தில்லி அரசு வேளாண்மையின் மீது ஓர் போர் பிரகடனம் அறிவித்துள்ளது. உழவர்களை நசுக்கும் அடுக்கடுக்கான சட்டங்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டுள்ளன.

I

விதைச் சட்டம்

இந்திய ஆட்சியாளர்களின் துணையோடு ‘விதை ஏகாதிபத்தியம்’ நிறுவப்படுகிறது. நம் ஊர் உழவர்களின் கொல்லையில் எதை விதைக்க வேண்டும்; என்ன விலை கொடுத்து அந்த விதையை வாங்க வேண்டும், அதற்கு என்ன பூச்சிக் கொல்லி போட வேண்டும் என்பதை மான்சண்டோ நிறுவனம் முடிவு செய்யும். உழவர்கள் கைகட்டி வாய் பொத்தி அம்முடிவை நிறைவேற்ற வேண்டும்.

ஆழிப்பேரலை அடித்த டிசம்பர் 26, 2004 அன்று விதை அவசரச் சட்டம் -2004The Seeds Ordinance, 2004) பிறப்பிக்கப்பட்டது. அதை நிரந்தரச் சட்டமாக்குவதற்கு விதைச் சட்ட வரைவு-2004  (The Seeds Bill - 2004) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இது உடனடியாக சட்டமாகாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ் தலைமையில் அமைக்கப்பட்ட நிலைக்குழு பல்வேறு உழவர் அமைப்புகளிடம் கருத்து கேட்டது. விதைச்சட்ட வரைவு உழவர்களுக்கு எதிரானது; விதை இறையாண்மையைப் பறிப்பது என எடுத்துக்காட்டிய இந்த நிலைக்குழு இச்சட்டவரைவை பெருமளவு மாற்றும்படி பரிந்துரைத்தது.

ஆனால் மன்மோகன் சிங் அரசு இதனை புறந்தள்ளி விட்டு புதிய விதைச் சட்ட வரைவை முன்வைத்துள்ளது.

உழவர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளில் முக்கியமான ஒன்று விதையுரிமை. இந்த விதையுரிமையைப் பறித்து பன்னாட்டு விதைக் கம்பெனிகளுக்கு வழங்குவது ஒன்றுதான் புதிய விதை மசோதாவின் நோக்கமாகும்.

அது மட்டுமின்றி பல்வேறு தேசிய இனமக்களின் மரபான வேளாண் தொழில்நுட்ப அறிவைத் துடைத்தழிப்பதற்கு இச்சட்டம் துணை செய்கிறது. தேசிய இன மாநிலங்களின் வேளாண்துறை அதிகாரத்தை வெட்டிக் குறுக்குகிறது.

மாநில உரிமை பறிப்பு

இச்சட்ட வரைவின் விதி 3(1)இன் கீழ் மைய விதைக்குழு ((Central Seed Committee) ஒன்றை தில்லி அரசு நிறுவி விதைச் சட்டத்தைச் செயலாக்கும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட உயர்மட்ட அமைப்பாக இது திகழும். ஏற்கெனவே நடப்பில் உள்ள 1966ஆம் ஆண்டு விதைச் சட்டத்தில் மையவிதைக்குழு என்பது அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட ஒருவித கூட்டுக்குழுவாக இருந்தது. இப்பிரதிநிதிகளை அம்மாநில அரசுகளே நியமிக்கும்.

ஆனால் புதிய சட்டத்தின் விதி 4(1) “மையவிதைக் குழுவை மைய அரசு நியமிக்கும்” என்று கூறுகிறது. இந்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் இக்குழுவில் பெரும்பான்மையோராக இருப்பர். எல்லா மாநிலங்களிலிருந்தும் உறுப்பினர்கள் இடம் பெற மாட்டார்கள். அதற்குப் பதிலாக இந்திய மாநிலங்கள் ஐந்து தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஏதேனும் மூன்றிலிருந்து தொகுதிக்கு ஒருவராக மொத்தம் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். இவர்களும் தில்லி அரசாலேயே நியமிக்கப்படுவர்.

தாவரத் திருட்டு

கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் வெள்ளையர்கள் இங்கிருந்து பஞ்சு, அவுரிச் செடி போன்றவற்றை அடி மாட்டு விலைக்கு வாங்கித் துணியாக்கி நம் மக்களிடையே அதை விற்று கொழுத்தார்கள். இன்று அதற்கு ஒருபடி மேலே போய் வெள்ளையர் கம்பெனிகள் இங்குள்ள தாவரப் பொருட்களைத் (Plant Materials) திருடிச் சென்று காப்புரிமைப் பதிவின் வழி தமதாக்கிக் கொண்டு சிறுசிறு மாற்றங்கள் செய்து மீண்டும் நம் உழவர்களிடமே விற்பனை செய்கிறார்கள். இதற்கு உயிரித் தொழில்நுட்பம்(Bio-technology) என்ற உயர் தொழில்நுட்பத்தைத் துணை கொள்கிறார்கள்.

இதற்கு அரண் சேர்க்கவே இந்த விதைச் சட்ட வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது.

அண்டை அயலாரிடம் கூட உழவர்கள் விதையை விற்பனை செய்ய முடியாது. இச்சட்ட விதி 13(1) “பதிவு செய்யாத எந்த விதையையும் விற்கக்கூடாது” என்று தடை விதிக்கிறது. சரி, சொந்தப் பயன்பாட்டுக்காக விதை வைத்துக் கொள்ளத் தடை ஏதுமில்லை என சுதந்திரமாக இருக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. இச்சட்டப்படி நியமிக்கப்படும் விதை ஆய்வாளர் (Seed Inspector) ஒரு உழவர் வைத்திருக்கும் பதிவு செய்யப்படாத விதை சொந்தப் பயன்பாட்டுக்காக அல்ல விற்பனைக்குத்தான் என ஐயுற்றால் அவ்விதையை அவர் பறிமுதல் செய்யலாம்.

தமிழக உழவர்களில் ஒரு பகுதியினர் அடுத்த போகத்திற்கான விதையைத் தாங்களே சொந்தாமாக சேமிக்கின்றனர். அல்லது அக்கம்பக்கத்து உழவர்களிடம் பறிமாற்றம் செய்து கொள்வதும் உண்டு. இங்குள்ள சிறுநிறுவனங்கள் உற்பத்தி செய்யும் விதைகளைப் பயன்படுத்துவோரும் உண்டு. ஆனால் இந்தத் தங்குதடையற்ற விதைச் சுதந்திரம் பறிபோகிறது.

பதிவு செய்வதற்கு இச்சட்டம் விதிக்கும் நிபந்தனை மிகக் கடுமையானது. விதையைப் பதிவு செய்வதற்கு முன்னால் வேறுபட்ட பல இடங்களில் பயிரிட்டுப் பரிசோதிக்கப்பட வேண்டும் (Multilocational  Trial) என நிபந்தனை விதிக்கிறது. மரபான விதைகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே பொருத்தமானவை. வறட்சிப் பகுதியில் வறட்சி தாங்கும் ரகங்கள் பயிராகின்றன. மண்ணுக்கு மண் விளைச்சல் வேறுபடும். இந்நிலையில் பல இடங்களில் பரிசோதிப்பது என்பது உள்ளூர் வகைகளை நிராகரிப்பதற்கான சூதான உத்தியே ஆகும்.

உள்ளுர் சிறுநிறுவனங்களும் இந்நிபந்தனையை நிறைவேற்ற முடியாது. இவ்வளவு தரக்கட்டுப்பாடு விதிக்கும் இந்த விதைச் சட்டம், பன்னாட்டு நிறுவனங்களிடம் பல்லிளிக்கிறது. இச்சட்ட விதி 15 இதற்கொரு சான்றாகும்.

மரபீனி மாற்று விதைகளை (Genetically modified seeds or Transgenic Seeds) 1986ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆய்வுக்குட்படுத்திய பிறகே விற்பனைக்கு அனுமதிக்க முடியும் என விதி 15(1) மீசையை முறுக்கிறது.

ஆனால் அடுத்த பத்தியிலேயே இவ்வாறான ஆய்வேதுமின்றி இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிக உரிமம் அளிக்கத் தடை ஏதுமில்லை என்று பன்னாட்டு கம்பெனிகளின் காலில் விழுகிறது.

இவ்விதைச் சட்டம் உழவர்களை எந்நேரமும் ஒருவகை கண்காணிப்பிலேயே வைத்திருக்க விதை ஆய்வாளர் (Seeds Inspector) என்ற ஏற்பாட்டைச் செய்கிறது (விதி 34). இந்த விதை அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகாமல் உழவர்கள் ஒடுங்கிக்கிடக்க வேண்டும். விதை ஆய்வாளர் எந்த உழவரின் வீட்டிற்குள்ளும் நுழைந்து, சந்தேகப்படும்படியான எந்த பண்டப் பாத்திரத்தையும் திறந்து பார்க்க, பூட்டிக்கிடந்தால் உடைத்துத் திறக்க அதிகாரம் பெற்றவர் என்று இச்சட்டம் கூறுகிறது. விதைச் சோதனையின் போது (Seed Raid) அவருக்குத் தேவையான காவல்துறையினரை மாநில அரசு அனுப்ப வேண்டும் என இச்சட்டம் பணிக்கிறது.

மாநில உரிமையைப் பறிக்கிற தமிழர்களின் மரபான அறிவியல் தொழில்நுட்பத்தை அழிக்கிற, உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிற இந்த விதைச் சட்டத்தை தடுக்க உழவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

II

உயிரித் தொழில்நுட்பச் சட்டம்

இந்திய அமெரிக்க அரசுகளின் கூட்டுச் சதி விளைவாக மேலும் ஒரு மக்கள் விரோதச் சட்டம் வர உள்ளது. “இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்றுச் சட்டம் 2009, ((Bio-technology Regulatory Act of India 2009) என்பதே அது. இன்று சட்ட முன்வடிவாக இது முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2005, ஜூலை 18-ல் வாசிங்டனில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ்ஷூடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் இந்திய அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி (Indo-U.S. Knowledge Initiative) என்பதும் ஒன்று. அதற்கு இணங்கவே உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று வரைவுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

உயிரித் தொழில்நுட்பச் சட்டம் எனப் பொதுப்படக் கூறப்பட்டாலும், குறிப்பாக மரபீனிமாற்று உயிர்களைப் பற்றியே இச்சட்டம் பேசுகிறது. எனவே மரபீனி மாற்ற உயிரிகள் சட்டம் என்பதாகவே இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். மரபீனி மாற்றப் பயிர்களின் தீமை குறித்து ஏற்கெனவே பலரும் அறிந்ததுதான்.

உழவர்களின் வாழ்வுரிமையை, பல்வேறு தேசிய இனங்களின் மரபான அறிவியல் - தொழில்நுட்ப மரபுரிமையை மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கிற, மண்ணையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்குகிற, நல்வாழ்வைக் கேள்விக்குறி ஆக்குகிற ஒரு மக்கள் விரோதச் சட்டமே 2009 இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம் ஆகும்.

மாநில உரிமை பறிப்பு

மரபீனி மாற்ற உயிரிகள் குறித்து மாநில அரசுகள் எந்தவித ஒழுங்குமுறைச் சட்டங்கள் அல்லது ஆணைகள் பிறப்பித்திருந்தாலும் இனி அவை இப்புதிய சட்டப்படி நீக்கப்படுகின்றன என்று உயிரித் தொழில்நுட்பச் சட்ட வரைவு கூறுகிறது. தங்கள் தங்கள் மாநில எல்லைக்குள் மரபீனி மாற்றப் பயிர்களையோ, மற்ற உயிரிகளையோ மாநில அரசுகள் இனி தடை செய்ய முடியாது. ஏற்கெனவே கேரள மாநில அரசும், ஜார்கண்ட் மாநில அரசம் தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்ற உயிரிகளை வளர்க்கக்கூடாது எனத் தடை விதித்துள்ளன.

பி.ட்டி கத்தரிக்கு பல்வேறு மாநில அரசுகள் மாநிலங்களில் தடை விதித்தன. அதன் பிறகு இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியா முழுவதற்கும் பி.ட்டி கத்தரிக்கு தற்காலிகத் தடைவிதித்தது.

இச்சட்டம் செயலுக்கு வருமானால் இத்தடைகள் தானாகவே நீங்கிவிடும்.

அறிவுசார் ஒப்பந்தமும், அதிகாரக் குவிப்பும்

பெரிதும் வட அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களால் வழி நடத்தப்படுகிற உலகமயப் பொருளியலின் ஓரு பகுதியாக இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தம் உருவாக்கப் பட்டுள்ளது.

இதனைச் செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள அறிவு வாரியத்தில் மான்சாண்டோ, வால்மார்ட் பிரதிநிதிகளும், எம்.எஸ்.சாமிநாதனும் இடம் பெற்றுள்ளனர்.

ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள புதிதாக வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் என்பதில் மரபீனிப் பொறியியல் குறித்ததாக ‘இந்திய உயிரித் தொழில்நுட்பச் சட்டம் 2009’ உள்ளது.

இதுவரை மரபீனி மாற்ற உயிரிகள் தொடர்பான வெளிக்கள ஆய்வுகளுக்கும், வணிகரீதியானப் பயன்பாட்டுக்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக்குழு (Genetical Engineering Approval Committee-GEAC) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபீனி மாற்ற உயிரிகளால் தொடர் சூழல் மாசுபாடு நிகழும் என்ற ஐயம் உள்ளதால், மரபீனி மாற்ற உயிரிகளுக்கு ஏற்பு வழங்குவதில் வரம்பு விதிப்பதற்காகவே இவ்வகை ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள உயிரித்தொழில் நுட்பச் சட்டப்படி நிறுவப்படும் “தேசிய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம்” (National Biotechnology Regulatory Authority -NBRA) ஒரு சர்வாதிகார அமைப்பாகவே செயல்படும் ஆபத்து உள்ளது.

இந்த ஆணையத்திற்கு ஒரு தலைவரும், ஒழுங்குமுறை அதிகாரிகளும் இருப்பார்கள். அதேநேரம் ஆணையத் தலைவரின் அதிகாரமே மேலோங்கியதாக இருக்கும் என்பதை இச்சட்டம் தெளிவாக்குகிறது.

ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்ட முறையிலோ, ஆணைய உறுப்பினர்களின் தகுதியிலோ ஆணையம் முடிவெடுத்த முறைமையிலோ (Procedure) முறைகேடு நடந்திருப்பதாகக் காட்டி ஆணையத் தலைவரின் முடிவை செல்லத் தகாததாகக் கூற முடியாது என இச்சட்டம் சாற்றுகிறது.

இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்ப்பாயம் மட்டுமே ஆணையத்தலைவர் மேற்கொண்ட முடிவின் மீது மேல்முறையீட்டை விசாரிக்கலாம். தவிர வேறு எந்த நீதிமன்றத்திற்கும் அத்தகைய அதிகாரம் கிடையாது என இவ்வரைவுச் சட்டம் கூறுகிறது.

ஆணையத்தின் தலைவரோ, பிற அதிகாரிகளோ ஒருதலைச் சார்பாக நடந்து கொண்டு, நியாயமற்ற முறையில் ஒரு மரபீனி மாற்ற விதைக்கோ, மருந்துப் பொருளுக்கோ அனுமதி வழங்கினார்கள் என்று குற்றம் சாட்டி எந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாது என தடை செய்கிறது.

அறிவியலுக்கு எதிரானது - கருத்துரிமையைப் பறிப்பது

இச்சட்ட வரைவின் 13(63)-வது பிரிவின்படி மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிராக தக்க ஆதாரங்களின்றி பொதுமக்களிடையே பரப்புரை செய்பவர்கள் ஆறுமாதம் வரை சிறைத் தண்டனைப் பெறுவதுடன் இரண்டு இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்த வேண்டி வரும். இப்பிரிவு அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானது. அறிவியலில் பிழையாத்தன்மை என்ற ஒன்று இல்லை. ஆகவே இவர்கள் கூறும் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிரான கருதுகோளை முன்வைப்பது அறிவியலுக்கு புறம்பானது அல்ல. அதற்கு தண்டனை என்பது கம்பெனிக்காரர்களின் அறிவே இறுதியானது என அறிவியலுக்கு வரம்புக்கட்டும் சூழ்ச்சித் திட்டமாகும். அறிவைக் கைது செய்யும் முயற்சி ஆகும்.

இச்சட்ட வரைவின் 4ஆம் அத்தியாயம், அறிவியலாளர்கள் தனியார் ஆய்வகங்களில் கம்பெனிகளின் மரபீனி மாற்ற விதைகளை ஆய்வு செய்வதைத் தடை செய்கிறது. மான்சாண்டோ நிறுவனம் சொல்லுவது சரியா தவறா என்று கண்டறிவதற்கு சொந்த முறையில் ஒருவர் தனிப்பட்ட ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொண்டால் 5 ஆண்டு சிறை அல்லது 10 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என இவ்விதி அறிவியலாளர்களை அச்சுறுத்துகிறது.

மேலும் சட்டமுன்வரைவு 27(1)ன் படி மரபீனி மாற்றப்பயிர்களின் ஆய்வு முடிவுகள், அவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி போன்றவை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் பெற முடியாது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் இத்தொழில்நுட்பம் குறித்து அறியும் உரிமையை உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் இச்சட்டம் மறுக்கிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் சட்டமாகும் இது.

ஒருபுறம், அறிவாளர்கள் சொந்த முறையில் மரபீனி மாற்ற விதைகளை ஆய்வு செய்யவும் கூடாது; தகவல் பெறவும் முடியாது என்று ஆதாரங்களை அடைத்து வைத்துவிட்டு, ஆதாரம் இல்லாமல் திறனாய்வு சொன்னால் 6 மாதம் சிறை என்று அச்சுறுத்துவது அப்பட்டமான கம்பெனி ஆட்சி நடக்கிறது என்பதையே எடுத்துக்கூறுகிறது.

பி.ட்டி கத்தரி குறித்த முடிவுகளை அறிவதற்கு தகவல் உரிமை சட்டப்படி உச்சநீதிமன்றத்தைக் கிரீன் பீஸ் அணுகியது. தகவல் பெற்றது. அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டியது. பல்வேறு அறிவாளர்களும், உழவர்களும் திரட்டினர். இனி இவ்வாறு நடக்காமல் தடுப்பதே இச்சட்டவரைவின் நோக்கம்.

மான்சண்டோ, சின்ஜென்டா, டூபான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குச் சேவை செய்யவே இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம், 2009 கொண்டு வரப்படுகிறது.

III

பன்னாட்டு நிறுவனங்களுக்கு பண்ணை அமைக்க அனுமதி

இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தத்திற்கு இசைய மேலும் ஒரு சட்டம் வர இருக்கிறது. வேளாண் நிலங்களை அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதற்கு அனுமதி வழங்கும் சட்டவரைவே இது.

இதுவரை வெளிநாட்டவர் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நகர்ப்புற நிலங்களையும் மனைகளையும் வாங்குவதற்கு சட்ட வாய்ப்பு இருந்தது. ஆயினும் வேளாண் நிலங்களை வாங்குவதற்கு தடை இருக்கிறது. இந்தத் தடையே கூட பல்வேறு விதிவிலக்குகளின் மூலமாக ஏற்கெனவே பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வரப்படும் சட்டவரைவு எந்த விதிவிலக்குகளும், தடைகளும் இல்லாமல் வேளாண் நிலங்களை வாங்கிக் குவிப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இசைவு அளிக்கிறது. வேளாண் பொருள் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்துதல் (உணவுப் பதப்படுத்துதல், சந்தை வாய்ப்பு, உயிரி எரிபொருள் போன்றவை) ஆகியவற்றில் அமெரிக்க பகாசுர நிறுவனங்களை அனுமதிப்பது என 2005-ல் ஜார்ஜ் புஷ்ஷூ‘_ம் மன்மோகன் சிங்கும் கையெழுத்திட்ட இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தம் வலியுறுத்தியது.

இது தான் இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட வரைவாக முன் வைக்கப்பட்டுள்ளது.

2010 - 2011 ஆம் நிதியாண்டுக்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்திலும் அதற்கு முன்பும் அடுக்கடுக்கான உழவர் எதிர்ப்பு திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேதி உரங்கள் மீதான விலைக் கட்டுப்பாடு நீக்கம், விதைச் சட்டம், உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம் என உழவர்கள் ஒரு மூச்சு முட்டும் முற்றுகையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே காவிரி நீர் வரவில்லை. முல்லைப் பெரியாறு மறுக்கப்படுகிறது. பாலாற்றில் கசிந்து வரும் நீரும் மறிக்கப்படுகிறது.

இவையெல்லாம் சேர்ந்து உழவர்களை வேளாண்மை செய்ய விடாமல் நசுக்குகின்றன. இவற்றில் சிக்கிய உழவர்கள் எதிர்த்துப் போராடமல் இருந்தால், வேளாண்மையை விட்டுவிட்டு வந்த விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு ஊரை காலி செய்து உள்நாட்டு அகதிகளாக அலைய வேண்டிய அவலம் தான் நேரும்.

இதைத்தான் இந்திய, பன்னாட்டு பெரு முதலாளிகளும் தில்லி ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள். நிலத்தை குறைந்த விலைக்கு முகம் தெரியாதவர்களிடம் விற்கிற இந்த மண்ணின் உழவர்கள் தங்கள் கண்ணெதிரிலேயே அதே நிலம் பலமடங்கு விலைக்கு கைமாறப் போவதையும், அங்கு வடநாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் வேலியிட்டு பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணைகள் அமைப்பதை கையைப் பிசைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் நிலைதான் வரும்.

இவ்வாறு நிலத்தையும் ஊரையும் இழக்கும் உழவர்களுக்கு செழிப்பான, மனநிறைவான வாழ்வளிக்கும் நிலையில் நகரங்களும் இல்லை.

இருக்கிற நிலத்தையும் இழந்து, புதிய வாழ்க்கையும் கிடைக்காமல் சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக உழல நேரும்.

எனவே, பன்னாட்டு நிறுவனங்களை பண்ணை அமைத்துக் கொள்ள, வேளாண் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கிக் குவிக்க அனுமதிக்கும் சட்ட வரைவை உழவர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். முறியடிக்க வேண்டும்.

-கி.வெங்கட்ராமன்

Pin It