பூமிக்கடியில் இருந்து வந்து முட்டைகள் இட்டு திரும்பச் சென்றன. ஆனால் மண்ணிற்குள் மறுபடி செல்ல தவளைக் குஞ்சுகள் இல்லை. இந்த பாதாளத் துயரத்திற்கு யார் காரணம்?
வானிலை ஆய்வு நிறுவனங்களூக்கும், விஞ்ஞானிகளுக்கும் மட்டுமில்லை தலைமுறை தலைமுறையாக பூமிக்கடியில் இருந்து துல்லியமாக அறிந்தும், அதை அனுபவித்தும் அதை அனுசரித்து வெளியில் வந்து அடுத்த தலைமுறைக்கு பிறவி கொடுக்கும் பாதாளத் தவளை அல்லது பர்ப்பிள் தவளைக்கும் (Purple frog) இம்முறை பருவமழை கணிப்பு தாறுமாறாகிப் போனது.
காலநிலை கடிகாரம்
மழையில் ஏற்றக்குறைவுகள் உண்டாகலாம் என்றாலும் இந்த உயிரினங்களின் காலநிலைக் கடிகாரம் சாதாரணமாக இவ்வாறு தாறுமாறுவது இல்லை. இயல்பாக கிடைக்கும் பருவமழையின் அறிகுறிகள் இம்முறையும் கிடைத்தபோது மண்வெட்டி கால்களுடன் பர்ப்பிள் தவளைகள் வெளியுலகிற்கு வந்தன. என்றாலும் அது மழைக்காலமாக இருக்கவில்லை.ஆறு கால்வாய் எங்கும் நீர்ப் பெருக்கெடுத்து ஓடியது என்றாலும் அது நான்கு நாட்களில் வற்றி வறண்டு போயின. தென்மேற்குப் பருவமழைக்கு முன் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும், காற்றடுக்கு சுழற்சியும் சேர்ந்து பெய்த மழை பருவமழை போல பெய்தது. இதுவே இவை வானிலையை தவறாகக் கணிக்கக் காரணம்.
பருவகாலத்தில் பெய்யும் நல்ல மழை என்று நம்பி வெளியில் வந்தபோது காட்சிகள் மாறின. குளிர்ச்சியைக் காட்டிலும் வெப்பம் அதிகமானது. இத்துடன் நெல்லியாம்பதி, பரம்பிக்குளம், அகத்திய மலை, வடக்காஞ்சேரி, பீச்சியில் அருவிகளிலும், காடுகளிலும், வாய்க்கால்களிலும் இவை இட்ட முட்டைகள் உலர்ந்து போயின. இவற்றிற்கு தலைப்பிரட்டையாகத் தேவையான நீர் கிடைக்கவில்லை.
முட்டையிடும்போது நீர் தேவையான அளவிற்கு இருந்தபோதும் பிறகு அது மூழ்கியிருக்க நீர் இல்லாமல் போனபோதுதான் இந்த பாதாளத் துயரம் சம்பவித்தது. நூற்றாண்டுகளாக பூமிக்கடியில் இருந்து குறிப்பிட்ட சமயத்தில் மட்டும் புறப்படும் பயணமும், மண்ணிற்கு மேல் முட்டையிட்டு மண்ணுக்கே வேகமாக மீண்டும் செல்லும் வாழ்க்கை முறையையும் கொண்ட இவற்றிற்கு இதனால் பெரும் துயரம் ஏற்பட்டது.
இந்த வாழ்க்கை முறையில் இதுவரை இதுபோல ஒரு மாற்றம் நிகழவில்லை. மலையாள மொழியில் மகாபலி தவளை என்றும் இவை அழைக்கப்படுவதுண்டு. இவற்றின் உயிரியல் பெயர் நாசிகாபட்ரஸ் சகியாக்ரின்சிஸ். குஞ்சுகள் பிறந்தபோதும் அவற்றால் இம்முறை மண்ணிற்கடியில் செல்ல முடியவில்லை. நீர் இல்லாததால் முட்டைகள் அனைத்தும் அழிந்து போயின என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆண்டிற்கு ஒரு முறை பருவமழை காலத்தில் ஏதேனும் ஒரு நாளில் பூமிக்கு மேல் வந்து இவை முட்டையிடுகின்றன. தேர்ந்தெடுத்த ஆண் தவளைகளுடன் இணை சேர்ந்து பெண் தவளைகள் மண்ணில் அடியில் இருந்து வெளியில் வந்து அருவிகள், மற்ற இடங்களுக்கும் செல்கின்றன. வடிவத்தில் சிறிய ஆண் தவளை, பெண் தவளையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு செல்வது போல செல்லும்.
கோடைகாலத்தில் வற்றும் இயல்புடைய நீரூற்றுகள், அருவிகள், வாய்க்கால்கள் போன்றவையே இவற்றின் வாழிடம். இந்த சமயத்தில் முட்டையிடுவதால் மீன்கள் மற்றும் பிற பிராணிகளின் அச்சுறுத்தலில் இருந்து முட்டைகளை இவை காப்பாற்றுகின்றன. அகத்திய கூடம் முதல் கண்ணூர் வரை உள்ள சில இடங்களில் இந்த பருவத்தில் இவை அதிகம் காணப்படுகின்றன.
நெல்லியாம்பதி, அமைதிப் பள்ளத்தாக்கு, இடுக்கி ஆகியவை இவற்றின் விருப்பமான இடங்களில் முக்கியமானவை. ஒரு சமயத்தில் 300 ஜோடி தவளைகள் வரை இவை பூமிக்கும் மேல் வரும் என்று இவற்றைக் குறித்து ஆராய்ச்சி செய்யுய்ம் கேரள வன ஆய்வு நிறுவனம் (KFRI) மற்றும் லண்டன் விலங்கியல் சொசைட்டியின் ஆய்வாளர் சந்தீப் தாஸ் கூறுகிறார்.
அந்த ஏழு நாட்கள்
ஒரு முறை ஒரு பெண் தவளை நான்காயிரம் முட்டைகள் வரை இடும். இதைத் தொடர்ந்து ஆண் தவளை அவற்றின் மீது விந்துகளைத் தூவும். முட்டை விரிய இது அவசியம். முட்டை விரிந்து தலைப்பிரட்டையாக குறைந்தபட்சம் ஏழு நாட்கள் தேவை. முட்டையைச் சுற்றி நீர் இருக்க வேண்டும். இந்த ஏழு நாட்கள் முட்டையின் வாழ்வில் முக்கிய காலகட்டம்.
ஆனால் இம்முறை இந்த ஏழு நாட்கள் இல்லாமல் போயின. சுமார் 110 நாட்களுக்குள் தலைப்பிரட்டைகள் தவளைக் குஞ்சுகளாக உருமாறி மண்ணிற்குள் செல்வதே வழக்கம். ஆண்டில் ஒரு முறை மட்டுமே பூமிக்கு வருவதால் இவற்றை விலங்குலகின் மகாபலி என்றும் அழைப்பதுண்டு. பெண் தவளை முட்டையிட்டு ஐந்து மணி நேரத்திற்குள் பாதாளத்திற்குச் செல்லும். ஜோடிகளாக, சில சமயங்களில் தனியாகவும் செல்லும். மண்ணை நோண்டி மண்ணிற்குள் செல்வது இவற்றின் வாடிக்கை.
இதற்கு ஏதுவாக இவற்றின் கை கால்கள் மண்வெட்டி போல தடிமனாக உள்ளன. மண்ணிற்கடியில் இரண்டு மீட்டர் ஆழத்தில்தான் இந்த பாதாளவாசிகளின் வாழிடம் என்றாலும் வெளியில் வரும் நேரம் தவிர பூமிக்கடியில் இவை என்ன செய்கின்றன, எவ்வாறு வாழ்கின்றன என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது மிக சுவாரசியமான செய்தி என்றாலும் இது பற்றி ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை என்று இதற்கு மகாபலி தவளை என்று பெயரிட்ட சந்தீப் தாஸ் கூறுகிறார்.
பூமிக்கடியில் இருந்து நாட்டில் மழைக்காலத்தின் வரவையும், அருவிகளில் நீரின் அளவையும் இவை எவ்வாறு துல்லியமாக அளக்கின்றன என்பது விஞ்ஞான உலகின் வியப்பாகவே இன்றும் உள்ளது. முட்டையிட எல்லாச் சூழ்நிலைகளும் தயார் என்பதையும், முன்கூட்டியே இவை எவ்வாறு இதை புரிந்து கொள்கின்றன என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன என்பது தவிர இவற்றின் முக்கிய உணவு என்ன, இவை எவ்வாறு இரை தேடுகின்றன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இவற்றின் ஆயுள் குறித்தும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆண் தவளையின் அளவு 30 மில்லிமீட்டர். பெண் தவளை இதுபோல இரு மடங்கு பெரியது. இவற்றின் சத்தம் வரும் இடத்திற்குச் சென்றால் அது மண்ணிற்கடியில் நம்மைவிட்டு விலகி விலகிச் செல்வதை உணரலாம்.
முட்டையிடும் சமயத்தில் மட்டும் சத்தம் குறைவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் உருவாவதற்கு முன்பே இவை இங்கு வாழ்ந்ததாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆப்பிரிக்கத் தவளைகளுடன் இவற்றிற்கு நெருங்கிய சொந்தம் உண்டு என்று இந்திய விலங்கியல் கழகத்தின் நிறுவனர் தாமஸ் நெல்சன் அன்னண்டெயில் தலைமையில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் ஒன்றாக இருந்தன என்ற கோட்பாட்டின் சான்றுகளில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஊதி பெருத்த வடிவத்தைக் கொண்ட தவளை போல இவை தோன்றும் என்றாலும் குணங்கள், மற்ற சிறப்பியல்புகளால் இவற்றிற்கு பரிணாமரீதியில் பல பல சிறப்புகளை இவை பெற்றிருக்கின்றன.
வெளுத்த நிறம், பன்றி போல மூக்குடன் காணப்படும் பல சிறப்பு பரிணாமப் பண்புகளைக் கொண்ட இவை இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்கள் கொண்ட சர்வதேச இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இவை மூன்றாவது இடத்தில் உள்ளன.
கேரளாவின் மாநிலத் தவளை
மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை அதிகம் காணப்படுகின்றன என்பதால் இவற்றை கேரளாவின் மாநிலத் தவளையாக அறிவிக்க மாநில வனத்துறை பரிசீலித்து வருகிறது. முதற்கட்டத்திற்குப் பிறகு சில ஆய்வாளர்கள் இவற்றைக் கண்டனர் என்றாலும், 2004ல் இவை பற்றி ஆராயும் விஞ்ஞானி சுனில் தத்தாரும் அவரது குழுவினரும் இவற்றின் தலைப்பிரட்டைகளைப் பற்றி ஆராய்ந்தபோதுதான் முன்பே இது பற்றி எடுத்துக் கூறிய தாமஸ் அவர்களின் ஆய்வுகள் சரி என்று தெரிய வந்தது.
2003ல் டெல்லி பல்கலைக்கழகத்தின் விலங்கியல் விஞ்ஞானி டாக்டர் ஆ பிஜு என்பவரே இந்த அதிசய தவளையைப் பற்றி முதல்முறையாகக் கண்டறிந்து விஞ்ஞான உலகிற்கு விரிவாகக் கூறினார். உலக உயிரினங்கள் வரிசையில் ஊர்வன பட்டியலில் கேரளாவிற்கும், இந்தியாவிற்கும் மிகச் சிறந்த இடம் தேடித் தந்தது இந்த உயிரினமே. 60 முதல் 90 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவை பரிணமித்ததாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றின் வாழிடம் பூமிக்கடியில் என்றும், இந்தியாவில் வாழும் தவளைகளில் இருந்து இவை முற்றிலும் வேறுபட்டவை என்றும் முன்பு இவை பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். 2017ல் இவற்றின் நெருங்கிய சொந்தக்கார தவளையினத்தை தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜனனி மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்தனர்.
மற்ற உயிரினங்களைக் காட்டிலும் காலநிலை மாற்றத்தால் இவை பெரும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளன. இதனால்தான் இவற்றின் புதிய தலைமுறைகள் இம்முறை உலர்ந்து அழிந்து காணாமல் போய்விட்டன. வரும் ஆண்டுகளிலேனும் இந்த அற்புத உயிரினங்களின் துயரம் தீருமா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்