மாதவிலக்கின் போது வயிற்றில் ஏற்படும் வலி 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhea) என்றழைக்கப்படுகிறது. மாதவிலக்கின் போது இடுப்புப் பகுதியின் உட்பக்கம் இரத்த ஓட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். பெண்கள் கர்ப்பமுறாத போது கர்ப்பப் பையின் உட்புறம் உள்ள திசுக்கள் இரத்தம் கலந்து வெளியேறுகிறது. இந்த இயற்கையான நிகழ்வின் போது சில பெண்களுக்கு அடிவயிற்றிலும், தொடைப் பகுதி மற்றும் முதுகின் கீழ்ப் பகுதியிலும் வலி ஏற்படுகிறது. இத்தகைய வலி சாதாரணமாக பலகீனமான பெண்களுக்கும், உடலில் நீர்ச்சத்துக் குறைவினாலும் ஏற்படுகிறது.

மாதவிலக்கின் போது ஏற்படும் வலிக்கு சில எளிய நிவாரண முறைகள்:

உடலில் நீர்ச்சத்துக் குறைவைப் போக்க நிறைய நீர் அருந்த வேண்டும்.

கார்லிக்ஸ்( Horlicks) போன்ற சூடான பானங்கள் 4 அல்லது 5 முறைகள் அருந்துவது நன்மை பயக்கும். இதனால் இடுப்பின் உட்பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து இடுப்புத் தசைகளை இறுக்கமின்றி தளர்வடையச் செய்து வலியைக் குறைக்கிறது.

கேரட், பீட் ரூட் மற்றும் வெள்ளரி ஜூஸ்கள் நீர்ச் சத்து குறைவை ஈடு செய்து இதமளிக்கின்றன.

கை கால்களை நீட்டி மடக்குவது போன்ற எளிய பயிற்சிகள் வலியைக் குறைத்து ஆசுவாசப்படுத்துகிறது.

இஞ்சிக்கு நல்ல மருத்துவ குணமுண்டு. இதை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து, இளஞ்சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும்.

இஞ்சி கலந்த மிட்டாய் சுவைத்தலும், சிறிதளவில் தேனீரும் அருந்தலாம்.

இதமான சூட்டில் வெண்ணீர் நிரம்பிய பையை (Hot water bag) அல்லது வெண்ணீரில் நனைத்துப் பிழிந்த துண்டை அடிவயிற்றில் அவ்வப்போது வைக்கலாம்.

காப்பி மற்றும் வாயு உள்ள குளிர் பானங்கள் வயிற்றிலுள்ள குடல் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்தி வலியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இவைகளை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இரும்புச் சத்து மிகுந்த வைட்டமின் மாத்திரைகள் மற்றும் டானிக் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

மிகவும் தேவையானால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இலகுவான வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளலாம்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It