1947, ஆகஸ்ட் 15 அன்று ‘சுதந்திரம்’ அறிவிக்கப்பட்டபோது அதைத் துக்க நாள் என்று அறிவித்தார் பெரியார். அதேபோல் அமெரிக்காவில் கறுப்பர் மக்களின் உரிமைக்குப் போராடிய ஃபிரடரிக் டக்ளஸ் 1776இல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றபோது அது கறுப்பர் இன மக்களுக்கு விடுதலை நாள் அல்ல என்று பேசினார். அவரது உரை பிற்காலத்தில் கறுப்பர் இன உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்டது. 1947ஆம் ஆண்டு பெரியார் விடுத்த அறிக்கையையும் பிரடரிக் டக்ளஸ் உரையையும் இளைய சமுதாயத்தின் வரலாற்றுப் புரிதலுக்காக ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.

“பிரிட்டிஷ் - பனியா - பார்ப்பனர் ஒப்பந்த நாள் - பெரியார் அறிக்கை:

ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டு மானால் தன்மானமுள்ள காங்கிரஸ் திராவிடர்கள் அன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏன்? 1929ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த அர்த்தத்தில் தீர்மானிக் கப்பட்டதோ அந்த சுயராஜ்ந்தானா நாளை வரப்போவது? வெள்ளையர் உறவு சிறிதுகூட இல்லாத பூரண இந்தியா முழுவதையும் கொண்ட சுயராஜ்யம் - அதாவது, பூரண சுயேச்சை கேட்கப் பட்டது. அதற்காக அன்றுமுதல் இன்று வரை நமது மக்கள் எவ்வளவு தியாகங்கள் செய்தனர்? குறிப்பாகக் கூறவேண்டு மானால் காங்கிரஸ் திராவிடர் எவ்விதக் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளானோம்? என்னையும் சேர்த்து நம் இனத்துக் குள்ளாகவே எவ்வளவு போராட்டம்; எவ்வளவு பொருளை வாரிக்கொட்டி இருப்போம்! சுயராஜ்யத்தின் பேரால் அவ்விதமெல்லாம் செய்தும் கடைசியாகக் குடியேற்ற நாட்டு அந்தஸ்துதான் கிடைத்தது.

இந்தக் குடியேற்ற நாட்டு அந்தஸ்தை அன்று மிதவாதி கள் என்று கூறப்பட்டவர்களால் கேட்கப்பட்ட போது - அவர்களைப் பிற்போக்காளர், வெள்ளையர் தாசர்கள் என்று கூறி ஒத்துழையாமை செய்து, நாட்டில் பெரிய கலவரங்களி லிருந்து பல எதிர்ப்புகளை உண்டாக்கி, கடைசியாக அதே குடியேற்ற நாட்டு அந்தஸ்தை - அதுவும் முழு இந்தியாவுக்குமின்றி இந்திய உபகண்டத்தின் மூன்றிலொரு பாகமான இந்துஸ்தான் என்ற பகுதிக்கு மட்டும் பெற்று, அதை சுயராஜ்யம் என்று கொண்டாடுவது என்றால் இதைவிட வெட்கக் கேடான முறை வேறு இருக்க முடியுமா?

இந்துஸ்தான் சுயராஜ்யம் என்று நாளை கொண்டாடப் போகும் வட நாட்டு ஏகாதிபத்திய ஆட்சி, பிரிட்டி ஷாருக்கு ஏஜெண்டாக - கையாளாக யிருந்து வெள்ளையருடன் வடநாட்டு பிர்லா, பஜாஜ் கோஷ்டியினர் செய்துள்ள ஒப்பந்த ஆட்சியேயன்றி, சுய ஆட்சி என்று எந்தக் காங்கிரஸ் அரசியல் நிபுணராகிலும் கூற முடியுமா?

வேண்டுமானால், வடநாட்டுக்காரர் களுக்கு இன்னும் அதிகமாக நம் மாகாணத்தின் பொருளாதாரத்தைச் சுரண்ட அதிகாரம் இந்த சுயராஜ்யத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறதற்கு அவர்களுக்குக் கொண்டாட்டம் ஏற்படலாமே தவிர, மான முள்ள திராவிடன் இனி திண்டாட வேண்டித்தானே இருக்கப் போகிறது? ஆகஸ்ட் சுயராஜ்யம் அநீதிக்கு அடிப்படையானதே தவிர, நம் நாட்டு மக்களின் நேர்மையான உண்மைச் சுதந்திர வாழ்வுக்கு ஏற்றதல்ல.

இந்த இந்திய உபகண்டத்தின் மற்ற மாகாணங்களை விட நம் மாகாணமே எல்லா வளப்பத்திலும், அறிவிலும் முதன்மையானதென்பது உலகறிந்த சரித்திரச் சான்றாகயிருக்கும். நமக்குள் இன ஒற்றுமையில்லாததாலேயே மற்ற மாகாணத்தவர்களுக்கு, குறிப்பாக வட நாட்டுக்காரர்களுக்கு நாம் தாசானு தாசனாய் இருந்து வருகிறோம்.

இந்துஸ்தான் சுயராஜ்ய மாகாணங்களில் இனி கவர்னராக இருப்பவர்கள் சாதாரண கலெக்டர் களுக்குள்ள அதிகாரங்கள்கூட இன்றி, வடநாட்டுத் தாக்கீதுக்கு அடிபணிந்து இருக்க வேண்டுவதோடல்லாமல், வேறு ஏதாவது உண்டா என்று கேட்கிறேன். கவர்னர்களின் கதியே இவ்வாறென்றால், மந்திரிகளைப் பற்றிக் கூறவேண்டுவ தில்லை. ‘அட்வைசரி’ சர்க்காரிலாவது மந்திரிகளுக்குச் சிறிது அதிகாரம் இருந்தது. ஆகஸ்டு சுயராஜ்யத்தில் -பஞ்சாயத்து போர்ட்டு மெம்பர்களுக் கிருக்கும் அந்தஸ்தைவிடக் குறைவான தென்றே கூறலாம் - மாகாண மந்திரி களுக்குக் கொடுத்துள்ள அந்தஸ்து.

இந்த இலட்சணத்தில் கொண் டாட்டமாம்! காங்கிரஸ் ஆரியன்தான் கொண்டாடுகிறான் என்றால் காங்கிரஸ் திராவிடனுக்கு ரோஷம் இருக்க வேண்டாமா? ஏன், நமது தோழர்கள் அவினாசியோ, பக்தவத்சலமோ, சிவ சண்முகமோ, ஆகஸ்டு சுயராஜ்ய ஜனாதிபதியாக, பிரதமராக இருக்க இலாயக்கில்லையா? வடநாட்டான் தேசபக்திதான் அசல் தேசபக்தி; மற்றவர் களுடையது போலியா? இவ்விதப் பித்த லாட்டங்களையெல்லாம் தகர்த்தெறி யாமல் வெத்துவேட்டு சுயராஜ்யத்தில் எத்தனை நாளைக்கு மானத்துடன் வாழ முடியும்?

எனவே, தோழர்களே! வடநாட்டுப் பாசிச ஆட்சியை அறவே அழித்த, நம் மாகாணத்துக்கு - திராவிட நாட்டுக்குப் பூரண சுதந்தரம் கொண்ட விடுதலை யடைய வேண்டுமென்ற போராட்டம் எளிதில் கைகூடுமென்று நாம் நம்ப முடிய வில்லை. காங்கிரசின் போக்கே குண்டாந்தடி ஆட்சியாக இருந்து வருகிறது. மக்களைத்துன்புறுத்துவதே அகிம்சா மூர்த்தியின் அருளைப் பெற்ற சீடர்களின் சுயராஜ்யத்தின் அடிப் படையாக இருந்து வருகிறது. தொழிலாளர்களைத் துன்புறுத்துவதே இன்றைய பட்டேலின் பாசிச வெறியாகக் காட்சியளிக்கிறது. நம் நாட்டை நாம் ஆள வேண்டும். மற்ற நாட்டினரின் பொதுவான விவகாரங்களில் நட்புக் கொண்டு வாழ்வதே மானமுள்ள வாழ்வு என்றால், அதை எதிர்க்கும் துரோகிகளின்-பட்டம், பதவிக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும், வடநாட்டவர்களின் ஆதிக்கச் சுரண்டலுக்குத் துதிபாடும் நமது விபீஷணர்களின் போக்கு ஆகியவற்றிற் கிடையே நாம் போராட வேண்டியிருக் கிறது.

எதிர்காலத்தில் இந்துஸ்தானத்தில், குறிப்பாக நம் நாட்டில் ‘நவகாளி’கள் தோன்றுவதில் ஆச்சரியப்படுவதற் கில்லை. நம்மை அவ்வளவு நாசப் படுத்தவே வடநாட்டு ஏகாதிபத்தியம் தயார் செய்து கொண்டிருக்கிறது, சுயராஜ்யம் என்ற பேரால்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவ்வளவு எதிர்ப்புகளையும் அநீதி களையும் சகித்து வென்று, நம் திராவிடத்தின் சுதந்தரத்தை நிலை நாட்டியே தீருவோம். எனவே, அதற் கேற்ப, இளைஞர்களே! திராவிட இனத்தவர்களான தொழிலாளர்களே! விவசாயிகளே! மாணவர்களே! அறிஞர்களே! உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். திராவிடத்திலும் ‘நவகாளி’கள் தோன்றினால் அதற்கு நாம் அல்ல பொறுப்பு; இந்நாட்டு ஆரியர்கள் தாம் என்பதை எதிர்காலம் கூறும். அந்த நிலையிலிருந்து பழிச்சொல் ஏற்படா வண்ணம், இனியாவது, ஆரியம் வட நாட்டு ஆதிக்கத்துக்குத் தரகராயிருந்து நமது திராவிடத்திற்குத் துரோகம் செய்ய வேண்டாமென்று எச்சரிக்கை செய் கிறேன்.

நாட்டை ஆண்டதாக சரித்திரச் சான்றுகளில் தனது இனத்தைப் பற்றி இதுவரை பொறிக்கப்படும்படியான நிலையில்லாதிருந்து வரும் ஆரியம் - நாட்டைப் பிறர்க்குக் காட்டிக் கொடுக்கும் இனம் என்பதையாவது திராவிட நாடு பிரிவினை விஷயத்திலாகிலும், பிற்காலத்தில் எழுதும்படியான நிலை யைத் தேடிக் கொள்ள வேண்டாமென்று எச்சரிக்கை செய்கிறேன். இதனால் - திராவிடத்தால் ஆரியத்துக்குத்தான் முழுதும் அழிவு ஏற்படும் என்பதை ஆரியம் உணரட்டும்.

எனவே, காந்தியாரல்லர், அவர்தம் சீட கோடிகளல்லர், அல்லது அந்தராத்மா அல்ல, யார் எதிர்த்தாலும், திராவிட நாட்டை அடைந்தே தீருவோம் நாம்! அதற்குப் பல தொல்லைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் - சலிப்படையாதீர்! மானமில்லாது வாழ்வது வாழ்வல்ல. திராவிடன் மானமுள்ளவன் என்பது சரித்திரச் சான்று. அதற்கேற்ப அவன் இனி எந்த நாட்டவனுக்கும், எக்காரணத்தை முன்னிட்டும் அடிமையாயிரான் என்பது உறுதி.

(விடுதலை, 27.7.1947: ஈ,வெ.ரா.சிந்தனைகள், 684-686, முதல் பதிப்பு 1974)

டக்ளசின் முழக்கம்

frederick douglesமுறையான கல்வி பெறாத போதிலும் அமெரிக்கா முழுவதும் பயணித்துத் தன்னுடைய உரைவீச்சுகளால் அமெரிக்காவில் நிலவிவந்த அடிமை முறைக்கு எதிராக வலுவான குரல் எழுப்பியவர் ஃபிரெட்ரிக் டக்ளஸ் (Frederick Douglas).

கறுப்பின மக்கள் வரலாற்றில், அடிமை முறை ஒழிப்பில் ஃபிரெட்ரிக் டக்ளஸின் பங்களிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அங்கீகரித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து 1776இல் அமெரிக்கா விடுதலை பெற்றது. அதன் பின்னர் ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திரத் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், கறுப்பின அமெரிக்கர் களுக்கு அது விடுதலை நாள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி 1852 ஜூலை 5ஆம் தேதியன்று, நியூயார்க் நகரத்தில் ‘The Meaning of July Fourth for the Negro’’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை வெள்ளை அமெரிக்கர்களின் மன சாட்சியை உலுக்கியது. கறுப்பினத்தவரின் அடிமைத்தளை நொறுங்கி ஒரு புதிய அமெரிக்கா பிறக்க வழிகோலியது. அந்த உரையின் சுருக்கம் இதோ…

எனது சக குடிமக்களே! எதற்காக என்னை இன்று பேசுவதற்காக அழைத்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பிக் கொள்வதற்கு என்னை அனுமதியுங்கள். உங்களுடைய தேச சுதந்திரத் துக்கும் எனக்கும் அல்லது நான் பிரதிநிதிப் படுத்துபவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? சுதந்திரப் பிரகடனத்தின் அங்கங் களாக இருக்கும் மகத்தான கொள்கைகளான அரசியல் விடுதலையும் இயற்கை நீதியும் எங்களுக்கும் நீட்டிக்கப்பட் டிருக்கிறதா?

மகத்தான இந்த விடுதலை நாளின் நிழலில் கூட நான் இல்லை. உங்களது உச்சபட்சமான சுதந்திரம் நமக்கிடையில் இருக்கும் கணக்கிட முடியாத தூரத்தைத்தான் காட்டுகிறது. உங்களுடைய தந்தைமார்களின் பரம்பரைச் சொத்தான நீதி, சுதந்திரம், வளம், விடுதலை ஆகியவற்றை நீங்களே பங்கு போட்டுக் கொள்கிறீர்கள். அது எங்களுடையதாகவே யில்லை. இந்த ஜூலை நான்கு உங்களுடையது, என்னுடையது அல்ல. நான் பேசிக் கொண் டிருப்பது அமெரிக்க அடிமைமுறையைப் பற்றித்தான் அன்பர்களே! இது அமெரிக்கா சுமந்துகொண்டிருக்கும் பாவமாகும்; அவமான மாகும். நான் சுற்றி வளைத்துப் பேசப் போவதில்லை.

வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கறுப்பின மக்கள் அறிந்தோ அறியாமலோ) இழைக்கக்கூடிய 72 விதமான குற்றங்களுக்கு இங்கே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதுவே வெள்ளைக்காரராக இருந்தால் இரண்டு விதமான குற்றங்களுக்குத்தான் அதே தண்டனை என்ற சட்டம் பிறப்பிக்கப்பட் டிருக்கிறது. ஒரு அடிமைதான் ஒழுக்கம், அறிவு, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றுச் சொல்ல வருகிறீர்களா? தெற்கு மாகாணச் சட்டங்களில், அடிமைகளுக்குப் படிப்பு, எழுத்து கற்பிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதங்களும் தண்டனைகளும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

 உங்கள் தெருவில் உள்ள நாய்கள், வானில் பறக்கும் பறவைகள், மலைகளில் உள்ள கால்நடைகள், கடலில் உள்ள மீன்கள் ஆகியவை எப்போது விலங்குகளும் மனிதர்களுக்குச் சமமாக நடத்தப்படுவதாக உணரத் தொடங்கு கின்றனவோ, அப்போதுதான் அடிமை என்பவனும் மனிதனாகவே இங்குக் கருதப்படு கிறான் என்று நான் வாதிடுவேன்.

நாங்கள் நிலத்தை உழும்போது, பயிரிடும் போது, மகசூல் காணும்போது, இயந்திரங் களைப் பயன்படுத்தி வீடு கட்டும்போது, கட்டிடங்களைக் கட்டியெழுப்பும்போது, கப்பல்களைத் தயாரிக்கும்போது, படிக்க, எழுத, மதிநுட்பமான வேலைகளைக் கற்றுக்கொண்டு குமாஸ்தாவாக, வியாபாரியாக, அலுவலகத்தில் உதவியாளராகச் செயல்படும் நிலையில், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்களாக எங்கள் மக்கள் உருவாகி வருவதைப் பார்த்த பிறகும் உங்களுக்கு நாங்கள் சம மனிதர்கள்தான் என்று நிரூபிக்க வேண்டுமா என்ன?

சுதந்திரமாக இருக்க மனிதனுக்கு உரிமை உள்ளது. தன்னுடைய உடலின் மீது அவனுக்கு உடைமை உள்ளது என்றெல்லாம் நான் வாதாட வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? ஆனால், அவற்றை நீங்கள்தான் ஏற்கெனவே பிரகடனப்படுத்தி விட்டீர்களே! அடிமை முறை கொடுமையானது என்று நான் வாதாட வேண்டுமா என்ன? குடியரசு பெற்றவர்களுக்கா இந்தக் கேள்வி? அப்படி நான் விளக்க நேரிட்டால், அது என்னை நானே கேலி செய்வதாகிவிடும். உங்களையும் அவமானப் படுத்தும். அடிமைத்தளை தவறு என்று அறியாத மனிதன் இருக்க வாய்ப்பில்லை.

அப்படியிருக்க, மனிதர்களை மூர்க்கமாக நடத்துவதற்கோ, அவர்களுடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கோ, உழைப்புக்கான கூலியைத் தர மறுப்பதோ, அடித்துத் துன்புறுத்துவதோ, இரும்புச் சங்கிலியால் கை, கால்களைக் கட்டி இழுப்பதோ, பட்டினிபோட்டு அவர்களுடைய எஜமானருக்கும் முன்பாக மண்டியிட நிர்ப்பந்திப்பதோ தவறென்று நான் வாதாட வேண்டுமா என்ன? நான் அதைச் செய்யப் போவதில்லை. அதைவிடவும் முக்கியமான பணிகளும் அதற்கும் அதிகமான தர்க்கத் திறனும் எனக்கு இருக்கிறது.

ஒரு அமெரிக்க அடிமைக்கு ஜூலை 4 என்பது என்ன? நான் சொல்கிறேன்: அநீதி, குரூரங்களுக்குதான் தொடர் பலியாடு என்ற கொடுமையை நினைவுகூரும் நாள் இது. இத்தனை காலம் இழைக்கப்பட்ட கொடூரங் களையும் மெல்லிய முக்காடு போட்டு மூடி மறைக்கும் தினம். (பிரெட்ரிக் டக்ளஸ்)

இத்தனை கறை படிந்துபோன நிலையை விவரித்தாலும் இந்தத் தேசத்தினால் நான் விரக்தி அடையவில்லை. அடிமைத்தளையை முறியடிக்கக்கூடிய சக்திகள் ஒன்றிணைந்தால் விடுதலை சாத்தியமே. ஆக, நான் எங்குத் தொடங்கினேனோ அங்கிருந்தே நம்பிக்கை யோடு விடைபெறுகிறேன். அமெரிக்காவின் விடுதலைப் பிரகடனத்தில் இருந்தே எனக்கான நம்பிக்கை ஒளிக் கீற்றைக் கண்டெடுத்துக் கொள்கிறேன்.

1845-ல் ‘Narrative of the Life of Frederick Douglass, an American Slave’ என்ற தலைப்பில் தன்னுடைய முதல் சுயசரிதையை எழுதினார் டக்ளஸ். இதில் அமெரிக்காவின் அடிமைகளின் மாகாணமாக நிந்திக்கப்பட்ட மேரிலாண்டில் தான் அனுபவித்த கொடுமைகளைச் சித்தரித்தார். இந்தப் புத்தகம் உட்பட மொத்தம் 5 சுயசரிதைகளை அவர் எழுதி இருக்கிறார். பெண்களின் வாக்குரிமைக்கு உரிமைக் குரல் எழுப்பிய குடியுரிமைப் போராளி அவர். டக்ளஸிடம் இருந்து உத்வேகம் பெற்றுத் தான் 1960களில் அமெரிக்காவில் சிவில் உரிமைகள் இயக்கம் பிறந்தது.

Pin It