malayakamakkalமுதியோர் பிரச்சினைகளை மையப்படுத்திய ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்

Title – The biological Problems of the Upcountry Tamil People’s in Srilankan Tamil Short stories (A Centrailzed Study of Elders Problems)

Abstract – Lives in Srilankan upcountry tamil peoples lifestyiles and related their problems indivuale observation in today Srilankan tamil researchers. These litertaures portread The pleasures, slave lifestyile, suppressed emotions are historical document that records of upcountry tamil literature. Through these literature the various issues of upcountry tamil people emerge as the main talking point. The Problems faced by the upcountry community as children, Woman, Labours and elders. so this research article portread specially elders problems. objective of this research papers, The situation of the upcountry elders people who have accepted the family burden of youth and contributed of the development of a country through their labour. methonoldgy of this reseach article refer description analyisis and through study selected upcountry tamil short stories. banifits of this articles refer caring for the elders and to create awarenss of elders.

Key Words – upcountry, elders, problems, contribution, develompent

ஆய்வுச்சுருக்கம்

இலங்கையில் வாழும் மலையக இந்தியவம்சாவளியினரின் வாழ்க்கைமுறை அவ்வாழ்வியலோடு தொடர்புடைய பிரச்சினைகள் ஆய்வாளர் மத்தியில் தனிக் கவனத்திற்குரியதாக இன்றும் இருந்து வருகின்றது. இம் மக்கட் சமூகத்தின் இன்ப துன்பங்களை, அடிமை வாழ்க்கை முறையை, ஒடுக்கப்பட்ட உணர்வுகளை பதிவு செய்து ஒரு வரலாற்று ஆவணமாக திகழ்பவை மலையக இலக்கியங்கள். இவ் இலக்கியங்களின் வழி மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளும் மலையக இலக்கியங்களில் பிரதான பேசுப் பொருளாக வெளிப்படுகின்றன.

சிறுவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், முதியோர்கள் என மலையகச் சமூகத்தைச் சார்ந்து வாழும் ஒவ்வொரு நபர்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவ்வகையில் இவ் ஆய்வுக்கட்டுரையானது மலையகச் சமூகத்தை சேர்ந்த முதியோர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றது.

இளமைகாலத்தில் குடும்பச் சுமையை ஏற்றுக் கொண்டு ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தமது உழைப்பின் மூலம் பங்களிப்புச் செய்யும் முதியவர்கள் வயது முதிர்ந்த நிலையில் சமூகத்தால் கைவிடப்பட்டு துன்பப்படும் அவலநிலையை சித்திரிப்பதை பிரதான நோக்கமாக இவ் ஆய்வுக்கட்டுரை கொண்டுள்ளது.

ஆய்வுமுறையிலாக விபரண ஆய்வுமுறையும் ஆய்வு மூலங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மலையகச் சிறுகதைகளும் இவ் ஆய்விற்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. முதியவர்களை வயதான காலத்தில் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய சமூகத்தினரிடம் கொண்டு செல்வதுடன் முதியவர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கட்டுரை விழைகின்றது.

திறவுச்சொற்கள் - மலையகம், முதியவர், பிரச்சினைகள், பங்களிப்பு, அபிவிருத்தி

அறிமுகம்;

வாழ்க்கை நிலை, சமுதாய பிரச்சினைகள் முதலானவற்றால் இலங்கையில்; வாழும் மக்களிடமிருந்து மலையகத் தமிழ் மக்கள் வேறுபடுகின்றனர். அவர்களது வாழ்வியல், அரசியல், பொருளாதார நிலைமைகள் முதலியவை இலங்கை வாழ் ஏனையச் சமூகங்களுடன் ஒப்பிடும்போது பல வகைகளில் தனித்துவமானவையாக விளங்குகின்றன.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழில் சார்ந்த வாழ்வியல் பிரச்சினைகளை பொதுவாக எதிர்கொள்கின்றனர். இவர்கள் பெருந்தோட்டங்களில் கூலிகளாக ஆரம்பத்திலும் பின்னர் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று பல தொழில்களில் கூலிகளாகவும் ஏனையத் தொழில்களிலும் ஈடுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் இவர்களது கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் அதனால் ஏற்படுகின்ற அவலநிலையும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. மழை, வெயில், காடு, மேடு, பள்ளம் என்று எவ்வித இடர்களையும் பொருட்படுத்தாது நாள் முழுவதும் கடின உழைப்பில் ஈடுபடும் அவர்கள் பெற்ற ஊதியமோ மிகவும் சொற்பம். மலையக மக்கள் மூடநம்பிக்கைகள், அறியாமை, வரலாறின்மை, இயற்கை அழிப்பு, சாதியம், விழிப்புணர்வின்மை என தொழில்சாரா ஏனைய வாழ்வியல் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.

இவ்வாறாக மேலே காட்டியதைப் போல மலையக மக்கள் பொதுவாகத் தொழில்சார் பிரச்சினைகளையும்; தொழில் சாராத வாழ்வியல் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்றனர். இப்பிரச்சினைகளுக்கு உட்படுபவர்களாக மலைகயச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவற்றை ஈழத்தைச் சேர்ந்த படைப்பாளிகளில் பலர் தமது சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வகையில் மலையக மக்கள் சார்ந்து வெளிவந்த சிறுகதைகளில் முதியோர்களின் வாழ்வியல் பிரச்சினைகளும் தனிக் கவனத்திற்குரியதாகும்.

முதுமை பருவத்திலும் உழைப்பு, ஆதரவின்மை, அன்பின்மை, உளவியல் ரீதியானத் தாக்கங்கள், பிள்ளைகளால் கொல்லப்படுதல், தனிமை என பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் மலையகச் சமூகத்தைச் சேர்ந்த முதியோர்கள். இவை குறித்து நோக்குவதாகவே இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.

இனி ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் பலரும் மலையகவாழ் முதியோர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை தமது சிறுகதைகளில் எவ்வாறு கையாண்டுள்ளனர் என நோக்குவோம்.

உள்ளடக்கம்

என்.எஸ்.எம்.ராமையா அவர்கள் பிஞ்சுக் குவியல், வேட்கை, தரிசனம், எங்கோரு தவறு, கோவில் ஆகிய சிறுகதைகளில் முதியோர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினைகளை வெளிக் காட்டியுள்ளார்.

“பிஞ்சுக்குவியல்” என்னும் சிறுகதை காமாட்சிக் கிழவி திருமணமாகி ஆறுப் பிள்ளைகளைப் பெற்றதனால் அவளது உடல் சுபாவமே மாறிவிட்டது. பிள்ளைகளும் அவரவர் தங்களின் நிலைகளைப் பார்த்துக் கொண்டுப் போய்விட்டனர். இதனால் கொழுந்து பிடுங்கும் வலுவை இழந்தக் காமாட்சிக் கிழவி பிள்ளை மடுவத்தில் பல துன்பங்களுக்கு மத்தியில் பணியாற்றுகின்றாள் என நகர்கிறது.

பிஞ்சிக்குவியல் எனும் சிறுகதையின் தலைப்பே இவ் ஆசிரியரின் மனிதாபிமானத்தையும், குழந்தை உள்ளத்தையும் காட்டிவிடுகிறது. இங்கு வரும் காமாட்சிக் கிழவிக் குழந்தை உள்ளத்தைப் புரியாதவள் என்பதை “கிழவி மீண்டும் பிள்ளை மடுவத்திற்கே சென்றாள். மழலை குரல் நிரம்பி வழிந்த அந்த மடுவத்திற்குள் நுழையும் போது, இந்தச் சின்னவைகளுக்கு முன் தனக்கு ஒவ்வொரு முறையும் தோல்வியே கிடைக்கும் என எண்ணி அவள் மனம் பொருமியது.

சுவரில் இருந்த ஆணியில் தனது தேனீர்ப்பையைக் கோர்த்துக் கொண்டிருந்தப் போது, நடக்க ஆரம்பிருத்திருந்த குழந்தை முன்னும் பின்னுமாக ஆடியவாறு நடந்து வந்து அவள் சேலையைப் பிடித்துக் கொண்டு “பாச்சி… ஆ” என்று ஏதோ மழலையில் மிழற்றிக் கொண்டிருந்தது. சேலையில் இருந்து அதன் கைகளை பிடுங்கி குழந்தையை தரையில் ‘தக்’ என்று உட்கார வைத்துவிட்டு தொட்டிலை நோக்கி நடந்தாள் காமாட்சி.

“உதடுகள் வெறுப்போடு முனுமுனுத்துக் கொண்டிருந்தன” என ஆசிரியர் காட்டியுள்ளதுடன் வயதான காலத்தில் நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டிய காமாட்சி வேண்டா வெறுப்பாக தனது வயிற்றுக்காக உழைப்பதையும் காட்டியுள்ளார்.பிள்ளை மடுவத்தில் இயலாத வயதில் அவள் பிள்ளைகளினால் படும் அவலத்தினை பின்வருமாறு காட்டியுள்ளார்.

“…நடையழகு ரசிக்கும் நிலையில் காமாட்சிக் கிழவி இல்லை. மூலையில் சுவரோரமாக சிணுங்கிக்கிக் கொண்டிருந்த இன்னொரு குழந்தை அவளுக்கு ஏற்கனவே எரிச்சலை மூட்டிவிட்டிருந்தது. போதாததற்கு வேறு இரண்டு குழந்தைகள் ஒன்று தலைமயிரைப் பிடித்து ஆட்ட மற்றது அலறிக் கொண்டிருந்தது.தூங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் இருந்து கிழவி நேராகப் போய் தலை மயிரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த சண்டைக் கோழியின் முதுகில் ‘ஒன்று’ வைத்து ‘சும்மா இருவே! சனியங்க… புள்ளைகளை துங்கப் போட ஏழாது’ என்று கடுகடுத்தால். வாங்கிக் கட்டிக் கொண்ட குழந்தை அதிர்ந்து உட்கார்ந்து அடியினால் விருவிருத்த முதுகை நெழித்தவாறு கிழவியைப் பார்த்து அதன் கீழ் உதடு நெழிந்து வளைந்தது. கண்கள் குளமாகியது.

காமாட்சிக் கிழவி இவ்வாறு நடந்து கொள்வதற்கு பொருளாதாரம் மற்றும் உளவியளும் அடிப்படை காரணங்களாகும். அவளால் ஏதும் செய்ய முடியாத நிலையில் பிள்ளைப் பருவத்தில் இருந்து ஒரு பிள்ளைக்கு அடித்து வெளியேறியவள், மீண்டும் பிள்ளை மடுவத்திற்கு வேளைக்கு வருகின்றாள். இதனூடாக வயதான நிலையில் ஓர் இடத்தில் முதியோர்கள் இருக்கவோ, தங்களால் இயன்ற வேலையை ஓரளவேனும் செய்யவோ முடியாத நிலையை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

“வேட்கை” என்னும் சிறுகதை எந்த துன்பங்களையாவது எதிர்கொண்டு தங்களுக்கென்று ஒரு பெற்றோமாக்ஸ் லைட் வாங்கிட வேண்டுமென்று முடியாத வயதிலும் மண்ணோடு போராடும் ரங்கையாக் கிழவனைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு நகர்கின்றது. குறைநிறைகளுடன் கூடிய ஒரு தோட்டத்துப் பாத்திரமாக வரும் ரங்கையாக் கிழவனின் வேட்கை நிராசையாகப் போவதை ஆசிரியர் பின்வருமாறு காட்டியுள்ளார்.

“… கிழவனுக்கு நெஞ்சு தீப்பற்றி எரிவது போல இருந்தது. தனது கடைசி நம்பிக்கையான அந்த தோட்டத்தின் மண் குவியலைப் பார்த்து தளர்ந்து போய் படிகளில் ஏறிவந்து திண்ணையில் அமர்ந்தான். வாசல் அருகில் நின்று கொண்டிருந்த அவனது மருமகள் அவனைக் கண்டதும் ஒதுங்கி உள்ளறையின் நிலை அருகில் போய் நின்று கொண்டாள்.

கிழவன் பின்னாலேயே வந்து கொண்டிருந்த வேலு திண்ணை அருகில் வந்து, தலையிலிருந்த துணியால் கைகளையும் முகத்தையும் துடைத்தவாறு “ஒண்ணும் கூட மிஞ்சல்லே, அப்படியே எறங்கிட்டது” என்றான். “ஐயய்யோ” என்று நெஞ்சில் கைவைத்த கிழவனின் மருமகள் “அம்மான் ஆசையோடு பாடுப்பட்டாங்களே போச்சே…” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

வேலு திரும்பி கிழவனைப் பார்த்தான். மகத்தான ஏமாற்றத்தால் தொங்கிப்போன முகத்தோடு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கிழவன் மழை தொடர்ந்து பெய்துக் கொண்டிருந்தது.

“தரிசனம்” என்னும் சிறுகதை ஒரு கிழவியைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு மலையக மக்களின் அவல நிலையையும் வாழ்க்கையின் வினோதங்கள் வேடிக்கைகளையும் சித்திரிக்கின்றது.

எடுத்துக்காட்டாக “அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. கூட்டத்தில் பெண்கள் பகுதியில் திடீரென ஒரு சலசலப்பு. சிறு குழந்தைகளும் சில பெண்களும் கூட்டத்தை விட்டு விலகி ஓடினர். கூட்டத்தில் இருந்து அம்பெனப் பாய்ந்து வந்தாள் கிழவி ஒருத்தி. சாதாரண நாட்களில் நடக்கவே ஜீவனில்லாத அவள் இப்போது ஒரு குமரிப் பெண்ணின் மிடுக்கோடு விதைந்து நின்று ஆடினால்.

ஆயினும் தளர்ந்த உடல். எனவே சிலர் ஓடிச்சென்று தாங்கிக் கொண்டனர்…. கிழவி மேஜைமேல் இருந்த விபூதி சம்பூடத்தில் இருந்து விபூதியை அள்ளும் போது பயபக்தியோடு கை நீட்டி வாங்கிக்கொண்டார். பக்கத்தில் இருந்தவர்களிடம் ‘கெழவி சரியா சொல்லிருச்சி’ என்று சொல்லிவிட்டு பொட்டலத்தை பிரித்தார்…’

இச் சிறுகதை யதார்த்த தன்மையில் இருந்து மாறுப்பட்டுள்ளது. முடிவில் கிழவியினூடாக மறைத்து வைத்த பொருள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தனக்குப் பிள்ளை கிழவியை பயபக்தியுடன் நோக்கியதாகவும் ஆசிரியர் கதையை முடித்துள்ளார். எனவே இவ் ஆசிரியர் இவ் இடத்தில் முற்போக்குத் தன்மை இல்லாமல் முடிவை வலிந்து புகுத்தியிருக்கலாம் என சிந்திக்க வைக்கின்றது.

“எங்கோ ஒரு தவறு” எனும் சிறுகதையில் வரும் முனுசாமி கிழவர் தனக்கு வயது போனதையும் மறந்து தனது மகள் கமலத்தை கூட்டிக் கொண்டு போய் மகளை அருகில் வைத்துக் கொண்டு குடிப்பது, படம் பார்ப்பது முதலிய பொறுப்பற்ற செயல்களை செய்வதும் இதனால் மகள் கமலம் மன உளைச்சலுக்கு உள்ளாவதனையும் காணலாம்.

எங்கோ ஒரு தவறு என்ற சிறுகதையில் ஆசிரியர் முதியவராகிய முனுசாமி தன்னை மறந்து தனது மகளை சமூகத்தில் உள்ள காமுகர்களுக்கு தன்னை அறியாமல் பலியாக்க முற்படுவதைக் காணலாம். கமலம் தகப்பன் செய்யும் கொடுமைகளை எல்லாம் பொருத்துக் கொள்கின்றாள்.

வயதான கிழவன் எப்போதாவது தன்னை உணர்ந்து செயற்படுவான் என்றும் தனக்கு அவரை விட்டால் வேறு யாரும் பாதுகாப்பு இல்லை எனவும் சாராயக் கடைக்குச் செல்வதை உள்ளே மூன்று நாட்காளிகள் போடப் பட்டு சுத்தமான வெள்ளைத் துணி விரித்திருந்த ஒரு மேசையைச் சுற்றி மூவரும் அமர்ந்தனர்.

சாராய நொடியும் சிகரெட் புகையும் கமலத்திற்கு என்னமோ போல் இருந்தாலும் முகத்தில் கொஞ்சமேனும் அதிருப்தியை காட்டாது குடையை மார்போடு அனைத்தபடி அமர்ந்தாள்… அதுவரை வேடிக்கை பார்க்கும் குழந்தை போலச் சற்றே திறந்த வாயோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கமலம் சற்றென்று முகம்மாறி “வேண்டாம்” என்று வெட்கத்துடன் தன் தகப்பனைப் பார்த்தாள். முனுசாமியும் “அது சாப்பிடாதுங்க” என்றான் என ஆசிரியர் காட்டியுள்ளார்.

மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் அநேகமான சிறுகதைகளில் உறவினர்கள், சமுகத்தவர்கள் முதியோர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். ஆனால் இச்சிறுகதையில் முதியவர் ஒருவர் தன்னை சார்ந்த உறவினர்களுக்கும், சமுகத்தவருக்கும் தொல்லை கொடுப்பதை காண முடிகின்றது.

“கோவில்” என்ற சிறுகதையில் கதாநாயகனாக வரும் கிழவனை கதையின் ஆரம்பத்திலேயே அவனது தோற்றத்தையும் உழைப்பையும் ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். இங்கு கிழவன் என்ற பாத்திரத்தை வைத்துக் கொண்டு தோட்டமக்களின் வாழ்வியலை இச்சிறுகதை ஆசிரியர் முன்னிறுத்துகின்றார்.

எடுத்துக்காட்டாக “லொறியை விட்டு இறங்கினேன். எனக்கு வழி காட்டுவதற்காக ஒரு கிழவனும் வந்திருந்தான். அவனும் லொறியின் பின்புறத்திலிருந்து இறங்கினான். ஆள் நல்ல பழமை. காலமெல்லாம் உழைத்த பயன் போலும் வளர்ச்சி குன்றி பதினாறு வயதுப்பையன் உயரம்தான். நெற்றிக்கு மேல் உச்சியில் அரைச்சந்திரனாக முடிவைத்தது, பின்னால் குடுமி.

காதுகளில் அது என்னவோ தெரியவில்லை பக்கத்துக்கு மூன்றாக சிறு தங்க வளையங்கள். இடுப்பு வேஷ்டி கோவணமாக - காலையில் ‘பெரட்’டுக்குப் புறப்பட்டபோதே கட்டியது- ஒரு பக்கத்துத் தொடையை மட்டும் முழங்கால் வரை மறைத்துக் கொண்டு, மறுபக்கம் மேலேறி நிற்கிறது… எப்படி ஏறுறதுன்னு யோசிக்கிறிங்களா?” என்று கேட்டுவிட்டு சிரித்தான். சிரிக்கும் போது பல்லில்லாத முரசு மட்டும் தெரிந்தது. ‘சிரமம் இல்லாமே சுகம் ஏது? நடப்பம்? என்றேன் இருவரும் நடக்கத் தொடங்கினோம். ‘இந்த விஷயம் நடந்தது ரொம்ப காலமா பெரியவரே?’ என்றேன் ‘டேங்கப்பா! இது எங்க அப்பன் காலத்திலே நடந்ததுங்களாம். எனக்கே இப்ப அறுபது வயசுன்னா பாருங்களேன்”

தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே” என்னும் சிறுகதை வரலாற்று சூழ்நிலையால், வீரமுத்து கிழவன் தனிமைப்படுத்தப்பட்டு, இறுதி காலத்தில் தனது தாய் நாட்டுக்குப் போக முடியாத பரிதாப நிலையைக் கூறுகின்றார்.

இந்தியாவில் காணி வாங்குவதற்கு வீரமுத்து கஷ்டப்பட்டு உழைத்து பணம் அனுப்பி கடல் போன்ற சீமையில் ஒரு காணியை வாங்குகிறான். அவனுக்கு அங்கு சென்று தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் ஆசை இறுதியில் அரசியல் காரணிகளால், கைகூடாமல் போனதாலும் தகுந்த முறையில் இளமை காலத்தில் பணத்தைச் சேமிக்காததாலும் மூச்சு விடவே கத்தியில்லாத வயதில் காய்கறிகளின் இலை மூட்டை தூக்கி தன்னுடைய வாழ்க்கையைக் கழிக்கும் பரிதாப நிலையில் தொழிலாளி என்ற ரீதியிலும் நாடற்ற நிலையிலும் வீரமுத்துக்கிழவன் இந்த சமூகத்திலிருந்தும், மண்ணிலிருந்தும் பிரிக்கப்பட்டு வாடுகின்றான்.

முதியோர்கள் இறுதிகாலத்தில் ஓய்வெடுத்து போஷாக்கான உணவு உண்டு பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டியவர்கள். இவை எதுவுமே இன்றி வீரமுத்துக்கிழவன் தனது வாழ்க்கையை ஓட்டுவதை “அவனுக்கு வயது எழுபதிற்கு குறையாது. மேல் மூச்சுத் திணற மூட்டையைத் தலைக்கேற்றி விட்டான். இனி எழுந்திருக்க வேண்டும்.

கயிறு போல் தொங்கும் கால்கள் வெட வெடக்க, பெருமூச்சாய் முழங்கால் எலும்பு சுருண்டு நிற்க, ‘தம்’ கூட்டி எழுந்து விட்டான் கிழவன். சிறிது நேரம் அப்படியே நிற்கிறான். பிறகு அடிமேல் அடி வைத்து நடக்கிறான்.” என ஆசிரியர் வர்ணணை மூலம் காட்டியுள்ளார்.

இளமைக் காலத்தில் சரியான திட்டமிடலும் சேமிப்புப் பழக்கமும் இல்லாமையினால் தான், முதுமையில் இந்த நிலை என்பதை, “இந்த தள்ளாத வயதில் அவன் ஏன் இப்படி அல்லல் பட வேண்டும். சாகும் காலத்தில் உட்கார்ந்து சாப்பிட ஒரு வழி தேடிக்கொள்வது தானே வாலிபத்தின் முதற்கடமை. அந்தப் பருவத்தில் அவன் என்ன செய்தானாம்…” “உட்கார்ந்து மட்டுமல்ல காலைநீட்டிக் கொண்டு படுத்த வண்ணம் சாப்பிடுமளவிற்கும் அவன் சம்பாதித்திருந்தான்- சேர்த்தான். அதெல்லாம் இப்போது எங்கே? எல்லாம் கண்மூடித்தனம்தான்!” முதலிய பகுதிகளினூடாக ஆசிரியர் காட்டியுள்ளார்.

தெளிவத்தை ஜோசப்பின் “பழம் விழுந்தது” என்னும் சிறுகதை முதியோர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் படும் அவலங்களையும் பிள்ளைகள் தங்களின் பெற்றோரின் ஓய்வு உபகாரச் சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக அவர்களின் மீது போலியான அன்பு செலுத்துவதையும் எடுத்துக்காட்டியுள்ளது.

வீரன் தனது தாயிற்கு வயது போய்விட்டது, அவளால் தனக்கு எவ்வித பயனும் இல்லை என அவளை வெறுத்து ஒதுக்குகின்றான், என்பதை ஆசிரியர் அவனூடாகவே பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார். “கிழவிக்கு யார் சோறு போடுகிறது? இப்ப கிழவிக்கு வேலை செய்ய முடியாதுதான்.

அதுக்காக வேலை இல்லேன்னுறதா? இத்தினி வருஷமா எந்தத் தோட்டத்துக்காகப் பாடுபட்டிச்சி… இந்தத் தோட்டத்துக்கு ஒழைச்ச கிழவிதானே… நான் என்ன கண்டாக்கா? இல்லை கணக்குப் பிள்ளையா வீட்டுல வைத்து சோறு கொடுக்க! அதெல்லாம் சரிவராது துரைகளே வேலை கொடுங்க இல்லேன்னா சுட்டுத் தள்ளிப்புடுங்க…!

”இதுவரை காலமும் தோட்டத்தில் வேலை செய்து ஓய்வு பெறும்போது முதியோர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால், முதியோர்களைப் பணத்துக்காக வேண்டும் என கருதி பிள்ளைகள் பாதுகாத்தனர். ஆனால் இப்போது அந்த தோட்டத்தில் புதிய சட்டமொன்று வந்திருக்கின்றதாம்.

‘ஓய்வுச்சம்பளம்’ என்று மொத்தமாக குறைந்த தொகையைக் கொடுத்தல், இதனால் குறைந்த தொகை பணம் கிடைப்பதாலும் அந்த பணத்தை எடுத்து உறவினர்கள் செலவழித்துவிட்டு முதியோர்களைப் பரிதவிக்கவிட்டனர். இதனை இச் சிறுகதை ஆசிரியர் பின்வருமாறு காட்டியுள்ளார்.

“தனி மலை கொடுத்து கிழவி வேலை செய்யத் தொடங்கிய காலக்கட்டத்தில் தான் ஒரு புதுவிதி வந்தது. இனிமேல் யாருக்கும் மாதப் பென்ஷன் கிடையாது. ‘ஓய்வுச் சம்பளம்! என்று மொத்தமாக அறுநூறோ எழுநூறோ கொடுக்கப்படும். வேலை செய்துள்ள விகிதப்படி என்பதுதான் அப் புதுச்சட்டம்.”

இச்சிறுகதையில் வரும் இன்னுமொரு கிழப்பாத்திரம் இருசன் என்பவன். ஓய்வு உபகாரச் சம்பளத்தில் எண்ணூறு ரூபாவை வாங்கி மகனிடம் கொடுத்து முந்நூறு நாள் ஆகவில்லை. இருப்பினும் கிழவனுக்கு உயிர்போக இன்று நாளை என இழுத்துக்கொண்டிருந்தது. அந்தக்கிழவனின் மகன் வீரனை வைத்து நாசித் துவாரத்தை வைத்து கிழவனின் உயிரைப்போகச் செய்கின்றான். இதனை ஆசிரியர் பின்வருமாறு காட்டியுள்ளார்.

“ விளக்கெண்ணை இருக்கா? என்று கேட்ட வீரன் இடது கைக்குழியில் எண்ணையை வாங்கிக்கொண்டு கிழவனிடம் நெருங்கி உட்கார்ந்து கண்ணைக் காட்டினான். இருசனின் மகன் மற்றவர்களைக்கூட்டிக்கொண்டு வெளியே வந்து விட்டான். வலது கைவிரலால் எண்ணையைத் தொட்டுக் கிழவனின் முகத்தில் தடவினான் வீரன். புருவ மேட்டில் தடவி நாசித்தண்டை நெருடியவாறு விரல்களைக் கீழிறக்கி துவாரத்திடம் வந்ததும் ஒரு முறை தொட்டுக் கொண்டான்.

கொழகொழத்த விரலிடுக்குகளில் இறுகப் பிடிபட்டிருந்தது நாசித்துவாரம். கிழவனின் மூக்குப் புடைத்து விம்மியது. உடல் இலேசாகத் திமிறியது. மூச்சுத் திணறியது. வேட்டைக்காரனின் வெளிச்சத்தையே உற்றுப்பார்க்கும் காட்டு முயற்கண்கள் போலக் கிழவனின் கண்கள் வீரனுடைய கண்களை நேர்ப்பாய்ச்சி ஒரு கணம் பார்த்தன. மறுகணம் மேல் இமைக்குள் சேர்த்தன. தலை கவிழ்ந்துவிட்டது.”

மு.சிவலிங்கத்தின் “இதுவும் ஒரு கதை” என்னும் சிறுகதை, தேயிலை றப்பர் தோட்டங்களில் நாள் கூலிக்கு உழைக்க வருகை தந்த மலையக மக்களில் ராமுவைப் போல தங்களுடைய அந்திய கால சாவுக் காணிக்கையாய் கிடைக்கும் ஓய்வூதியப் பணம் தொளாயிரத்தைப் பெற்றுக்கொள்ளாமலே கண்களை மூடியவர்கள் பலர் என்பதை காட்டி நிற்கின்றது.

ராமு தோட்டத்தில் நாற்பத்து மூன்று வருடங்களாக புல்வெட்டுதல், தேயிலைக்கன்று பதியவைத்தல், கன்றுகளுக்கு நீர் ஊற்றுதல், கங்காணி வேலைப்பார்த்தல் என பல வேலைகளைச் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தாலும் இப்போது அறுபத்து மூன்று வயதில் எந்த வேலையும் செய்ய முடியாமல் இறுதிக்காலத்தில் தேயிலை நிறுவனங்களால் கொடுக்கப்படும் சுமார் தொள்ளாயிரம் ரூபா பணத்தை நம்பி, அந்த பணம் கிடைத்தவுடன் தனது மகள் பொட்டுவும் அவனும் இந்தியாவில் இருக்கும் உறவினர்களிடம் சென்று விட வேண்டும் என்ற ஆசையில் வாழ்கின்றான்.

ஆனால் இறுதியில் அந்தப்பணமும் கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு போகவும் இல்லை. பொட்டுவை தனியாக விட்டுவிட்டு மரணத்தை தழுவிக் கொள்கின்றான் என இச் சிறுகதை நகர்கின்றது.

இச்சிறுகதையில் வரும் ராமு தன்னுடைய இறுதிக்காலத்தில் பொட்டுவை இந்தியாவிற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை, தான் நம்பிக்கை வைத்த தோட்ட அதிகாரியின் மூலம் நடக்கும் என நம்பியிருந்தான். ஆனால், அதற்கு எதிராக ராமுவின் செத்த வீட்டிற்கு வந்த அதிகாரியால் தம்புக்காரர்களுக்கு மட்டும்தான் பணம் கொடுக்க முடிந்தது.

எனவே ராமு தனது இறுதிக்கால ஆசையை நிறைவு செய்யாமல் இறந்து போனதை இச்சிறுகதை காட்டி நிற்கின்றது.தோட்ட அதிகாரிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் மத்தியில் தள்ளாத வயதில் வேலை செய்தான் என்பதை “அடச்சீ! என்ன ஆளய்யா நீ! வர வர உனக்கு நிதானம் முறைஞ்சு போச்சு. வேலை செய்ய முடியாட்டி ‘பென்ஷன்’ வாங்கிட்டு’ வீட்டுலே கெடக்குறது தானே?” என ஒரு தோட்ட அதிகாரி ராமுவை திட்டுவதன் மூலம் காணலாம்.

பேராதனை ஷர்புன்னிஷா “மனத்தின் சுமை” என்னும் சிறுகதையில் கண்டி மாவட்டத்தில் ஓய்வூதியத்தை நம்பி வாழும் முதியோர்களின் மனத்தில் உள்ள சுமை சித்திரிக்கப்பட்டுள்ளது. இச்சிறுகதையில் வரும் லோறன்ஸ் என்னும் கிழவனின் மனத்தின் சுமையை ஆசிரியர் பின்வருமாறு சித்திரித்துள்ளார்.

“பேரப்பிள்ளை என்றெல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். மக்களும், மருமக்களும் வேலையென்று போய்விட்டால் அந்தச் சின்னஞ் சிறுசுகளோடு கொண்டுள்ள பந்த பாசத்தினால் பேரின்பம் அனுபவித்த வண்ணம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன். இன்று நான் பென்ஷன் எடுத்து வரும் வரையும் வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பார்கள் எனது பேரப்பிள்ளைகள்…” லோறன்ஸ் கிழவன் இப்போது தனிமைபட்டுவிட்டதாகவும் முன்னர் இந்த சமூகத்தில் நல்ல மதிப்புடன் இருந்ததாகவும் பலருக்கு நல்வழிக் காட்டியதாகவும் அப்பாத்திரத்தின் வாயிலாகவே பின்வருமாறு சித்திரித்துள்ளார்.

“இப்போதெல்லாம் இந்தப் பென்ஷன் பணத்தைப் பெறுவதற்காக மட்டுமே நான் மாதத்துக்கு ஒரு நாளைக்கு இந்த வங்கிக்கு வருகிறேன். ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள வரும் போதுதான் எனது சேவைக்கால மகிமைகளைப் பற்றி நினைத்துப் பெருமிதமடைவேன்.

ஒரு கல்லூரி அதிபராக ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையைச் செப்பனிட்ட நான் இன்று சமுதாயத்தில் தனிமையாக்கப்பட்டு விட்டேன். என்றாலும் அந்தக்கடமை உணர்வுகள் என்னுள்ளத்தில் ஓர்மையாகவே உள்ளது. அதனால்தான் இந்த ஒருநாளில் அதன் நிமித்தம் கிடைக்கும் இந்தச் சிறுதொகைக்கும் நன்றிக்கடனைத் தெரிவிக்கும் முகமாக எவ்வாறெல்லாம் நாம் சேவைக்குச் செல்லும் போது என்னை அலங்கரித்துக் கொண்டேனோ அவ்வாறே அலங்கரித்துக் கொள்வேன்.”

ஓய்வூதிய பணத்தைப் பெற வரும்போதுதான், தங்களுடைய பழைய நட்பை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறே முதிர்ந்த ஜோடிகளுக்கும் லோறன்ஸ் கிழவனுக்கும் நட்பு தொடர்ந்து அடுத்த மாத ஓய்வூதியப் பணத்தை பெறும்போது, அந்த முதிர்ந்த தம்பதிகள் லோறன்ஸ்சைத் தேடுகின்றனர். அவரையும் காணவில்லை அவரைக் கூட்டிக்கொண்டு வருபவரையும் காணவில்லை.

அவள் இறந்துபோய் விட்டனர் என அறிந்து முதிர்ந்த தம்பதிகளின் உள்ளம் மனச்சுமையாக மாறிவிட்டது. என இச்சிறுகதை சித்திரிப்பதிலிருந்து முதியோர்களது மனத்தின் சுமை ஏதோவொரு வகையில் தொடர்கதையாகவே உள்ளதினைக் காட்டியுள்ளார்.

முடிவுரை

தொகுத்து நோக்கும்போது ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் மலையக சமூகத்தைச் சேர்ந்த முதியோர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றமையை பல்வேறு படைப்பாளிகளின் படைப்புக்களினூடாக அறியமுடிகின்றது.

போதிய அன்பு, அரவணைப்பு, உணவு, பாதுகாப்பின்மை ஆகியவற்றாலும் தள்ளாத வயதிலும் உறவினர்களின் உதவியின்றி கைவிடப்பட்டு, அல்லல்பட்டு மரணத்தைத் தழுவிக் கொள்ளும் முதியவர்களையும் சிறுகதைகளினூடாக கண்டுகொள்ள முடிகின்றது.

மேலும் மலையகச் சமூகத்தில் மட்டுமன்றி இன்றைய காலகட்டத்தில் பல சமூகங்களிலும் முதியோர்களின் பல பிரச்சினைகள் வெளிவராத வண்ணம் இருக்கின்றன. இளமை காலத்தில் தமது குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் உழைத்து, சேவைசெய்த இவர்கள் குறித்து தனிக்கவனம் செலுத்துவது எமது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

துணை நூல் பட்டியல்

  1. ராமையா.என்.எஸ்.எம்., ஒரு கூடைக்கொழுந்து, “பிஞ்சுக்குவியல்”, பக்.1-13,வைகறை வெளியீடு, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்,1980.
  1. ராமையா.என்.எஸ்.எம்., ஒரு கூடைக்கொழுந்து, “வேட்கை", பக்.14-24, வைகறை வெளியீடு, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்,1980.
  1. ராமையா.என்.எஸ்.எம்., ஒரு கூடைக்கொழுந்து, “ தரிசனம்”, பக்.25-31, வைகறை வெளியீடு, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்,1980.
  1. ராமையா.என்.எஸ்.எம்., ஒரு கூடைக்கொழுந்து, “எங்கோ ஒரு தவறு”, பக்.43-52 வைகறை வெளியீடு, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்,1980.
  1. ராமையா.என்.எஸ்.எம்., ஒரு கூடைக்கொழுந்து, “கோவில்”, பக்.121-124, வைகறை வெளியீடு, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்,1980.
  1. தெளிவத்தை ஜோசப், நாமிருக்கும் நாடே, “நாமிருக்கும் நாடே”, பக்.48-54, வைகறை வெளியீடு, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்,1979.
  1. தெளிவத்தை ஜோசப், கதைக்கனிகள், “பழம் விழுந்தது”, பக்.48, இளவழகன் பதிப்பகம், சென்னை,1971.
  1. பேராதனை ஷர்புன்னிஷா, குறிஞ்சி மலர்கள், “மனத்தின் சுமை”, பக்.07, மலையக வெளியீட்டகம், கண்டி, 2000.

- பெ.ஸ்ரீகந்தநேசன்

Pin It