உலகில் ஆடுகளுடன் போராடி தோற்றுப் போன ஒரு இடம் உண்டு... தென்னமெரிக்காவில். சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு பிறந்த, ராட்சத ஆமைகள், கடல் இக்வானாக்களின் வாழிடமாக இருந்த ஈக்குவெடோரின் காலப்பகோஸ் தேசியப் பூங்காதான் அந்த இடம். ஆடுகள் முதலில் அங்கு விருந்தாளியாக சென்றன. பிறகு அவை தீவில் காலம் காலமாக வாழ்ந்தவற்றின் உணவு ஆதாரங்களை அழிக்கத் தொடங்கின. சூழல் நலத்திற்கு இது தீராத தலைவலியாக மாறியது.
போராடித் தோற்றபோது பூங்காவின் பாதுகாவலர்கள் நிரந்தரமாக ஆடுகளை இல்லாமல் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன. மிஷின் இசபெல்லா என்று பெயர் சூட்டப்பட்ட அந்த யுத்தத்தின் கதைதான் இது.மாயாஜாலக் கதைகளில் வரும் உயிரினங்கள் போல அதிசய உயிரினங்களின் வாழிடமே காலப்பகோஸ் தேசியப் பூங்கா! 400 கிலோ எடையுள்ள ஆமைகள், சுதந்திரமாக வாழும் ராட்சத கடல் இக்வானாக்கள், போர்ப்பறவைகள், கப்பற்பறவைகள் அல்லது கடற்கொள்ளைப் பறவைகள் இங்கு உள்ளன. தாடியுடன் உள்ள ப்ரிகேட் பறவைகள், அதி அபூர்வ தாவர இனங்கள் என்று பல அதிசயங்களின் தீவு இது. பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்ல்ஸ் டார்வின் தங்கி ஆய்வு செய்த இடம் இது. அந்த இடம் இப்போது உலகின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்று.
டார்வின் கார்னர் என்று அது அழைக்கப்படுகிறது. 1850 முதல் 1860 வரையுள்ள காலத்தில் ஐரோப்பிய குடியேற்றக்காரர்கள், கப்பல் மாலுமிகளின் தலைமையில் ஆடுகள் இங்கு வந்து சேர்ந்தன. அவை இங்கு உணவுக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால் விருந்தாளியாக வந்த ஆடுகள் ஒரு சூழல் மண்டலத்தை அழிக்கும் ஆக்ரமிப்பு உயிரினங்களாக மாறின. இயற்கையான புல்வெளிப் பகுதிகளை இவை கூட்டம் கூட்டமாக மேய்ந்து முற்றிலும் அழித்தன.
இதனால் செடி கொடிகளைப் பார்ப்பதே அரிதானது. இந்த அழிவு அங்கு வாழ்ந்த உயிரினங்களின் நிலைநிற்பைப் பாதித்தது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அங்கு வாழ்ந்த ஆடுகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆடுகளை உணவாக உண்ணும் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைவே இதற்கு முக்கிய காரணம். இயல்பான தாவரச்செழுமையின் பின்புலத்தில் இத்தீவு சூழல் பேரிடர்களை சமாளித்து வந்தது.
ஆனால் ஆடுகளின் வரவுடன் எதிர்பாராத மண் அரிப்பும் மண் சரிவுகளும் ஏற்பட்டன. இது ஆக்ரமிப்பு தாவரங்களின் வளர்ச்சிக்குக் காரணமானது. இயற்கைப் பசுமை இல்லாமல் போனதால் அதை நம்பி வாழ்ந்த எண்ணற்ற உயிரினங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து போயின. இவற்றை உணவாக உண்டு வாழ்ந்த ராட்சத ஆமைகளுக்கும் கடல் இக்வானாக்களுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தீவு உயிரினங்கள் உணவு மற்றும் நீருக்காக ஆடுகளுடன் மோத வேண்டியதாயிற்று.
உணவுச் சங்கிலியை இது பெரிதும் பாதித்தது. இதனால் அதிகாரிகள் ஆடுகளைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற கடுமையான முடிவுக்கு வந்தனர். ஆடுகள் உட்பட உள்ள ஆக்ரமிப்பு விலங்குகளை அழித்தொழிக்க 1997ல் மிஷின் இசபெல்லா என்ற திட்டத்தை ஈக்குவெடார் அரசு தொடங்கியது.
மிஷின் இசபெல்லாவும் யூதாஸ் ஆடுகளும்
ஈக்குவெடோர் சூழல் அமைச்சரகம், காலப்பகோஸ் தேசியப் பூங்கா இயக்குனரகம், காலப்பகோஸ் சூழல் அமைப்பு, டார்வின் அறக்கட்டளை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது 1997 முதல் 2006 வரை உள்ள ஒன்பது ஆண்டுகள் நீடித்தது.
தரைப்பகுதியில் இருந்து வேட்டையாடுதல், வான் வழி வெடி வைத்தல், ஆண் ஆடுகளை ஈர்த்து வரவழைக்க கருத்தடை செய்யப்பட்ட பெண் ஆடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி அனுப்பும் திட்டம், வேலி கட்டுதல், ஆடுகளின் வளர்ச்சியைத் தடுக்க சில ஈக்களைப் பயன்படுத்துதல் போன்ற பல வழிகள் ஆலோசிக்கப்பட்டன. 2006ல் 250,000 ஆடுகள் கொல்லப்பட்டன. இதனால் தீவின் இயற்கை சூழல் மண்டலம் மீட்கப்பட்டது.
2006ல் காலப்பகோஸ் தீவு ஆடுகள் இல்லாத தீவாக அறிவிக்கப்பட்டது. ஆடுகளைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட திட்டங்களில் பெண் ஆடுகளைப் பயன்படுத்தி சதி செய்து ஆண் ஆடுகளைக் கொல்லும் முறை அதிக பலனைத் தந்தது.
இந்த பெண் ஆடுகளுக்கு யூதாஸ் ஆடுகள் என்று சிறப்புப் பெயரிடப்பட்டது. தரை மற்றும் வான் வழியாக ஆடுகள் அதிகம் கொல்லப்பட்டன என்றாலும் அது முழுமையாக பலன் தரவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்தே யூதாஸ் ஆடுகள் தீட்டம் நடைமுறைக்கு வந்தது. கருத்தடை செய்து ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகளை மற்ற ஆடுகளுடன் மேய விடுவதே இதன் நோக்கம். இவற்றைத் தேடி மீதியுள்ள ஆண் ஆடுகள் வரும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை.
ஆண் ஆடுகளைக் கவர ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகள் மீது ஹார்மோன் தெளிக்கப்பட்டது. இதனால் ஆண் ஆடுகள் பெண் ஆடுகளைத் தேடி வந்தன. தயாராகக் காத்திருந்த துப்பாக்கி வீரர்கள் அவற்றை சுட்டுக் கொன்றனர். ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன. அவை மீண்டும் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. இதனுடன் ரேடியோ காலர் தொழில்நுட்பத்தின் மூலம் ஆடுகளுக்கு கருத்தடையும் செய்யப்பட்டது. ஒளிந்திருந்த ஆடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆடு வேட்டையில் பங்காளிகளான உள்ளூர் மக்கள்
காலப்பகோஸ் சாண்டியாகோ தீவில் மட்டும் 213 யூதாஸ் ஆடுகள் ஆடு வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதன் மூலம் 2004 முதல் 2005 வரை உள்ள காலத்தில் 1,174 ஆடுகள் கொல்லப்பட்டன. இசபெல்லா தீவில் 770 யூதாஸ் ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. 2006ல் இந்தத் தீவும் ஆடு இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது.
வேட்டைக்காரர்களைத் தவிர ஆடுகளைக் கொல்ல உள்ளூர் மக்களையும் அதிகாரிகள் அனுமதித்தனர். ஒருபோதும் வேட்டைக்குப் போகாதவர்கள் கூட ஆடுகளைத் தேடி வந்தனர். வேட்டை நடந்தது. தயவுதாட்சண்யம் இல்லாமல் ஆடுகள் கொன்று குவிக்கப்பட்டன. கொல்லப்பட்ட ஆடுகளின் இறைச்சி, உரோமங்கள், தோல் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
வேட்டைக்கு வருபவர்களுக்கு துப்பாக்கி, வேட்டை நாய்கள், தற்காலிக இருப்பிடம் அறியும் வசதி (GPS) போன்றவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வேட்டை இரண்டாண்டு நீடித்தது. 53,782 ஆடுகள் கொல்லப்பட்டன. இரண்டாம் கட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் வான் வழி வேட்டை நடந்தது. இது மூன்று மாதங்கள் நீடித்தது. இதற்காக தொழில்ரீதியான வேட்டைக்காரர்கள் தீவிற்கு வர வழைக்கப்பட்டனர்.
ஆடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டதால் உள்ளூர் தாவர விலங்குகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பின. இது ஆய்வாளர்களிடையில் வியப்பை ஏற்படுத்தியது. ஆடுகள் விட்டுச் சென்ற மரங்களின் தளிர் இலைகள் வெகு விரைவில் துளிர்த்தது. செடிகள் வேகமாக துளிர் விட்டு வளர்ந்தன. உள்ளூரில் வளரும் முட்செடிகள் முன்பை விட அதிக ஆற்றலுடன் வளர்ந்தன. உணவும் நீரும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் அவற்றைச் சார்ந்து வாழ்ந்த மற்ற உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தீவின் சூழல் மண்டலம் பழைய வடிவிற்கு வந்தது. மூவாயிரத்தில் இருந்து பத்தொன்பதாயிரமாக ஆமைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இவ்வாறு இசபெல்லா திட்டம் ஆக்ரமிப்பு உயிரினங்களுக்கு எதிரான உலகின் மிகச்சிறந்த முன்மாதிரித் திட்டமாக மாறியது.
சார்ல்ஸ் டார்வினும் காலப்பகோஸும்
பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்ல்ஸ் டார்வின் வந்து தங்கிய பிறகே இத்தீவு உலகின் கவனத்தைக் கவந்தது. ஒற்றைப்பட்ட தீவுக்கூட்டம் என்ற நிலையில் இங்கு வாழும் தாவர விலங்கினங்கள் விசித்திரமானவையாக காணப்பட்டன. இது டார்வினைக் கவர்ந்தது. 1831 முதல் ஐந்தாண்டு காலம் கப்பல் பயணம் செய்து உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அவர் ஆய்வுகளை நடத்தினார்.
இந்தப் பயணத்திற்கு நடுவில்தான் அவர் காலப்பகோஸ் தீவில் வந்தார். இங்கு ஐந்து வார காலம் தங்கி ஆய்வுகளை நடத்தினார். பரிணாமக் கோட்பாட்டின் உருவாக்கத்தில் காலப்பகோஸ் தீவின் சூழல் பற்றிய ஆய்வு டார்வின் தன் கொள்கையை வகுக்க பெரிதும் உதவியது. அவர் இத்தீவு ஒற்றைப்பட்ட தீவாக இருந்ததால் இங்கு உள்ள ராட்சத ஆமைகள், கடல் இக்வானாக்கள், பெரிய தாடியுடன் இருந்த ஃப்ரிகேட் பறவைகள் போன்றவற்றின் இயல்பு, வடிவம், வளர்ச்சியை பற்றி விரிவாக ஆராய்ந்தார்.
அவர் இங்கு கண்டுபிடித்த 14 வகை பிஞ்ச் பறவைகளுக்கு அவரது நினைவாக டார்வினின் பிஞ்ச் பறவைகள் என்று பெயரிடப்பட்டன. 1831 டிசம்பர் 27 முதல் 1836 அக்டோபர் 2 வரை ஹெச் எம் எஸ் பீகில் என்ற கப்பலில் மேற்கொண்ட கடல் வழி பயணத்தின்போது 1835 செப்டம்பர் 15 அன்று டார்வின் காலப்பகோஸ் தீவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு ராட்சத ஆமைகள், அது வரை கண்டிராத பறவைகள் அத்தீவை வித்தியாசமான சூழல் பகுதியாக கருத வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
1878ல் யுனெச்கோ இத்தீவை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. தீவைச் சுற்றிலும் உள்ள கடலில் வாழும் 20% உயிரினங்கள் உலகில் வேறெங்கும் காணப்படாதவை. இது இத்தீவை வேறுபட்டதாக மாற்றியது. கடலில் வாழும் ஒரே ஒரு இக்வானா இனம் இங்கு மட்டுமே வாழ்கிறது. காலப்பகோஸ் பெங்குயின் இங்கு வாழும் மற்றொரு அதிசய உயிரினம். இது போன்ற பல அரிய சூழ்நிலைகளே டார்வினை உயிரினங்களின் தோற்றம் (On the origin of the species) என்ற புகழ்பெற்ற நூலை எழுதத் தூண்டியது.
பல உயிரினங்களும் பூமியில் இதர பகுதிகளில் உயிரினங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருக்கும் என்றாலும் இத்தீவில் அவை வேறுபட்ட வடிவத்திலும் விசித்திர சுபாவத்துடனும் காணப்படுகின்றன என்பதை அவர் கண்டறிந்தார். மனிதனைப் பார்த்து பயப்படாத பறவைகள், பெரிய ஆமைகள், உதடுகளுடன் உள்ள பிஞ்ச் குருவிகள் என்று பல தரப்பட்ட உயிரினங்கள் அவற்றில் ஒரு சில.
ஒற்றைப்பட்ட இடங்களில் இத்தகைய உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்று டார்வின் சிந்தித்தார். இதில் இருந்தே பாதகமான சூழ்நிலைகளை சமாளித்து வாழும் இயல்புடைய இது போன்ற உயிரினங்கள் தோன்றின என்பது அவருக்குப் புரிந்தது. இதுவே பூமியில் புதிய உயிரினங்கள் தோன்ற காரணம் என்று அவர் கண்டுபிடித்தார். இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டிற்கும் இத்தீவின் உயிரினங்களே வழிவகுத்தன. அவரது நினைவாக அங்கு டார்வின் ஆய்வு நிலையம் செயல்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்