“தேயிலைக் காடுகளிலும், மலை முகடுகளிலும் தேயிலைக்கு பசுமையையும், தேனீருக்கு சாயத்தையும் தந்த மக்கள் கொட்டும் பணியிலும், அட்டைக் கடியிலும் அடிமைகளாக, வாய் பேச முடியாத ஊமைகளாக, விடியலுக்கு முன் உழைப்பிற்குச் சென்று, இருள் கவிழ்ந்த பின்னர் வீட்டிற்குத் திரும்புகின்ற இழிந்த நிலையில் ஏமாளிகளாக, இலங்கையின் மலை சூழ்ந்த தேயிலைக் காடுகளில் இந்திய மண்ணின் மைந்தர்கள் ...

காட்டையும் மேட்டையும், சீர்படுத்தி பசுமை பூத்துக் குலுங்கும் சித்திரச் சோலைகளாக இரத்த வியர்வைகளைச் சிந்தி பொன்கொழிக்கும் பூமியாக மாற்றியவர்களின் வாழ்வில் ... ஒளியில் . . . வஞ்சிக்கப்பட்ட நிலையில், திக்கற்றவர்களாக துன்பக்கேணியில் பெரும் துயரத்துடன் வாழ்ந்தார்கள் இந்தியத் தொழிலாளர்கள் ...

இந்த இழிநிலை தொடர்ந்தது ஒராண்டல்ல... ஈராண்டல்ல... நுறு ஆண்டுகளாக, இந்த மக்கள் இங்கு வந்து குடியேறிய நூறாண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1932 ஆம் ஆண்டிலேதான் பெருந்தோட்டத்துறையில் முதன் முதல் தொழிற்சங்கம் உதயமானது.

              nadesayar  அப்பொழுது இந்த மக்களுக்காக இலங்கைச் சட்டசபையில் ஒரு குரல் ஒலித்தது. அந்த குரலுக்குரியவர் கோ.நடேசய்யர்! மலையக மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழருக்கு மட்டுமின்றி, சமுதாய உணர்வோடு நலிவுற்ற மக்கள் அனைவருக்காகவும் குரல் எழுப்பிய பெருமகன் கோ. நடேசய்யர்!”

                என ‘மலையக மாணிக்கங்கள்’ என்னும் தமது நூலின் என்னுரையில் மலையக இலக்கிய எழுத்தாளர் அந்தனி ஜீவா புகழ்ந்துரைத்துள்ளார்.

                தமிழ்நாட்டில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் வளவனூரில் கோதண்டராமைய்யர் - பகீரதம்மாள் வாழ்விணையருக்கு 14.01.1887 அன்று மகனாகப் பிறந்தார் கோ. நடேசய்யர்.

                அரசுப்பள்ளியில் சேர்ந்து ஆங்கிலப் பொதுக்;கல்வி கற்றார். பின்னர் தமது படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். சென்னை அரசாங்கப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கைதொழில் பயிற்சி பெற்றார். வியாபாரம் குறித்த கல்வியைக் கற்று அதில் டிப்ளோமா பட்டம் பெற்றார். தஞ்சாவூர் கல்யாணசுந்தர உயர்தரக் கல்வி சாலையில் சில ஆண்டுகள் வியாபாரப் போதனா ஆசிரியராகப் பணியாற்றினார்.

                தமது இளம்வயதிலேயே இன்சூரன்ஸ், ஆயில் இன்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும் ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டார்.

                நடேசய்யர் 1914 ஆம் ஆண்டு ‘வர்த்தக மித்திரன்’ என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தார். தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்கள் சங்கம் முதலிய சங்கங்களை ஆரம்பித்தார். தமது நண்பர் ஒருவர் மூலம் இலங்கைத் தீவில் கொழும்பு நகரில் வியாபாரிகள் சங்கத்தின் கிளை ஒன்றை ஆரம்பிக்கச் செய்தார். கொழும்பில் நடைபெற்ற வியாபாரிகள் சங்கத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள முதன் முதலாக இலங்கைக்குச் சென்றார்.

                இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இந்திய தமிழ்த் தொழிலாளர்கள் படும் துன்பங்களை நேரில் கண்டார். மண்ணை கிண்டி, பொன்னை அள்ளி வரலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி வந்தவர்கள் அடிமைகளை விட கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டார்.

                மலைகள் சூழ்ந்த தேயிலைத் தோட்டங்களிலே சிறைக்கைதிகளை விட மிகவும் கேவலமாக தமிழகத் தொழிலாளர்கள் நடத்தப்பட்டார்கள். அவர்கள் தலைவிதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

                இலங்கை மலையகத் தோட்டங்களுக்கு வெளியார் யாரும் செல்லமுடியாத சூழ்நிலை, புடவை வியாபாரிகள் மாத்திரம் மலையகத் தோட்டங்களுக்கு செல்வது வழக்கம். நடேசய்யர் புடவை வியாபாரியாக மாறினார். வியாபாரிகளுடன் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்தார்.

                இந்திய தொழிலாளர்களை இலங்கைத் தமிழ் மக்கள் தாழ்வுபடுத்துவதையும், சிங்கள மக்கள் வெறுத்தொதுக்குவதையும், அய்ரோப்பிய தோட்டத்துரைமார்கள் இம்மக்களை அடிமை படுத்துவதையும் எதிர்த்து பணியாற்றுவதையே தமது வாழ்வின் நோக்கமாக கொண்டார்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ’தோட்டத்து மக்கள் ஏழைத் தொழிலாளர்கள், மிகவும் எளிமையானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள், தமது எஜமானர்களுக்காக உலகத்தின் எல்லைக்கே செல்ல தயங்காதவர்கள், இலங்கை அரசாங்கத்தின் காருண்யமற்ற, அறிவில்லாத, பிடிவாதம் மிகுந்த, தரமில்லாத செய்கையால் தோட்ட துரைமார்களையே சர்வமும் என்று நம்பி வாழ வேண்டியவர்களானார்கள்.”

‘கூடை தலைமேலே, குடிவாழ்க்கை நடுரோட்டிலே.” என்று லயன்களில் முடங்கி கிடந்தார்கள். ‘கேள்வி கேட்பது எங்களுக்கு உரிய வேலை இல்லை, உழைத்து ஒய்ந்து, மாள்வது என்பதே எங்களின் தொழில்” என்ற நிலையில் வாழ்ந்தவர்கள்.

 ‘கம்பளி மூன்று ரூபாய்,

 கருப்பு கம்பளி மூன்று ரூபாய்,

 வேஷ்டி மூன்று ரூபாய்,

 வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்”

                என்று தங்களின் கணக்கு விபரங்களை, தங்களின் கங்கானிமார்களிடம் கேட்டு பழகியவர்கள். பொய் எது? உண்மை எது? என அறியாமையில் மூழ்கியவர்கள்.

                ‘தனது பற்றுச் சீட்டை வாங்கி கொண்டு, தனது மனைவியைத் தோட்டத்திலேயே விட்டு வருவதை வாழ்க்கை அமைப்பு”என்று ஏற்றுக்கொண்டவர்கள். ‘தோட்டத்திலே கெடுபிடி அதிகமாகின்றது என்ற அச்சத்தில் ஓடிவிடத் துணிகையில் அகப்பட்டு குதிரைகாலில் பிணைக்கப்பட்டு குருதி வெளிவரும் வரையில் தரையில் இழுத்தடிக்கப்படுவதை எதிர்க்கத் துணியாதவர்கள்.”

                ‘தன்னையே சர்வமும் என்று நம்பி வந்த தனது மனைவியை பெண்டாள முனைந்த பெரியகங்காணியையும்;, தோட்டத்துரையையும் தடுத்து நிறுத்த வலுவின்றி பைத்தியக்காரனாகக் கணிக்கப்பட்டு அங்கொடையில் அனுமதிக்கப்படுவதைச் சகித்துக் கொண்டவர்கள்.”

                ‘குடை பிடிக்காதே ! செருப்பு போடாதே !

                வெள்ளை வேஷ்டி கட்டி வெளியில வராதே!

                பத்திரிக்கை படிக்காதே! “ என்ற குரல்களை மாத்திரமே கேட்டுப் பழகியவர்களுக்கு ...      “பாட்டாளித் தோழனே பயப்படாதே, தலை நிமிந்து வெளியில் வா! இந்தா இந்த நோட்டீசைப்படி! கள்ளக் கணக்கெழுத கங்காணிகளுக்கு இடம் கொடாதே! குட்டிச்சாக்கில் சம்பளத்தை எடுக்கும் மட்டித்தனத்தை எட்டி உதை! அரைப்பெயர் போடுவதை எதிர்த்து நில்! பகல் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் லீவு உண்டு, அதைப் பயமின்றிக் கேள்! உன்னை மிரட்டும் வீணருக்குப் பயந்து உரிமையை விட்டுக் கொடுக்காதே!” என்ற நடேசய்யரின் உரிமைக் குரல்கள் புதுத்தெம்பைத் தந்தன. வெள்ளைத் துரைமார்களின், கங்காணிகளின் தடையை மீறி அய்யர் தோட்டத்திற்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து தொழிற்சங்கத்தில் அவர்களை அணி திரட்டினார்.

                அய்யர் தோட்டத்திற்குள் சென்ற ஒரு மாத காலத்திற்குள் அரைப்பெயர் போடுவது அடியோடு நின்று விட்டது. மற்ற குறைகளும் நீங்க வேண்டுமானால் தொழிலாளர்களுக்குக் கல்வி கொடுக்க வேண்டும். புத்தகங்கள் மூலமும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும், பிரசங்கங்கள் மூலமும் புத்துணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

                அகில இலங்கை இந்திய தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தின் மூலம் 1931 ஆம் ஆண்டு சகோதரத்துவம், சுய முயற்சி, சிக்கனம் என்ற குணங்களைத் தொழிலாளர்களிடம் பரப்பவும், குடி, சூது, கடன் என்ற பழக்கங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் அய்யர் முயற்சித்தார்.

                தோட்டத் தொழிலாளர்கள் கடன் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு கூட்டுறவு சங்கங்களும், கடனுதவி சங்கங்களும் ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தி, தொழிலாளர்களின் கல்வி அறிவை அபிவிருத்திச் செய்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அரசியல் நிலையைச் சிறப்பானதாக்கவும், தொழிலாளர் சம்மேளனம் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டது. தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும், வயோதிகத் தொழிலாளர்களுக்கு உதவி பணம் பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளிலும் சம்மேளனம் கவனம் செலுத்தியது.

தோட்டங்களில் குழுக்களாக அமைந்து இயங்கிய தொழிலாளர்கள் நடேசய்யருடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற காரணத்தால் பழிவாங்கப்பட்டார்கள். தோட்டங்களுக்குள்ளும், வெளியிலும் கூட்டம் நடத்துவதற்கு மைதானமோ கட்டிடமோ கிடைக்காத விதத்தில் தோட்ட நிர்வாகத்தினரும், நகர முதலாளிகளும் நடேசய்யருக்கு விரோதமாகச் செயற்பட்டனர்.

                நடேசய்யர் தங்கிய சுற்றுப்புறத் தோட்டங்களில் நிர்வாகம் தொழிலாளருக்கு அரிசியை நிறுத்தியது. குடிநீர் விநியோகத்தைக் கூட தடை செய்தது.

                அனுமதியின்றி தொழிற்சங்கவாதிகள் தோட்டங்களுக்குள் போக முடியாது என்றும், அப்படி போவது சட்டத்தை மீறியச் செயலாகும் என்றும் தோட்ட நிர்வாகம் தடை விதித்தது.

                1922 ஆம் ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் புகார்களை பெட்டிசன் உருவில் இந்திய ஏஜெண்டுகளுக்கு எழுத வைத்தவர் அய்யராவார். பின்னர் பெட்டிசன்களை தமது சங்கத்துக்கு அனுப்பச் செய்து அதன் மூலம் அவர்களின் சார்பாக பேசும் உரிமையைச் சங்கத்துக்குப் பெற்றவர் நடேசய்யர்.

                தோட்டங்களுக்கு அருகில் உள்ள நகரப்புறத்தில் கூட்டங்கள் நடத்தியும், தோட்டத்துக்குச் சொந்தமில்லாத பொது வழிகளில் தமது காரை நிறுத்தி, காரில் இருந்தபடியே தொழிலாளர்களோடு பேசினார். திறந்த காரை மேடை போல் பாவித்து அதிலிருந்து நடேசய்யரும், அவரது மனைவி மீனாட்சி அம்மையாரும் தொழிலாளர்களிடம் பேசி உணர்வு பெறச் செய்தனர். தொழிலாளர்கள் அவர்களது உரைகளை கேட்டு புத்துணர்வு அடைந்தனர்.

                நடேசய்யர் தொழிற்சங்க கூட்டம் நடத்துவதற்கு இடம் தர மறுத்து கண்டி நகரசபை தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், நடேசய்யர் அதைக்கண்டு பின்வாங்க வில்லை. அட்டன் நகர், கண்டி முதலிய நகரங்களில் தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் கூட்டங்களை நடத்தினார். அக்கூட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை எடுத்துரைத்தார். அட்டன் நகரில் 1931 ஆம் ஆண்டு மே தின கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர். ‘தொழிலாளர்களின் உரிமைகளும், கடமைகளும்’ என்ற பிரசுரத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

                ஆங்கில நாகரீகத்தை அறவே வெறுத்து ஒதுக்கினார். கதர் ஆடை அணிந்து கம்பீரமாகத் தோற்றம் அளித்தார். அற்புதமான பேச்சாற்றலாலும், ஆற்றல் மிகுந்த பத்திரிக்கை எழுத்தாலும் மக்களிடம் செல்வாக்கு பெற்றார்.

                தேயிலைத் தோட்டத்து துரைமார்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை மேலும் குறைத்தனர். அப்போது, தொழிலாளர்களின் சம்பளத்தை மேலும் குறைப்பதற்குத் திட்டமிடுவது, “வெடிமருந்து குவியல் மேலமர்ந்து மொழுவர்த்தியில் சுருட்டுப் பற்றவைப்பது போன்ற செயல்” என்று எச்சரிக்கை செய்தார் நடேசய்யர்.

                ஊமை சனங்களாக, எழும்பி நின்று போராடும் வலுவற்றிருந்த, குடியேற்ற கூலிகளாக நூறு ஆண்டுகளுக்கு மேலாக தாம் தவிப்பதை வெளியில் சொல்லும் விஷயஞானம் இல்லாதவர்களாக, அடிமை நிலையில் உறங்கிக்கிடந்த தோட்டத் தொழிலாளர்களை விழப்படைய வைத்து எழுந்து நிற்;கச் செய்தார் நடேசய்யர். அவரது வழிகாட்டலில் தான் அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

                1936 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் நடேசய்யர் மகத்தான வெற்றி பெற்றார். அப்போது நடைபெற்ற இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் ‘தோட்டத் தொழிலாளர்களின் சம்பள வெட்டால், தெருவோரங்களில் தோட்டத்தொழிலாளர்கள் பிச்சை எடுப்பதையும், பிணமாய் கிடப்பதையும் எடுத்துக் கூறி ஆட்குறைப்புக்கும், சம்பள வெட்டுக்கும் காரணமானவர்களை தோலுரித்துக் காட்டினார் அய்யர். மக்கள் நடேசய்யரை ஆதரித்து மகத்தான வெற்றி பெறச் செய்தனர்.

                1925 முதல் 1931 வரையிலும் இலங்கை சட்ட நிரூபண சபையிலும், 1936 முதல் 1947 வரையிலும் அரசாங்க சபையிலும் அங்கம் வகித்து இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வாதாடினார் நடேசய்யர்.

                தோட்டத் தொழிலாளர்களிடம் குடிகொண்ட கடன் வழக்கமும், அறியாமையும், குறுகிய பழக்க வழக்கமும், குடிபழக்கமும் திருத்தப்படல் வேண்டும் என்பதற்காக, நடேசய்யர் அவர்களை விஷயஞானம் உடையவர்களாக்க வேண்டும் என்று பாடுபட்டார். நாட்டின் செல்வத்துக்கு உழைத்த தோட்டத்தொழிலாளர்கள் தொழுநோயாளர்களைப் போல பிற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர் என்பதை அறி;ந்தார். அவற்றை அகற்றிட ஆயிரக் கணக்கில் துண்டுபிரசுரங்களை அச்சடித்து தொழிலாளர்களிடம் தாமும் தமது மனைவியும் நேரடியாக விநியோகம் செய்தனர். நோட்டீஸ்களை பெரிய எழுத்துக்களில் அச்சடித்து பொது இடங்களில் ஒட்டினார்கள்.

  இச்சூழலில் தேயிலை விலை குறைந்துவிட்டதை காரணம் காட்டி, தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டதென அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாதம் முழுவதும் உழைத்தும் தொழிலாளர்கள் வயிராற உணவு உண்ண முடியாத அவல நிலை ஏற்பட்டது.

                தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிச்சையெடுக்கும் நிலைக்குள்ளானார்கள். தோட்டத்து எல்லையிலும், தெருவோரங்களிலும் சிலர் பிணமாகக் கிடந்தனர். இந்த கொடுமைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராக தொழிலாளர்களைத் திரட்டிப் போராடினார் நடேசய்யர்!

                தோட்டத்துத் தொழிலாளர்களை சுத்தமாக உடை உடுக்கச் செய்தார், செருப்பு போடும்படி வலியுறுத்தினார், கோட் அணியச் செய்தார், தலைப்பாகை கட்டச் சொன்னார், கையிலே பிரம்பு எடுத்துக் கம்பீரமாக நிமிர்ந்து நடக்கச் சொன்னார் நடேசய்யர்!

                தோட்டத்து முதலாளிகளின் மூலதனம் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பினால் பல்கி பெருகியது. உழைத்தவன் பெறுவதோ ஒன்றுமேயில்லை.

                “யாரோ சிலரின்

                மோட்ச வாசமாய்

                ஆச்சுதே இந்த

                அழகிய பூமி

                யாரோ சிலரின்

                சுவர்க்க இன்பமாய்

                ஆச்சுதே என் மக்கள்

                ஆக்கிய பூமி.” – என்று மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை பாடியது போல், இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பில் பயன்பெற்றவர்கள் தோட்டத்துரைமார்களும், பெரிய கங்காணிகளும் தான் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.

                தேயிலை தோட்டங்களில் கங்காணி முறையை ஒழிக்கப் போராடினார் நடேசய்யர். நடேசய்யரின் தொழிற் சஙகப் போராட்டத்தினால் 1927 ஆம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. உணவு நேரத்தோடு ஒன்பது மணி நேர வேலைக்கு இது வழி செய்தது. தொழில் செய்யுமிடத்திலேயே தொழிலாளியை சாப்பிட வைப்பதற்கும் ஏற்பாடு செய்தது.

                “இலங்கை வாழ் இந்தியர்களை முன்னேற்ற இந்தியாவிலிருந்து ஆட்கள் வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டு காலந்தள்ளுவது முட்டாள்கள் செய்யும் காரியம். தங்களைத் தாங்களே முன்னேற்றிக்கொள்ள வேண்டும். மரியாதையுடன் தலைநிமிர்ந்து இலங்கை வாழ் இந்தியன் இலங்கையில் நடமாடப் போகிறானா அல்லது ஒடுங்கிய வயிறும், கிழிந்த துணியும், கையில் சட்டியுமாக இலங்கையில் அலையப் போகிறானா என்பது ஒவ்வொரு இந்தியனும் யோசிக்க வேண்டிய விஷயம். பிறர் கொடுத்து வரும் சுதந்திரம் நெடுநாள் நில்லாது. கிடைத்த சந்தர்ப்பங்களை காப்பாற்றி கொள்ளத்தக்க பலமும், தைரியமும் அவர்களுக்கு ஏற்படாது. ஆகவே, இலங்கை வாழ் இந்தியன் ஒவ்வொருவனும் தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்” என்று முழங்கினார் நடேசய்யர்.

                மதுக்கடைகள் தோட்டத்துத் தொழிலாளர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது என்பதை உணர்ந்து, மதுவிலக்கைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டி போராடினார் நடேசய்யர்.

                மலைநாட்டின் மூலை முடுக்குகள், தோட்டத்து எல்லைகள், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் சந்தைகள் முதலிய இடங்களிலெல்லாம் நடேசய்யரும், அவரது மனைவியும் இணைந்து நின்று மக்களிடம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

                “சட்டமிருக்குது ஏட்டிலே – நம்மள

   சக்தியிருக்குது கூட்டிலே

                பட்டமிருக்குது வஞ்சத்திலே – வெள்ளைப்

                  பவர் உருக்குது நெஞ்சத்திலே

                வேலையிருக்குது நாட்டிலே – உங்கள்

                  வினையிருக்குது வீட்டிலே ...

                என்று மீனாட்சி அம்மையார் பாடிய தொழிலாளர் சட்டக் கும்மி பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது.

                தேசநேசன், தேசபக்தன், தொழிலாளி, தோட்டத் தொழிலாளி, உரிமைப்போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும், சிட்டிசன் (Citizen), பார்வார்டு (Forward), இந்தியன் எஸ்டேட் லேபர் (Indian Estate Labour) என்று ஆங்கிலத்திலும் பத்திரிக்கைகள் நடத்தினார் நடேசய்யர். அப்பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.

                “தேசபக்தன் ஒருவருக்கும் விரோதியல்ல. ஆனால் பொய்யனுக்கு விரோதி. அக்கிரமக்காரனுக்கு விரோதி. போலியர்களுக்கு விரோதி. வேஷக்காரனுக்கு விரோதி. தேசபக்தன் உண்மையை நாடி நிற்பான். சாதி மத வித்தியாசம் பாரான். உண்மையான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பொது ஜனங்களுக்கு உண்டாக உழைப்பான். பணக்காரர் ஜாதி, ஏழை ஜாதி என்று இப்பொழுது ஏற்படுத்தி வரும் ஜாதியை மனந்தளராது எதிர்ப்பான். தொழிலாளர் சார்பில் அன்பு கொண்டு உழைப்பான்” என்று ‘தேசபக்தன்;’ முதல் இதழில் தமது பத்திரிக்கையின் இலட்சியத்தை வெளியிட்டார் நடேசய்யர்.

                தமிழ் மக்களுக்கு அரசியல் கருத்துக்களைப் பரப்புவதிலும், நாட்டு நடப்புகளை வெளிப்படுத்துவதிலும் நடேசய்யரின் பத்திரிக்கைகள் அளப்பரிய சேவை புரிந்தது.

                “எனக்குச் சட்டசபை பெரிதல்ல, பத்திரிக்கை தான் பெரிது. நான் சட்ட சபைக்குப் போய் செய்யக் கூடிய நன்மையை விட பன்மடங்கு அதிக நன்மை பத்திரிக்கையில் ஏற்படுத்தக் கூடும்” என்று அறிவித்தார் நடேசய்யர்.

                தொழிலாளர்களின் உதவியினால் கொழும்பில் அமைக்கப்பட்ட அச்சுக் கூடத்துக்கு ‘தொழிலாளர் அச்சுக் கூடம்’ என்று பெயர் சூட்டினார். 1929 ஆம் ஆண்டு ‘தேசபக்தன்’ நாளிதழாக வெளிவந்தது. அப்பொது இலங்கையில் வெளிவந்த ஒரே தமிழ் நாளிதழ் என்ற பெருமையைப் பெற்றது.

                நடேசய்யர், ‘பத்திரிகைகளை அச்சில் வார்த்த ஆயுதங்கள்’ என்றார். கூனி குறுகி கிடந்த மக்களை – ஏணிப்படிகளாகப் பிறர் ஏறிமிதிக்கப் பயன்பட்ட மக்களை – நாடி பிடித்;து அழைத்து வர பத்திரிகைகளை பயன்படுத்தினார். தமிழகத்திலிருந்து வெளிவருகின்ற இந்து நாளிதழிலும் நடேசய்யர் கட்டுரைகள் எழுதினார்.

                “ரோட்டிலும், தோட்டங்களிலும் கூலி வேலை செய்கிறவர்களுக்காக அவர் எழுதினார். ரிக்ஷா இழுக்கும் தமிழ்ச் சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று எழுதினார். தனது ஆங்கில அறிவையும், மொழிப்புலமையையும் சாமான்யர்களுக்கு விளங்கும் விதத்தில் எழுதினார். அவரது கட்டுரைகள் குண்டுகளைப் போன்றமைந்திருந்தன. அதை அவர் மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்தினார்."

                நடேசய்யர் எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ள நூல்கள்: வெற்றியுனதே, நீ மயங்குவதேன், நரேந்திரபதியின் நரக வாழ்க்கை, தொழிலாளர் அந்தரப் பிழைப்பு (நாடகம்), இந்தியா - இலங்கை ஒப்பந்தம், தொழிலாளர் சட்டப் புத்தகம், கதிர் காமம், அழகிய இலங்கை, Planter Raj, The Ceylon- Indian crisis. மேலும், ‘ஒற்றன்’, ‘மூலையில் குந்திய முதியோன்’ அல்லது ‘துப்பறியுந்திறம்’ முதலிய நாவல்களையும் ‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ எனும் சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

                ‘தொழிலாளர் சட்ட புத்தகம்’ என்னும் நூலின் முகவுரையில், நடேசய்யர். “சட்டம் அமுலில் இருந்தும் பல தொழிலாளர்களுக்கு இதன் நிபந்தனைகள் தெரியாதிருக்கும் காரணத்தால் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நன்மைகளைப் பெறாதிருக்கிறார்கள். தொழிலாளர்களை சட்ட நிபுணர்களாக்க வேண்டுமென்பதற்காக இப்புத்தகம் எழுதப்படவில்லை. அயோக்கியர்களிடம் அகப்பட்டுக் கொண்டு அவதிப்படாதிருக்க வேண்டியே இது எழுதப் பெற்றது என்பதை மறக்க வேண்டாம்.”

                அந்நூலில் ‘சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற தலைப்பில் ...

                “இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்யத் தொழிலாளர்களாக உங்களை அழைத்து வரத்தலைப்பட்டு 100 வருஷ காலமாகிறது. ஆரம்ப காலத்தில் பாய்க் கப்பலில் வந்து நூறு நூற்றைம்பது மைல் காடு வழியாக பட்டினியாலும் பசியாலும் வாடி உலர்ந்து வந்து, புலிகள் வாழ்ந்த காடுகளை வெட்டித் திருத்தி தோட்டங்களாக்கினீர்கள். அக்காலங்களில் கடன் பட்டும், அடிப்பட்டும், உதைப்பட்டும், ஜெயிலில் அடைப்பட்டும் அந்நியர்களுக்கு உழைத்துக் கொடுத்தீர்;கள். தோட்டக்காரர்கள் லட்சாதிபதி ஆனார்கள். இங்கிலாந்து செழிப்படைந்தது, காடாயிருந்த இலங்கை சிங்கார நாடாயிற்று. பிரிட்டிஷ்காரர்களுக்கு செல்வம் கொடுக்கும் நாடாக இலங்கை ஆயிற்று. ஆயிரக்கணக்கான கார்கள் வரலாயிற்று, இந்நாடே செழித்தது, உங்கள் நிலைமை தான் என்ன? அன்றைக்கும் அடிமை, இன்றைக்கும் அடிமை, தேயிலைத் தூரில் தேங்காய் காய்க்கிறது, மாசி உண்டாகிறது, தங்கக்காசு சம்பளம் என்று அழைத்து வரப்பட்ட உங்கள் முன்னோர்கள் தேயிலைத் தூர்களுக்கும், ரப்பர் மரங்களுக்கும் எருவானதைத் தவிர உங்களுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்களா? கூலிக்காரன் என்ற பெயர் போய் வி;ட்டதா?

                இந்தியாவிலுள்ள கவர்னர்கள், வைஸ்ராய்கள், வேறு பெரும் உத்தியோகஸ்தர்கள், இங்கிலாந்திலுள்ள காமன்ஸ் சபை அங்கத்தவர்கள், மந்திரிகள் மற்றும் அநேக செல்வாக்குள்ள பிரமுகர்கள் நீங்கள் வேலை செய்யும் தோட்டங்களின் பங்காளிகள், உங்கள் உழைப்பினால் ஏற்படும் லாபத்தைக் கொண்டு அவர்கள் சாப்பிட்டு சுகிர்த்து உலகத்தை ஆளுகிறார்கள். உங்களால் அவர்கள் ராஜபோகம் அனுபவிக்கையில் அவர்களுக்கு ராஜபோகம் கொடுக்கும் நீங்கள் உங்களுக்கு வேண்டிய மனித சுதந்திரத்தையாவது பெற முயற்சிக்க வேண்டாமா? உங்களுக்கு ராஜபோகம் வேண்டாம். மோட்டார் கார்கள் வேண்டாம். மாடமாளிகைகள் வேண்டாம். உல்லாச வாழ்க்கை வேண்டாம். நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தும் உங்களுக்கு இரண்டு வேலை வயிறு நிறைய சோறாவது கிடைக்க வேண்டாமா? அதற்காகப் பாடுபடுவது குற்றமா? நீங்கள் வேண்டுவது மனிதருக்குள்ள உரிமைதான். மிருகங்களைப் போல் நடத்தப் பெறாமல் மனிதர்களைப் போல் தலை நிமிர்ந்து நடக்க உங்களுக்கு உரிமை வேண்டும். அந்த உரிமையில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? எல்லோரும் ஒன்று கூடுங்கள், ஒற்றுமைபடுங்கள். சங்கங் கூட்டுங்கள். போராடுங்கள்!” என்று தோட்டத் தொழிலாளர்களை உணர்ச்சிப் பெருக்குடன் அறை கூவி அழைத்துள்ளார்.

                இலங்கை களுத்துரைப் பகுதி தேயிலைத் தோட்டம் அருகில் உள்ள கல்லறையில், “உழைத்து மாய்வதே எங்களின் வேலை ஏனென்று கேட்க எங்களுக்கு ஏது உரிமை” என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கல்லறை வரிகள் எந்தளவு தோட்டத் தொழிலாளர்கள் அடிமையாக நடத்தப்பட்டனர் என்பதை புலப்படுத்துகிறது.

                இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கையில் குடியுரிமையும், வாக்குரிமையும் வேண்டும் எனப் போராடினார் நடேசய்யர்.

                தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சேமநல நிதி ஏற்படுத்திட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்பதற்காக நடேசய்யர் போராடினார்.

                கல்வி ஒன்றின் மூலமே தோட்டத் தொழிலாளர்களின் அறிவுக்கண்களைத் திறக்க முடியும் என்று முடிவ செய்து, தோட்டங்களில் பாடசாலைகள் ஏற்படுத்திட போராடி வெற்றி கண்டார்.

                நடேசய்யரை இலங்கைவாழ் இந்தியத் தமிழர்கள் தங்களை வழி நடத்தும் காந்தியாக நினைத்தனர். அதனால் ‘காந்தி நடேசய்யர்’ என்று போற்றிப் புகழ்ந்தனர்.

                நடேசய்யரின் மனைவி மீனாட்சி அம்மையாரும் ஓர் இலக்கியப் படைப்பாளியாவார். 1931 ஆம் ஆண்டு இவரது படைப்புகள் ‘இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து’ என்ற தலைப்பில் இருபாகங்கள் வெளியிடப்பட்டது. மேலும் 1940 ஆம் ஆண்டு ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற தலைப்பில் அவரது சிறு கவிதை நூல் வெளிவந்தது.

                இலங்கை மலையக தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்காக போராடிய கோ. நடேசய்யர் 07.11.20147 அன்று மாரடைப்பினால் காலமானார்.

“ ஏழைத் தொழிலாளியிடம் இந்திய உணர்வு எழுந்திட, இந்தியனும் ஆங்கிலேயனும் உழைக்க வந்த இடத்தில் ஒரு நிலையினரே என்று கூவிட, இந்தியரின் பங்களிப்பு உடலுழைப்போடு மாத்திரம் அமையக் கூடாது என்று போராட்டம் நடத்திட, நடேசய்யர் காரணகர்த்தாவாக விளங்கியிருக்கிறார். மண்ணுக்குச் சமமாக மலைகளில் முடங்கிக் கிடந்தவர்கள், எண்ணுதற்கேலா இடர்களைத் தாண்டி முன்னுக்கு போவோமென்று முனைந்து எழுந்தமைக்கு அய்யரே வழி வகுத்தார். தஞ்சையில் பிறந்து கனத்தையில் தகனமான நடேசய்யர் பஞ்சையாய் வாழ்ந்து, பாழும் வறுமையில் மாய்ந்த இந்திய மக்களை இலங்கை வாழ் மக்களை ஈடேற்றும் வழிமுறை ஆய்ந்த முதல்வர்.”

                ‘மலையக இலக்கியம்’ என்ற தனித்துவம் மிக்க இலக்கியம் உருவாவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தும், அந்தப் பாதையில் நடந்து சென்றும் மலையக ஆக்க இலக்கியத்தின் முதல்வராக திகழ்ந்தார்.

                மலைமுகடுகளிலும், தேயிலைக்காடுகளிலும் தமது வாழ்வை அர்ப்பணித்த மனித ஜீவன்களைப் பற்றி முதன் முதல் குரல் கொடுத்த மனித மாணிக்கமான கோ. நடேசய்யர் என்ற பெயர் ‘மலையகம்’ என்ற சொல் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும். 

- பி.தயாளன்

Pin It