செய்யும் வியாபாரதில் ஊர்சிதம் இல்லாத வியாபாரமாகத் திகழும் விவசாயத்தினை செய்திட விவசாயிகளின் வாரிசுகள் கூட முன்வருவதில்லை!

பருவ மழை பொய்ப்பு, வெள்ளம், பூச்சிகளின் தாக்குதல் என அடிப்படைக் காரணங்கள் பல இருந்தாலும், அரசின் புறக்கணிப்பும் முக்கிய ஒரு காரணமாக இருக்கின்றது.

கடந்த சில வருடங்களாக வீணாகுதல் என்ற பெயரில் பல லட்சம் டன் அளவுக்கான உணவுப் பொருட்கள் மத்திய அரசு தொடங்கி கடைநிலை குடிமகன் வரை யாருக்கும் உபயோகமற்ற கழிவாக மாறிக் கொண்டு வருகின்றது.

food grains waste in indiaகடந்த சில மாதங்களுக்கு முன் விருதாச்சலத்தில் பெய்த திடீர் மழையில் அரசின் நெல் கொள்முதல் ஆலைக்கு வெளியில் வைத்திருந்த டன் கணக்கிலான நெற்கள் நனைந்து போனது நியாபகம் இருக்கலாம்.

இதனால் கிலோவிற்கு 20 ரூபாய் குறைவாக விலை கிடைத்தாலும், பரவாயில்லை... தனியாரிடம் விற்பனைக்கு அனுப்பி விடுகின்றோம் என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் விவசாயிகள். 

முன்னாள் மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சி.ஆர்.சவுத்தரி கடந்த பிப்ரவரி 5, 2019 அன்று பாராளுமன்றத்தில் ஜனவரி 1, 2019 கணக்குப்படி, வழங்கவியலாத / நாசமடைந்த நிலையில் 4,135.224 டன் தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் இருப்பதாகத் தெரிவித்தார். (கடந்த 2017-ம் ஆண்டில் இத்தகைய வழங்கவியலாத தானியங்களின் அளவு ஏறக்குறைய 62,000 டன்கள்.)

 பின்னர் அவை கால்நடைகளுக்குத் தீவனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட்டது.

இதற்கு முன் மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போது, கால்நடைக்கு வழங்கப்படும் உளுத்துப்போன தானியங்களை விளிம்புநிலை மக்களுக்கு ஏன் தரக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டதையும், அதில் மத்திய அரசு அப்படி உணவுப்பொருட்களை மக்களுக்குக் கொடுக்கும் எந்த ஒரு எண்ணமும் அரசுக்கு இல்லை எனத் தெரிவித்ததை நினைவில் கொள்வது நலம்!

தேசிய மின் கருவூலத்தின் கணக்கீட்டின்படி, ஆண்டுதோறும் இந்தியாவில் 265 மில்லியன் டன்கள் தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விநியோகிக்கப்படும் மொத்த தானியங்களின் அளவை ஒப்பிடுகையில், பாதிப்படைந்த உணவு தானியங்களின் அளவு குறைவானதாக இருந்தாலும், வீணடிக்கப்படும் தானியங்களை வைத்து மொத்த கொல்கத்தாவுக்கும் ஒரு வாரத்திற்கு உணவு தானியங்கள் வழங்கலாம். (ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக எடுத்துக் கொள்ளும் தானியங்களின் அளவாக 3 அவுன்ஸுகள் எனக் கணக்கிட்டுக் கொண்டால்..). 

2019-ம் ஆண்டுக் கணக்கீட்டின் படி மாநில அளவில் வீணடிக்கப்படும் தானியங்களின் அளவில் பீகாரில் மட்டும் சுமார் 3,567.65 டன்கள் (தேசிய மொத்த அளவில் 86%) உணவு தானியங்கள் வீணாகியிருக்கின்றன. இதில் கோதுமை 1267.69 டன்களும், நெல் 2,299.97 டன்களும் அடங்கும். 

பஞ்சாப் மாநிலத்தில் 324.39 டன்கள் தானியங்கள் வீணாகியிருக்கின்றன.    

காரணிகள் 

“தானியங்கள் நாசமடைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுபவைகளுள் வெள்ளமும், எலிகளும் தான். சில சேமிப்புக் கிடங்குகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றன. இழப்பைக் குறைக்க அவற்றை அடுக்குவாரியாக ஆய்வு செய்வதற்கான நடைமுறை உள்ளது” என்கிறார் பீகாரின் இந்திய உணவுக் கழக அலுவலர். கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து எடுத்துக் கொண்டால் பீகார் 11 ஆண்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுக் கிடங்குகளை முறையாகப் பாதுகாக்காத காரணத்தினால் எலிகளினாலும் அதிகமாக சேதமடைகின்றது. பாதிப்படைந்த தானியங்களை உண்ணும் மக்களுக்கும் காலரா, வயிற்றுப்போக்கு, பிளேக் நோயினையினை ஏற்படுத்தபடுகின்றது. 

மோசடிகள் 

மறுபுறம், "உணவுக் கழக மோசடிதான் இந்த நாடு இதுவரை சந்தித்ததிலேயே மிகப் பெரிய மோசடி” என்கிறார் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசியத் தலைவருமான வி.எம்.சிங் அவர்கள். 

இந்தியாவின் உணவுக் களஞ்சியம் என போற்றப்படுகின்ற பஞ்சாப் மாநிலத்தின் பாஜக - அகாலி தளம் கூட்டணி ஆட்சியில் 20 ஆயிரம் கோடிகள் தானியம் கொள்முதல் செய்த விதத்தில் மோசடி நிகழ்ந்துள்ளதாகவும், பொதுத் துறை வங்கிகள் பெரும் இழப்பினைச் சந்தித்து பஞ்சாப் மாநிலத்திற்கு இனி கடன் வழங்கப் போவதுமில்லை என்று முடிவு செய்ததாகவும் அவர் கூறுவதோடு, இந்திய உணவுக் கழகத்தில் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் எப்படி மாயமாகின என்றொரு கேள்வியையும் எழுப்பினார். 

திருட்டு 

2013 ஆண்டில் டெல்லியில் உள்ள  இந்திய உணவுக் கழகக் கிடங்கிலிருந்து 4 டிரக்குகள் மூலம் ஏழை மக்களுக்கு ரேஷனில் போய்ச் சேர வேண்டிய கோதுமை, மூட்டை மூட்டையாக தனியார் மில்களுக்குச் சென்றதை ஹெட்லைன்ஸ் டுடே (HEADLINES TODAY) தொலைக்காட்சியின் ரகசிய விசாரணை அம்பலப்படுத்தியது. 

ஏழை, நடுத்தர மக்களுக்காக, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்கள், பயனாளிகளை முழுமையாக சென்றடைவதில்லை. அதனால், மத்திய அரசின் மானியச் சுமை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறான அதிர்ச்சித் தகவல் அதிகரிக்கவே செய்கின்றது அதே நேரத்தில், பொது வினியோகத் திட்டத்தில், 2011 - 12ம் நிதியாண்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் திருட்டு போயுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது.

ரேசனில் (பொது வினியோகத் திட்டம்) வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் திருடப்பட்டு வெளி சந்தையில் விற்கப்படுவது, போலி ரேஷன் கார்டுகள் மூலம் இந்தப் பொருட்களை வாங்கி விற்பது போன்றவை பல ஆண்டுகளாக நடக்கின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்கள் திருடப்படுவது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக ”அசோக் குலாதி” மற்றும் ”ஸ்வேதா சைனி” என்ற இருவர் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 60 சதவீத ஏழைகள் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்திரகாண்ட், மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் வசிக்கின்றனர். ஆனால் 50 சதவீத உணவு தானியங்கள் இவர்களிடமிருந்துதான் திருடப்படுவதாக மேற்கூறியவர்கள் நடத்திய ஆய்வின் அறிக்கையை, 'பன்னாட்டு பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆய்வுக் குழுவான - ICRE, 2012-13 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. 

நாம் மழைப்பொழிவு குறித்து கவலை கொள்கிறோம், வறட்சி குறித்து அச்சம் கொள்கிறோம். ஆனால் மழையினாலும் நம் நிர்வாகத் தவறினாலும் வீணடிப்பு என்னும் பெயரில் இன்னுமொரு மறைமுக வறட்சியினை ஏற்படுத்துவது குறித்து கவலை கொள்வதில்லை. கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் மரணமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள்.

பெருமழை ஒரு பக்கம், வறட்சி மறுபக்கம் 

சென்னையும் தமிழகத்தின் பெரும் பகுதிகளும் மழையின்றிக் காய்ந்து வறண்ட தேசமாக மாறி மக்கள் தவிக்கும் நிலையில், மறுபுறத்தில் மழைப்பொழிவால் மக்கள் தத்தளித்தும், விவசாய நிலம் நீரில் மூழ்கி சேதம் அடைந்து, நாசமாகி, வறட்சி ஏற்படுகின்றது. 

நாம் மழைநீரினை சரியாகத் தேக்கி நீர்மேலாண்மை செய்யாத காரணத்தால் தான் இப்படிப்பட்ட அழிவுகள் நடக்கின்றது. நம்முடைய விழிப்புணர்வின்மை ஒருபுறமும், அதிகாரிகளின் அலட்சியங்கள் மற்றொரு புறமும், அரசியல்வாதிகளின் பொடுபோக்குத்தனங்கள் இன்னொரு புறமும் என ஒட்டுமொத்தமாக சீரழிப்பது என்னவோ விவசாயம் மட்டுமல்ல, நாட்டின் முதுகெழும்பையும் சேர்த்துத்தான். 

- நவாஸ்

Pin It