தொடர்புடைய படைப்புகள்

இது சென்னை நகரமெங்கும் தி.மு.க சார்பில் ஒட்டியுள்ள சுவரொட்டி. இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை கிடைத்து விட்டதா? அதைக் கலைஞர் பெற்றுத் தந்தாரா? என்ன விடுதலை? தேசிய விடுதலையா? இன விடுதலையா? எப்போது கிடைத்தது? அதைக் கலைஞர் பெற்றுத் தந்தாரா? எப்படி? ஈழ விடுதலை எல்லாம் இனி நடக்கப் போவதில்லை என்றுதான் கலைஞர் அறிவித்து விட்டாரே, இப்போது எப்படி விடுதலை பெற்றுத் தருவார்?

முல்லைத் தீவிலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் புலம் பெயர்ந்து சென்று, போரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள இராணுவத்திடம் சிக்கி வன்னி முகாம்களில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை அவரவர் சொந்த இடத்துக்கே திருப்பி அனுப்புவதைத்தான் தி.மு.க சுவரொட்டி விடுதலை என்று சொல்கிறது போலும். சரி, இதுவும் ஒரு வகை விடுதலைதான்! சிறையிலிருந்து விடுதலை!

 ஆனால் இந்த விடுதலை எத்தனைப் பேருக்கு? எப்போது? டி.ஆர்.பாலு தலைமையிலான ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இலங்கை சென்று வந்து அறிக்கை அளித்த பின் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு ‡ இலங்கையின் உள்நாட்டு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களில் 58,000 பேர் 15 நாளில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு அவரவர் சொந்த இடத்துக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிபர் இராசபட்சர் தமிழக நா.உ. குழுவிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழக முதல்வர் சொல்வது உண்மையாக இருந்து, இராசபட்சரும் வாக்குத் தவறவில்லை என்றால் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களில் 58,000 பேர் 15 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்பலாம். எஞ்சிய இரண்டு லட்சம் பேருக்கு விடுதலை உண்டா? எப்போது? இது பற்றி நா.உ. குழுவோ முதலமைச்சரோ எதுவும் சொல்லவில்லை.

இன்னும் 15 நாளில் 58 ஆயிரம் பேருக்கு விடுதலை என்பதற்கு இலங்கைத் தமிழர்கள் நான்கே நாட்களில் விடுதலை என்று பொருள் கண்ட புலவர் யாரோ?

சரி, கலைஞர் சொன்னதாவது உண்மையா? ஏடுகளில் வந்துள்ளபடி, நா.உ. குழு அறிக்கையில் அப்படித் திட்டவட்டமாகச் சொல்லப்படவில்லை. அது ஒரு நம்பிக்கையாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இராசபட்சரின் ஊதுகுழலான இந்து மட்டும்தான் கலைஞர் சொன்னது போல் இராசபட்சர் உறுதியளித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது. இதை வைத்து ஆசிரியவுரையும் தீட்டி விட்டது - கலைஞரின் அரசியல் வித்தகத்தைப் போற்றி!

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். கலைஞரின் புளுகும் இந்துவின் புரட்டும் ஒரு நாளைக்குக் கூட தாங்கவில்லை. கொழும்பில் ஒரு பன்னாட்டு மாநாட்டில் பேசும் போது தமிழர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்து மீள்குடியமர்த்தம் செய்வதற்கு நீண்டகாலம் ஆகும் என்று கூறியுள்ளார். கண்ணி வெடிகளை அகற்றுவது எளிதல்ல என்பதே அவர் சொல்லியுள்ள காரணம்.

சிறிலங்காவின் செய்தித் துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன் யாப்பா 58 ஆயிரம் தமிழர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.

வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள முகாம்களிலிருந்து கடந்த சில நாட்களில் விடுதலை செய்யப்பட்ட சில ஆயிரம் தமிழர்களும் யாழ்ப்பாணம் பகுதிக்கே அனுப்பப்பட்டுள்ளார்கள். 1995 முதற்கொண்டு இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வளையங்கள் அமைப்பதற்காக விரட்டியடிக்கப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு பகுதியினர்தான் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள். இவர்களில் யாரும் அண்மையப் போரில் அகதிகளாக்கப்பட்டவர்கள் அல்ல.

முல்லைத் தீவு, கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து அகதிகளாக்கப்பட்டு முகாமில் இருப்பவர்கள் நிலைதான் படுமோசம், படுபயங்கரம். இம்மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். பல குடும்பங்கள் புலிக் குடும்பங்கள் அல்லது மாவீரர் குடும்பங்கள். எனவேதான் இவர்களைத் திட்டமிட்டே துன்புறுத்தி அழித்து வருகிறது இராசபட்சரின் ஆட்சி. இந்த மக்களின் உடனடி விடுதலைதான்.  நம் அவசர கோரிக்கை இந்தக் கோரிக்கையைத் திசை திருப்பவே சிங்கள ஆட்சியாளர்கள் வேறு சில முகாம்களிலிருந்து வேறு சிலரை விடுவித்துப் படம் காட்டுகிறார்கள். இந்தத் திசை திருப்பலுக்குத் தமிழக நா.உ. குழுவின் பயணத்தையும் கருணாநிதியின் இரண்டகக் குணத்தையும் விளம்பர மோகத்தையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

கருணாநிதி தெரிந்தே புளுகக் கூடியவர்தான். சென்ற ஏப்பிரல் 27இல் காலை முதல் நடுப்பகல் வரை 5 மணி நேர சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து அவர் நடத்திய நாடகத்தை மறக்க முடியுமா?

போர் நின்று விட்டது, இது  என் போராட்டத்தின் சாதனை என்றார். போரை நிறுத்தவில்லை, கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதைத்தான் நிறுத்தியுள்ளோம் என்று சிங்கள அரசு அறிவித்தது. ஆனால் அதைக் கூட அவர்கள் செய்யவில்லை. கடைசி மூன்று நாளில் மட்டும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. இனப் படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த போதே, தில்லி சென்று பதவிக்காக சக்கர நாற்காலியில் சுழன்றவர்தான் கருணாநிதி.

முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சிங்கள ஆட்சியாளர்களிடம் கெஞ்சிப் பெறக் கூடியதன்று. அதற்கு வாய்ப்பே இல்லை. சிங்கள அரசையும் அதன் கொலைக் கூட்டாளியான இந்திய அரசையும் உறுதியாக எதிர்த்துப் போராடுவதன் மூலமே தமிழ் மக்களை விடுவிக்க முடியும்.

வேறு குறுக்கு வழி தேடுகிறவர்கள் யாரானாலும் அவர்களின் நோக்கம் ஐயத்திற்குரியதே.

ஏமாற்றுகிறவர்கள் திருந்தப் போவதில்லை, ஏமாறாமலிருக்கத் தமிழர்கள்தாம் கற்றுக் கொள்ள வேண்டும். 

Comments

4 comments

4
Tamil
தமிழக முதல்வர் ஈழத்தமிழருக்காக எதையும் செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் நிச்சயமாக விடுதலைப் புலிகளை விட அதிகமான துரோகம் எதையும் அவர் ஈழத்தமிழருக்குச் செய்துவிடவில்லை. தற்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர் நிலை கல் நெஞ்சையும் கரைக்கும் அளவிற்கு பரிதாபகரமானதுதான். ஆனாலும் இந்த நிலை புலிகளின் 'ஆட்சி'க்காலத்தை விட மோசமாயிருக்கிறதா என்பது சந்தேகம்தான். தாங்கள் ஒளிந்துகொள்ள அரணாக இத்தனை இலட்சம் மக்களையும் எந்த ஈவிரக்கமுமின்றி கடத்தி இழுத்துச்சென்றபோது என்னபாடுபட்டிருப்பார்கள் அவர்கள். பெற்ற பிள்ளைகளை புலிகள் துப்பாக்கி முனையில் இழுத்துச் சென்று குழந்தைப்போராளி ஆக்கியபோது எவ்வளவு பதைபதைத்திருப்பார்கள். தற்போது இராஜபட்சேவிடமிருந்து காப்பாற்றும் முயற்சியிலாவது ஈடுபட முடிகிறது. கொஞ்சம் பேரை வெளிக்கொணர முடிந்திருக்கிறது. புலிகளின் முட்டாள்தனத்தில் மாட்டிக்கொண்ட மக்களை மீள்குடியமர்த்துவது என்ற இமாலய பணியில் இந்திய அரசு முழுமனதோடு ஈடுபட அழுத்தம் கொடுப்பதுதான் இன்றைய அவசிய வேலை. அல்லாமல் நீலிக்கண்ணீர் வடித்து புலிகளுக்கு வால்பிடிப்பது அல்ல செய்யவேண்டியது. அந்த வேலையைச் செய்பவர்களுக்கு ஒத்தாசை செய்யவேண்டாம். பல உள்நோக்கங்களுக்காக பரிதாப நடிப்போடு மூக்கைச் சீந்திக்கொண்டு உள்ளதையும் கெடுக்காமல் இருந்தால் அதுவே ஈழத்தமிழருக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.
gnairu
தமிழ் என்ற பெயரில் ஒழிந்துகொண்டிருக்கும் கோழைக்கு.... துரோகிகள் தங்கள் துரோகத்தை மறைக்க எப்பவுமே நல்லவன் மேல் பழி சொல்லியே தப்பிக்க முனைவார்கள்.... உங்கள் வார்த்தைப்படியே புலிகள் மோசமானவர்கள் என்றால் முகாம் தமிழர்கள் மகிழ்வுடனும் ராஜபக்சேவை பாராட்டியும் அல்லவா கொண்டாடியிருக்க வேண்டும்... தமிழினத் தலைவர் என்ற பட்டம் தனக்கு மட்டுமே உரியது என்று புலிகளை அழிப்பதை வேடிக்கைபார்த்த கருணாநிதி உலகளவில் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தன் பெயர் கேவலப்பட்டுபோய் கிடப்பதை சரிசெய்ய எம்.பி க்கள் பயணம், அகதி முகாம் சீரமைப்பு நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்... மறுபுறம் தன் சந்ததிகள் மட்டுமே அடுத்து ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற நோக்கிலும் காய் ந்கர்த்திக் கொண்டிருக்கிறார்... இதற்காக எவ்வளவு தரம் தாழ்ந்தும் தான் பொய் பேசவும்... தனது திமுக இயக்கம் மூலமாக பொய் பேச வைக்கவும்... அல்லக்கை துதிபாடிகள் மூலமாகவும் தன்னை வாழ்த்திக்கொள்ள துடிக்கிறார்... இதற்காக எத்தனை கோடிகள் யார் யார் மூலமாக உங்களைப்போன்ற இன துரோகிகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளதோ.....மாவீர‌ர்க‌ள் என்றும் ம‌டிவ‌தில்லை.அவ‌ர்க‌ளின் நேர்மையை உங்க‌ளைப்போன்ற‌ க‌ய‌வ‌ர்க‌ளால் ம‌றைத்துவிட‌ முடியாது... உங்க‌ளுக்கு நேர்மை திற‌ன் இருப்பின் க‌ருணாநிதியின் வ‌ர‌லாற்றையும் புலிக‌ள் தோன்ற‌ கார‌ண‌மான‌ நிலையிலிருந்து இன்று வ‌ரையிலான வ‌ர‌லாற்றையும் ப‌டியுங்க‌ள்... தாத்தா கொடுக்கும் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ இல‌வ‌ச‌ டிவிக்கு...பேர‌னின் சும‌ங்க‌லிவிச‌ன் கேபிள் க‌ட்ட‌ண‌ம் வாங்கிப் பிழைக்கும் வ‌ர‌லாறு அங்கு இருக்காது.
Tamil
'gnairu' என்ற பெயருக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கும் 'மாவீரர்' அவர்களுக்கு... புலிகள் மோசமானவர்கள் என்று கூறுபவர்கள் ராஜபட்சேவை பாராட்டியே தீரவேண்டும் என்ற உங்கள் கருத்து உங்களுக்கே வினோதமாகப் படவில்லையா? புலிகளும் ராஜபட்சேவும் தானா இலங்கைப் பிரச்சனை? புலிகளின் 'நேர்மை'யை மறைக்க என்போன்ற 'கயவர்கள்' எதற்கு? சாகும்வரைப் போராடுதல் என்ற உன்னத லட்சியத்தைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துவிட்டு (அதிகாரம் என்று புலிகளின் ஆட்சியைக் கூறுகிறேன்) தன் உயிருக்கு ஆபத்து என்று வந்தவுடன் தலை குப்புற விழுந்து மிஞ்சியிருக்கும் கட்டமைப்பையும் காட்டிக்கொடுக்கும் புனிதப் பணியைச் செய்துகொண்டிருக்கும் யோகி போன்றவர்கள் போதாதா அவ்வேலையைச் செய்வதற்கு? தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் நீங்கள் கூறும் 'நேர்மை'யோடு செயல்படுகிறாரா என்பது புலிகளின் 'நேர்மை'யோடு தொடர்புடையது. மற்றபடி அவரது குடும்பச் (கட்சி உட்பட) செயல்பாடுகளில் மிளிரும் 'நேர்மை' பற்றிய விவாதத்திற்கு நான் வரவில்லை, உங்கள் கருத்துக்களில் சிலவற்றுடன் நானும் உடன்படுகிறேன். நீங்கள் சுட்டிக்காட்டிய வரலாற்றை நான் படிக்க முயற்சி செய்கிறேன். நீங்களும் இலங்கைப் பிரச்சனையை உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் உண்மை வரலாறு தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு படிக்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி 'கோடிகள்' நம்மைப்போன்றவர்களுக்கு அடுத்தவரை அவதூறு செய்யப் பயன்படும் ஆயுதம் மட்டுமே. மீண்டும் சந்திப்போம்.
\சர்வசித்தன்\
கலைஞர் யாருக்காக இந்த வேஷம் போடுகிறார் என்று தெரியவில்லை. நவம்பர் 7 ந் தேதிவரை வவுனியா, மன்னார்,திருககோணமலை ஆகிய மாவட்டங்களில் அகதிகளாகத் தங்கியிருந்த சுமார் 58,000 தமிழர்கள் யாழ்ப்பாணம் கொண்டுசெல்லப்பட்டு அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுல்ளார்கள் என்னும் தகவலை யாழ் அரச அதிபர் வெளியிட்டுள்ளார். இதில் ஒருவர்தானும், ‘வன்னி முட்கம்பி வேலி' முகாமில் இருந்து அழைத்துவரப்படவில்லை. இந்த 58,000 பேரும் கடந்த பத்து வருடங்களாக நடைபெற்ற போரினால் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறிய யாழ்ப்பாண மக்களாவர்.தமிழக ‘தூதுக்குழு' எதனையும் சாதிக்கவில்லை மாறாக இந்திய அரசின் தூண்டுதலால் அது முண்டுகொடுக்கும் சிங்களப் பேரினவாதத் தலைவரது செயல்கள் நியாயமானவை என்று வெளி உலகுக்குச் சொல்லவே பயன்படுத்தப்பட்டது. கலைஞர் நான்கு நாட்களில் விடுதலை பெற்றுத்தந்தது ஒருவேளை மே 14 முதல் 17 வரை கொல்லப்பட்ட 50,000 தமிழுயிர்களாக இருக்கலாம். அதுவும் ஒருவகை விடுதலை (வீடு பேறு) தானே ? பொன்சேகா முன்னர் கூறிய 'தமிழக கோமாளி அரசியல்வாதி' இவர்தானோ !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.