மொழி காக்க உரமாகிய மறவர்கள் - 3
 
இந்தி அல்லாத மற்ற மொழிகளைக் கொண்ட மாநிலங்களுக்கு இடியாய் ஒரு செய்தியை மத்திய உள்துறை அமைச்சகம்1964 டிசம்பர் 5ஆம் தேதியன்று வெளியிட்டது. 1965 ஜனவரி 26 முதல், இந்தி மொழி இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது. அனைத்து மாநிலங்களோடும் ஜனவரி 26க்குப் பிறகு, தொடர்புகள் இந்தியில் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பு கூறியது. 
 
இந்த அறிவிப்புக்குப் பிறகு  தமிழகமே பற்றி எரிந்தது. இந்தி திணிப்பை எந்தவிதத்திலும் ஏற்க மாட்டோம் என்று கூறி தமிழகம் போர்க்கோலம் பூண்டது. ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், முற்றுகைகள் என தமிழகமே இந்திக்கு எதிரான போராட்டங்களை  நடத்திக் கொண்டிருந்த வேளையில் இந்தி எதிர்ப்புப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காகத் தன் உடலையே எரித்து தமிழகத்தின் போராட்ட திசைவழியை மாற்றி அமைத்தார்.  
chinnasamy hindi agitationஅரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் 30 ஜூலை 1937 அன்று பிறந்த சின்னச்சாமியின் பெற்றோர் பெயர் ஆறுமுகம் - தங்கத்தம்மாள். பெற்றோர்க்குத் திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்துப் பிறந்த செல்ல மகன் இவர். ஐந்தாம் வகுப்புவரை பள்ளிக்குச் சென்ற சின்னச்சாமி படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அதன் பிறகு விவசாயத்திலும் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். வேலை நேரம் போக மீதி நேரங்களில் சுயமரியாதை நூல்களை, குறிப்பாக நம் நாடு, திராவிட நாடு, முரசொலி ஏடுகளைப் படித்து வந்தார். நூல்கள் வாசித்தும் தலைவர்களின் மேடைப் பேச்சைக்  கேட்டும் சுயமரியாதைக் கருத்துக்களை, மொழி உணர்வைத் தனக்குள் ஏற்றிக் கொண்டார். 
 
கீழப்பழுவூரை அடுத்த ஆடுதுறையைச் சேர்ந்த கமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சின்னச்சாமி தனது இளம் வயதில் இருந்தே சுயமரியாதை இயக்கப் பற்றோடு இருந்ததால் தன் மகளுக்கு திராவிடச்செல்வி எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். இப்படிப் போய்க் கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையை ஒன்றிய அரசின் அறிவிப்பு அப்படியே திருப்பிப் போட்டது.
 
1965 ஜனவரி 26 முதல், இந்தி மொழி இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு தமிழுணர்வு கொண்ட சின்னச்சாமிக்குக் கோபத்தைத் தூண்டியது. இன்னும் ஓராண்டில் ஆட்சிமொழியாக  இந்தி மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்பு   இந்திக்குள்ள உரிமை தமிழுக்குக் கிடையாதா என ஆவேசப்பட்டார். ஒன்றிய அரசின் அறிவிப்பை கேட்டவுடன் சென்னை கிளம்பிச் சென்றார். தியாகராய நகர் தொடர் வண்டிநிலையத்தில் முதலமைச்சர் எம். பக்தவத்சலம் செல்வதைக் கண்ட சின்னச்சாமி அவர் காலில் விழுந்து ஒன்றிய அரசின் அறிவிப்பை தடுத்து நிறுத்துங்கள், தமிழைக் காப்பாற்றுங்கள், நீங்களும் தமிழர்தானே” என்று கதறினார். காலில் விழுந்து கதறிய சின்னச்சாமியை அலட்சியமாய் இடறித் தள்ளிவிட்டு "இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்” என்று காவலர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதன் விளைவாக சின்னச்சாமி கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்.
 
கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பிறகு மிகவும் சோகத்துடன் தனது சொந்த ஊர் திரும்பிய சின்னச்சாமியால் எப்போதும் போல்  இயல்பாக இருக்க முடியவில்லை, இந்தித் திணிப்பை எப்படியாவது தடுக்க வேண்டும் என வேதனையோடும் மணக்குமுறலோடும் இருந்தார். அந்த நேரத்தில் தென் வியட்நாமிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த  புத்த பிக்குகள் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு சாலைகளில் அமைதியாக உட்கார்ந்து தீக்குளிப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இந்தச் செய்தி அன்றைய இதழ்களில் வெளிவந்தன. இந்தச் செய்தியை அறிந்த சின்னச்சாமி தானும் பித்தப்பிக்குகள் போல் தன்னை எரித்துக் கொண்டு இந்தித் திணிப்பைத் தடுப்பது என்ற முடிவுக்கு வந்தார்.
 
24.1.64 வெள்ளிக்கிழமையன்று பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி 'தமிழ்மொழி வாழப் பாடுபடுங்கள்' என்று மாணவர்களிடம் உணர்ச்சி பொங்கப் பேசினார். சின்னச்சாமியின் இந்த எதிர்பாராத 'கொண்டாட்டம்' குறித்து குழப்பமடைந்த அங்கிருந்த பெரியவர்கள் இது குறித்து அவரிடம் கேட்டபோது, ​​"இன்றைய தினம் இந்தி சாகப் போகிறது, என் தமிழ் மொழிக்கு நிரந்தர வாழ்வு கிடைக்கப் போகிறது" என்று மகிழ்ச்சியான குரலில் கூறினார்.
 
'வயலுக்குப் போய் வேலை பார்க்கக் கூடாதா?' என்று கேட்ட அவரது தாயாரிடமும், மனைவி கமலத்திடமும் "வேலைக்குத்தான் போகிறேன், திராவிடச் செல்வியை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு  தனது சொந்த ஊரிலிருந்து  சைக்கிளை எடுத்துக்கொண்டு திருச்சிக்கு வந்தடைந்தார்.
 
திருச்சி வந்த சின்னச்சாமி அங்கே ஒரு புகைப்படம் எடுத்து, அதன் ரசீதைத்  தன் நண்பர் நாகராசனுக்கு அனுப்பினார். அனுப்பிய அந்த ரசீதுடன் நண்பர் நாகராசனுக்கு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார். "ஐயோ தமிழே, உன்னை வாழ வைக்க நான் சாகப் போகிறேன். உன்னை (தமிழ் மொழி) படுகொலை செய்ய திருத்தம் செய்து விட்டார்கள் நான் போர்க்களம் சென்று 11 மணி அளவில் அழிந்து போகிறேன். இதைப் பார்த்து தமிழக மக்கள் ஏன் இந்தி, எதற்கு இந்தி என்று கேட்கட்டும்” என்று அந்தக் கடிதத்தில் எழுதினார்.
 
தந்தையின் மரணத்திற்குப் பிறகு தனியாக இருக்கும் தன் தாயைக் காக்க வேண்டிய கடமையையும் இரண்டு வயதேயான தனது அன்பு மகள் திராவிடச் செல்வி மீதான பாசத்தையும் தன்னுடைய கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தினார். "தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகின்றேன். கமலத்தைக் காக்க வேண்டும், செல்வி பெரியவளாகவும் அம்பிநாதன் துணைவியாகட்டும், இதைச் செய்யுங்கள். இதை நான் திருச்சியிலிருந்து எழுதுகிறேன். என்னை மன்னித்து வாழ்த்தி வழியனுப்புங்கள். தமிழ் வாழ வேண்டும் என நான் செய்த காரியம் வெல்லும்" என்று எழுதி அதில் "சாகப்போகும் சின்னசாமி " என்று கையெழுத்திட்டு  தனது குடும்பத்தினருக்கும் கடிதம் ஒன்றை எழுதுகிறார். இந்த இரண்டு கடிதங்களையும்  அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டு, தனது தியாகத் திட்டத்தை நிறைவேற்ற 17 லிட்டர் பெட்ரோல் வாங்கினார். அவர் பெட்ரோல் வாங்கியதற்கான ரசீது அவர் தீக்குளிப்பதற்கு முன்பு ஒரு மரத்தின் அருகே தொங்கவிடப்பட்ட அவரது பையில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
தமிழுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்ய திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்தார். தான் சாகப் போகும் நேரத்தை 11 மணி என்று குறிப்பிட்டாலும், 1964 ஜனவரி 25 அன்று அதிகாலை 4.30 மணிக்கு  திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டார். தன் உடல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது கூட ”தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” என முழக்கமிட்டுக் கொண்டே சரிந்தார்.
 
தமிழ் வாழ்க!  இந்தி ஒழிக! என முழக்கம் கேட்டு ஓடி வந்தவர்களால் சின்னச்சாமியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் எரிந்த உடலைத்தான் அனைவரும் சுற்றி நின்று பார்க்க முடிந்தது. சின்னச்சாமியின் உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சின்னச்சாமியின் உடலைக் காண அவரது மனைவி கமலம் மற்றும் மகள் திராவிடச் செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர், பின்னர் ஜனவரி 26, 1964 அன்று, உடல் காவல் துறையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சியில் உள்ள தென்னூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
 
தமிழுக்காகத் தன்னை எரித்துக் கொண்ட தமிழனின் இறுதி ஊர்வலத்தில் கணக்கிலடங்காத் தமிழர்கள் திரண்டனர். சின்னச்சாமி உடலில் பற்றிய தீ, ஒவ்வொருவர் உள்ளத்திலும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் அதன் உச்சத்தைத் தொட்டது. தாய்மொழிக்காகத் தீக்குளித்த உலகின் முதல்வீரராக  கீழப்பழுவூர் சின்னச்சாமி இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
 
- க.இரா. தமிழரசன்
 
துணை நின்றவை:
 
1. ta.wikipedia.org › wiki › கீழப்பளுவூர் சின்னச்சாமி 
2. www.keetru.com
3.tamilthesiyan.wordpress.com
4.www.newindianexpress.com
Tiruchy Martyr Whose Death Gave Birth to Student Protests
5. தீயில் வெந்த தமிழ்ப்புலிகள்
 
Pin It