கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நாடுகளின் அமைதியையும், இறையாண்மையையும் பாதுகாக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், அதன் ஆசியாவை நோக்கி அச்சை நகர்த்தும் கொள்கைக்கும் எதிராக கடுமையான போராட்டம் அவசியம்

70 ஆண்டுகளுக்கு முன்னர், 1945 செப்டெம்பர் 2 அன்று சரணடைவு ஒப்பந்தத்தில் சப்பான் கையெழுத்திட்டது. அது இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததைக் குறிக்கிறது. அதற்கும் முன்பாக, 1945 மே மாதத்தில் செஞ்சேனை, செர்மனியின் தலைநகரான பெர்லினில் நுழைந்த பின்னர் நாசி செர்மனி சரணடைந்திருந்தது.

சப்பானிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தான் நடத்திய நீண்ட போர் முடிவுக்கு வந்ததன் 70 ஆவது ஆண்டு விழாவை சீனா, 2015 செப்டெம்பர் 3 அன்று கொண்டாடியது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த டியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் போர் வீரர்கள் அணிவகுத்து முன்னால் செல்ல ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. சப்பானிய இராணுவத்துவம் ஆசியாவில் இறுதியாக தோற்கடிக்கப்பட்டதில் சீன மக்கள் வகித்த வீர்ஞ்செறிந்த முக்கிய பங்கை எப்போதும் மறந்துவிட முடியாது. செப்டெம்பர் 1931 இல் சப்பான் மன்சூரியாவைக் கைப்பற்றியபோது துவங்கிய இந்தப் போரில் 3 கோடி 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட சீன மக்களும் சீனப்படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் போது, செர்மனி, இத்தாலி, சப்பான் மற்றும் அவர்களோடு ஒத்துழைத்தவர்களுடைய பாசிச இராணுவப் படைகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, வெறியாட்டங்களில் ஈடுபட்ட இடங்களிலெல்லாம் எண்ணெற்ற மக்கள் உயிரிழப்பிற்கும் கடுமையான துயர்களுக்கும் ஆளாகினர்.

ஆசியாவில் சப்பானிய இராணுவவாதிகள், சீனாவின் பல பிராந்தியங்களை மட்டுமின்றி, கொரியா, இந்தோ சீனா, மலாயா, இந்தோனேசியா, பர்மா மற்றும் பிலிப்பைன்சையும் கைப்பற்றினர். பல்வேறு ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்கள், இந்த பாசிச ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க போர்களை கம்யூனிஸ்டுகளுடைய தலைமையில் நடத்தினர்.

சீனா, கொரியா, வியட்நாம், லாவோஸ், கம்பூச்சியா, மலாயா, பர்மா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சில் இது தான் நடைபெற்றது. இந்த வீரஞ்செறிந்த பாசிச எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டங்களின் ஊடே, விடுதலைக்கும் தேசிய சுதந்திரத்திற்கும் கம்யூனிஸ்டுகள்தான் மிகவும் உறுதியான விட்டுக் கொடுக்காத போராளிகளென மக்கள் கண்டனர். இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியன் நடத்தி வந்த மகத்தான புகழ் மிக்க போராட்டத்தாலும், அது நாசி பாசிச இராணுவத்தின் காலடிகளிலிருந்து ஐரோப்பா விடுதலை பெற வழிவகுத்ததையும், கண்டு எல்லா பாசிச எதிர்ப்பு மக்களும் உணர்வூட்டப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரில் ஐந்து ஒருங்கிணைந்த சக்திகளில் சீனாவும் ஒன்றாகும். சோவியத் யூனியன், அமெரிக்கா, பிரித்தன் மற்றும் பிரான்சு மற்றவையாகும். ஆனால், சீனாவில் நடைபெற்ற சப்பானிய இராணுவத்துவம் தோற்கடிக்கப்பட்டதன் 70 ஆண்டுகள் நிறைவு விழா நிகழ்ச்சிகளில் இரசியாவின் அதிபர் விளாடிமிர் புடின் மட்டுமே பங்கேற்றார். அமெரிக்கா, பிரித்தன், பிரான்சைச் சேர்ந்த தலைவர்கள் விழாக்களைப் புறக்கணித்தனர். முன்னர் இரசியாவில் மே 2015-இல் நடத்தப்பட்ட நாசி செர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளையும் இந்தத் தலைவர்கள் புறக்கணித்தனர்.

ஆசியா மீது தன்னுடைய முழு ஆதிக்கத்தை நிறுவுவதற்கு இரசியாவும், சீனாவும் தடைகளாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. சீனாவிலும், இரசியாவிலும் நடத்தப்பட்ட இந்த விழாக்களைப் புறக்கணிப்பதன் மூலம், தன்னுடைய முழு மேலாதிக்கத்தை ஆசியா மீது நிறுவுவதற்காக ஆக்கிரமிப்புப் போர்கள் உட்பட எந்த நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்கமாட்டேனென ஒரு தெளிவான செய்தியை அமெரிக்கா அனுப்பியிருக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் யுகோஸ்லாவியாவை அழித்தும், உக்ரேனிலும் மற்றும் சில நாடுகளிலும் பாசிச பொம்மை அரசாங்கங்களை நிறுவியும், மேற்கிலிருந்து இரசியாவை சுற்றி வளைத்தும் வருகிறது. ஆப்கானிஸ்தான், இராக், லிபியாவில் அது நடத்திய காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புக்கள் இந்த நாடுகள் சூறையாடப்படுவதற்கும் பேரழிவுக்கும் வழி வகுத்தது. சிரியாவையும் வட ஆப்ரிகாவின் பல நாடுகளையும் அது இப்போது அழித்து வருகிறது.

இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிராக தன்னுடைய முன்னணி தாக்குதலாகச் செயல்படுவதற்காக, ஐரோப்பாவிலும், மேற்காசியாவிலும், வட ஆப்ரிகாவிலும் பாசிச பயங்கரவாதக் குழுக்களை அது கட்டவிழ்த்து விட்டுள்ளது. தன்னுடைய கட்டுப்பாட்டையும், மேலாதிக்கத்தையும் நிறுவுவதற்காக முழு பிராந்தியங்களுடைய வரைபடங்களைத் திருத்தி எழுதும் கொள்கையை அமெரிக்கா கடைபிடித்து வருவதால், இலட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டு வருகிறார்கள்.

"ஆசியாவை நோக்கி அச்சை அமைக்கும்" அமெரிக்காவின் முடிவானது ஆசிய மக்களுக்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். அது தன்னுடைய பெரும்பான்மையான இராணுவ சக்திகளை கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் நிறுத்தி வைத்து வருகிறது. அதனுடைய நோக்கங்கள் தெளிவாகவே சீனாவைச் சுற்றி வளைப்பதும், வட கொரியாவை அச்சுறுத்துவதும், எல்லா வழிகளிலும் அமைதியான முறையில் கொரியா மீண்டும் ஒருங்கிணைவதைத் தடுப்பதும் ஆகும். பல்வேறு நாடுகளில் ஆட்சி மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இந்தப் பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினுடைய முழு மேலாதிக்கத்தை உறுதி செய்வதும் அதனுடைய நோக்கமாகும்.

இதற்காக, சப்பானை இராணுவமயமாக்கவும், பிற நாட்டு மக்களுக்கு எதிராக சப்பான் இனி எப்போதும் ஆக்கிரமிப்புக்களை நடத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர்களுடைய அரசியல் சட்டத்திலும் பிற பாதுகாப்புகளிலும் வைக்கப்பட்டவைகளை மாற்றவும் விரும்பும் சக்கிகளை அமெரிக்கா தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

சப்பானுடைய தற்போதைய அபே அரசாங்கம் அதிக அளவில் மேற்கொண்டுவரும் இராணுவவாத, மோதலான நிலைப்பாடு, முதல் உலகப்  போரில் சப்பானிய ஆக்கிரமிப்பினால் துயருற்ற சீன, கொரிய மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆசிய மக்களிடையே கோபத்தையும், பதற்றத்தையும் தூண்டிவிட்டிருக்கிறது. இது மட்டுமின்றி, சீனாவை சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்காவின் நான்கு பக்க இராணுவக் கூட்டணியில் அமெரிக்கா, சப்பான், ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து கொள்ளுமாறு அது இந்தியாவைத் தீவிரமாகக் கவர்ந்து வருகிறது. இந்த நாடுகளின் கப்பற்படை, இராணுவப் படைகளைக் கொண்ட கூட்டுப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவையனைத்தும், இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் சூழ்நிலையில் இருந்ததைப் போன்ற ஒரு பதற்றமும் கவலையும் கொண்ட ஒரு சூழ்நிலையை இந்தப் பகுதி மக்களிடையே உருவாக்கியிருக்கிறது.

20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆசியாவில் மற்ற நாடுகளை ஆக்கிரமித்துக் கைப்பற்றும் கொள்கையை சப்பான் துவக்கியபோது, பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகள் மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளின் காலனியப் பிடிகளில் ஏற்கெனவே சிக்கியிருந்தன. பிலிப்பைன்சு, அமெரிக்காவின் ஒரு காலனியாகவும், வியட்நாம் உட்பட இந்தோ சீனா, பிரான்சின் காலனிகளாகவும், இந்தோனேசியா டட்ச்சின் காலனியாவும், பர்மாவும், மலாயாவும் பிரித்தனுடைய காலனிகளாகவும் இருந்தன. கொரியாவையும், தாய்வானையும் ஆக்கிரமித்த பிறகு, சப்பானிய இராணுவ சக்திகள் தங்களுடைய ஆக்கிரமிப்பை முதலில் வட கிழக்கு சீனாவில் இருந்த வளம் கொழிக்கும் மன்சூரியாவின் மீதும் பின்னர் ஒட்டு மொத்தமாக சீனாவின் முதன்மைப் பகுதியிலும் நிறுவ விரும்பினர். 1930-களில் மன்சூரியாவும், பின்னர் சீனாவின் பெரும்பாலான கிழக்கு மற்றும் மத்திய சீனப் பகுதிகள் சப்பானால் ஆக்கிரமிக்கப்பட்ட போது, ஆரம்பக் கட்டத்தில் மேற்கித்திய ஏகாதிபத்திய சக்திகள் சீனாவுக்கு உதவ முன்வரவில்லை. அந்த நேரத்தில் சோவியத் யூனியன் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு சீனாவிற்கு உதவி செய்தது.

டிசம்பர் 1941-இல் சப்பான், அமெரிக்காவைத் தாக்கி தென் கிழக்கு ஆசியாவில் இருந்த அமெரிக்கா, பிரித்தன், பிரான்சு மற்றும் ஹாலந்தின் காலனிகளைக் கைப்பற்றி, இந்தியாவிலிருந்த பிரித்தானியப் பேரரசை அச்சுறுத்தியதற்கு பிறகு தான் 1942 இலிருந்து இந்த சக்திகள் சீனாவின் எதிர்ப்புப் போருக்கு உதவி செய்ய ஆரம்பித்தன. சப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ்வந்த தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு நாட்டு மக்களும் சப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக மட்டுமின்றி காலனிய ஆட்சியிலிருந்து ஒட்டுமொத்த விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் வீரமாகப் போராடினர்.

சப்பான் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்தப் பகுதியில் பழைய காலனிய அமைப்பை மீண்டும் அமைப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய ஏகாதிபத்திய கூட்டாளிகளுக்கு தலைமை தாங்கி வந்தது. அமெரிக்கப் படைகள் தென் கொரியாவை ஆக்கிரமித்துக் கொண்டன. ஒரு வீரமிக்க போராட்டத்திற்குப் பின்னர் தங்களுடைய சுதந்திரக் குடியரசை அமைத்துக் கொண்ட கொரிய மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஒரு போரை நடத்தியது. பிரன்ஞ்ச் காலனியர்கள் தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்துக் கொண்டனர். தங்களுடைய தாய்நாட்டை சப்பானிய ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து விடுதலை செய்து கொண்ட வியட்நாமிய மக்களுக்கு எதிராக பிரான்சு ஒரு போரை நடத்தியது. வியட்நாமிய விடுதலைப் படைகள் பிரன்ஞ்ச் ஏகாதிபத்தியர்களைத் தோற்கடித்த போது, அவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் தெற்கு வியட்நாமைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளே நுழைந்தது. வியட்நாமிய, இந்தோ சீனாவின் பிற மக்களுடைய வீரம் செறிந்த போராட்டம் இறுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளைத் தோற்கடித்து 1975-இல் வெற்றி வாகை சூடியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் பிலிப்பைன்சைக் கைப்பற்றி, அந்த மக்களுடைய வீரமான விடுதலைப் போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க, ஒரு பாசிச இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியது. டட்ச் காலனியத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தோனேசிய மக்கள், அங்கு ஒரு பொது மக்களுடைய ஆட்சியை நிறுவினர். அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிட்டு நடத்திய ஒரு இராணுவக் கிளர்ச்சியில் அங்கிருந்த சுகர்னோ ஆட்சி தூக்கியெறியப்பட்டு, இலட்சக் கணக்கான கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு மக்களும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். "கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவது" என்ற பெயரில், ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் சியாடோ (SEATO) மற்றும் சென்டோ (CENTO) என்ற இராணுவக் கூட்டணிகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிறுவி அதன் மூலம் தன்னுடைய இராணுவப் படைகளை பல நாடுகளில் நிறுத்தி வைத்தது. வியட்நாமின் விடுதலைக்குப் பின்னரும், எழுபதுகளில் இரானிய புரட்சியின் வெற்றிக்குப் பின்னரும் தான் இந்த இராணுவக் கூட்டணிகள் முடிவுக்கு வந்தன.

இன்று அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கி அச்சை நகர்த்துவதும்", சப்பானுடைய இராணுவமயமாக்கலும் கூட்டாக, ஆசியாவில் பதற்றமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவின் பல ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு எதிராக இருக்கும் இரசியாவின் செல்வாக்கை பலவீனப்படுத்தவும், வெட்டிக் குறைக்கவும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் முயன்று வருகிறது. ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி தலையீடு என்ற அச்சுறுத்தல் இந்தப் பகுதியிலுள்ள மக்களுடைய தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியைப் போல இருக்கிறது. அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு மற்றும் தலையீட்டின் விளைவாக, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பகுதிகளில் என்ன நடந்துள்ளது என்பதை இப்பகுதியில் உள்ள மக்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

இந்தப் பகுதிக்கு சொல்லொணாத் துயரத்தையும், பாதிப்பையும் கொண்டுவந்த ஒரு போரின் முடிவின் 70 ஆவது ஆண்டுவிழாவை ஆசிய மக்கள் கொண்டாடும் இன்று, வரலாற்றின் படிப்பினைகளை அவர்கள் மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் மோதல்களுக்கும், பதற்றத்திற்கும் முக்கிய அடிப்படையாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது. ஆசிய மக்கள் நெடுங்காலமாகவும், கடுமையாகவும் போராடி வந்த அமைதியையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், இந்தப் பகுதியில் அது இருப்பதையும் நாம் கடுமையாக கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் எதிர்க்க வேண்டும்.