பல நூற்றாண்டுகளாகப் புற உலகம் மறுக்கப்பட்டு, வீட்டிற்குள் அடிமைகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் பல நூற்றாண்டுகளாகப் புற உலகம் மறுக்கப்பட்டு, வீட்டிற்குள் அடிமைகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் இந்த நூற்றாண்டில்தான் கல்வி கற்கவும், பணிக்குச் செல்லவும் தொடங்கியிருக்கிறார்கள். இந்த உரிமை அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. வரலாற்றில் பல போராட்டங்களாலும், பலருடைய பயன் கருதாத தொண்டாலும் இது நிறைவேறியிருக்கிறது. இந்தியாவைப் பொருத்த வரையில், தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுப் போராட்டத்தால் அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி கற்கும் சமூக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனைப் பல ஆய்வறிஞர்கள் ஆதாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

attack on lady“In fact, we don’t have to cross borders to imagine an environment less crushing of Indian women’s capacities. In the states of southern India, development indices and daily freedoms have long been different from those across the northern states.”

“Incarnations - India in 50 lives”, Sunil Khilnani / Chapter 34, Periyar (Page - 380)

தந்தை பெரியாரைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் சுனில் கில்னனி இவ்வாறு குறிப்பிடுகிறார். வடஇந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலையை ஆய்வு செய்து பார்த்துவிட்டு அதைத் தென்னிந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலையோடு ஒப்பிட்டு அவர்கள் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை மேலே உள்ள வரிகளில் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழ்நாட்டையும் தாண்டி, தென்னிந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலையே பெரியாரின் தாக்கத்தால் முன்னேற்றமடைந்திருக்கிறது என்கிற கருத்தை அவர் தன்னுடைய ஆய்வில் முன்வைக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு சமூகநீதிக் களத்தில் இவ்வளவு பெரிய வரலாற்றுப் பெருமை இருக்கிற போது அதற்குப் பங்கம் விளைவிக்கும் வண்ணம் நடந்தேறும் சம்பவங்களைப் பார்க்கும் போது கலக்கம் தான் ஏற்படுகிறது.

அதுவும் அண்மைக் காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையின் தாக்கமே இன்னும் மக்கள் மத்தியில் ஓயாத நிலையில் மீண்டும் அதே போன்ற நிகழ்வுகள் பெரம்பலூரிலும் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வளவு நடந்தும் அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதிலிருந்து குற்றவாளிகள் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பது உறுதியாய்த் தெரிகிறது.

வரலாறு அறியாதவர்களால் வரலாறு படைக்க முடியாது என்பதைத் தாண்டி, வரலாற்றுக்குக் களங்கம் ஏற்படும் அவலநிலையையும் தமிழ்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த அதிமுக ஆட்சியையும் வரலாற்றில் திராவிடக் கட்சியின் ஆட்சி என்று தானே எழுதப் போகிறார்கள். திராவிட இயக்கக் கொள்கைகளே தெரியாமல் அடிமைகளாகப் பார்ப்பனியத்தால் வளர்க்கப்பட்டவர்கள் அதிமுகவினர். அந்த அடிமைகளில் சிறந்த அடிமைகள் தான் தற்போது அமைச்சர்களாக வலம் வருகிறவர்கள். தாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றாலோ அல்லது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றாலோ சூழல் கருதிச் சில சமயம் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசுவார்கள், பல சமயம் பார்ப்பனியத்திற்கு வெண்சாமரம் வீசுவார்கள்.

பெரும்பாலும் இவர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசுவதெல்லாம் திமுக வோடு போட்டி போடுவதற்கு மட்டுமே. இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் அவலங்களைத் தவிர வேறு என்ன நடக்கும்?

உயர் கல்வி கற்று, நல்லதொரு பணி செய்து கண்ணியத்துடன் வாழ நினைக்கும் பெண்களுக்கு எவ்வளவு இன்னல்களை இந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பு தருகிறது. பெண் வெறும் உடலாக மட்டுமே இன்னும் பார்க்கப்படுகிறாள். சமூகம் இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிற போது அதைக் களைய வேண்டிய மருத்துவரான அரசே கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த நோயைக் களைவதற்கு எங்கு போவது? இந்த அரசை மாற்றுவதைத் தவிர வேறுவழியில்லை.

ஒரு பக்கம் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெண் உடலுக்கு இச்சை கொள்வது, இன்னொரு பக்கம் அதே பெண்ணின் உடலை ஆயுதமாகப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டாதவர்களை மிரட்டுவது. இந்த அவல நிகழ்வுகளைத்தான் இந்த நாடு அண்மைக் காலங்களில் சந்தித்து வருகிறது. பெண்ணின் உடலையே இவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். (எல்லாப் பெண்களின் புகார்களையும் குறிப்பிடவில்லை. இதனை ஆதாயத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.)

இத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு நிகழ்வுகள் அம்பலமாகியிருக்கின்றன. ஆனால் உண்மையில் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெண்ணை அடைய விரும்பியவர்கள் யாரும் இன்னும் அம்பலத்திற்கு வரவில்லை. இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் கையில் இருக்கும் அதிகாரம் என்னும் வாள் அவர்களைப் பாதுகாக்கலாம். ஆனால் ஒரு நாள் அதே வாள் இன்னொரு ஆட்சியாளரின் கைக்கு மாறும் போது இவர்களைப் பதம் பார்க்கும்.

காவல் துறையின் மீதும், மத்தியப் புலனாய்வுத் துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர். சரியான சான்றுகளை, சாட்சிகளை நீதிமன்றத்தில் சேர்ப்பதில்லை. அதனால் இது போன்ற அதிகார மையத்தில் இருப்போர் பலர், குற்றத்தை உறுதிபடுத்தப் போதிய ஆதாரம் இல்லாமல் விடுவிக்கப்படுகின்றனர்.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் மக்கள் அவநம்பிக்கையிலேயே வாழ்க்கையைக் கழிப்பார்கள். பெண்கள் கண்ணியத்தோடு வாழ முடியாது. இந்தச் சமூகமே முன்னேற்றத்தில் பின் தங்கிவிடும்.

Pin It