மலையக இலக்கியத்தின் தலைமகன். ஆசிரியர், இதழாளர், கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல் செயற்பாட்டாளர், களப் போராளி, எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர் ‘மலையக மக்கள் கவிமணி’ சி.வி. வேலுப்பிள்ளை!

“புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களைப்
போற்றும் இரங்கற்
புகல் மொழி இல்லை;

பழுதிலா அவர்க்கோர்
கல்லறை இல்லை,
புரிந்தவர் நினைவு நாள்
பகருவார் இல்லை,

ஊனையும் உடலையும்
ஊட்டி இம்மண்ணை
உயிர்த்தவர்க்கு! இங்கே
உளங்கசிந் தன்பும்

பூணுவாரில்லை – அவர்
புதை மேட்டிலோர் - கானகப்
பூவைப் பறித்துப்
போடுவாறில்லையே?

ஆழப் புதைத்த
தேயிலைச் செடியின்
அடியிற் புதைத்த
அப்பனின் சிதைமேல்


ஏழை மகனும்
ஏறி மிதித்து
இங்கெவர் வாழவோ
தன்னுயிர் தருவன்

என்னே மனிதர்
இவரே இறந்தார்க்கு
இங்கோர் கல்லறை
எடுத்திலர்! வெட்கம்!!

- சி.வி.வேலுப்பிள்ளை

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ஏழை மக்கள் கங்காணிகள் மூலம் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கைக்கு தோணி ஏறியவர்களில் நூற்றுக்குப் பதினைந்து சதவீதம் பேர் படகுகள் கவிழ்ந்து இறந்தனர். புயல் காற்றுக்கு தப்பிய தோணியில் வந்தவர்கள் காடுகள், மலைகள் வழியே நடத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு சாவு அங்கே காத்திருந்தது.

cv velupillaiநடக்க முடியாதவர்களை எவ்வளவு தூரம் தூக்கிச் செல்ல முடியும். பத்து மைல் பதினைந்து மைல் தூக்கி களைத்து முடியாத நிலையில் நடுகாட்டில் மிருகங்களுக்கு இரையாக இவர்களைப் போட்டார்கள். இந்தத் துர்பாக்கிய நிலைக்கு ஆளானவர்கள் கையை நீட்டி கதறி அழுதார்கள். ஒரு சிரட்டையில் தண்ணீரும் இலையில் கொஞ்சம் ஆகாரமும் வைத்துவிட்டு உள்ளம் குமுறி அழுத கண்ணீருடன் சுற்றத்தினர் புறப்படுவார்கள். கானகத்தில் தனிமையில் விடப்பட்டவர் அவஸ்தையை சொல்ல முடியுமா?

படகில் இருந்து இறங்கிய மக்களை மலையகத்திற்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் செல்வது போல் கங்காணிகளும், காவலர்களும் அழைத்துச் சென்றனர். கொட்டும் மழையிலும், நடுங்கும் கடும் குளிரிலும், வீசும் புயற்காற்றிலும் நடந்து செல்லும் போது மலேரியா, காலரா நோய் பாதிக்கப்பட்டும், விஷ அட்டைகள் கடித்தும் வழியிலே மரணமடைந்தவர்களை, இடையிலே குழி தோண்டி புதைத்துவிட்டு நெஞ்சக் குமுறலும், வேதனையும் மனதில் சுமந்து வாய் பொத்தி அழுத கண்ணீருடன் சென்ற சோகம் உலகில் வேறு எந்த இனத்திற்கும் ஏற்பட்டதில்லை. அன்பு மனைவியை பறி கொடுத்த கணவனும், உயிர்க் கணவனை இழந்த மனைவியும், மகனை, மகளை, மருமகளை, மருமகனை இடைவழியில் பறிகொடுத்து வேதனையில் துடித்தவர்கள் ஏராளம்.

இவ்விதம் மரணம் அடைந்தவர்களின் எலும்புக் கூடுகள் ஆங்காங்கே கிடந்தது. அடுத்தடுத்து வந்த தொழிலாளர்கட்கு பாதை காட்டுவதற்கு ஏதுவாக இருந்தன என்று அறியும் போது எத்தனை அவலமான, துயரமான வாழ்க்கை இந்த மக்களுடையது என்பது தெரியவரும்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மலையகத் தமிழ் மக்கள் மலையகத்தைச் சீராக்கிச் சேர்த்தளித்த செல்வங்கள் எண்ணிலடங்கா. காப்பியையும், தேயிலையையும், ரப்பரையும் நட்டு கிராமங்களையும், பட்டினங்களையும் உருவாக்கி, பிரதான போக்குவரத்துப் பாதைகளை அமைத்து தம் உடல் பொருள் ஆவி அத்தனையும் இலங்கைத் தீவின் நலனுக்காக – நல்வளர்ச்சிக்காக – நல்வாழ்வுக்காக அர்ப்பணித்து, நடுக்கடலில் திக்குத் திசையறியாத, நாவாய் போல ஆக்கப்பட்ட நிலையை ‘மலையக மக்கள் கவிமணி’ சி.வி. வேலுப்பிள்ளை தமது கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் வட்டக் கொடை பூண்டுலேயா பகுதியைச் சேர்ந்த மடக்கொம்புர தோட்டத்து பெரியக் கங்காணி கண்ணப்பன் வேலு சிங்கம் - தெய்வாணையம்மாள் வாழ்விணையருக்கு 14.09.1914 அன்று மகனாகப் பிறந்தார் சி.வி. வேலுப்பிள்ளை. இவரது முழுப்பெயர் கண்ணப்பன் வேலுசிங்கம் வேலுப்பிள்ளை என்பதாகும்.

அட்டன் மெதடிஸ்ட் கல்லூரி, நுவரெலிய புனித கிருத்துவக் கல்லூரி, கொழும்பு நாளந்தா வித்தியாலயம் முதலியவற்றில் கல்வி பயின்றார்.

கொழும்பு நாளந்தா வித்தயாலயம், பூண்டுலேயா தாகூர் பாடசாலை, தலவாக்கலை சுமண வித்தியாலயம், அட்டன் மெதடிஸ்ட் கல்லூரி முதலியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

மலைநாட்டு மக்கள் கல்வி கற்பது ஆபூர்வமாயிருந்த காலத்திலேயே கல்வி கற்று ஆசிரியராகப் பணி புரிந்தவர் சி.வி. வேலுப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

சி.வி. வேலுப்பிள்ளை தோட்டத்தியே பிறந்து வளர்ந்தவர். அங்கு அல்லற்படும் தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்கூடாக நேரில் கண்டவர். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக உழைத்துக் கொண்டிருந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் நலன், பாதுகாப்புக் கருதி 1939ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘இலங்கை இந்தியன் காங்கிரசி’ல். இணைந்து அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார்.

இலங்கை சுதந்திரம் பெற்றபின் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் தலவாக்கொல்லைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலைநாட்டில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் பிரதிநிதிகளாக, பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தொழிற்சங்க சட்டங்கள் முதலாளிகளின் கைகளில் கசையைக் கொடுப்பவைகளாகவும், தொழிலாளிகளைக் கசையடியைப் பெற்றக் கொள்பவர்களாகவும் ஆக்கத்தான் உபயோகப்படுத்தப்படுகின்றன” என்று 1950 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் முழங்கினார் சி.வி. வேலுப்பிள்ளை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆங்கில வெளியீடான ‘Congress News’ (காங்கிரஸ் நியூஸ்) இதழின் ஆசிரியராக செயற்பட்டார்.

இலங்கைப் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா, இலங்கையில் வாழும் பத்து இலட்சம் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கு பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, 1948- 18ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் 18.10.1948 அன்று குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்ற மக்களாக்கினார்.

சி.வி. வேலுப்பிள்ளை தமது வாழ்க்கைத் துணைவியாக சிங்களப் பெண்மணியை மணந்து ஒருமைப்பாட்டுக்கு ஓர் உதாரணமாக விளங்கினார்.

“ஒரு சமுதாயத்துக்கு எதிரான அநியாய பழிவாங்கல் மலைநாட்டு மக்களை சமூக பொருளாதார ரீதியாக தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைக்குத் தள்ளியது பிரஜாவுரிமைச் சட்டம். இலங்கை சுதந்திரம் பெற்ற பின் கொண்டு வரப்பட்ட முதலாவது சட்டம் இதுவாகும். இந்தச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையை (குடியுரிமையை) பறித்தது. இந்திய வம்சாவளி மலைநாட்டுத் தமிழர்கள் குடியுரிமையோ, வாக்குரிமையோ அற்றவர்களாக நடாற்றில் விடப்பட்டனர்.

கொடிய வன விலங்குகள் நிறைந்த, அடர்ந்த வனப்பிரதேசங்களை அழித்து பணப்பயிர்களை நட்டு, மனித குடியேற்றங்களை ஏற்படுத்தியவர்கள். இந்தக் கடின உழைப்புக்கென்றே கடல் கடந்து கொண்டு வரப்பட்டவர்கள் இவர்கள். அவர்களது அயராத உழைப்பினால் உருவானது தான் மலைநாட்டின் மரகதப் பசுமை.

“மலையகத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள், பலவிதமான அட்டைகள் தங்களது இரத்தத்தை குடிக்க வழிவிட்டிருக்கிறார்கள். முதலாளித்துவ அட்டைகள், லேவாதேவி அட்டைகள், வெள்ளைக்கார அட்டைகள், கங்காணி அட்டைகள், அரசியல் அட்டைகள், கடைக்கார அட்டைகள், விசா, பாஸ்போர்ட் பெற்றுத் தரும் தரகு அட்டைகள் என்று பல அட்டைகள் அவர்களை ஒரேடியாக உறிஞ்சி எடுக்கின்றன”.

“இந்த மக்களின் வாழ்க்கை உண்மையில் மிகவும் கொடூரமானது என்றாலும், வதங்கி, வாடி, நிச்சயமற்ற தமது அவல வாழ்க்கையிலும் தங்களுக்கு என்று ஒரு கௌரவத்தைக் கொண்டிருந்தனர்”.

“இந்த மக்களை அந்நியர்களாக கருதி ஒதுக்கும் கொடுமை ஒருபக்கம். மற்றொரு பக்கம இந்த் உழைப்பாளக் கூட்டத்தினரால் உருவாக்கப்பட்டத் தேயிலைச் செடிகளையும், அகன்ற வாகனப் பாதைகளையும், நீண்ட இரயில்வே பாதைகளையும், நீண்டு வளைந்த பாலங்களையும் கட்டி எழுப்பியவர்கள் என்பதை நினைக்க இலங்கை அரசாங்கம் தயார் இல்லை”.

“இந்த மக்களின் உழைப்பை ஏற்றுக் கொண்டு அதனால் ஏற்பட்ட வளத்தை அனுபவித்துக் கொண்டு அந்த உழைப்பாளி மக்களின் உணர்வுகளை மதிக்கவும், இந்நாட்டின் குடிமக்களாக ஏற்கவும், மறுக்கிறது இலங்கை அரசாங்கம். இது அநீதியானது”.

“இந்திய அரசாங்கம் இன்னொரு நாட்டு மண்ணில் இருக்கும் தங்களின் மக்களுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறது. இலங்கை அரசாங்கம் கொடிய நோயினால் நாசமடைந்த காப்பி பயிர்களை அழித்துவிட்டு, அந்த இடங்களில் தேயிலைச் செடியை நட்டு, பேணி வளர்த்து, வளம் சேர்த்த பத்து லட்சம் தமிழ் மக்களை அனாதைகளாக்கி அல்லலுற வைப்பது மிகவும் கொடுமையானது. இந்தக் கொடூர நிகழ்வுகளைக் காணுகையில், அதிகாரம், மன்னர் ஆதிக்கம், பாராளுமன்ற பலம், படைகளின் சக்தி இவைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது” என சி.வி. வேலுப்பிள்ளை பகிரங்கமாக அறிவித்தார்.

பிரஜாவுரிமை பறிப்பு சட்டத்திற்கு எதிராக 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி முடிய இலங்கை பிரதம மந்திரியின் அலுவலகம் முன்பு 142 தினங்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. 09.06.1952 அன்று நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்ட சி.வி.வேலுப்பிள்ளை உட்பட 11 நபர்களை காவல்துறையினர் குதிரைப்படையை ஏவித் தாக்குதல் தொடுத்தனர். பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றி பத்துமணி நேரம் வாகனத்திலேயே காட்டு மிராண்டித்தனமாக அடைத்து வைத்து, குடிநீரோ, உணவோ வழங்காமல் கொடுமை புரிந்தனர்.

தங்களுக்கு விருப்பமான ஒரு தொழிற்சங்கத்தில் சேரத் தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காக மிகப்பெரிய போராட்டத்தை தியகமையைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கில் அணிதிரண்டு நடத்தினார்கள்.

மலையகத் தோட்டத் தொழிலாளிகள் தாம் நினைத்த நேரத்தில் வெளியேற முடியாமல் காவல் காக்கப்பட்டனர். வெளியேற முயன்று பிடிப்பட்டவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டது. கடுமையான கடன் பளுவை உதறித்தள்ள முடியாத நிலையும், வறுமையும் நிலவியது. ஒரு தோட்டத்தைவிட்டு வெளியேறினாலும் வேறொரு தோட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியாத நிலையும், நிலமான்ய சமூகத்தில் நிலவியது போன்று தொழிலாளியை மண்ணோடு பிணைந்த அடக்குமுறை கோலோச்சியது. மலையக தேயிலைத் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் வேரூன்றிவிடாமல் தோட்ட நிர்வாகம் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டது.

இச்சூழலில் சி.வி.வேலுப்பிள்ளை ஜனநாயக தொழிலாளர் காங்கிரசில் இணைந்து செயற்பட்டார். தோட்டத்துரைமார்கள் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை அங்கீகரிக்க மறுத்தனர். இதன் விளைவாக அக்கரைப்பத்தனை டயகம தோட்டத்தில் சி.வி. வேலுப்பிள்ளை தலைமையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி முப்பத்தெட்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட காவல்துறை, போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது 18.05.1956 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சூட்டில் ஆபிரகாம் சிங்கோ என்ற இளம் தொழிலாளி களப்பலியானார். இந்த தியாகமிக்க போராட்டத்தின் விளைவாக இலங்கை அரசாங்கம் தொழிற்சங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. அச்சட்ட திருத்தத்தின்படி, ஏழு பேர் சேர்ந்து தொழிற்சங்கம் அமைக்க அனுமதியும், பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அங்கீகரிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் சேர்த்து சங்கமாக்கியதுடன், சம்பளம், தொழில் பாதுகாப்பு, மாதச்சம்பளம், ஆண், பெண் சம சம்பளம் முதலியவைகளுக்காக தொடர்ந்து போராடி வெற்றி கண்டார் சி.வி. வேலுப்பிள்ளை.

யட்டிந்தோட்டை உருளவள்ளி தோட்டத்தை இலங்கை அரசாங்கம் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரித்து, அங்கு வாழ்ந்த தொழிலாளர்களை வெளியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து தொழிற்சங்கத் தலைவர் கே.ஜி.எஸ். நாயர் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தார்கள். அப்போராட்டத்திற்கு ஆதரவாக அட்டன் பகுதியைச் சேர்ந்த எண்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார் சி.வி.வேலுப்பிள்ளை.

இலங்கை அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்து, கண்டி மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கரை சுவீகரித்து, அத்தோட்டங்களில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை குடும்பத்தோடு வெளியேற்றியது. திக்கு திசை தெரியாமல் தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பமும் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். அந்த கொடுமையைக் கண்டு சி.வி.வேலுப்பிள்ளை கோபம் கொண்டு,; அவசரமாக, கொள்ளுப்பிட்டியிலுள்ள தேயிலை சபை மண்டபத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும கூட்டினார். நடந்த அநீதிக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி, தொழிலாளர்களை மீண்டும் தோட்டத்துக்குள் குடியேற்றச் செய்தார்.

‘இனிப்படமாட்டேன்’ ‘காதல் சித்திரம்’, ‘வீடற்றவன்’, ‘வாழ்வற்ற வாழ்வு’, ‘பார்வதி’, ‘எல்லைப்புறம்’ முதலிய நாவல்களையும், ‘பத்மாஜினி;’ என்ற நாடகத்தையும், ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்ற கவிதை நூலையும். ‘உழைக்கப் பிறந்தவர்கள்’, ‘முதற்படி’ முதலிய கட்டுரை நூல்களையும், ‘மலைநாட்டுப் மக்கள் பாடல்கள்’, ‘மாமன் மகனே’ முதலிய பாடல் தொகுப்புகளையும் மற்றும் ‘வழிப்போக்கன்’ என்ற வசன கவிதை நூலையும் படைத்து தமிழுலகுக்கு அளித்துள்ளார் சி.வி.வேலுப்பிள்ளை.

“தமிழிலும், ஆங்கிலத்திலும் தமது படைப்புகளைச் செய்ததன் மூலம் தமிழின் எல்லைகளுக்கு அப்பாலும், தான் சார்ந்த சமூகத்தின் துயரம் தோய்ந்த அவலங்களை அறிமுகப்படுத்தியன் மூலம் இலக்கிய உலகியல் முக்கியத்துவம் பெறுகிறார் சி.வி. வேலுப்பிள்ளை” என இலங்கை இலக்கியத் திறனாய்வாளர் சியாமளா தெரஸா புகழ்ந்துரைத்துள்ளார்.

மலையக இலக்கியத்துக்கு நூற்றைம்பது ஆண்டு பாரம்பரியம் உண்டு. கிராமியப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், தோட்டப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், கதைப்பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள் என்றெல்லாம் மலையக மக்களின் அடிமனத்து உணர்ச்சிகளையும், அவர்தம் ஆசாபாசங்களையும் அழகுற வெளிப்படுத்துவனவாகும்.

சி.வி. வேலுப்பிள்ளை மலைநாட்டுப் பாடல்களை தொகுத்து, அவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதழ்களில் வெளியிடும் அரும்பணியில் ஈடுபட்டார். இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழ்களிலும் அவைகளை வெளியிட்டார்.

“ ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ வெறுமனே காதலையும் சாதலையும் சித்தரிக்கும் இதய கீதங்கள் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் ஜீவிய சரித்திரம் முழுவதையும் விஸ்தரித்துக் காட்டுவன” என்று சி.வி. வேலுப்பிள்ளை தமது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

“மலை நாட்டு மக்கள் பாடல்கள் ஒரு சமூகத்தின் உருவாக்கத்தையும், இலங்கையின் வரைபடத்தின் மத்திய பிரதேசத்தில் இருந்திருக்கக் கூடிய வெறும் வனாந்திரத்துக்குப் பதிலாக ஓர் யெவனமிக்க நந்தவனத்தை ரத்தப் பிரதேசத்தை உருவாக்கி இந்தப் பிரமாண்டமான மனித உழைப்பின் மகோன்னத வெற்றியைப் பெரும் அளவு பிரதிபலிக்கும் வரலாற்றுச் சாட்சிகளாகவும் இவை விளங்குகின்றன” என்று ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ என்னும் தமது நூலின் பின்னுரையில் சி.வி. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாட்டுப்பாடல்கள் ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை; அவர்களது கனவுகளின் இலட்சியத் குரலாகவும் விளங்குகின்றன” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலே கண்டிச் சீமைக்கு ஆள் கூட்டிய போது பிறந்த பாடல்கள் முதல், இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து இங்கேயே இறந்தவர்களை எண்ணி இரங்கும் ஒப்பாரிப் பாடல்கள் வரை, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் பிரதிபலிக்கும் பாடல்கள் - காதலிலிருந்து கடவுள் வழிபாடுவரை பல்துறைகளைச் சார்ந்த பாடல்கள் - இத் தொகுதியில் இடம் பெறுகின்றன" என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி க. கைலாசபதி, சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய ‘மாமன் மகனே’ என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலைத் தோட்டத்தில் தங்கள் இரத்தத்தையும், வியர்வையும் சிந்தி உழைக்கும் பெண் தொழிலாளர்களின் வேண்டுகோளாக வருகைப் பதிவேட்டில் அரை பெயர் போடக் கூடாது என்பதை,

“பொட்டுப் பொட்டா பொஸ்தகமாம்
பொன் பதிச்ச பேனா குச்சியாம்
ஆதரிச்சு பேரு போடும்
ஐயா கணக்கப் புள்ளே
பொழுதும் எறங்கிரிச்சு
பூ மரமும் சாஞ்சிரிச்சு
இன்னம் இரங்கலையா
எசமானே ஒங்க மனம்
அவசரமா நா(ன்) போறேன்
அரே பேரு போடாதீங்க”

என்ற மலைநாட்டு மக்கள் பாடல் மூலம் அறியலாம்.

சி.வி.வேலுப்பிள்ளைக்கு ‘மக்கள் கவிமணி’ என்ற பட்டத்தை 1981 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மலையக இலக்கியப் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் கலாநிதி க.கைலாசபதி வழங்கினார். அவர் ஆற்றிய பாராட்டுரையில், “மலையக நாட்டுப் பாடல்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதிகாரப்பூர்வமானதும், நம்பத்தகுந்ததுமான தொகுதியொன்றை வெளியிடும் தகுதி சி.வி.வேலுப்பிள்ளைக்கே உண்டு. ஆசிரியராய், தொழிற்சங்கவாதியாய், பாராளுமன்ற உறுப்பினராய், அரசியல் பிரமுகராய், இலக்கியக் கர்த்தாவாய், பத்திரிக்கை எழுத்தாளராய், இவை யாவற்றிற்கும் மேலாக அப்பழுக்கற்ற மனிதாபிமானியாய் வாழ்ந்து வரும் வேலுப்பிள்ளை அவர்களுக்கு நாட்டுப் பாடல்களில் நாட்டம் இன்று, நேற்று ஏற்பட்டதொன்றல்ல. அவரது ஊனுடனும், உதிரத்துடனும் ஒன்றாகிக் கலந்து விட்ட ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மலைநாட்டுத் தமிழ் மக்கள் தலைவர்கள்’ என்ற தலைப்பில் 1958 ஆம் ஆண்டு ‘தினகரன்’ இதழில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார் சி.வி.வேலுப்பிள்ளை. அத்தொடர் கட்டுரையில் கோ. நடேசய்யர், அப்துல் அஸீஸ், ஜார்ஜ் மேத்தா, கே. இராஜலிங்கம், எஸ்.பி. வைத்தியலிங்கம், குஞ்சுபரிசண்முகம், டி. சாரநாதன், எக்ஸ் பெரைரா, எஸ். சிவனடியான், எஸ். தொண்டமான், சார்லஸ் ஆண்ட்ரூஸ் முதலிய தொழிற்சங்கத் தலைவர்கள் குறித்து எழுதியுள்ளார். மேலும், மலையகத்தில் ஏற்பட்ட தொழில் மாறுதல்கள் தொழிற்சங்க வளர்ச்சி, அரசியல் பாதிப்புகள், சமூக மாற்றங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியன குறித்தும் அக்கட்டுரைத் தொடரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், ‘மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்’ என்னும் தொடரை ‘தினகரன்’ இதழில் எழுதினார். அத்தொடரில் எஸ். சோமசுந்தரம், எஸ்.எம். சுப்பையா, ‘போஸ்’செல்லையா, கே. சுப்பையா, கே. குமாரவேலு, வி.கே. வெள்ளையன், டி.இராமானுஜம், சிவபாக்கியம் பழனிசாமி, எஸ். நடேசன், பி.தேவராஜ், கே.ஜி. எஸ். நாயர் என்ற பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் குறித்து எழுதியுள்ளார் சி.வி.வேலுப்பிள்ளை.

தொழிலாளரும் எழுந்து நின்று போராடி பல்வேறு உரிமைகளைப் பெற்றுள்ளனர். தோட்டங்களுக்குள் தொழிற்சங்கள் வேரூன்றிவிடாமல் தோட்ட நிர்வாகம் கையாண்ட அடக்குமுறைகளின் பின்னணியில் தான் ‘வீடற்றவன்’ நாவல் விரிகிறது. “கூலிக்காரனுக்கும் பொண்டாட்டியா என்பது சரியாகிவிட்டது. துரைமார் கிளப்பில் இவன் பொண்டாட்டியை அவனும், அவன் பொண்டாட்டியை இவனும் பிடித்துக் கொண்டு இரவிரவாக ஆடுவதைப் பற்றி பேச உரிமை உண்டா? இங்கே என்றால் புருஷன் பொண்டாட்டி சண்டையில் கூட அவர்கள் உள்ளே நுழைவார்கள். தோட்டம் என்பது ஒரு மதில்லாத சிறை” என ‘வீடற்றவன்’ நாவலில் சி.வி.வேலுப்பிள்ளை தொழிலாளர்களின் அவலத்தையும், தோட்டத்துரைகளின் ஆடம்பரமான அசிங்கங்களையும் தோலுரித்துக் காட்டுகிறார்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல அவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்த உண்மையைத்ததான் ‘வீடற்றவன்’ நாவல் வெளிப்படுத்துகிறது என எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் தொ.மு.சி. ரகுநாதன் இந்நாவலில் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம், சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம், கிராமியத் தோட்ட ஒருங்கிணைப்பு, தோட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் காட்டுமிராண்டித்தனமான இன அடக்குமுறைகள், தாக்குதல்கள் என்பனவற்றால் மலையகத் தமிழர்கள் நாடற்று, நிர்க்கதியான நிலைமைக்கே தள்ளப்பட்டு வந்துள்ளனர். புதிய சவால்களை எதிர்கொள்ளும் திடம் கொள்ளும் நேரத்திலும், தாங்கள் முன்பின் அறிந்திராத, முற்றாகவே தொடர்புகள் அறுந்து போன நிலையிலும் இந்தியாவை நோக்கிச் செல்லத் தவிக்கும் தூரத்துப் பசுமைகளும் யதார்த்த நிலைமையே என்ற இன்றைய மலையகத் தமிழர்களின் கையறு நிலையினை ‘வீடற்றவன்’ நாவல் சித்தரிக்கிறது” என இந்நாவலின் அணிந்துரையில் இலக்கியத் திறனாய்வாளர் மு. நித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாட்டுத் தமிழர்கள் காப்பி, தேயிலை பெருந்தோட்டங்களை உருவாக்க வந்த வெறும் ‘கூலிப்பட்டாளம்’ அல்ல. அவர்களுக்கு நாடு உண்டு. கலாச்சாரம், பண்பாடு, சடங்கு, சம்பிரதாயங்கள், இதிகாசம் எல்லாமே உண்டு என்பதை விளக்குமுகமாகவே ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ (டீழசn வழ டயடிழரச) நூலை எழுதினார் சி.வி.வேலுப்பிள்ளை.

1963 ஆம் ஆண்டு ஆசிய, ஆப்பிரிக்கா கவிதையின் முதலாவது தொகுப்பில் சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதையும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் இவரது கவிதைகள் இலங்கை, இந்தியா, சீனா, இந்தோனிசியா, கொரியா, சூடான், ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பிரபலமாகியது. இந்த கவிதை நூல் “வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாக அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும், குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளர்களின் அவஸ்தையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது”.

இத்தொகுப்பில் இடம் பெற்ற தமிழ்க் கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை மட்டுமே.

‘தேயிலைத் தேசம்’ (In Ceylon Tea Garden) உழைக்கும் மக்களைப் பற்றிய படைப்பு, புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலைகளை கவித்துவத்துடனும், யதார்த்தத்துடனும் காட்டுகின்றன. ஊனையும், உதிரத்தையும், உயிரையும் ஈந்து இம்மலையக மண்ணை உயிர்ப்பித்த இம்மக்களை தேயிலை மக்கள் என்றும், அவர்கள் உருவாக்கிய இந்த மண்ணைத் தேயிலைத் தேசம் என்று குறிப்பிட்டார் சி.வி. வேலுப்பிள்ளை. இந்நூல் இரஷ்ய மொழியிலும், பின்னர் தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.

‘இவர்கள் கிராமம், நகரம் ஆகியவற்றுக்கு வெகுதூரத்தில் லயங்களில் ஒதுக்கப்பட்டு வாழ்கிறார்கள். இலையின் கருமை நிறைந்த சூழ்நிலையிலே, கவ்வாத்து கொழுந்தெடுப்பு ஆகிய அன்றாட செயல்களையே வாழ்வாகக் கொண்ட இவர்கள் தோட்டத்திற்கு வெளியேயுள்ள உலகத்துடன் தொடர்பை இழந்து விடுகிறார்கள். கிராமத்திலும், நகரத்திலும் வாழும் அவர்களது அயலார்களைக் கூட நெருங்க முடியாதென வர்ணிக்கிறார் ஆசிரியர். இன்பமும், துன்பமும் அமைந்துள்ள நன்கு கலந்து தீட்டப்பட்ட ஓவியமாக அமைந்துள்ள நூல் ‘உழைக்கப் பிறந்தவர்கள்’. அத்துடன் பாத்திரங்களுக்கும் ஆசிரியருக்குமுள்ள நெருங்கிய தொடர்பும் இழையோடும் பிரிவும் இதனை சுவைமிக்க நூலாக்கியிருக்கின்றன.

“ ‘உழைக்கப்பிறந்தவர்கள்’ தோட்ட உழைப்பாளர் சமூகத்தைப் பற்றியச் சித்திரங்கள். கர்ண பரம்பரை கதைகள், அவதானிப்புகள் என்பனவற்றை உள்ளடக்கிய சுவை மிகுந்த தொகுப்பாகும். ஆசிரியரின் அனுபவ அறிவு இவைகளுக்கூடாக இழையோடி நூலாகப் பின்னிப்பிணைந்து இனமரபு கட்டுரையாக உயர்வடைகிறது. இந்த நாட்டைத் தாய் நாடாகக் கருதும் எந்த மனிதருக்கும் உழைக்கப் பிறந்த தோட்டத்து மக்கள் உறவினர்களாக கருதப்படல் வேண்டும் என்ற எண்ணத்தை இத்தொகுப்பு ஏற்படுத்துகிறது” என சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்ரமசிங்கா புகழ்ந்துரைத்துள்ளார்.

“சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகள் படிப்பவர் நாடி நரம்புகளில் சூடேற்றும் ஆர்வத்துடிப்பு மிகுந்தவை. இம்மக்களின் வாழ்க்கையே துயரம் மிகுந்தது. குளிர் மிகுந்தது. அட்டைகள் நிறைய உயிர்வாழும் பகுதி அது. அட்டைகள் இரத்தம் குடித்து உயிர்வாழ்பவை. அது இயற்கை நியதி. தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் இயற்கையின் குழந்தைகள். எனவே, அவர்களுக்கு இந்நியதியைத் தவிர வேறு நியதி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அதை முழுதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்று எழுத்தாளர் எஃப்.டி.சில்வா இத்தொகுப்பின் முகவுரையில் பதிவு செய்துள்ளார்.

சி.வி. வேலுப்பிள்ளை 19.11.1984 அன்று காலமானார். எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் பார்வையாளனாக மட்டும் இருக்கக் கூடாது. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக போராடுபவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவர் சி.வி. வேலுப்பிள்ளை.

இலங்கை அரசாங்கம் சி.வி. வேலுப்பிள்ளைக்கு நினைவு முத்திரை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. ‘வீடற்றவன்’ நாவல் இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.

சி.வி. வேலுப்பிள்ளை இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட வேண்டும்.

சி.வி. வேலுப்பிள்ளை பிறந்து வாழ்ந்த இடத்தில் அவருக்கு சிலை எழுப்ப வேண்டும். அவர் வாழ்ந்த இல்லம் அவரது நினைவிடமாக்கப்பட வேண்டும்.

“மலையகத் தோட்டப் பாட்டாளி மக்களின் துன்ப துயரங்களை, சோகப் பெருமூச்சுகளை, உழைப்பு ஒன்றைத் தவிர, வேறொன்றும் அறியாத, வாயிருந்தும் பேச முடியாத அந்த ஊமை ஜனங்களுடைய வாழ்வின் அவலங்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிச் சர்வதேச அரங்கில் அவர்களது நிலைமையை எடுத்துக் காட்டியவர் சி.வி. வேலுப்பிள்ளை” என ஈழத்து எழுத்தாளர் அந்தனி ஜீவா புகழரம் சூட்டியுள்ளார்.

“தேயிலை உள்ளவரை, தேயிலை மக்களைப் பற்றி சிந்தித்த சி.வி. வேலுப்பிள்ளையின் படைப்புகளும் நின்று நிலைக்கும் என்பது உறுதி” என ஈழத்து எழுத்தாளர் சாரல் நாடன் பதிவு செய்துள்ளார்.

“வியர்வை வடித்து
கூலியாய் உழைத்து
வெறுமையுள் நலிந்து
வீழுவது எல்லாம்
துயரக் கதையினும்
துன்பக்கதை. அதைத்
தொனிக்குதே பேரிகைத் (தப்பொலி)
துடி ஒலிக்குமுறல்” - சி.வி. வேலுப்பிள்ளை

- பி.தயாளன்

Pin It