black lives matterஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை ஒரு பெரும் காட்டுத் தீயாய் உலகமெங்கும் பற்றிப் பரவி வருகின்றது. உலகெங்கும் 2000க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இலண்டன், பெர்லின், ரோம், வியன்னா, பாரீஸ் போன்ற இடங்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், துனிசியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்றவற்றிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதே கொலை நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்திருந்தால் நிச்சயம் இவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்காது. காரணம் அமெரிக்காவில் போலீசாரால் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. இந்த ஆண்டு காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 429 பேரில் 170க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளையர்கள் என்றும், 88 பேர் கருப்பர்கள் என்றும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இனி சகிக்கவே முடியாது என்ற நெருக்கடிக்கு உள்ளாகும் போதும், இனி தம்மால் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவே முடியாது என்ற நிலை ஏற்படும் போதுதான் மக்கள் போராட்டத்தில், புரட்சியில் இறங்குகின்றார்கள்.

இன்று உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக லட்சக்கணக்கான உயிரிழப்புகளும், வேலையிழப்புகளும் ஏற்பட்டு, முதலாளித்துவ அரசுகளால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உணவு கொடுக்கக்கூட துப்பற்ற நிலையில் உலக முதலாளித்துவ அரசுகள் உள்ளன. இதற்காக அரசிடம் பணம் இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. நாட்டின் வளங்கள் எல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்ரேட்டுகளின் கைகளில் குவிந்து கிடக்கின்றது. ஆனால் அதைக் கைப்பற்றி மக்களுக்கு வழங்கும் இடத்தில் அரசுகள் இல்லை என்பதுதான் நிலை. இதுதான் உலகம் முழுவதும் சாமானிய உழைக்கும் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தைத் தூண்டி விட்டிருக்கின்றது. அந்தக் கோபம் தன்னை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்திக் கொள்ள வழியைத் தேடிக் கொண்டு இருந்தது. ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இப்படியான ஒரு நிலை தனக்கு நிச்சயம் ஏற்படும் என அமெரிக்க முதலாளித்துவம் அஞ்சித்தான் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்த குறிப்பாக பெரும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் ஆப்ரிக்க அமெரிக்க மக்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சமூக அடுக்கில் மேல்நிலைக்குக் கொண்டு வந்திருந்தது. ஒபாமாவை அதிபராக்கியதோடு, கருப்பினத்தைச் சேர்ந்தவர்களை பெரு நிறுவனங்களில் உயர் பதவிகளிலும், அமெரிக்க காவல்துறை, இராணுவம், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியது.

தற்போது இந்த வர்க்கம் தான் கருப்பின மக்களின் போராட்டங்களை சீர்குலைக்கும் உள்ளடி வேலைகளைஒ பார்த்து வருகின்றது. நாம் நினைப்பது போல அனைத்து கறுப்பின மக்களும் இன்று வெள்ளையின மக்களுடனோ, இல்லை அனைத்து வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களுடனோ இணைந்து, தோல்வியடைந்த அமெரிக்க அரசிற்கு எதிரான போராட்டத்தை இன்று முன்னெடுக்கவில்லை. இரண்டு தரப்பிலும் உள்ள சாமானிய உழைக்கும் மக்கள்தான் இந்தப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கிடையில் வர்க்க வேறுபாடானது மிகப் பெரிய அளவிற்கு உள்ளது. 2017 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் தொகையில் மேல்மட்ட 10 சதவிகிதத்தினர் அனைத்து செல்வங்களிலும் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானதைக் கட்டுப்படுத்துகின்றனர். அதே நேரத்தில் ஆப்ரிக்க அமெரிக்கர்களில் கீழ்மட்ட 50 சதவிகிதத்தினர் எதிர்மறையான அல்லது எவ்வித செல்வத்தையும் கொண்டிருக்கவில்லை. கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமாவின் காலத்தில்தான் இந்தச் சமத்துவமின்மை மிகவும் விரைவாக உயர்ந்து, ஆப்ரிக்க அமெரிக்கர்களில் மேல்மட்ட 1 சதவிகிதத்தினர் தங்கள் செல்வத்தின் பங்கை 19.4 இருந்து 40.5 விகிதமாக இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதுதான் முதலாளி வர்க்கத்தின் முதன்மையான செயல்திட்டமாகும். அதற்காக அவை பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. சாதி, மத, இன வேறுபாடுகளைத் தூண்டி விடுவதோடு, ஒடுக்கப்படும் சமூக அடுக்கில் இருந்து சில குறிப்பிட்ட நபர்களுக்கு உயர்பதவிகளைத் தருவதன் மூலம் அந்த ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும், கருத்தியல் மேலாதிக்கம் செய்வதோடு கீழ்நிலையில் இருந்து உயர் அடுக்கிற்கு நகர்த்தப்பட்ட வர்க்கத்தின் மூலம் ஒடுக்குமுறையின் கொடூரத் தன்மையை மறைக்கவும் அது முயன்று வருகின்றது.

ஆனால் நிலைமை எப்போதும் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. பூசி மொழுக முடியாத நெருக்கடியை தற்போது முதலாளித்துவம் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தந்திருக்கின்றது. தாங்கள் வேலையின்றி உணவின்றி அல்லல்படும்போதுகூட அமெரிக்க முதலாளி வர்க்கம் இன்னும் கொடூரமாக சொத்து சேர்ப்பதை சாமானிய மக்கள் பார்த்துக் கொண்டுதான் வருகின்றார்கள்.

கடந்த மார்ச் மாத மத்தியில் இருந்து, அமெரிக்காவில் பில்லியனர்கள், அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 434 பில்லியன் டாலரை சேர்த்துக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 630 செல்வந்த அமெரிக்கர்கள் இப்போது 3.4 ட்ரில்லியன் டாலர் செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். இது இரண்டு மாதங்களில் 15 சதவீத அதிகரிப்பாகும். அதே போல மார்ச் 23க்குப் பின்னர் டோவ் குறியீடு 48 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் குறியீடு 45 சதவீதம் உயர்ந்துள்ளது. அது இப்போது இந்தாண்டு தொடக்கத்தில் இருந்ததை விட 1000 புள்ளிகள் அதிகமாக உள்ளது.(நன்றி: WSWS).

உண்மைப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்க பொருளாதாரத்தில் எந்தப் பங்களிப்பையும் செலுத்தாத பங்குச் சந்தை சார்ந்த சூதாட்டப் பொருளாதாரம் பெரும் ஏற்ற நிலையில் உள்ளது. ஆனால் பங்குச் சந்தை உயர்வும் அதன் மூலம் வர்த்தக சூதாடிகள் தங்களின் சொத்து மதிப்பை உயர்த்திக் கொள்வதும் எந்த வகையிலும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவாது என்பதைத்தான் இன்று உலகம் முழுவதும் நடைபெற்று வரும் அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் காட்டுகின்றன.

இன்னும் வரும் காலங்கள் மிக மோசமான போராட்டத்தை நோக்கி உலக மக்களை தள்ளப் போகின்றன என்பதுதான் உண்மை. ஐந்து மிகப் பெரிய ஐரோப்பிய பொருளாதாரங்களான பிரிட்டன் 14 சதவீதம், ஸ்பெயின் 11.6 சதவீதம், பிரான்ஸ் 10.3 சதவீதம், இத்தாலி 9.2 சதவீதம் மற்றும் ஜெர்மனி 6.1 சதவீத சுருக்கத்தை சந்திக்கும் என மதிப்பிடப்படுகின்றன. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இந்தாண்டு 5.2 சதவீதம் சுருங்குமென உலக வங்கி முன்கணித்திருக்கின்றது.

இதனால் இப்போது நடக்கும் போராட்டங்கள் என்பது மிகப் பெரிய பனிப்பாறையின் நுனி மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் தொழிலாளி வர்க்கம் உலகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் அதன் சொந்த நாடுகளிலேயே கருக்கொண்டுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப் பெற்ற நாடுகளில் தங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மயான அமைதி நிலவும் சூழ்நிலையில், அமெரிக்க, ஐரோப்பா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பிற நாடுகளைக் கொள்ளையிடவும், சூறையாடவும் தன்னுடைய நாட்டு மக்களிடம் ஒப்புதல் பெற, தான் சுரண்டும் நாடுகளின் மக்களின் வாழ்க்கைத் தரத்தைவிட ஒரு மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை தன் சொந்த நாட்டு மக்களுக்கு வழக்கமாக ஏகாதிபத்திய நாடுகள் வழங்கி வந்தன. ஆனால் அடுத்தவன் ரத்தத்தில் ஒட்டுண்ணியாக வளரும் முதலாளித்துவம் இன்று தன் சொந்த நாட்டு மக்களைக் கூட காப்பாற்ற முடியாத மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

அது நினைத்தால் ஒரே நாளில் இதை எல்லாம் மாற்றி அமைக்க முடியும். பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அனைத்து மக்களையும் காப்பாற்ற முடியும். ஆனால் அது ஒரு போதும் செய்யாது. அரசு என்பது முதலாளிகளால் முதலாளிகளுக்காக ஆளப்படும் வரை இந்த நிலையில் ஒரு போதும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. அதே போல இன்று பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் மக்களும் தங்களின் போராட்டத்தை கைவிடுவதற்கான எந்தச் சூழ்நிலையும் தற்போதைக்கு இல்லை. ஏகாதிபத்திய நாடுகளின் மக்கள் இன்று அரசியல் விழிப்புணர்வு பெற்று தங்களின் பொது எதிரிக்கு எதிராக ஓரணியில் திரண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்தப் போராட்டங்கள் எல்லாம் பெரும்பாலும் தன்னெழுச்சியாக நடைபெறும் போராட்டங்களாகவே இருக்கின்றன என்பதுதான் அதன் மிகப்பெரிய பலவீனமாகும். மிகப் பெரும் இராணுவ பலம் பொருந்திய ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் நிச்சயம் அந்தப் போராட்டங்கள் அனைத்தும் முதலாளித்துவத்திற்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்ட பொதுவுடைமைக் கட்சிகளால் தலைமை அளிக்கப்பட வேண்டும். சித்தாந்த ரீதியான தலைமை இல்லாத, ஒருங்கிணைக்கப்படாத போராட்டங்கள் எல்லாம் நிச்சயம் தோற்றுப் போகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஏகாதிபத்திய நாடுகளில் மையம் கொண்டுள்ள இந்தப் போராட்டங்கள் நிச்சயம் வளர்த்தெடுக்கப்பட்டு முதலாளித்துவத்தை சவக் குழிக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இது ஏகாதிபத்திய நாடுகளில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகக் கட்டமைப்பையே மாற்றி அமைக்கும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாக நிச்சயம் பரிணாம வளர்ச்சி அடையும்.

பழைய படி உலகை ஆட்சி செய்ய முடியாது என்ற நிலையை உலகம் முழுவதும் முதலாளித்துவமும் அதன் அரசுகளும் வந்தடைந்திருக்கின்றன. இதில் முதலில் முந்திக் கொள்ளும் வர்க்கம் நிச்சயம் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். முதலாளித்துவம் ஏற்கெனவே மக்களின் போராட்டங்களைக் கண்டு மரண பீதியில் உறைந்திருப்பதால் அதைத் தாக்கி வீழ்த்துவதற்கான சரியான நேரம் இதுவே ஆகும்.

- செ.கார்கி

Pin It