டிஸ்லெக்சியா (dyslexia) எனப்படும் வாசிப்புக் குறைபாட்டை முதன்முதலாக விவரித்தவர் ஒரு பொது நல மருத்துவர். 120 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதைத் துல்லிதமாக விவரித்து எழுதினார். பிரிங்கல் மோர்கன் (Pringle Morgan) என்ற அந்த மருத்துவர், தான் பார்த்த பெர்சி என்ற ஒரு 14 வயது பையனைப் பற்றி 1896-ல் பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் (British Medical Journal) பின்வருமாறு பதிவு செய்தார்:

"இவன் புத்திசாலியான ஒரு பையன், அறிவைப் பொருத்தவரையில் யாருக்கும் குறைந்தவன் அல்ல. நன்றாகப் பேசுவான். ஆனால் அவனுக்கு வாசிக்க இயலாமல் இருக்கிறது. அவன் எழுத்தில் மிகையான எழுத்துப் பிழைகள் உள்ளன. உதாரணமாக, Percy என்ற தன் பெயரை Precy என்றும் carefully, peg என்ற சொற்களை முறையே carfuly, pag என்றும் எழுதுகிறான். அவனால் 7 என்ற எண்னை வாசிக்க முடியும், அனால் அதையே ஏழு என்று சொல் வடிவில் எழுதினால் வாசிக்க முடியவில்லை. அவனுக்கு கண் பார்வையில் கோளாறு எதுவுமில்லை" [1].

dyslexia

அன்று தொட்டு, குழந்தை உளவியலில் அதிக அளவு ஆராயப்பட்ட ஓர் ஆய்வுப் பொருளாகவும், நன்கு கற்றுணரப்பட்ட ஒரு வளர்ச்சிக் குறைபாடாகவும் டிஸ்லெக்சியா விளங்கி வருகிறது. இது வாசிப்புக் குறைபாடு (reading disability), கற்றல் குறைபாடு (learning disability), தனிப்பட்ட கற்றல் குறைபாடு (specific learning disability) என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் டிஸ்லெக்சியா என்ற பெயராலேயே இந்தியாவில் பெரும்பாலும் அறியப்படுகிறது. தமிழில் இதை வாசிப்புக் குறைபாடு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் (இது படிப்புக் குறைபாடு அல்ல என்பதைக் கவனிக்கவும்). டிஸ்லெக்சியா சிக்கலான ஒரு கோளாறு. அதை சரிவர புரிந்துகொள்வது கடினம். மருத்துவர்களும் கல்விப் புலன் சார்ந்தவர்களும் கூட தவறாக கருத்துகளை முன்வைப்பதை இணையதளங்களில் காணக்கூடியதாக உள்ளது.

டிஸ்லெக்சியா என்ற ஒரு வளர்சிக் குறைபாடு உண்டு என்பதை அறியாதவர்கள் பலர் (ஆசிரியர் உட்பட) உள்ளார்கள். அதைப் பற்றி கேள்விப்பட்டவர்கள் கூட அதன் தன்மையையும், அது சிறார்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறியாதவர்களகவே இருக்கிறார்கள். டிஸ்லெக்சியாவைப் பற்றி பெரும்பான்மையான தமிழ் வலைத்தளங்களிலும், புத்தகங்களிலும் காணப்படும் தகவல்கள் தெளிவற்றவையாகவும், குளறுபடியாகவும் உள்ளன. வேறு சில வளர்ச்சிக் குறைபாடுகளை டிஸ்லெக்சியா என்று தவறாக குழப்பிக் கொள்கிறார்கள். வாய்ப்புக் கேடாக, டிஸ்லெக்சியாவுக்கான சில தனியார் சிறப்புப் பள்ளிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அண்மைக் காலமாகத்தான் வாசிப்புக் குறைபாடு பற்றிய அறிமுகம் தமிழ்நாட்டில் ஏற்படத் தொடங்கியுள்ளது. 'தாரே ஜமீன் பர்' (2007) என்ற இந்திப் படம் டிஸ்லெக்சியா உள்ள ஓர் எட்டு வயதுப் பையனின் நிறை குறைகளை அழகாகக் காட்சிப்படுத்தி இருந்தது.

டிஸ்லெக்சியா என்றால் என்ன? அதை வரையறுப்பது எவ்வாறு? அதன் மைய குணாம்சங்கள் யாவை? அதில் காணப்படும் குறைபாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதில் அறிஞர்கள் இடையே நெடுங்காலமாக பல கருத்து வேற்றுமைகளும், சர்ச்சைகளும் இருந்து வந்தன. ஆனால் கடந்த 20, 30ஆண்டுகளில் டிஸ்லெக்சியா குறித்து ஆய்வாளர்களிடேயும் கல்வியாளர்களிடேயும் பெருமளவு கருத்தொற்றுமை ஏற்பட்டத் தொடங்கியுள்ளது. இதனால் மேற்கு நாடுகளில் டிஸ்லெக்சியா உள்ளவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வழிகாட்டும் விதமாக பல ஆவணங்கள் வரையப்பட்டுள்ளன [2, 3]. தற்போது வாசிப்புக் குறைபாடு பின்வருமாறு வரையறை செய்யப்படுகிறது:

“ஒரு மனிதனின் வாசிக்கும் திறனைப் பாதிக்கும் மூளை சார்ந்த கற்றல் குறைபாடு டிஸ்லெக்சியா. இக்குறைபாடு உடையவர்கள் சாதாரண அறிவுக் கூர்மை பெற்றிருந்தும் சொற்களை வாசிப்பதில் குறைவான திறனைப் பெற்றிருப்பர். முறையான கல்வி, போதுமான அளவு அறிவுத்திறன் மற்றும் தேவையான அளவுக்கு சமூக, கலாசாரப் பின்னணி ஆகியவற்றைப் பெற்றிருந்தும்கூட, ஒரு மொழியின் ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் சாதாரண மனிதர்களைப்போல் ஒரே வேகத்திலும், ஒரே சீராகவும் ஒன்றிணைத்து வாசிக்க முடியாததே "டிஸ்லெக்சியா' என்று சொல்லப்படும் வளர்ச்சிக் குறைபாடு" [4].

அடிப்படையில், டிஸ்லெக்சியா என்பது தனிச் சொற்களை சரிவர வாசிக்கக் கற்றுக்கொள்வதில் உள்ள ஒரு குறைபாட்டைக் குறிக்கும். டிஸ்லெக்சியாவில் வாசிப்புத் திறன் மட்டுமே குன்றி இருக்கும். அறிவுக் கூர்மை, பேச்சு, உடல் இயக்கம், சமூகத் திறன்கள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பதில்லை. இதனால்தான் இது தனிப்பட்ட கற்றல் குறைபாடு/கோளாறு என்று அழைக்கப்படுகிறது. வாசிப்புக் குறைபாடு உள்ள குழந்தைகள் பொதுவாகவே புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். எனவே இது மனவளர்ச்சிக் குறைபாடு எனும் அறிவுத்திறன் குறைபாட்டில் (mental retardation / intellectual disability) இருந்து வித்தியாசமானது .

டிஸ்லெக்சியா உள்ளவர்களில் ஏறத்தாழ 50 சதவிகிதத்தினருக்கு எண் கணிதம், எழுத்து ஆகிய கல்வித் திறன்களிளும் குறைகள் காணப்படுகின்றன. இவை முறையே டிஸ்கல்குலியா (dyscalculia), டிஸ்கிரபியா (dysgraphia) என்று வழங்கப்படுகின்றன. கூட்டாக இவை மூன்றும் கற்றல் குறைபாடுகள் (specific learning disability; SLD) என்று அழைக்கப்படுகின்றன.

வாசிப்புக் குறைபாட்டின் மூன்று முக்கிய அடையாளங்கள்

வாசிப்புக் குறைபாடு ஒரு நோய் அல்ல. அது ஒரு வளர்ச்சிக் (மேம்பாட்டுக்) குறைபாடு. மூளையில் மொழித் திறனுக்கான பகுதிகள் முழுமையான வளர்ச்சி அடையாததால் ஏற்படும் ஒரு குறைபாடு. சொற்களை வாசிப்பதில் இடர்பாடுகள் உள்ளமையே டிஸ்லெக்சியாவில் காணப்படும் முதன்மையான பிரச்சினை. வாசிப்புக் குறைபாட்டின் முக்கிய அடையாளங்கள் மூன்று. ஒன்று, சொற்களை வாசிக்க சிரமப்படுவதும், பிழையாக வாசிப்பதும். மற்றது, மெதுவாக, தடங்கித் தடங்கி வாசிக்கும் தன்மை. மூன்றாவதாக, எழுதும்போது ஏற்படும் எழுத்துப் பிழைகள் [5].

இந்த வாசிப்பு சார்ந்த பிரச்சினைகள் அறிவாற்றல் குறைபாட்டினால் ஏற்படுபவை அல்ல. கல்வி வாய்ப்புக் குறைவினால் உண்டாகும் பின்னடைவும் அல்ல. நல்ல அறிவு இருந்தும், போதுமான கல்வி பெற்று இருந்தாலும் வாசிப்பில் தன் வயதை ஒத்த சிறார்களை விட குறிப்பிடும்படி, அதாவது இரண்டு ஆண்டுகளாவது, பின்தங்கி இருப்பதுதான் டிஸ்லெக்சியாவின் பிரதானமான அறிகுறி.

இவர்கள் வாசிப்பில் பல வகையான பிழைகள் இருக்கும். ஓர் எழுத்தை விட்டுவிட்டு வாசிப்பது (தகவல் → தகல்), ஓர் எழுத்துக்கு பதிலாக வேறு ஓர் எழுத்தை புகுத்துவது (பகுப்பு → பருப்பு), ஒரு சொல்லுக்குப் பதிலாக வேறு ஒரு சொல்லை பாவிப்பது (தவறு → தப்பு) போன்ற பல வாசிப்புப் பிழைகள் இருக்கும். புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள், ஒரு முறை கற்ற சொற்களை விரைவில் மறந்துவிடுவார்கள்.

டிஸ்லெக்சியா உள்ள பிள்ளைகளின் எழுத்தில் பல வகையான எழுத்துப் பிழைகள் இருக்கும். சில எழுத்துகளை விட்டுவிட்டு எழுதுவது, தவறான எழுத்தைப் பாவிப்பது போன்ற பிழைகள் காணப்படும். தமிழில் எழுதும்போது எழுத்து வடிவங்களில் விலங்கு, துணை எழுத்து, கொம்பு, சுழி ஆகியவற்றில் பிழைகள் காணப்படும். எழுத்துகள் தாறுமாறாக இருக்கும். சொற்களின் எழுத்துகளின் வரிசைக் கிரமம் மாறி இருக்கும். இடம் வலம் மாறி எழுதுவதுதான் (b → d) டிஸ்லெக்சியாவில் உள்ள பிரதான எழுத்துப்பிழை என்ற தவறான ஒரு கருத்து பலரிடையே உண்டு. ஆனால் இதில் உண்மையில்லை. வளரும் பிள்ளைகள் பலர் இந்தத் தவறை செய்வதுண்டு.

விரைவாக வாசிப்பது இவர்களுக்குக் கைவராத ஒரு கலை. சிலர் ஐந்தாம், ஆறாம் வகுப்பிலும் எழுத்துக் கூட்டி வாசிப்பார்கள். வயது வந்த பின்னும் கூட விரைவாக வாசிக்க இவர்கள் சிரமப்படுகிறார்கள். கடுமையான சொற்களை (உ-ம். புறநானூறு, சுற்றுப்புறம்) வாசிப்பதில் இடர்பாடுகள் இருக்கும்.

கண்களுக்குப் புலனாகாத குறைபாடு

வாசிப்பதில் இவர்களுக்கு உள்ள சிரமங்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் படிப்பில் அக்கறை இன்மை, சோம்பல், விளையாட்டுப் புத்தி, அறிவுக் கூர்மையின்மை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது போகப்போக சரியாகிவிடும் என்று அலட்சியப் படுத்துகிறார்கள். மேலும், டிஸ்லெக்சியா பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்களிடம் கூட குறைவாகவே உள்ளது. டிஸ்லெக்சியா என்று ஒன்று இல்லை, அது வெறும் கற்பிதம் என்று எண்ணுகிறவர்களும் உண்டு. இதனால் 120 ஆண்டுகளாக அறியப்பட்ட போதிலும் டிஸ்லெக்சியா பெரும்பாலும் கண்களுக்குப் புலப்படாத ஒரு குறைபாடாகவே இருந்து வருகிறது. பள்ளி, குடும்பம் மற்றும் பணியிடத்தில் இவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கல்வி இழக்கிறார்கள், வாழ்வியல் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாமல் சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள். இவர்களுக்கு படிப்பு வராது என்று தீர்மானிக்கப்பட்டு, பலர் பள்ளியில் இருந்து விலக்கப்படுகிறார்கள். பலர் தானாகவே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். வேறு சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

டிஸ்லெக்சியா என்ற வாசிப்புக் குறைபாடு எல்லா மொழி பேசுபவர்களிடையேயும் காணப்படுகிறது [6]. பெரும்பாலான ஆய்வுகள் ஆங்கில மொழி பேசும் நாடுகளிலேயே நடத்தப்பட்டுள்ளன. ஆயினும், சீன, ஜப்பானிய, ஐரோப்பிய மொழி பேசுவர்களிடையேயும் பல ஆராய்ச்சிககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் டிஸ்லெக்சியா பற்றிய ஆராய்ச்சிகள் மிகக் குறைவு. நடத்தப்பட்டுள்ள ஓரிரு ஆய்வுகள் டிஸ்லெக்சியா இந்திய மொழிகள் பேசுபர்களிடையேயும் காணப்படுகிறது என்பதை ஐயமற நிறுவியுள்ளன [7].

பல நாடுகளிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின்படி டிஸ்லெக்சியா 5-ல் இருந்து 10 விழுக்காடு சிறார்களுக்கு உண்டு என்று அறியப்படுகிறது [8]. இதை 5 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டாலும் 40 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 2 பேர், 2000 மாணவர்களைக் கொண்ட ஒரு மேல்நிலைப் பள்ளியில் 100 பேர் என்ற அளவில் டிஸ்லெக்சியா காணப்படும் என்று எதிர்பார்க்கலாம். டிஸ்லெக்சியா ஆண்களில் கூடுதலாக, ஆண்:பெண் விகிதம் 2:1 என்ற அளவில், காணப்படுகிறது.

ஏன் உண்டாகிறது?

டிஸ்லெக்சியா சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக ஏற்படுகிறது. டிஸ்லெக்சியா உள்ள ஒரு பையனின் தகப்பனாருக்கு டிஸ்லெக்சியா இருக்கும் வாய்ப்பு 44% என்றும், தாய்க்கு 33% என்றும் ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன [9]. எனவே, இந்தக் குறைபாடு உண்டாவதற்கு மரபணுக்கள் ஓரளவு காரணமாக இருக்கின்றன. டிஸ்லெக்சியாவை உண்டுபண்ணும் மரபணுக்கள் சிலவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயினும் இந்த மரபணுக்கள் உள்ளவர்களில் 15 சவிகிதத்தினரே டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சூழல் சார்ந்த வேறு காரணிகளும் காரணமாக இருக்க வேண்டும். ஆனால் இது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இந்த மறபணுக்களினதும் மற்றும் அறியப்பட்டாத பல காரணிகளின் தாக்கம் காரணமாக ஆரம்பகால மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் மொழிசார்ந்த உளவியல் படிமுறைகளில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.

மூளையில் காணப்படும் வளர்ச்சிக் குறைபாடுகள்

டிஸ்லெக்சியா உள்ளவர்களின் மூளையை காந்த அதிர்வு அலை வரைவு (எஃப் எம்.ஆர்.ஐ) கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அதுவும் சொற்களை வாசிக்கும்போது இச்சோதனைகளைச் செய்வதால் மூளையில் எந்தெந்தப் பகுதிகள் திறம்பட இயங்கவில்லை என்பதை ஒரு காணொளியைப் போல காட்சிப்படுத்தி அறிய முடியும். டிஸ்லெக்சியா உள்ளவர்களின் மூளையின் மேலுறையின் செயல்பாட்டில் சில குறிப்பிட்ட வித்தியாசங்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காட்டாக, இவர்களின் இடதுபக்க மூளையில் உள்ள மொழிசார்ந்த மையம் குறைவாக இயங்குகிறது என்று தெரியவந்துள்ளது [10].

இதன் காரணமாக ஒரு சொல்லில் உள்ள எழுத்தின் ஒலியையும், அதன் வடிவத்தையும் தொடர்புபடுத்தியும், ஒருங்கிணைத்துப் பார்ப்பதும் இவர்களுக்குக் கடினமாக உள்ளது. இந்த உளவியல் திறன் குறைவாக இருப்பதால் மொழியை வாசிக்கக் கற்றுக்கொள்வதில் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவே டிஸ்லெக்கியாவில் உள்ள அடிப்படை உளவியல் சார்ந்த கோளாறு.

எழுத்தும் மொழியும்

ஒலியைக் குறிக்கும் குறியீடு எழுத்து. உலகெங்கும் உள்ள மொழிகளின் எழுத்து முறைமையைக் கற்றறிந்தவர்கள் அவற்றை ஓவிய எழுத்து (உ-ம். பழம் எகிப்திய எழுத்துகள்), கருத்து எழுத்து (சீன மொழிஎழுத்துகள்), ஒலியன் எழுத்து, அசை மொழி எழுத்து என்று வகுக்கிறார்கள். ஆங்கிலம் ஒலியன் எழுத்து முறைமையைக் (phonetic writing system) கொண்டது. எனவே, இது அகர எழுத்து முறைமை என்று அழைக்கப்படுகிறது (alphabetic writing system). காட்டாக, cat என்ற சொல்லை /k/ /ae/ /t/ என்றும் ship சொல்லை /sh/ /i/ /p/ என்றும் ஒலியன்களாகப் பிரித்து வாசிக்க வேண்டும். தற்போது ஆங்கிலம் ஒலியியல் அணுகுமுறை (phonetics approach) வழியாகவே கற்றுக்கொடுக்கப்படுகிறது.

தமிழ் பெரும்பாலும் அசை எழுத்து முறையைக் கொண்டது (syllabary writing system). 'அம்மா' என்ற சொல்லை /அ/ ம்/ மா/ என்று ஒலியன் பிரித்து ஒலிக்க வேண்டும். புறநானூறு போன்ற கடினமான சொற்களை /புற/ /நா/ /னூறு/ அசை பிரித்து ஒலிக்க வேண்டும். அதேபோல, "அகர முதல எழுத்தெல்லாம்" என்பதை பின்வருமாறு அசை பிரிக்கலாம்: /அக/ /ர/ /முத/ /ல/ /எழுத்/ தெல்/ /லாம்/. மற்ற இந்திய மொழிகளும் பெரும்பாலும் அசை எழுத்து முறைமையைக் கொண்டவையே.

ஆங்கிலம் ஒரு விநோதமான மொழி. அதில் எழுத்துக்கும் ஒலிக்கும் நேரிடையான தொடர்பு எப்போதும் இருப்பது இல்லை. ஓர் எழுத்தை பலவாறாக ஒலிக்கலாம். காட்டாக, cat என்ற சொல்லில் உள்ள /c/, 'க' என்று ஒலிக்கும். ஆனால் cell என்ற சொல்லில் உள்ள /c/ யை 'செ' என்று ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துகள்தான் உள்ளன. ஆனாலும் 44 ஒலியன்கள் உள்ளன. தமிழில் இந்த மாதிரியான ஒலி பேதங்கள் இல்லை. 'அ' என்ற எழுத்து எந்தச் சொல்லில் வரும்போதும் 'அ' என்றுதான் ஒலிக்கும் (எ-டு: அம்மா, அவன், அகநானூறு). (ஆனாலும் சில ஒரு எழுத்து இரண்டு விதமாக உச்சரிக்கப் படுவதுண்டு. 'கடிதம்' என்ற சொல்லில் /க/ என்ற எழுத்தின் ஒலிப்பும் 'கருடன்' என்ற பதத்தில் உள்ள /க/ ஒலிப்பும் வித்தியாசமானவை). எனவே ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் தமிழில் வாசிப்பதும், எழுதுவதும் இலகுவாக இருக்கும் என்று நீங்கள் எண்ணக் கூடும். ஆனால் உண்மை அது அல்ல. தமிழ் எழுத்துரு சிக்கலானது. மொத்தம் 247 எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன. ஸ, ஜ, போன்ற கிரந்த எழுத்துகளும் உள்ளன. தமிழ் எழுத்து வடிவங்களில் கீழ் விலங்கு (அ → ஆ),மேல் விலங்கு (ச → சி), சுழிமேல் (ச → சீ) கொம்பு (ச → செ) இரட்டைக் கொம்பு (ச → சை), இணையெழுத்து (ப → பா) போன்ற பல குறியீட்டுப்புள்ளிகள் (diacritic marks) உள்ளன. இதனால் தழில் வாசிக்க ஆரம்பிக்கும்போதும் எழுதும்போதும் குழந்தைகளுக்கு அது கடினமாகவே உள்ளது. எழுத்துப் பிழைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் உள்ள இந்த வித்தியாசங்கள் முக்கியமானவை. ஆங்கில வாசிப்பு முறையை ஆராய்ச்சி செய்த அளவுக்கு தமிழ் உட்பட இந்திய மொழி வாசிப்பு ஆராய்ச்சி செய்யப்படவில்லை. டிஸ்லெக்சியா பற்றி தமிழில் உள்ள கட்டுரைகளும் புத்தகங்களும், பள்ளிக்கூடங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதை பற்றித்தான் பேசுகின்றன!

ஆரம்ப அறிகுறிகள்

டிஸ்லெக்சியா குழந்தையின் வாசிப்புத்திறனை பாதிப்பதால், குழந்தையைப் பள்ளியில் சேர்த்த பின்பே இக்குறைபாடு இருப்பது பெரும்பாலும் தெரியவருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதத்தில் இக்குறைபாட்டின் அறிகுறிகள் இருக்கக்கூடும். டிஸ்லெக்சியாவை 5 வயதுக்கு முன்னரே அடையாளம் காண இயலும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன [11]. ஆனாலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட 7 அல்லது 8 வயதில்தான், அதாவது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆரம்பப் பள்ளியில் படித்த பின்தான், அடையாளம் காணப்படுகிறது.

வாசிப்புக் குறைபாட்டில் காணப்படும் சில ஆரம்ப அறிகுறிகள் (2 - 5 வயது வரை) பின்வருமாறு:

அரிச்சுவடியை கற்றுக்கொள்வதில் சிரமங்கள்.

எதுகை மோனையுடன் (rhyming), "நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடி வா" போன்ற பாலர் பாடல்கள் பாடுவதில் இடர்பாடுகள்.

பொருட்கள், நிறங்கள், எண்கள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுவதில் குழப்பங்கள்

கதைகளைக் கேட்பதில் விருப்பம் காட்டுவார்கள், ஆனால் தானாக வாசிப்பதில் சிரத்தையின்மை

பிற குழந்தைகளோடு ஒப்பிடுகையில் தாமதமான பேச்சு வளர்ச்சி

வயதுக்குப் பொருத்தமற்ற மழலைப் பேச்சு

சொற்களை ஒலிப்பதில் குழப்பங்கள் (வண்ணத்துப் பூச்சி → பல்லாத்தி பிச்சி)

தன் பெயரில் உள்ள எழுத்துகளை அறிந்துகொள்ள முடியாமை

தொடக்கப் பள்ளியிலும் மேல்நிலைப் பள்ளியிலும் (6 வயதின் பின்):

தனது வயதுக்குரிய நிலையை விட 2 வகுப்புகள் குறைவான வாசிப்புத் திறன்

மெதுவாக, தடங்கித் தடங்கி வாசிக்கும் தன்மை

வகுப்பில் உரக்க வாசிப்பதில் சிரமங்கள்

ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதைப் பார்த்து எழுதுவதில் சிரமங்கள்

வாய்மொழியாக பதில்கள் கூற முடிந்தாலும் அதை எழுத்தில் வார்ப்பதில் இடர்பாடு.

கடும் எழுத்துப் பிழைகள்

இரண்டாவது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வதில் தடங்கல்கள்

கூற வந்த விஷயத்துக்குத் தக்க வார்த்தைகளைகளைத் தேர்ந்தெடுப்பதில் சங்கடங்கள் (word finding difficulties).

இவர்களுக்கு உள்ள குறைபாடுகள் முன்பள்ளியிலும், ஆரம்பப் பள்ளியிலும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கும். எழுத்துக்கும், ஒலிக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் தெரிய வரும். இரண்டு மூன்று ஒலிகளைக் இணைத்து சொற்களை உச்சரிக்கத் தடுமாறுவார்கள். அடிக்கடி பயன்படுத்தப்படும் எளிய 'அந்த', 'ஒரு, 'பல', 'அது' போன்ற "பார்வைச் சொற்களை" (sight words) வாசிக்கும்போது அவற்றை குழப்பிக் கொள்வார்கள். வாசிப்பிலும் எழுத்திலும் பல பிழைகள் இருக்கும். உதாரணமாக 'பாட்டு' என்ற சொல்லை 'வாட்டு' என்று வாசிப்பார்கள். எழுதும்போது பல எழுத்துப் பிழைகள் இருக்கும்.

இதுபோன்ற அறிகுறிகள் சாதாரணமாக வளரும் குழந்தைகளிடத்திலும் சில நேரங்களில் காணப்படலாம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்தால் மட்டுமே இது வாசிப்புக் குறைபாடாக இருக்கக்கூடும் என்று எண்ணி பரிசோதனைகள் செய்ய வேண்டும். கரும்பலகையில் எழுதியதை வாசிக்க இயலாமை, தனது வகுப்புக்கும் கீழ் வகுப்புப் புத்தகங்களை வாசிக்க முடியாமை, பேச்சுத் திறனுக்கும், வாசிப்புத் திறனுக்கும் இடையே உள்ள இடைவெளி போன்றவை டிஸ்லெக்சியாவை கண்டுபிடிக்க உதவும் முக்கிய அறிகுறிகள். இரண்டாவது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்படும். இவர்கள் வாசிப்பதில் ஆர்வம் அற்றவர்களாக இருப்பதால் இவர்களது பிரச்சினை மேலும் மோசமாகிறது.

வயது போகப்போக இந்த மாணவர்கள் வாசிப்பில் பின்தங்கி இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிய வரும். காட்டாக, டிஸ்லெக்சியா உள்ள எட்டு வயது பையன் ஒருவன் ஐந்து வயதான அவன் தங்கையின் பாடப் புத்தகத்தை வாசிக்க சிரமப்பட்டான்! ஆனாலும் இதை அறிவுத் திறன் குறைபாடு அல்லது சோம்பேரித்தனம், போகப் போக சரியாகிவிடும் என்று (தவறாக) பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் எண்ணுவதுண்டு.

dyslexia writing

வாசிப்புக் குறைபாட்டை அடையாளம் காணுவது எப்படி?

தலையை எக்ஸ்ரே பண்ணுவது, மூளையை ஸ்கேன் பண்ணுவது போன்ற நவீன தொழில்நுட்ப பரிசோதனைகள் டிஸ்லெக்சியாவை கண்டுபிடிக்க உதவா. டிஸ்லெக்சியாவை கல்வி சார்ந்த வாசிப்புச் சோதனைகள் வழியாகவே அடையாளம் காணவும், மதிப்பீடு செய்யவும் முடியும். அதுவும் குறிப்பிட்ட ஒரு சோதனை வழியாக உறுதிசெய்ய முடியாது. டிஸ்லெக்சியாவுக்கு என்று முறைப்படியான தனி ஒரு சோதனை இல்லை. பலவிதமான வாசிப்புத் திறன் சோதனைகளைக் கொண்டே டிஸ்லெக்சியா ஒருவருக்கு உண்டு என்று உறுதிபடக் முடியும். மற்றும் வாசிப்பை சோதிக்கும்போது சொற்களை வாசிக்கச் சொல்ல வேண்டும். ஒரு வரியை அல்லது ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னால் ஊகித்து பதில் கூறி மழுப்பிவிடுவார்கள். டிஸ்லெக்சியாவில் உள்ள குறைபாடு சொல் மட்டத்திலேயே உள்ளது.

டிஸ்லெக்சியா ஒரு மொழி சார்ந்த குறைபாடு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும். டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் சொற்களில் உள்ள ஒலிகளை அடையாளம் காணவும், அவற்றை எழுத்துகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுவே டிஸ்லெக்சியாவில் உள்ள அடிப்படை உளவியல் குறைபாடு. எனவே, அதன் வெளிப்பாடும், தாக்கமும், தீர்வும் மொழிக்கு மொழி வேறுபடும். இங்கேதான் ஒரு சங்கடமும் எழுகிறது. டிஸ்லெக்சியாவை அடையாளம் காண பாவிக்கப்படும் சோதனைகள் யாவும் ஆங்கில மொழியிலேயே உள்ளன! தமிழில் இதுவரை டிஸ்லெக்சியாவுக்கான சோதனைகள் உருவாக்கப்படவில்லை என்பதுதான் வருந்தத் தக்க செய்தி. "அனைத்தும் ஆங்கிலம்" என்று இன்றுள்ள தமிழ்நாட்டுச் சூழலில் இது வியப்பல்ல. ஆனால் வாசிப்புக் குறைபாட்டின் தன்மையும், தாக்கமும் தமிழ் கற்கும் மாணவர்களில் எப்படி உள்ளது என்பது குறித்து இன்றுவரை முறைபடியான எந்த விதமான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.

ஆங்கிலத்தில் உள்ள இச்சோதனைகள் தமிழ் கற்கும் குழந்தைகளுக்குப் பொருந்துமா என்ற கேள்வி இங்கே எழுகிறது. இவற்றைப் பயன்படுத்தும்போது நாம் மாணவனின் ஆங்கில அறிவைச் சோதிக்கிறோமா அல்லது டிஸ்லெக்சியாவோடு தொடர்புடைய வாசிப்புப் பிரச்சினைகளை சோதிக்கிறோமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரு மாணவனுக்கு வாசிப்புக் குறைபாடு உள்ளது என்று உறுதி செய்ய பல வகையான சோதனைகள் தேவை. இவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம் [12]:

1. முறைப்படியாக தரப்படுத்தப்பட்ட தனிச்சொல் வாசிப்பு சோதனை (single word reading test). இதில் சொற்களின் பட்டியல் ஒன்று வாசிக்கக் கொடுக்கப்படும். இதன் ஆரம்பத்தில் உள்ள சொற்கள் எளிமையானவை அதன் பிறகு வரும் சொற்கள் ஒலிக்கக் கடுமையானவை (உ-ம். பாதி, கடுகு, மகுடம், அஞ்ஞானம், ஒன்றிணைத்தல்). இதில் எத்தனை சொற்களை பிழையின்றி ஒருவர் வாசிக்கிறார் என்பதைக் கொண்டு அவரின் வாசிப்புத் திறனை கண்டறிய முடியும்.

2. பொருளற்ற வெற்றுச் சொற்களை வாசிக்கும் சோதனை (non-word reading test). இதில் பொருளற்ற போலிச் சொற்கள் வாசிக்கக் கொடுக்கப்படும். (உ-ம். லதி, விகுமு, தபசதிகட, யதிவகுபடு). ஒவ்வொரு போலிச் சொல்லும் எந்த ஒழுங்கும் இன்றி புனையப்பட்டது. இதை ஞாபக சக்தியைக் கொண்டு வாசிக்க இயலாது. ஒலியன் (phoneme) அல்லது அசையை (syllable) பிரித்தே ஒலிக்க வேண்டும். இதிலிருந்து எழுத்து வடிவில் உள்ள சொற்களின் ஒலி பிரித்து அல்லது அசை பிரித்து வாசிக்கும் திறனை கண்டுகொள்ள முடியும்.

3. பேச்சில் உள்ள ஒலிகள் (ஒலியன்கள்) பற்றிய விழிப்புணர்வை மதிப்பிடும் சோதனைகள் (tests of phonological awareness). காட்டாக, 'சதம்' என்ற சொல்லை 'ச' என்ற ஒலி இல்லாமல் கூறுதல்; 'மகுடம்' என்ற சொல்லை 'கு' என்ற ஒலியை அகற்றிக் கூறுதல் போன்ற பரிசோதனைகள் வழியாக ஒலியன்கள் பற்றிய விழிப்புணர்வை மதிப்பிட முடியும்.

4. அடுத்தது, விரைவாக பெயரிடும் சோதனை (rapid naming test). இதில் சில படங்களைக் காட்டி அவற்றின் பெயர்களை எவ்வளவு விரைவில் கூற முடிகிறது என்று கணிக்கப்படும்.

ஆனாலும் இந்த சோதனைகள் யாவும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. நமது அயலவர்களான கன்னடர்கள் தம் மொழியில் ஒரு வாசிப்பு சோதனைக் கொத்தை உருவாக்கியுள்ளார்கள் [13]. இந்த வழியொற்றி தமிழிலும் டிஸ்லெக்சியா சோதனைகளை உருவாக்கி முறைப்படியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

முறையாகக் கற்று பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இச்சோதனைகளை நடத்தத் தகுதி பெற்றவர்கள். குழந்தைகள் மனநல மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்தத் தகுதி உண்டு. ஆனால் அவர்களுக்கும் கூட சிறப்புப் பயிற்சி தேவை. ஆனால் இன்றைய நிலையில் இவ்வாறு தகுதி பெற்ற சிறப்பு ஆசிரியர்களும், குழந்தைகள் நல மருத்துவர்களும் மிக மிகக் குறைவு.

தீர்வு என்ன?

சரி இத்தனை தடைகளையும் தாண்டி ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். இனி என்ன செய்வது?

டிஸ்லெக்சியாவில் காணப்படும் மொழிசார் குறைபாடுகளை முழுமையாகத் தீர்க்க இயலாவிட்டாலும், கணிசமான அளவு நிவர்த்தி செய்ய முடியும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய நற்செய்தி. “நீ கற்றுக்கொடுப்பது மாணவனுக்குப் புரியவில்லை என்றால், புரியும்படி அதைக் கற்றுக் கொடு" என்று கல்விப் புலனின் ஒரு சொல்வழக்கு உண்டு.

சராசரி மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படும் அதே கற்பித்தல் முறையை இக்குறையுடைய மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கற்பிப்பதால் பயன் இல்லை. அதாவது, மும்முரமாக பல மணித்தியாலங்கள் கடும் வாசிப்புப் பயிற்சி அளிப்பது மட்டும் போதாது. டிஸ்லெக்சியாவில் உள்ள அடிப்படைக் குறைபாடு ஒரு சொல்லில் உள்ள ஒலியன்களை அல்லது அதில் உள்ள அசைகளைப் பிரித்துப் பார்க்க இயலாமையே. எனவே, இதை முறைப்படியாக, நுணுக்கமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் [2, 3]. இது சிறப்புக் கல்வி (special education) என்றும், குறைதீர் கல்வி (remedial education) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இம்மாதியான பயிற்சி சாதாரண பள்ளிக்கூடங்களிலேயே வழங்கப்படுகிறது.

டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளை சாதாரண பள்ளிக்கூடங்களில் கற்பிப்பதுவே சிறந்தது என்பது உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து [2, 3]. இதனால் டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளும் மற்ற பிள்ளைகளும் பயனடைகிறார்கள் என்பதற்கு ஆராய்ச்சிச் சான்று உண்டு. மேலும், டிஸ்லெக்சியா உள்ள மாணவர்கள் ஒதுக்கப்படுவதையும் இதனால் தடுக்க முடியும்.

சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளியிலும் டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்குத் தேவையான விசேட கல்வி வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி அளிக்க சிறப்பு வளம்மிகு வகுப்புகள் (resource rooms) தேவை. இதில், ஒவ்வொரு நாளும் ஒரு கால அட்டவணையின் படி 3 அல்லது 4 மாணவர்கள் கொண்ட சிறு குழுக்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் முறைப்படியாக 45 நிமிடங்கள் வாசிப்பு முறைப்படியாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இம்மாதிரியான முன்னெடுப்புகளை இந்தியாவில் பரிட்சார்த்தமாக சில அரசு பள்ளிக்கூடங்களில் நடத்தி வெற்றியும் பெற்றுள்ளன. உதாரணமாக, குல்கர்னி என்ற குழந்தைகள் நல மருத்துவர் தலைமையில் மும்பையில் உள்ள சில கல்விக்கூடங்களில் இந்த முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்து [14]. இது போன்ற ஆய்வுகள் தமிழகத்தில் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

தற்போது தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்கு தேர்வு எழுதும்போது சில வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. தேர்வு எழுத கூடுதல் நேரம் வழங்குவது, எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளாமல் புள்ளிகள் வழங்குவது, இரண்டாவது மொழி ஒன்றைக் கற்பதில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற சில ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் இது மட்டும் டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்கு போதுமானவை அல்ல. இது அவர்களது அடிப்படை குறைபாட்டை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யாமல் வெறும் மேற்பூச்சு பூசுவதாகவே உள்ளது. இதற்கான சூழ்நிலை இன்னும் நமது கல்வித் தளத்தில் உருவாகவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இன்றைய நிலையில் டிஸ்லெக்சியா குறைதீர் பயிற்சி பெற்ற போதுமான சிறப்பு ஆசிரியர்களும் நம் நாட்டில் இல்லை.

கல்வி பெறும் உரிமைக்கான சட்டம்

2009 ஆண்டின் கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் 6 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகள் யாவருக்கும், மாற்றுத் திறனாளிகள் உட்பட, கட்டாயமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுகிறது. ஆனால் இந்திய கல்விச் சட்டங்களில் கற்றல் குறைபாடு ஒரு வளர்ச்சிக் குறைபாடாக இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கல்விச் சட்டத்தில் உள்ள வளர்ச்சிக் குறைபாடுகள் பட்டியலில் டிஸ்லெக்சியா இல்லை. எனவே, பள்ளிக்கூடங்களுக்கு டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால் மாற்றுத் திறனாளிகளான டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்கு பொருத்தமான கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

மேலும், மத்திய அரசின் கீழ் செயல்படும் "எல்லா மாணவர்களுக்கும் கல்வி" (சர்வ சிஷ்ய அபியான்) திட்டத்தின் கீழ் நிதி பெறவும் வாய்ப்புகள் இல்லை. இதனால் சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சிக்கும், பள்ளிக்கூடங்களில் வளம்மிகு வகுப்புகள் உருவாக்கவும் நிதி கிடைப்பதில்லை. டிஸ்லெக்கியா உள்ள குழந்தைகளுக்குத் தேவையானது சலுகைகள் அல்ல, உரிமைகள். பாதையையும் வெட்டி, பயணத்தைத் தொடர வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

சிறப்புப் பளிகள்

வாசிப்புக் குறைபாட்டுக்கு சிறப்புக் கல்விக்கூடங்கள் (special schools) தேவையில்லை என்பதை வற்புறுத்திக் கூற வேண்டும். ஆனாலும் தற்சமயம் தமிழ்நாட்டில் சாதாரண பள்ளிக்கூடங்களில் டிஸ்லெக்சியாவுக்குத் தேவையான கற்றல் வசதிகள் இல்லை என்பதால் சிறப்புக் கல்வி நிறுவனங்களை நாட வேண்டி உள்ளது. டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி வழங்க சென்னையிலும், சில பெரு நகரங்களிலும் சில தனியார் கல்வி நிலையங்களும், தன்னார்வ நிறுவனங்களும் உள்ளன. சில பள்ளிகளில் வசிப்பிட வசதியும் உண்டு. டிஸ்லெக்சியா உள்ள தன் குழந்தைக்கு ஒரு சிறப்புக் கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனம் தன் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்றதுதானா எவ்வாறு அறிந்து கொள்வது?

முதலில் தன் மகனுக்கு அல்லது மகளுக்கு உள்ள குறைபாடு டிஸ்லெக்சியாதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம். சிறப்புப் பள்ளிக்கூடங்கள் டிஸ்லெக்சியாவைக் கண்டறிய பல கல்வி சார்ந்த சோதனைகளை நடத்துகின்றன. அவர்கள் செய்த சோதனைகள் என்ன? அவற்றைச் செய்தவர்களின் தகைமைகள் என்ன? சோதனைகளின் முடிவுகள் என்ன? என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வது பெற்றோர்களின் உரிமை, இதைக் கேட்க தயக்கம் காட்டத் தேவையில்லை.

சிறப்புக் கல்வி நிலையத்தில் எவ்வாறான சிறப்புக் கல்வி அளிக்கப்ப்படும்? வாசிப்பில் விசேட கவனம் செலுத்தப்படுமா? அதை எவ்வாறு நடைமுறைப் படுத்துகிறார்கள்? இந்த விவரங்களை பெற்றோர்கள் கேட்க வேண்டும். 3 அல்லது 4 பேரைக் கொண்ட சிறு சிறு குழுக்களாக வாசிப்பு சொல்லிக் கொடுப்பது பலருக்கு தேவைப்படும். ஒரு நாளில் சில மணித்தியாலங்கள் இவ்வாறான வாசிப்புப் பயிற்சி தேவைப்படும். டிஸ்லெக்சியா கடுமையாக இருக்கும்போது ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் தனியே வாசிப்பு கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கும். இம்மாதிரியான வசதிகள் அந்த பள்ளிக்கூடத்தில் உள்ளனவா என்று கேட்டு அறிதல் வேண்டும்.

கூடவே, மற்ற பாடங்கள் கற்றுக் கொடுப்பதிலும் சில வித்தியாசமான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் இந்த மாணவர்கள் விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன [15]. எழுத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளாமல் வரைபடங்கள், காணொளிகள், கலந்தாய்வுகள், செய்முறை அனுபவம் போன்ற கற்றல் முறைகள் மூலம் இவர்கள் பெரும் பலனடைகிறார்கள்.

இதுவரை டிஸ்லெக்சியா ஒரு குறைபாடாகவே பார்க்கப்பட்டது என்பதைக் கவனிக்கவும். டிஸ்லெக்சியா உள்ள சிறுவர், சிறுமியரிடையே பல ஆற்றல்களும் வலிமைகளும் தேங்கிக் கிடக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. பள்ளிக்கூடங்கள் இவர்களின் குறை, நிறைகளை அறிந்து முனைப்புடன் செயல்படுவது அவசியம். டிஸ்லெக்சியா உள்ள பலர் இயல்பாகவே புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும், படிப்பில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். சிலர் கைத்திறன், ஓவியம், இசை, கணனித் திறன் போன்ற துறைகளில் வல்லவர்களாக இருப்பார்கள். பள்ளிக்கூடங்கள் இத்திறன்களை வளர்தெடுக்க முன்வர வேண்டும்.

வாசிப்புக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களை அசட்டை செய்வதால் திறன் மிக்க பலரை நாடு இழந்து கொண்டிருக்கிறது. டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களும் அவர்கள் பெற்றொர்களும் படும் அல்லல் சொல்லி மாளாது. கல்வித் துறையின் கவனம் இவர்களின் பக்கம் திரும்புமா என்று காத்துக்கொண்டு இருக்காமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையை நிலைநாட்ட குரல் எழுப்ப முன்வர வேண்டும்.

சான்றாதாரங்கள்


[1] Morgan W. P. (1896 ) A case of congenital word blindness. British Medical Journal, 2(1871):1378

[2] National Reading Panel (2010) Teaching children to read: an evidence-based assessment of the scientific literature on reading and its implications for reading instruction. National Institute of Child Health and Human Development. Washington D. C. Available at: http://www.nichd.nih.gov/research/supported/Pages/nrp.aspx/

[3] Rose. J. (2013) Identifying and teaching children and young people with dyslexia and literacy difficulties. London, UK: Department of Children, Schools and Families. Available at: http://www.education.gov.uk/publications/eOrderingDownload/00659-2009DOM-EN.pdf

[4] Lyon G. R, Shaywitz S. E, Shaywitz B.A. (2003) A definition of dyslexia. Annals of Dyslexia. 53: 1–14.

[5] Thambirajah, M.S., (2010) Developmental dyslexia: an overview, Advances in Psychiatric Treatment, 16, 299-307.

[6] Ganshow. L. & Mills. T. (2000) Dyslexia across the world. Perspectives, 26, 12-35.

[7] Mogasale. V. V. Patil. V.D. Patil N.M. & Mogasale V. (2012) Prevalence of Specific Learning Disabilities Among Primary School Children in a South Indian City, Indian Journal of Pediatrics, 79, 3, 342-347.

[8] Vellutino F. R, Fletcher J.M. Snowling M.J. & Scanlon D.M. (2004). Specific reading disability (dyslexia): what have we learned in the past four decades? Journal of Child Psychology and Psychiatry, 45, 2-40.

[9] Snowling, M. J. (2000). Dyslexia: A cognitive developmental perspective (Second edition) Oxford: Blackwell.

[10] Shaywitz B.E & Shaywitz B.A (2005). Dyslexia (Specific learning disability). Biological psychiatry, 52,2, 1301-1309.

[11] Stanovich. K. E. (2006). Annotation: Does dyslexia exist? Journal of Child Psychology and Psychiatry, 35, 4, 579–59.

[12] Snowling MJ, Stackhouse J (2006) Dyslexia, Speech and Language (2nd edn), Chapter 6. Assessing reading and spelling skills, pp98 -127). Whurr Publishers.

[13] Saldanha.M. Siddaiah. A. Veerappa A.M. Ramachandra. N.B. & Padakannaya. P. (2014) Catch Them Before They Fall: A Simple Test of Sight-Word and Pseudo-Word Reading in Kannada for a Quick and Early Assessment, Sage Open Access, DOI: 10.1177/2158244014560524. Available from: http://sgo.sagepub.com/content/spsgo/4/4/2158244014560524.full.pdf

[14] Kulkarni M, Karande S, Thadhani A, Maru H, Sholapurwala R. (2006) Educational provisions and learning disability. Indian Journal of Pediatrics. 73:789-93.

[15] Snowling MJ, Stackhouse J (2006) Dyslexia, Speech and Language (2nd edn), Chapter 12 (Managing the needs of the pipils with dyslexia in mainstream classrooms (pp. 253 -277). Whurr Publishers.

மேலும் வாசிக்க:

Shaywitz. S. (2005) Overcoming dyslexia, New York: Vintage Books. இது பெற்றோருக்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு டிஸ்லெக்சியா ஆய்வாளரால் எளிய மொழியில் எழுதப்பட்ட நூல்.

- டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா, குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் சிறப்பு மனநல மருத்துவர்