ஜப்பான் நிலப்பரப்பில் காணப்படும் எல்லா வகையான ஸ்பின்ரான்ஸ் இன அலங்கார மலர்களும் ஒரே வகையைச் சேர்ந்தவை என்று இதுவரை கருதப்பட்டது. செழுமை மிக்க தோட்டக்கலை வரலாறைக் கொண்ட நாடு ஜப்பான். இந்நாட்களில் இங்கு ஒரு புதிய தாவர இனத்தைக் கண்டுபிடிப்பது என்பது மிக அரிதானதே.

ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இனம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த அழகான ஓர் இனமே. ஸ்பின்ரான்ஸ் ஹெச்சைஜோன்சிஸ் (Spinranthes Hachijoensis) என்ற இந்த புதிய இனப் பூவின் இதழ்கள் பார்ப்பதற்கு அழகிய கண்ணாடி வேலைப்பாடு போலவே தோன்றும். இவை புல்வெளிப் பிரதேசங்கள், பூங்காக்கள், தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படுபவை.

இதுவரை இங்கு உள்ள எல்லா ஸ்பின்ரான்ஸ் தாவரங்களும் ஒரே இனம் என்று கருதப்பட்டதால் பெயரிடப்படாமல் இருந்தது. ஆங்கிலத்தில் லேடிஸ் டெரெஸ்ஸஸ் (Lady’s tresses) என்று அழைக்கப்படும் ஸ்பின்ரான்ஸ் ஆஸ்ட்ராலிஸ் (Spinranthes australis) என்ற இதே குடும்பத்தைச் சேர்ந்த, பொதுவாகக் காணப்படும் மற்றொரு தாவரத்தில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஸ்பின்ரான்ஸ் இனம் ஜப்பானில் மிகப் பிரபலமான அலங்காரச் செடி.Spiranthes hachijoensis 670ஆஸ்ட்ராலிஸ் மலர் ஜப்பான் மக்களுக்கு மிக நெருக்கமான ஒன்று. எல்லா இடங்களிலும் பொதுவாகக் காணப்படக் கூடியது. கி.பி. 759ம் ஆண்டைச் சேர்ந்த ஜப்பானின் பழமையான மனியாக்ஸ்ஃஹூ (Manyoxhu) என்ற கவிதை நூல் உட்பட பழஞ்கால இலக்கியங்களில் இந்த மலர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. கோஃப் (Kobe) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பேராசிரியர் கென்ஜி சுட்சுக்கூ (Pro Kenji Suetsugu) ஆஸ்ட்ராலிஸ் பற்றிய கள ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த சகோதர இனம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்பின்ரான்ஸ் ஆஸ்ட்ராலிஸ் சிறிய முடிகளற்ற தண்டுப்பகுதியுடன் உள்ளது. ஆனால் புதிய இனம் மாறுபட்டு காணப்படுகிறது. டோஹோகு (Tohoku) மற்றும் தாய்வான் வன ஆய்வுக்கழகம் இணைந்து ஜப்பான், தாய்வான், லாவோஸ் நாடுகளில் வளரும் மலர்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆராயும் பத்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கென்ஜி மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் ஜப்பானின் அலங்காரத் தாவரங்களை ஆராய்ந்தபோதே இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த டி.என்.ஏ மரபணு பரிசோதனைகள், நில அமைப்பு, கள ஆய்வுகள், இனப்பெருக்க உயிரியல் போன்றவற்றின் மூலம் ஆய்வுக்குழுவினர் பார்வைக்கு ஒன்று போலத் தோற்றம் அளித்தாலும் ஹெச்சைஜோன்சிஸ் ஆஸ்ட்ராலிஸ் இனத்தில் இருந்து முற்றிலும் புதிய மூலக்கூறு மாறுபாடுடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஸ்பின்ரான்ஸ் ஹெச்சைஜோன்சிஸ் ஆஸ்ட்ராலிஸ் செடியுடனேயே வளர்கிறது என்றாலும் ஒரு மாதம் முன்பே பூக்க ஆரம்பிக்கிறது.

பிரபலமாக அறியப்படும் ஒரு மலர் இனத்தில் இருந்து வேறுபட்ட புதிய இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது மக்களிடையில் இத்தாவரம் பற்றிய ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது பற்றிய தீவிர தாவர உள்ளமைப்பியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி Journal of Plant Research என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இயற்கையின் படைப்பில் இன்னும் எத்தனை எத்தனை உயிரினங்கள் மனித அறிவிற்கு எட்டாமல் மறைந்திருக்கின்றனவோ!

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/mar/17/japans-most-familiar-orchid-is-found-to-have-near-identical-cousin

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It