணாசிரமம், நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒருபக்கப் பார்வை. வேடிக்கை என்னவென்றால், மாரியைத் தாழ்வுப்படுத்திப் பேசும் அந்தப் பேச்சு முறையை நாவலின் கடைசிவரை ஆண்டி மாற்றிக் கொள்ளவே இல்லை. மாரியின் மகன் மருதன் காலத்திலும் அந்த ஏற்றத்தாழ்வு கிட்டத்தட்ட அப்படியேதான் தொடர்கிறது. இது நம் சமுதாயத்தின் இன்னொரு விபரீதம்.

அப்புறம், ஆங்கிலேயர் ஆட்சி நுழைந்த கதை, 18-ஆம் நூற்றாண்டு ரவிக்கைப் போராட்டக் கதை, கிறிஸ்தவர்கள் நுழைந்த கதை, அம்மை நோயழிவு, பேதி நோய் அழிவு, தாது வருசப் பஞ்சப் பேரழிவு, பஞ்சம் பிழைக்க மக்கள் உலகெல்லாம் அலைந்து திரியும் துயரம், அங்கும் உதவியைப் பெற்ற கலிங்கல் மக்கள் தங்கள் நேர்மையை வெளிப்படுத்தும் கம்பீரம், எல்லாம் மனசைத் தொடும் விதத்தில் நாவலில் பதிவாகியிருக் கின்றன.

தீப்பெட்டி ஆபீஸ் வருகை, பள்ளிக்கூடம் வருகை, வாத்தியார் வருகை, மருத்துவமனை வருகை, கல்லூரி வருகை என காலத்தின் நகர்வைக் காட்ட ஏராளமான செய்திகள் உள்ளன. ஆனாலும் மக்கள் வாழ்வில் பெரிய சலனங்கள், மாற்றங்கள், முரண்கள்,  மோதல்கள் எவையும் காட்டப்படவில்லை. உள் மாறுதலற்றத் தட்டையான ஓட்டமாகவே கலிங்கல் வாழ்க்கை 300 ஆண்டுகளாக நகர்கிறது.

நாவலின் பின்பகுதி முன் பகுதியைவிட பிரம் மாண்டமான அழகுடன் நீளுகிறது. கடைசியில் நாயக்கர் - பள்ளர் உறவு, பிணத்தைப் புதைப்பதில் பிரச்சினை என நீண்டு பள்ளர் நாயக்கர் இணைப்பைக் காட்டுகிறது. இந்த இணைப்புகள்தான் பூமணியின் மையக் கரு.

சத்திரப்பட்டி சுந்தர நாயக்கர் சாமியாரான கதை, அவருடைய இறுதிக் காலம், அவருக்கும் ஒரு நாய்க்கு மான உறவு. அவர் மறைந்து, பள்ளர்களிடையே சீரண மாகிப் போன கதை எல்லாமே மனசைச் சுண்டி இழுப்பவை.

இந்த நாவலில் பூமணி புழங்கும் வட்டார மொழி ஒப்பற்ற அழகு கொண்டது. பழமொழிகள், சொலவடைகள் என ஒவ்வொரு வரியினுள்ளும் நாம் கண்ணுக்குள் சுவைதரும் அழகுகளை அனுபவிக்கும் போது வாசகரால் பல இடங்களில் மேற்கொண்டு நகர இயலாத பிரமிப்பு ஏற்படுகிறது. நாவலினுள்ளே சொல்லப்படும் எண்ணற்ற பேய்க்கதைகள், நல்ல பேய்கள், கெட்ட பேய்கள், பேய்களும் மனிதர்களுக்கு மான உறவு... அப்பப்பா ஒவ்வொரு வரியும் பத்தியும் அழகுக் குவியல்.

விடியலைப்பற்றி நாவல் இப்படிச் சொல்கிறது: “இருட்டு முற்றிய விடியக்கருக்கல். கிழக்கே அடைச்சூடு முற்றிப் பொழுது இன்னும் முண்டிக்கீறவில்லை.” இம்மாதிரி ஒப்பற்ற உவமையழகுடைய வரிகள் வாசகர்களுக்குப் பாயசத்தில் சுவைபடும் முந்திரிப் பருப்புகள்.

மாரியின் சமூகம், சமூகத்தின் உழைப்பு, வாழ்வு நாவலின் மைய மாக வாசகர் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கிறது. ஈரிணைஏர் உரிமையாளர் ஆண்டி ஏர் பிடித்த காட்சி எங்கேயும் துல்லியமாய்ப் பதிவாகவில்லை.

நாவலின் இன்னொரு அழகு அத்தியாயங்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் தலைப்புகள். ஒவ்வொரு தலைப்பும் மண்மணம் கொண்டது, சுவையானது, எதிர்பார்ப்பைத் தூண்டுவது.

இவ்வளவு பெரிய நாவலின் தொடக்கக் காலம், இடைக் காலங்கள், இறுதிக்காலம் எது? காலத்தின் பதிவுகள் நுட்பமாகச் செய்யப் படாதது நாவல் வாசிப்புத் தெளிவுக்குச் சற்று இடையூறு செய்கிறது. ஈரிணை ஏர் விவசாயமும் நாலுகட்டு வீடும் பல விவசாயிகளின் உழைப்புகள் வந்துசேரும் செல்வக்குவியல்களுமாக எந்த நூற்றாண்டில் குடும்பர்கள் வாழ்ந்தார்கள், இன்னும் வாழ்கிறார்களா என்பதற்கான தெளிவு நாவலில் கிடைக்கவில்லை. வாசிப்பவரின் பார்வையில் கிட்டதட்ட 300 வருடங்களாக விரியும் நாவல், மூன்று தலைமுறையின் வாழ்வாகத் தெரிகிறதே என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னொன்று. அஞ்ஞாடிப் பள்ளர்கள் அவர் களைச் சார்ந்து வாழும் வண்ணார்கள், இவர்கள் இருவருமே சேர்ந்துத் தனி ஊராக அன்று வாழ்ந்தார் களா? அல்லது பொதுவாக நாம் காணும் ஒரு ஊரின் ஒரு பகுதியாக வாழ்ந்தார்களா? தேவர்களும், நாயக்கர்களும் நாவலின் பிற்பகுதியில் வருகிறார்கள். செட்டியார்களும்கூட கலிங்கலுக்கு வந்து செல்லு கிறார்கள். தேவர்கள் எதிராளிகள்போல் காட்டப்பட, அவர்களை எதிர்க்க ஊரில் இளவட்டங்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இவற்றைப் பாரக்கும்போது கலிங்கலானது பள்ளர் மக்களை மட்டும் கொண்ட தனி ஊர் போலத்தான் காட்சியளிக்கிறது. வாசகர் மனதில் இது அன்றைய சமூக இருப்பு சார்ந்த சில எதிர்பார்ப்பு களையும் சந்தேகங்களையும் கிளப்புகிறது.

நாவலினுள் கழுகு மலைக் கலவரம், குமரி மாவட்டத்தில் நடந்த தோள் சீலைக் கலவரம், என நாடார் சமூகம் நடத்திய போராட்டங்கள் 400 பக்கங் களிலிருந்து 500 பக்கங்கள் வரை ஆக்கிரமித்துக் கிடக் கின்றன. நாவலின் முன்பகுதி யிலும் பின் பகுதியிலும் இருக்கும் வளமான மக்கள் மொழியோடும், மக்கள் வாழ் வோடும், மண்ணோடும், மண்மணத்தோடும் எந்த வகையிலும் இந்தப் பகுதி ஒட்டவில்லை மொத்தத் துடன். ரத்த ஓட்டமும், உணர்வு ஓட்டமும் இல் லாமல், வெறும் செய்தி களாகக் கெட்டிதட்டித் திரண்டு கிடக்கும் இந்தப் பகுதி நாவலின் வாசிப்பு ஓட்டத்துக்கு இடைஞ்சல் செய்கிறது. இப்பகுதியில் பயன்படுத்தப் படும் மொழிகூட வேறுபட்டது, பண்டிதத்தனமானது. இந்தப் பகுதி ஏன் இந்த அருமையான நாவலுக்குள் புதைக்கப் பட்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. 

இவற்றையெல்லாம் மீறி, நாவலின் முன் பகுதியும், பின் பகுதியும் வளமும் அழகும், அற்புதமான வாசமும் கொண்டவை. வாசிக்கத் திகட்டாத அருமையான கலைப் பகுதிகள் அவை... பூமணி மிகுந்த பாராட்டுக்குரியவர்.

அஞ்ஞாடி ஆசிரியர் : பூமணி
வெளியீடு: க்ரியா பதிப்பகம்
3, 19வது கிழக்குச் சாலை,
திருவான்மியூர், சென்னை - 41
விலை: ரூ. 925/

 

Pin It