பெண்களின் உரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும் பாடுபட்ட உன்னத தலைவி கமலாதேவி சட்டோபாத்தியாயா. கமலாதேவி சட்டோபாத்தியாயா 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் நாள், மங்களூரில் பிறந்தார். தாயார் பெயர் கிரிஜாபாய்; அவரது தந்தை மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிந்தார்.

            Kamaladevi Chattopadhyay    அக்காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. பெண்கள் வீட்டிலும், வயலிலும் வேலை செய்திட நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் குடும்பச் சொத்திலும் பங்கில்லை. மேற்கண்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதை உணர்ந்தார் கமலாதேவி. இவைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் பெண்கள் கல்வியறிவு இல்லாமல் இருப்பதுதான். எனவே, பெண்களை கல்வி அறிவு பெற்றவர்களாகவும், அதன் வழி சுதந்திரப் பெண்களாகத் திகழவும் வேண்டும் என்பதற்காக பாடுபட்டார் கமலாதேவி.

                இந்தியநாட்டின் சுதந்திரத்திற்காகப், போராடியவரும், பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்டவருமான அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆசியைப் பெற்றார் கமலாதேவி!

                தமது ஆரம்பக் கல்வியை ஒரு ஆங்கில கான்வென்ட் பள்ளியில் பயின்றார். பள்ளியில் பயிலும்போதே, சுயக்கட்டுப்பாடு பற்றித் தெளிந்தார்! மனித குலத்திற்கு செய்யும் சேவையைக் கற்றார்!

                இளமையிலேயே தமது தந்தையாரை இழந்தார். தமது தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார். படிப்பில் மிகவும் திறமை வாய்ந்தவராக விளங்கினார். இவரது பெற்றோர்களைப் பார்க்க வீட்டிற்கு வரும் மகாதேவ கோவிந்த ராணடே, கோபாலகிருஷ்ண கோகலே, ராமாபாய் ராணடே மற்றும் அன்னிபெசண்ட் அம்மையார் முதலிய தலைவர்களின் உரையாடல்களைக் கேட்டு, இளம் வயதிலேயே தேசிய சுதேச இயக்கத்தில் ஆர்வம் கொண்டார்.

                அன்றைய நாளில் சிறந்த தலைவராகவும், கவிஞராகவும், தத்துவ மேதையாகவும் விளங்கிய ஸ்ரீஅரவிந்தரின் வழிகாட்டுதல் கமலாதேவிக்குக் கிடைத்தது. அவரது அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் ஏற்றார்.

                இந்திய சமுதாயத்தின் நிலை உயர்வடையச் சிந்தித்தார். ஆண்களும், பெண்களும் சம அளவில் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்றால், முதலில் பிறநாட்டு சமுதாயங்களின் நிலையை தான் அறிய வேண்டுமென்று நினைத்தார். எனவே, மேல்நாடு சென்று உயர்கல்வி பயில முடிவு செய்தார். இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று படிக்க அவரிடம் பணம் இல்லை. தமது நகைகளை விற்றார், இலண்டன் சென்று அங்குள்ள ‘பெட்போர்டு’ (Bed Ford) கல்லூரியில் சேர்ந்து சமூகவியல் பயின்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார். கல்வி முடிந்ததும் தாயகம் திரும்பினார்.

                இனிமேல் கமலாதேவி வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்ற நோக்கத்தில், ஆங்கிலேயே அரசு அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டது. ஆனால் அவர், அதுகுறித்து சிறிதும் கவலைப்படவில்லை. மேலும் ‘நான் இனி வெளிநாடுகளுக்குச் செல்லத் தேவையில்லை, இந்தியாவிலிருந்தே, இந்திய பெண்கள் சமூகத்திற்கு முழுநேரமும் பாடுபடுவேன்’ என உறுதி பூண்டார்.

                இந்தியாவில் காந்தியடிகளின் தலைமையில் சுதந்திரத்திற்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. காந்தியடிகளின் ஆலோசனையின்படி கமலாதேவி இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதென்று தீர்மானித்து அரசியலில் ஈடுபட்டார்.

                பெல்காம் காங்கிரஸில் உறுப்பினராகச் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு அளித்த பயிற்சியில் கலந்து கொண்டார். பல அரசியல் தலைவர்களின் தொடர்பும், நட்பும் ஏற்பட்டது.

                இந்திய நாகரிகம், பண்பாடு முதலியவைப் பற்றியும் அதனைப் பரப்புவதற்குமான ‘சேவாதளம்’ என்ற அமைப்பில் உறுப்பினரானார். சேவாதளப் பயிற்சியில் யோகாவும் கற்றுத் தரப்பட்டது.

                அகில இந்திய பெண்கள் மாநாட்டின் முதல் செயலாளராக 1926-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். பெண்கள் அமைப்பின் கிளைகளை நாடுமுழுவதும் அமைத்திட அரும்பாடுபட்டார்.

                கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி அய்ரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

                காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகத்தின் ஏழு உறுப்பினர்களில் இவரும் ஒருவராக இருந்து மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பை பங்குச் சந்தையில் விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக 1936-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                ‘லோக்நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயணன், ராம்மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து பாடுபட்டார்.

                கமலாதேவி பள்ளியில் படிக்கும்போதே 1917-ஆம் ஆண்டு, தமது பதினான்காவது வயதில் கிருஷ்ணாராவ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இரண்டாண்டு காலத்திற்குள் கணவர் இறந்துவிட்டார். இந்துமத மூடநம்பிக்கையின் அடிப்படையில் அவரது படிப்பு தடை செய்யப்பட்டது. தடைகளை மீறி சென்னை குயின்மேரீஸ் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

                கவிக்குயில் சரோஜினி தேவியின் சகோதரரும், புகழ்பெற்ற வங்காள கவிஞரான ஹிந்திரநாத் சட்டோபாத்தியாயாவைத் திருமணம் செய்துகொண்டார்.

                கலைத்துறையில் ஆர்வம் கொண்டு தமது கணவர் ஹிந்திரநாத்துடன் இணைந்து நாடகங்கள் எழுதுவதிலும், அரங்கேற்றுவதிலும் ஈடுபட்டார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

                சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றார். சுதந்திரத்திற்குப் பிறகு தீவிர அரசியலிலிருந்து விலகி, பெண்களின் உரிமைக்காக பாடுபட்டார்.

                இந்தியா சுதந்திரமடையும்போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு பிரிவாக 1947-ஆம் ஆண்டு பிரிந்தது. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்த வேளையில் மக்களுக்கு பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும் செய்து கொடுத்தார். இவரது அரும்பணியை இன்றும் கூட பரிதாபாத் நகரம் நினைவு கூர்கிறது.

                சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர், பாரதீய நாட்டிய சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைவினைஞர்கள் போர்டு தலைவர், யுனெஸ்கோவின் உறுப்பினர் என பல பதவிகளை வகித்து சிறப்பாக பணியாற்றினார்.

                கமலாதேவி, ‘இந்திய பெண்களின் எழுச்சி’ (Awakening of Indian Womanhood); இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘Inner Recesses and Outer Spaces’; ‘ஜப்பான் - அதன் பலமும், பலவீனமும்; ‘போர்ப் பயிற்சியில் சீனா’ (In War, Torn China); ‘தேசிய அரங்கை நோக்கி’; ‘அமெரிக்கா’ – The Land of Superlative’; ‘குறுக்குசாலை’; ‘சோசலிசமும் சமுதாயமும்’; ‘இந்தியாவில் ஆதிவாசிகள்’; ‘இந்திய கைவினைப் பொருட்கள்’; ‘சுதந்திரத்திற்காக இந்தியப் பெண்களின் போராட்டம்’ முதலிய நூல்களைப் படைத்துள்ளார்.

                கமலாதேவி, 29.10.1988-ஆம் நாள் காலமானார். இந்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷன்’ விருதையும், ‘பத்ம விபூசன்’ விருதையும் வழங்கிச் சிறப்பித்தது. சிறந்த சமுதாய தலைவர் என்ற முறையில் ‘ராமன் மகசேசாய்’ விருதைப் பெற்றார். சாந்திநிகேதன் தனது உயரிய விருதான ‘தெசி கோட்டாமா’ (Desikottama) பட்டமளித்து கௌரவித்தது.

                இந்திய நாட்டு விடுதலைக்கும், பெண்கள் உரிமைகளுக்கும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட கமலாதேவி சட்டோபாத்தியாயாவின் புகழ் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It