corona migrant workers Mumbaiகோவிட் இரண்டாம் அலையால் மீண்டும் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. 2021 ஜூலை மாத இறுதிக்குள் 30 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தி முடிப்போம் என்று பாஜக அரசு 2021 ஜனவரியில் தெரிவித்தது.ஆனால் மே 22ஆம் தேதிவரை 4.1 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே 2முறை (dose) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக ஒரு வாரத்திற்கு 10.8 மில்லியன் நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படுகிறது.இதே வேகத்தில் மருந்து அளிக்கப்படுமானால் 2024 இறுதியில்தான் 75 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்தி முடிக்க முடியும் என்று பிஸினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

ஆனால் டிசம்பருக்குள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி அளிக்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் வாய்ச் சவடால் விடுத்துள்ளார்.கோவிட் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் நாடெங்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது என்ற போதும் பாஜக அரசு பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டியூட், ரெட்டிஸ் லேப் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களுக்கே மருந்து தயாரிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிறுவனங்களின் ஆய்வுக் கட்டமைப்புக்கு ஏற்கெனவே பொது நிதி அளிக்கப்பட்ட போதிலும், தடுப்பு மருந்துகளை இலவசமாகப் பெற முடியவில்லை. இந்நிறுவனங்கள் முற்றுரிமையின் மூலம் தங்கள் விருப்பம் போல் தடுப்பு மருந்தின் விலையை ஏற்றிப் பெருலாபம் ஈட்டுவதற்கே மத்திய அரசு துணைபோகிறது..

இந்தியாவிலேயே வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் கட்டமைப்புகளுடைய பல பொதுத் துறை அமைப்புகளும் நிறுவனங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பாஸ்டர் நிறுவனம் (பொதுத்துறை) ஊட்டியிலும், கிங்க்ஸ் நிறுவனம் சென்னையிலும் உள்ளன.

மற்ற நிறுவனங்களையும் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தினால் ஒழிய உரிய நேரத்திற்குள் அனைவருக்கும் தேவையான அளவு மருந்துகளைத் தயாரிக்கவோ, மக்களுக்குச் செலுத்தவோ முடியாது. இந்நிறுவனங்களிலிருந்து பெறும் கோவிட் தடுப்பு மருந்துகளின் உள்நாட்டுவிலையைக் காட்டிலும் ஏற்றுமதி விலை மலிவாக உள்ளது.

மத்திய அரசு கோவிட் தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்குஇலவசமாகப் பெற்றுத் தரவும் இல்லை, அதற்கான நிதியுதவியும் அளிக்கவில்லை மாறாக அவற்றைத் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட விட்டுள்ளது பாஜக அரசு. பைஸர், மாடர்னா நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை மத்திய அரசுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும் என்று கூறியுள்ளன. ஆனால் பாஜக அரசு மாநிலங்களை அந்த நிறுவனங்களிடம் நேரடியாகவே தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளுமாறு பொறுப்பைக் கைகழுவிவிட்டது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நீடித்த வேலைவாய்ப்பு மையத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட உழைக்கும் இந்தியாவின் நிலைஅறிக்கை,2021:

2020இல் கோவிட்டின் முதல் அலையால் இந்தியாவில் 23 கோடி மக்களின் குடும்ப வருவாய் தேசியக் குறைந்தபட்ச தினசரிக் கூலியான ரூ.375க்குக் கீழே சரிந்ததாகவும், தொற்றுநோயால் ஓராண்டில் கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 15 விழுக்காடும் நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

பொது முடக்கத்தால் 46 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் வேலை இழந்தனர், அவர்கள் மீண்டும் வேலை வாய்ப்புப் பெறவில்லை, அதே நேரத்தில் ஏழு விழுக்காடு ஆண்களும் வேலை இழந்தனர். போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் பொருளாதாரச் செயல்பாடு குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து 10 விழுக்காடு பாதிக்கப்படும் போது வருவாயில் 7.5 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. கோவிட்-19இன் பொருளாதாரத் தாக்கத்தால் வருவாய் இழந்த மக்களின் துயர் தணிக்க அரசு ரூ.8 லட்சம் கோடி நிதித் தொகுப்பு வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

சென்ற வருடம் மார்ச்சில் முதல் கோவிட் அலையின் போது எந்த நிதி உதவியும், துயர்தணிப்புத் திட்டங்களும் இல்லாமல் 4 மணி நேரத்திற்குள் பொது முடக்கத்தைக் கொண்டுவந்து பெருந்தவறு செய்தது நரேந்திர மோடியின் அரசு, இரண்டாம் கோவிட் அலையின் போது மீண்டும் அதே தவறு செய்துள்ளது. இரண்டாம் அலை ஓய்ந்த பின் நிதித் தொகுப்பு அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தால் வேலையிழந்து, வாழ்வாதாரம் இழந்து, கடன்பட்டு அல்லலுறுபவர்கள், இரண்டாம் அலையின் போதும், கோவிட் தொற்றுக் காற்றைக் குடித்துப் பிழைத்திருக்கச் சொல்கிறதா பாஜக அரசு? ஹங்கர் வாட்ச் என்ற அமைப்பின் ஆய்வில் விளிம்புநிலை மக்களில் பெருவாரியானோரின் வருவாயும், நுகர்வும் வீழ்ச்சியடைந்துள்ளன. அவர்கள் உட்கொள்ளும் தானியம், பருப்பு, இதர உணவுப் பொருட்களின் அளவும் தரமும் குறைந்துள்ளன. வறுமைநிலைஅதிகரித்துள்ளது.

கோவிட்-19 இரண்டாவது அலையினால் 2021 ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கக் கூடும் என்று அறிவித்த நிதி அமைச்சகம் அதைத் தடுப்பதற்காக ஏன் நிதித் தொகுப்போ திட்டங்களோ அறிவிக்கவில்லை. அவை வெறும் பெயரளவு நடவடிக்கைகளே என்பதாலா?

மேக்-இன்-இந்தியாவின் மூலம் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவோம் என்று சபதமிட்டார் நரேந்திர மோடி. ஆனால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்துதான் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்கு மிகவும் குறைந்துள்ளது.

பொருளாதாரத் தரவு மற்றும் பகுப்பாய்வு மையம் (CEDA) 2020-21 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையின் மூலம் பெற்ற வேலைவாய்ப்புகளின் அளவானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில் பாதியாகக் குறைந்துள்ளது என சுட்டிக் காட்டியுள்ளது.

2016-17இல் 51 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வந்த உற்பத்தித் துறையானது 2020-21இல் 27.1 மில்லியன் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கிறது. 2016-17ல் 16.7 விழுக்காடாக இருந்த உற்பத்தித் துறையின் பங்களிப்பு 2020-21இல் 15.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

மக்களின் குறைந்து போன வாங்கும் சக்தியை மீட்பதற்கான நிதித் தொகுப்பு அளிப்பதன் மூலமே நாட்டின் உற்பத்தித் துறையை மீட்டெடுத்து சரிசெய்ய முடியும். நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் / வருவாய் உதவித் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

சர்வதேச உழைப்பாளர் சம்மேளனம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலையின்மையின் அளவு 2020இல் 7.11 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் மே மாதத்தில் வேலையின்மையின் அளவு 14.7 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது.

பெண்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 12.8 விழுக்காடாக இருந்தது, ஏப்ரல் மாதத்தில் 17 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 83.8 விழுக்காட்டினர் 30 வயதிற்குக் குறைவானவர்களே. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 96 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

2021 ஏப்ரல் மாதத்தில் 2.6 கோடி குடும்பங்களும், 3.7 கோடி நபர்களும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர முன்வந்துள்ளனர். சென்ற ஆண்டு ஏப்ரலை விட வேலை தேடிய குடும்பங்களின் எண்ணிக்கை 91 விழுக்காடும், தனி நபர்களின் எண்ணிக்கை 85 விழுக்காடும் அதிகரித்துள்ளன. எனினும் அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை. 1.52 கோடி குடும்பங்களுக்கும், 2.07 கோடி நபர்களுக்கும் மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

2020-21இல் 11.19 கோடி நபர்கள் சராசரியாக 51.51 நாட்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை பெற்றுள்ளனர். மே 17 வரை, 4.88 கோடி நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் வேலை கோரியுள்ளனர். இதில் 73 விழுக்காட்டினர் மட்டுமே சேர்ந்துள்ளனர். நூறு நாள் திட்டம் என்பது பெயரில்தான் உள்ளது.

பெரும்பாலும் 50 நாட்களுக்கு மட்டும் வேலை தருவதும், வேலை செய்வோருக்கு உடனடியாக ஊதியம் அளிக்காமல் நிலுவையில் வைப்பதும் இத்திட்டத்தில் வாடிக்கையாகியுள்ளது . மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தேவையின் அடிப்படையில் வேலைகளை உருவாக்கும் திட்டம், வேலை கோரி வரும் அனைவருக்குமே நூறு நாட்களுக்கு சரியான ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு. 2020-21இல் இத்திட்டத்திற்கு 1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2021-22 நிதியாண்டில் 73,000 கோடி மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை பெரிதும் அதிகரித்துள்ள நிலையில், நகர்புறத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்படும் போதும் இத்திட்டத்திற்காகக் கூடுதல் நிதி இன்னும் ஒதுக்காமல் இருப்பது பாஜக அரசின் பொறுப்பின்மையையும், அலட்சியத்தையுமே பறைசாற்றுகிறது.
.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் வீதம் சாலைக் கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இது போன்ற ஒன்றுக்கும் உதவாத சாலைத் திட்டங்களில் மக்களின் வரிப்பணம் விரயம் செய்யப்படுகிறது. இதனால் பொருளாதாரமோ, நாட்டின் உற்பத்தித் திறனோ மக்களின் வாழ்வாதாரமோ மேம்படப் போவதில்லை என்பது கண்கூடு.

பொதுத் துறை நிறுவமனமான பாரத் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்த முயன்ற பாஜக அரசு இப்பொழுது அதில் 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டைத் அனுமதிக்க உள்ளது. அதேபோல் அனைத்துப் பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்களிலும் 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க உள்ளது.

கடனில் பாதிக்கப்படும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிதிக்கடன் அளிக்க சென்ற ஆண்டில் 20,000 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 38.5 கோடி மட்டுமே கடனாக வழங்கப்பட்டுள்ளது. 332 நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்துள்ளதாகவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2020 வரை மூடப்பட்ட சிறுகுறு நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்து அரசு தரப்பில் எந்தத் தகவலும் இல்லை என்று பொறுப்பற்ற பதிலை அளித்துள்ளார் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி.

கரோனா பரவலால் கடுமையாகும் பொருளாதாரச் சூழலில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி கடன்நிதி அளிக்கப்படும் என தலைமைவங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். தடுப்பூசி தயாரிப்பாளர்கள், மருத்துவ உபகரண விநியோகர்கள், மருத்துவ மனைகள், நோயாளிகள் இதன் மூலம் பயன் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறு நிதி வங்கிகள் ரூ.500 கோடி வரை சொத்து வைத்துள்ள சிறிய நுண் நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இது முன்னுரிமைத் துறைக்கான கடனாகக் கொள்ளப்படுவதால் இதற்கான வட்டி வீதம் குறையும். இங்கே கடன் திட்டங்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் பயனாளிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவாகவே காணப்படுகிறது.

இந்தியாவில் வணிக வங்கிக் கடனின் அளவும் ஏப்ரல் மாதத்தில் ரூ .89,087 கோடியாக குறைந்துள்ளது. வங்கிகள் கடன் அளிப்பதைக் காட்டிலும், அதிக அளவில் அரசு பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. தலைமை வங்கியின் தரவுகளின்படி, வங்கிகள் 2020-21ஆம் ஆண்டில் 5.8 லட்சம்கோடி ரூபாய் கடனளித்துள்ளன, அதை விட 1.4 லட்சம் கோடி அதிகமாக 7.2 லட்சம் கோடி அளவிற்கு அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.

பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்காக செலுத்தப்படும் பணப் புழக்கம் எதிர்பாராத விளைவாக சொத்து விலைகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் பணப்புழக்க ஆதரவு கட்டற்று காலவரையின்றித் தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது என்று தலைமை வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டி வீதம் எந்நேரத்திலும் அதிகரிக்கப்படலாம் என்பதைத்தான் சுற்றி வளைத்து இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 முதல் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை வட்டி விகிதங்கள் மற்றும் பங்கு அபாய காப்பீடு (ஈஆர்பி) ஆகியவற்றின் வீழ்ச்சியால் பங்குகளின் விலை அதிகரித்ததாகவும்தலைமை வங்கி தெரிவித்துள்ளது. இவை ஒன்றும் எதிர்பாரா விளைவுகள் அல்ல.

பணக் கொள்கையில் தளர்வு ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே உரியவருக்குக் கடன் சென்று விடும் என்பது கோட்பாட்டில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் இதனால் பங்குச் சந்தையும், ஊக முதலீடுகளுமே அதிகரிக்கின்றன என்பது பல்வேறு நாடுகளில் பல்வேறு சமயங்களில் உறுதிபடுத்தப்பட்ட உண்மை. ஆன போதும் இதை எதிர்பாரா விளைவு என்பது நவீன தாராள (neo-liberal) கோட்பாடுகளின் போதாத் தன்மையையே குறிக்கிறது.

கோவிட்-19 தாக்கத்தால் முடுக்கப்பட்ட பொருளாதார மந்தநிலையிலிருந்து மீட்சி ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதத்தை சுழிய அளவிற்குக் குறைத்தது. இதனால் வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே காணப்படும் வட்டி வேறுபாட்டில் லாபம் பெற வளரும் நாடுகளில் முதலீடு செய்ய படைதிரண்டனர் அந்நிய முதலீட்டாளர்கள்.

அதனால் தான் இதுவரை இல்லாத அளவு 2020-21ஆம் ஆண்டில் நேரடி அந்நிய முதலீட்டின் அளவு மிகவும் அதிகமான 81.72 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 2019-20ஐக் காட்டிலும் நேரடி அந்நிய முத லீடு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2019-20-ம் ஆண்டில் செய்யப்பட்ட நேரடி அந்நிய பங்கு முதலீடான $ 49.98 பில்லியன் உடன் ஒப்பிடும்போது, 2020-21-ம் நிதியாண்டில் நேரடி அந்நிய பங்கு முதலீடு 19விழுக்காடு அதிகரித்து $ 59.64 பில்லியனாக உயர்ந்துள்ளது.

2020-21-ம் நிதியாண்டில் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்த நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்திலும் (29%), அதற்கடுத்த இடங்களில் அமெரிக்கா (23%) மற்றும் மொரிஷியஸ் (9%) ஆகிய நாடுகளும் உள்ளன.இதை ஒரு பெரும் வெற்றியாகக் கொண்டாட ஒன்றுமே இல்லை.

ஏனென்றால் இத்தகைய நேரடி அந்நிய முதலீடுகள் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புளை உருவாக்குவதில்லை, மக்களின் வாங்கும் சக்தியையோ, வாழ்க்கைத் தரத்தையோ உயர்த்தப்போவதில்லை, இவை இந்தியாவின் செல்வத்தை அபகரிக்கும் ஊக முதலீடுகள் தான் எனும் போது இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா? இவை இந்தியாவின் உற்பத்தித்திறனையும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் விதத்தில் செய்யப்பட்ட நீடித்த ஆக்கபூர்வமான முதலீடுகள் அல்ல.

கிடைத்த வரை லாபம் பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் ஓடத் தயாராய் இருக்கும். சந்தர்ப்பவாத முதலீடுகள். கோவிட்-19ன் இரண்டாம் அலையால் ஆபத்து நேரிடும் என்று ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்திய முதலீட்டுச் சந்தையில் இருந்து 9,435 கோடி அந்நிய முதலீடுகள் வெளியேறின. மே மாதத்தில்1,729.4 கோடி நிகர அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வட்டிவீதத்தை ஏற்றும் போது அந்நிய முதலீடுகளின் தொடர் ஓட்டத்தைக் காணலாம்.

அதிகரித்து வரும் விலைவாசியும், சுகாதாரச் செலவுகளும் மக்களின் நிகர வருவாய் மதிப்பையும், நுகர்வையும் மேலும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்தக் கொரோனா காலத்தில் உழைக்கும் மக்களின் வருவாயும் வாங்கும்திறனுமே வீழ்ச்சியடைந்துள்ளன. பெருநிறுவனங்கள் பல உத்திகளின் மூலம் தங்கள் வருவாயை அதிகரித்துள்ளன.

2020-21ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் பெருநிறுவனங்களின் நிகர விற்பனையில் 12.5 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 213 பெருநிறுவனங்களின் வருவாய் 9.5 விழுக்காடு உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அம்பானி 76.5 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக வளர்ந்துள்ளார். அதானி இப்போது 66.5 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக உயர்ந்துள்ளார்.

5 கோடிக்கு மேல் லாபம் பெறும் பெருநிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 2 விழுக்காடு பெருநிறுவனச் சமூகப் பொறுப் பாண்மைக்கான திட்டங்களில் செலவிட வேண்டும். தற்போது பி.எம்.கேர்ஸ் நிதிக்கான பெருநிறுவனங்களின் நன்கொடைகள் அவற்றின் பெருநிறுவன சமூகப் பொறுப்பாண்மைக்கான செலவுகளாகக் கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பி.எம்.கேர்ஸ் நிதிக்கு யார் நன்கொடை வழங்குகிறார்கள் என்பதை அறிவதில் வெளிப்படைத் தன்மை இல்லாத போது இத்தகைய அறிவிப்பு பெருநிறுவனங்கள் வரி ஏய்ப்புச் செய்வதற்குச் சாதகமாகவே அமையும்.

இந்தியாவில் இல்லங்களின் சேமிப்பு சென்ற ஆண்டு ஏப்ரல்-ஜூனில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28.1 விழுக்காடாக இருந்தது. டிசம்பர் காலாண்டில் 22.1 விழுக்காடாக்க் குறைந்துள்ளது. இல்லங்களின் சேமிப்பு குறைந்து வருவதும் வருவாய் வீழ்ச்சியடைவதும் உள்நாட்டு நுகர்வு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நுகர்வானது கிட்டத்தட்ட 60 விழுக்காடு பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் உழைப்பு நேரத்தை அதிகமாக்கி, உழைப்புச் சுரண்டலை மும்முரமாக்கும் விதமாக தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட நேரம் பணி செய்வது உடல் நலத்திற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் தெற்காசிய நாடுகள், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மக்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கிறார்கள் என்றும் 194 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வாரத்திற்கு 55 மணி நேரங்களுக்கு மேலாகப் பணி புரிபவர்கள் 35% பக்கவாதத்தால் பாதிக்கப்படவும், 17% இதயப் பிரச்சனையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் டாலர் குறியீடு ஜனவரி மாதத்தில் ஒரு முறை, மே மாதத்தில் ஒரு முறை என இரண்டு முறை 90க்கும்கீழே வீழ்ந்துள்ளது. இதனால் டாலரின் ரூபாய் மதிப்பும் மற்ற ஆசிய நாணயங்களின் மதிப்பும் ஏற்றம் பெற்றுள்ளது. உலகளாவிய அந்நியச் செலாவணி இருப்புக்களில் அமெரிக்க டாலரின் பங்கு 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 59 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதுடாலரின் வீழ்ச்சியையும் பிற நாணயங்களின் எழுச்சியையுமே குறிப்பிடுகிறது.

பணவீக்கம்:

மொத்தவிலைப் பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.39 விழுக்காடாக உயர்ந்துள்ளது, இது பெட்ரோல், டீசல், உலோகங்களின் விலையுயர்வினாலே இந்தளவு அதிகரித்துள்ளது. ஏப்ரலில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கத்தின் அளவு 4.29 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 2.02 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 14.18 விழுக்காடு குறைந்துள்ளது.

பழங்களின் விலைவாசி 9.81 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 7.51 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 10.55 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 25.91 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 16.68 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மார்ச்சில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின்படி மார்ச்சில் மொத்த உற்பத்திக் குறியீடு 22.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் ஏற்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்தது என்பதால் அதனுடன் ஒப்பிடும் போது தற்போது அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர இது உண்மையான வளர்ச்சியைக் குறிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறையில் உற்பத்தி 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்பொருளாக்கத் துறையில் உற்பத்தி 25.8 விழுக்காடு சரிவடைந்துள்ளது. மின்சார உற்பத்தி 22.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 7.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 41.9 விழுக்காடும், உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 27.5 விழுக்காடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 31.2 விழுக்காடும், இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 21.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. நீடித்த நுகர்வுப்பொருட்களின் உற்பத்தி 54.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2020-21 நிதியாண்டின் தேசிய வருவாய் (தற்காலிக மதிப்பீடு):

தேசியப் புள்ளியியல் அலுவலகம் 2020-21 நிதியாண்டின் தேசிய வருவாய் குறித்துத் தற்காலிக மதிப்பீடுகளையும் நான்காம் காலாண்டின் (ஜனவரி-மார்ச்) மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது.

2020-21ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு ₹135.13 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20இல் 4.0 விழுக்காடாக அதிகரித்த வளர்ச்சி விகிதம் 2020-21இல் 7.3 விழுக்காடு குறுக்கமடைந்துள்ளது. தனிநபர் வருவாய் 8.2 விழுக்காடு குறுக்கமடைந்துள்ளது.

2020-21 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 விழுக்காடு வளர்ச்சியுடன் ₹38.96 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2020-21 நிதியாண்டில் மொத்த மதிப்புக் கூட்டலின் மதிப்பு 6.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி 3.6 விழுக்காடு அதிகரித்துள்ளது , உற்பத்தித் துறையின் வளர்ச்சி 7.2 விழுக்காடும், மின்சாரம், நீர்வழங்கல், பிற சேவைகளின் வளர்ச்சியானது 1.9 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

சுரங்கத் தொழில்துறையின் வளர்ச்சி 8.5 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது, வர்த்தகம், போக்குவரத்து, ஹோட்டல், தகவல் தொடர்புத் துறைகளின் வளர்ச்சி 18.2 விழுக்காடும், பொது நிர்வாகம், பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி 4.6 விழுக்காடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

2020-21 நிதியாண்டில் மொத்த மதிப்புக் கூட்டலின் மதிப்பு 3.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி 3.1 விழுக்காடு அதிகரித்துள்ளது, சுரங்கத் தொழில் 5.7 விழுக்காடு சரிந்துள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி 6.9 விழுக்காடும், மின்சாரம், நீர்வழங்கல், பிற சேவைகளின் வளர்ச்சியானது 9.1 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

வர்த்தகம், போக்குவரத்து, ஹோட்டல், தகவல் தொடர்புத் துறைகளி ன்வளர்ச்சி 2.3 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. பொது நிர்வாகம், பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி 2.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஏப்ரலில் தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில் துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக் குறியீடு ஏப்ரலில் 15.1 விழுக்காடு சரிவு கண்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தின் உற்பத்தி நிலையுடன் ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 46 விழுக்காடு குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி 4.6 விழுக்காடும், பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள்உற்பத்தி 1.1 விழுக்காடும், உரஉற்பத்தி5.3 விழுக்காடும் குறைந்துள்ளன. இயற்கை எரிவாயு உற்பத்தி 12.3 விழுக்காடும், எஃகு உற்பத்தி 20.7 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 15.2 விழுக்காடும், மின்சார உற்பத்தி 3.3 விழுக்காடும் சரிந்துள்ளன.

இந்தியா, இங்கிலாந்துடன் 1.4 பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்தில் கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். இங்கிலாந்துப் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதனால் எவ்விதத்தில் இந்தியா பயனடையப் போகிறது என்பது குறித்துத் தெளிவான விடை இல்லை.

ஏழை நாடுகளின் பொருளாதாரங்கள் வளராத போது வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றன, மேலும் கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் (குறிப்பாக டாலரில் மதிப்பிடப்படும் போது) அவற்றின் கழுத்தை நெரிப்பதாகவும், இது அந்நாடுகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகப்பொருளாதாரத்தின் மீட்சியையும் பாதிக்கும் என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாக வலை தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏழைநாடுகளின் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான எந்தத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை. அவற்றின் கடன் சுமையைக் குறைக்க குறைந்தது சிறப்பு வரைவு உரிமைகளையாவது உருவாக்க வேண்டும் என்ற முன்னெடுப்பும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் மாதத்தில் ஜி-20 நாடுகளின் கடன் சேவை இடைநிறுத்த முயற்சியின் மூலம் 72 நாடுகளின் வெளிநாட்டு அரசு தரப்புக் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்பொழுது இத்திட்டம் டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டில் வளரும் நாடுகள் செலுத்த வேண்டிய கடன்தொகையில் வெறும் 1.66 விழுக்காட்டிற்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போலத்தான்.

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது வளரும், ஏழை நாடுகளின் பொருளாதாரக் குறுக்கமும், வருவாய் வீழ்ச்சியும் மிகவும் கடுமையாக உள்ளது. வளர்ந்த நாடுகள் தடுப்பு மருந்துகளாலும் தங்களது பொருளாதாரமேலாதிக்கத்தாலும் விரைவாக மீண்டெழுந்து வருகின்றன. வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் மேலும் பொருளாதாரப் பின்னடைவை அடைந்துள்ளன.

ஏழை நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்கவில்லை, கடன் சுமையால் பொருளாதாரக் குறுக்கமும், வருவாய் வீழ்ச்சியும் மேலும் அதிகரித்துள்ளன. அங்கே வேலையின்மையும், பட்டினியும், வறுமையுமே வளர்ந்துள்ளன.

முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், இடைவெளிகளையும் கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ளது. முதலாளித்துவக் கொரோனா வளர்ந்த நாடுகளுக்கே சாதகமாகச் செயல்பட்டு, வளரும், ஏழை நாடுகளில் வளர்ச்சியின்மையையும், வறுமையையும் வளர்த்துள்ளது.

உலகளவில் இதுவரை 17 கோடிக்கும் மேலானோர் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 லட்சத்துக்கும் மேலானோர் இறந்துள்ளனர். கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் பெற்றுக் கொண்ட இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

சென்ற ஆண்டு அக்டோபரில் இந்தியாவும், ஆஃப்ரிக்காவும் உலக வர்த்தக மையத்தில் கோவிட் தடுப்பு மருந்துகள் மீதான காப்புரிமையை, காப்புரிமைப் பாதுகாப்பிற்கான ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. கோவிட் தடுப்பு மருந்துகளில் பெருமளவு பெற்றுக் கொண்ட வளர்ந்த நாடுகள் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இப்பொழுது அமெரிக்கா அந்தக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த போதும், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகள் எதிர்ப்பைக் கைவிடவில்லை. டிசம்பர் மாதத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

கோவிட்-19க்கு எதிரான உலகப்போரை அவ்வளவு எளிதில் முடிவுக்குக் கொண்டுவர ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. சந்தர்ப்பவாத மருந்து நிறுவனங்கள் பெருலாபம் பெறுவதற்குகூடுதலாக அவகாசத்தை பெற்றுத் தருகிறார்கள்.

அதனால்தான் நிறுத்தி நிதானமாகப் பத்து சுற்றுகளுக்கு மேல் பேச்சு வார்த்தையின் மூலம் போக்கு காட்டி வருகிறார்கள். இதன் முடிவு என்ன வென்று டிசம்பரில்தான் தெரிய வரும். கோடிக்கணக்கான மக்கள் இறந்து வரும் போது வெறும் ஒரு மாதக் காப்புரிமை விலக்கு பெற ஒரு வருடமாகப் பேச்சுவார்த்தை செய்யவேண்டுமா.

இவ்வளவு நெருக்கடியான இக்கட்டான நிலையிலும் பெருநிறுவனங்களின் லாபத்தைப் பாதுகாப்பதற்கான, செல்வந்தர்கள் பொழுதைப் போக்குவதற்கான அரட்டை அரங்கமாகத்தான் செயல்படுகிறது உலக வர்த்தக மையம். உதவி செய்வது போல் போக்கு காட்டி கழுத்தை அறுக்கும் சர்வதேச அமைப்புகள் துயரம் தெரிவிக்கின்றன. நல்ல வேளை நரேந்திர மோடி அளவிற்கு முதலைக் கண்ணீர் வடிக்கவில்லை.

- சமந்தா

 

Pin It