ஈழத் தமிழர்களை நினைத்தால் மிகுந்த வேதனையாக இருக்கிறது. நாள் தோறும், அந் நாட்டின் தமிழ்க் குழந்தைகள், பெண்கள், முதியோர், இளைஞர் என்னும் வேறுபாடின்றி தமிழர்கள் என்னும் ஒரேயொரு காரணத்துக்காக ‘சிங்கள’த்தால் எமனுலகுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
“உலகாள உனது தாய் மிக உயிர்வாதை யடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!’ என்றான் புரட்சிக் கவி பாரதிதாசன்.
இன்றோ, அடுத்திருக்கும் ஈழத்தில் நமது உடன் பிறப்புகள்- தமிழகத்தலைவர்கள் கூறுவது போல்- நமது தொப்பூழ்க்கொடி உறவுகள், உலகாள அல்ல ‘உயிர் வாழ’த் துடித்துத் தவிக்கிறார்கள். அதற்காகத் தாய்த் தமிழகத்தின் ஆதரவை-அவர்கள் காலங் காலமாக தமது தந்தையர் நாடு என எண்ணியிருந்த இந்திய தமிழகத்தின்- உதவிக்காக கையேந்திக் கலங்கி நிற்கிறார்கள்.
சிங்களக் கொடூரர்களின் துப்பாக்கிகளுக்கும், கொத்துக்குண்டுகளுக்கும், ஏவுகணைகளுக்கும் இலக்காகி ‘ உயிர் வதை’ப்படும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு ‘காத்திரமான’ நடவடிக்கைகள் எதனையும் செய்யாது, வெறும் வாய்ச் ‘சவடால்’களிலும், ஆர்ப்பரிப்புகளிலும், வீதியோரக் கூடல்களிலும் நேரத்தைச் செலவிடும் தமிழகத் தலைவர்கள், தங்கள் ஆற்றலுக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்ட நடவடிக்கைகளில் தானும், முழுமதுடன் ஈடுபடாமல்; ‘தமிழுணர்வு’ வேடமிடுவதிலேயே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளின் பலத்தோடு நடுவண் அரசை அணுகித் தமது கூட்டணிக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பதவிகளைப் பெறும் ஆற்றல் வாய்ந்த முதல்வர்- தமிழினத் தலைவர் என்று பெயர் சூடிக்கொள்வதில் புளகாங்கிதமடையும் கலைஞர்- ஆறு மாதங்களுக்கு முன் ஈழத்தமிழர்களுக்காக, நாடாளுமன்றப் பதவிகளைத் துறப்போம் என்று வீரவனம் பேசிய தமிழக முதல்வர்........... இன்று “ ஈழத்தமிழர் நிலை கண்டு அழுவதைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை” என்கிறார்.
மற்றொரு பக்கத்தில், தனது கடந்தகால அரசியல் வரலாற்றில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாய்திறக்காத, முடிந்தால் எதிராக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த ‘அம்மையார்’ - இப்போது இரண்டு மாதங்களாக, அதுவும் நடுவண் அரசின் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் ஈழத்தமிழருக்காகப் பரிந்துபேச முன்வந்திருக்கிறார்! இன்றைய நிலையில் ஈழ ஆதரவுக் குரலும் தமிழகத்தின் தேர்தல் தலைவிதியை நிர்ணயம் செய்யப்போகும் காரணிகளுள் ஒன்றாக விளங்கப்போகிறது என்னும் உண்மை தெரிந்தவுடன், தனது அரசியல் ஆதாயத்துக்காக ஈழத்தமிழருக்காக குரல்தர ஆரம்பித்திருக்கிறார். இது ஒரு நல்ல ‘மனதாபிமானத்தின்பாற் பட்ட மாறுதல்’ என்று ஏற்றுக்கொண்டாலும், இந்தப் பரிவின் ஆயுட்காலம் எத்தனை நாட்கள் என்பது அவருக்கே தெரிந்த ஒன்று.
மேற்குறிப்பிட்ட இரு தலைமைகளையும் விட்டால் தமக்கு வேறு நாதியில்லை என்னுமாப்போன்று, தமிழுணர்வாளர்களாக தம்மை இனங்காட்டிக் கொண்ட, பா.ம.க, ம.தி.மு.க, இடதுசாரி, விடுதலைச் சிறுத்தைகள் யாவரும், ஈழத்தில் செத்து வீழும் ஒவ்வொரு தமிழனது உயிரையும் தமது “வோட்டாக’ மாற்றும் ‘ரசவாத வித்தையைப்’ புரிவதற்காக இந்தத் தலைமைகளின் பின்னால் கைககட்டி நிற்கிறார்கள்.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் 1983ல் சிங்கள இனவெறியின் கோர தாண்டவத்தின் காரணமாக, அந் நாட்டின் சிறுபான்மை இனமான தமிழர்களது அவலம் வெளியுலகிற்குத் தெரிந்ததில் இருந்து, இன்று அங்கு தமிழினமே பூண்டற்றுப் போய்விடும் ஆபத்து உருவாகியுள்ள நேரத்தில்கூட, எதுவும் செய்ய மனமின்றி அல்லது திராணியின்றி கைகளைப் பிசைந்துகொண்டிருக்கும் தமிழகத் தலைவர்களை முற்றாகப் புரிந்துகொள்ள முடியவில்லை! ‘பந்த்’, மனிதச் சங்கிலி, பணச் சேகரிப்பு என்று வெறும் கண்துடைப்பு நாடகங்களை ஒருவர் மாறி மற்றவர் எனப் போட்டி போட்டுக்கொண்டு அரங்கேற்றுவதில் குறியாக இருக்கும் இவர்களில் ஒருவராவது, “அண்டையில் எமது இனத்தவர்கள் அநியாயமாக மனிதத்தன்மையின்றிக் கொன்றழிக்கப்படும்போது, எம்மால் பதவிக்காக தேர்தலில் பங்காற்ற இயலவில்லை. முதலில் மனிதாபிமானத்தின் பேரிலாவது இந்தப் போரினை நிறுத்த முன்வாருங்கள். அதன்பின்னர் நாம் எமது மாநிலத்துக்கான தேர்தலில் மன அமைதியுடன் பங்காற்ற முடியும். அழிந்துகொண்டிருப்பவன் எனது ரத்த உறவு எனவே இந்த அநியாயத்தை முதலில் நிறுத்தவேண்டும்” என்று இதுவரை நடுவண் அரசிடம் முறையிட்டிருக்கிறார்களா?
எந்த நடுவண் அரசுக்கு முண்டு கொடுத்து, இன்று தேர்தல் களத்தில் நிற்கிறாரோ- அந்த அரசின் ஆசியோடும், துணையோடும் ஈழத்தமிழர்கள் அழிக்கப்படுவதை நன்கு தெரிந்திருந்தும்- அவர்களிடம் அதனைக் கேட்கும் தைரியமின்றி ‘தந்தி’களை அனுப்புகிறார் தமிழகத்து முதல்வர்!
மேடையில் முழங்குவது, கடிதம் எழுதுவது, தந்தி அனுப்புவது எல்லாம் தமிழரது வீரத்தின் வெளிப்பாடு அல்ல என்பதும்; களமாடுவதும், துணிந்து நின்று நியாயத்துக்காகப் போராடுவதும், வாய்மை போற்றுவதும் தான் உண்மைத் தமிழர் பண்பு என்பதைத் தமிழக முதல்வரோ அல்லது ஏனைய தலைவர்களோ அறியாதவர்களல்ல. ஆனால் கண்ணிருந்தும் பாராதவராய், காதிருந்தும் கேளாதவராய் இவர்கள் இருப்பதுதான் வியப்பாக உள்ளது.
உணர்வும், தன்மானமும் உள்ளவர்களெல்லாம், முத்துக்குமாரைப்போல் தாங்களாகவே தம்மை அழித்துக் கொள்வதுதான் இதற்குத் தீர்வா?
சில மாதங்களுக்கு முன்னர், தமிழினத்தின் இரத்தம் குடிக்கும் சிங்களத் தளபதி “தமிழகத் தலைவர்கள் கோமாளிகள்....... வெற்றுப் பேச்சுப் பேசி மக்களை ஏமாற்றுபவர்கள்” என்று ஏகடியம் செய்தபோது, நாம் எவ்வளவு கொதிப்படைந்தோம். ஆனால்- அவன் அவ்வாறு கூறி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை, அவனும் தன் பங்குக்கு ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டான். நமது தலைவர்களோ இதுவரை எதனையும் செய்ததாகக் காணோம், பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்! பேச்சுமட்டும் இன்னும் நின்றபாடில்லை.
தேர்தல் முடியும் வரை அவர்கள் நிறுத்தமாட்டார்கள்! முடிந்தபின் பேசவே மாட்டார்கள்!!
- சர்வசித்தன் (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
உயிர் ‘வாதை’யும் தேர்தல் பாதையும்!
- விவரங்கள்
- சர்வசித்தன்
- பிரிவு: கட்டுரைகள்