கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, நிதின் சந்தேசரா என பலரும் இந்தியாவில் நிதிமோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு ஓடி விட்டனர். இவர்களைப் பிடிப்பதற்காக, சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் பின்னாலேயே சென்றுள்ளன.

இந்நிலையில், ஐஎல்எப்எஸ் (Infrastructure Leasing & Financial Services) நிறுவனத்தை 91 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்க விட்ட, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரவி பார்த்தசாரதியும் தற்போது லண்டன் தப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரவி பார்த்தசாரதி மருத்துவச் சிகிச்சைக்குத்தான் வெளிநாடு சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டாலும், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் இந்தியா திரும்புவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

உட்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதிச்சேவை (Infrastructure Leasing & Financial Services) என்ற நிறுவனம் ரூ. 91 ஆயிரம் கோடி கடனில் விடப்பட்டுள்ளது. அதில் ரூ. 57 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு செலுத்த வேண்டியதாகும். இந்த மோசமான நிலைக்குக் காரணம், நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளே என்று கூறப்படும் நிலையில், அவர்கள் நிறுவனத்தை அம்போவென விட்டு விட்டு தப்பினர்.

ஐஎல்எப்எஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ரவி பார்த்தசாரதி, கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ரமேஷ் பாவா, செயல் இயக்குநர்கள் மட்டத்தில் இல்லாத நிர்வாகிகள், வைபவ் கபூர் மற்றும் நான்கு சுய இயக்குநர்களும் இந்த நிறுவனத்திலிருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கலைக்கப்பட்டு அரசு பொறுப்பை எடுத்தது. உதய் கோட்டக், இதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில்தான், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில், மனு ஒன்றைத் தாக்கல் செய்த மத்திய அரசு, ஐஎல்எப்எஸ் நிறுவனம் இவ்வளவு மோசமான நிலைக்கு போனதற்கு அதன் நிர்வாகிகளாக இருந்தவர்களே பொறுப்பு என்று கூறியது. நிறுவனம் மூழ்கப்போகிறது என்று தெரிந்த பிறகு கப்பலில் இருந்து தப்பித்து ஓடுவதை போல தங்கள் பதவிகளை இவர்கள் ராஜினாமா செய்துவிட்டு தப்பியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியது.அத்துடன், நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள், இரவோடு வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதால், அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தது.

முன்னாள் தலைவர் ரவி பார்த்தசாரதி, துணை தலைவரான ஹரி சங்கரன், முன்னாள் மேலாண் இக்குநர் ரமேஷ் பாவா மற்றும் இயக்குநர் ராம்சந்த் ஆகியோருக்கு எதிராகவே இந்த தனித்தனி லுக்-அவுட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டது.ஆனால், இவர்களில் ரவி பார்த்தசாரதி ஏற்கனவே சிகிச்சைக்காக லண்டன் சென்று விட்டார். அவர் மீண்டும் இந்தியா திரும்புவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் விஜய் மல்லையா பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்தில்தான் இருக்கிறார். ரூ. 6,800 கோடி கடன் வாங்கிய- துபாயை மையமாகக் கொண்டு தங்கம் மற்றும் வைர வியாபாரம் செய்து வரும் வின்சம் டைமண்ட்ஸ் அன்ட் ஜூவல்லரி லிமிடெட்டின் உரிமையாளர் ஜதின் மேத்தா, இந்திய குடியுரிமையே வேண்டாம் என்று கூறிவிட்டு, செயிண்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ் நாட்டில் குடும்பத்தோடு குடியுரிமை பெற்றுவிட்டார்.அந்த வகையில், ஐஎல்எப்எஸ் நிறுவன விவகாரம் முடியும்வரை ரவி பார்த்தசாரதியும் இந்தியா திரும்புவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.