நார்வே அரசு அறிக்கை வெளிப்படுத்தும் உண்மை

ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகள் குறித்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும், இலங்கை அரசுக்குமிடையே சமரச முயற்சிகளை மேற்கொண்ட நார்வே அரசு, விரிவான அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. நார்வே மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளை இந்தியா விரும்பவில்லை என்றும், சோனியா அதிகாரத்துக்கு வந்த பிறகு ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீலங்காவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன என்றும் 208 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததற்கும், தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு இந்தியாவின் மௌன சம்மதமே காரணமென்றும்நார்வே அரசு அமைத்த குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

சர்வதேச ஆதரவுடன் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி ஆராய நார்வே அரசு அமைத்த குழு தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது:

நார்வே அரசின் ஆணையின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதியின் பகடைகள்’ என்ற இந்த அறிக்கை, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2003-04 ஆண்டுகளில் சமாதான முயற்சிகள் மெதுவாக தொடங்கியபோது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் அணுகியதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆனால், 2004 இல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களின் உணர்வுகளை பாது காப்பதாக கூறிக் கொண்டாலும், மகிந்த ராஜபக்சே அரசாங்கத்தினது இராணுவத் தீர்வு முயற்சிக்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் இந்தியா கொடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. தனிப்பட்ட சந்திப்புகளில் நார்வேயை ‘புலிகளின் நண்பர்’ என்று இந்தியா விமர்சித்ததாகவும், “புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும்” என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைகளுக்கு இந்தியா ரேடர்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது. சிறிலங்காவுக்கு தாக்குதல் போர்த் தளவாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை புதுடெல்லி கடைப்பிடித்தாலும், வேறு எவரிடம் இருந்தும் ஆயுதங்களை சிறிலங்கா கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, இலங்கைக்கு போரை நடத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.

2004 இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் துணைவியார் சோனியாகாந்தி, இந்தியாவின் சக்தி வாய்ந்த நபராக மாறியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008 இறுதியில் பொது மக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துமாறு புதுடெல்லி கோரிய போதிலும்கூட, இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் ஆதரவு வழங்குவதில் இந்திய அரசாங்கம் மிகவும் தெளிவாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் இறுதி நாட்கள் பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கையில், புலிகள் மிக நெருக்கமாக சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு கொழும்பு மிகக் குறைந்தளவு ஆர்வமே காட்டியது. (அவர்களை கொன்றொழிக்கவே முனைப்பாக இருந்தது) போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டியிருக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

சமாதான முயற்சிகளில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்குமாறு 2007 இல் நார்வே தொடர்ச்சியாக வலியுறுத்தியபோதும் புதுடெல்லி அதை நிராகரித்து விட்டது. இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தபோது தாக்குலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகியது.

போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல் குறித்து சிறிலங்கா கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யாரும் பதவிக்கு வந்தால் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்ற கவலை சிறிலங்காவுக்கு இருந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, முன் வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணங்குமாறு ஆலோசனை கூறியதாக தெரிகிறது. ஆனால் அது நடக்கவில்லை.

நார்வே அரசின் அதிகாரப்பூர்வ ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையில் தமிழர் அழித்தொழிக்கப்பட்டதில் இந்திய அரசு வகித்த பங்கு ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.