படிப்பின் யோக்கியதைப் பற்றியும், பரிட்சையின் இரகசியங்கள் பற்றியும் நான் 1930க்கு முன்பாகவே ‘குடிஅரசு’ இதழில் எழுதி வந்திருக்கிறேன்.

ஆட்சி பார்ப்பனருடையதாகவும், பார்ப்பனர் ஆதிக்கத்தில் உள்ளதாகவும், அதனால் பார்ப்பனரே பயன் அனுபவிப்பவராகவும் இருந்து வந்தால் அது இதுவரை கவனிக்கப்படாமலே இருந்து வந்தது. அந்த இரகசிய முறையை இன்று எல்லா மக்களுமே பின்பற்ற ஆரம்பித்து விட்டதால், இன்று அதை மாற்றவேண்டியது அவசியமாகிவிட்டது.

இன்றும்கூட பரிட்சைத் தாள்களைத் திருத்துவது பற்றிய இரகசியம்தான் திருத்தப்படலாமே ஒழிய, பரிட்சைத் தாள்கள் அச்சடிப்பதிலுள்ள இரகசியம், பரிட்சை கேள்விகளைத் தயாரிப்பதில் உள்ள இரகசியம் முதலியவற்றை எப்படித் திருத்த முடியும்? என்பது நமக்குப் புரியவில்லை.

முதலாவது கல்வியில் மார்க்கு எண்களைப் பார்த்துத் தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும், மிகப்பெரிய அயோக்கியத்தனமுமேயாகும். இது சம்பந்தமான நிருவாகிகளுக்கு வெட்கம், சற்றும் இல்லாததாலும், சிலருடைய அடிமைப் புத்தியாலும், தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் இந்த முறை பயன்படவேண்டியதாலும், இதில் இன்னமும் பார்ப்பனர் ஆதிக்கம் இருப்பதாலும் மார்க்கின் மீது “தகுதி திறமை” வகுக்கும் அக்கிரமமும், அயோக்கியத்தனமும் நிகழ்ந்து வருகிறது.

மார்க்கினால் கெட்டிக்காரத்தனம், சோம்பேறித்தனம் கண்டுபிடிக்க முடியாது என்பது மாத்திர மல்லாமல், யோக்கியன் அயோக்கியன் என்பதையும், அறிவாளி மடையன் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதைக் கடுகளவு அறிவு உள்ளவனும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம் என்பதோடு, இது மாபெரும் அனுபவ முடிவு என்பதையும் வலியுறுத்திக் கூறுவேன்.

மற்றும் இன்றைய அரசாங்கம் இந்த முறையையாவது யோக்கியமாய்ப் பின்பற்றுகிறதா என்றால்,அதுவும் இல்லை என்றே சொல்லுவேன். நீதியாவது இதற்கு இடம்கொடுக்கிறதா என்றால் அதுவும் சாதிப்பற்றுக் கண்ணால்தான், சுயநல வளர்ச்சிக் கண்ணால்தான் நீதி கண்டுபிடிக்கப்படுவதால் அதுவும் பயன்படாமல் போகிறது. சட்டம் செய்வதும் கடைந்தெடுத்த வகுப்புணர்ச்சியுள்ள யோக்கியமற்றவர் களால் பெரிதும் செய்யப்படுகிறபடியால் அதுவும் மோசடியாகவே அமைந்து விடுகிறது.

இவ்வளவு தவறான “பாபமான” காரியங்கள் அவ்வளவும், நமது நாட்டில் ஆதிக்கம் பெறக் காரணம் சாதி அமைப்பு. அதுவும் ஒரு சிலரே “மேல்ஜாதி”களாகவும், வெகுபேர்கள் “கீழ்ஜாதி”யாகவும் மிக மிக அயோக்கியத்தனமான மதம், கடவுள், சாத்திரத் தருமங்களால் கற்பிக்கப்பட்டு விட்டபடியால், அந்த ஒரு சில மேல்சாதிகளும் மிகச் சுருங்கிய எண்ணிக்கையுள்ளவர்கள் ஆதலால் அக்கிரம வாழ்வு வாழ இந்த அயோக்கியத்தனங்களை, பாதகங்களை 105 டிகிரி வெயிலில் அய்ஸ் கிரீம் சாப்பிடுவது போல் செய்ய வேண்டியதாகிவிட்டது. அதிலும் மேல்ஜாதி அனுபவிப்புக்கு மானம், வெட்கம், யோக்கியம் ஆகியவை தேவை இல்லை. ஆதலால் நாட்டில் இவை சாதாரணமாய்ப் பரவ நேரிட்டுவிட்டது.

முதலாவது, பரிட்சை நற்சாட்சிப் பத்திரத்தில் மார்க்குப் போடுவதே பெரிதும் அயோக்கியத் தனத்திற்காகத்தான் என்று சொல்லுவேன். உலகில் அனேக முக்கியப் பரிட்சைகளுக்குக்கூட “பாஸ்”, “ஃபெயில்”தான் போடப்படுகிறதே ஒழிய, மார்க்கு போடப் படுவதில்லை. மற்றும் அனேக அறிவைப் பொறுத்த காரியங்களுக்கு மாணவர்கள் பள்ளியின் பாட நடப்புகளை ஒழுங்காய்க் கவனித்து வந்தானா என்று பார்த்து திருத்தி, தகுதி ஆக்கப்பட்டுவிடுகிறார்களே ஒழிய உட்கார வைத்து பரிட்சை பார்ப்பதில்லை.

இன்றும் அனேகக் காரியங்கள் அப்படியே நடைபெற்று வருகின்றன. எல்லாத் தொல்லைகளும், அயோக்கியத்தனமான காரியங்களும் மேல் ஜாதியார் என்று சொல்லப்பட்ட பிறவிச் சோம்பேறி, பிறவி வஞ்சகக் கூட்டம் சம்பந்தப்பட்ட காரியங்களின் “பரிட்சை” காரியங்களில்தான் கொலைபாதகங்கள் போல் நடைபெற்று வருகின்றன. மார்க்கு என்பது 100க்கு 99 பாகம் வெறும் ஞாபகசக்தியை அடிப்படையாய்க் கொண்டதாகும்.

அதிக மார்க்கு வாங்கியதால் மெடிக்கல் காலேஜ் வகுப்புக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரு மாணவன் டாக்டர் பரிட்சையில் தேறுவதற்கு அவனது படிப்பில் இந்த மார்க்குகள் வாங்கிய தன்மை எதற்குப் பயன்படக்கூடும்? வியாதிகளைக் கண்டுபிடிக்க, நாடிகளை அறிய, ரண சிகிச்சை செய்ய, மருந்துகளைத் தெரிந்தெடுக்க, நுட்பங்களை உணர, நோயாளியின் மனோபாவத்தைப் புரிந்துகொள்ள, மற்றும் பல விஷயங்களில் 100க்கு 60, 70 மார்க்கு வாங்கியது அந்த மாணவனுக்குப் பயன்படுமா? என்று கேட்கிறேன்.

சட்டத்தில் முதல்தரமாகத் தேறிய வக்கீல்கள் பலர் சோற்றுக்குத் திண்டாடுகிறார்கள்! பரிட்சகர் தயவில் அதுவும் 3ஆவது வகுப்பில் பாஸ் செய்த வக்கீல்கள் மாதம் ரூ.1000-5000 என்று கொள்ளை அடிக்கிறார்கள்.சிலர் வரவு-செலவு சரிக்கட்டக்கூட திண்டாடுகிறார்கள்.

ஏன் இவற்றைச் சொல்லுகிறேன் என்றால், இந்த நாடு ஒரு காட்டுமிராண்டி நாடு. மக்களோ சிறிதும் நாணயம், நேர்மை, யோக்கியம் பற்றிக் கவலையில்லாத பச்சை சுயநல ஆட்சி. மக்களாட்சியோ, மக்கள் நிலை பற்றிப் பொறுப்பு இல்லாத பதவி வேட்டைக்காரர்கள் ஆட்சி! இந்த நிலையில் சமுதாயம் மிக்க கீழான சாதி, மிகமிக லேசான சாதி என்ற பிரிவுகளுக்காளாகி, கீழான சாதி மேலும் மேலும் கீழ் மக்களாக வாழும்படியும், மேலான சாதி மிக மிக மேன்மக்களாக வாழும்படியான அமைப்பைக் கொண்ட மக்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உள்ள நாடும், மக்களும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போலவும் மற்ற நாட்டு மக்களைப் போலவும் ஆக்கப்பட வேண்டுமானால், மேல்கண்ட மாதிரியான கொடுமைகளும், சூழ்ச்சிகளும் இருக்க நடைபெற விட்டோமேயானால், எப்படி மனித சமுதாயம் சமத்துவமடைய முடியும்? என்கின்ற கவலையால்தான் சொல்லுகிறேன்.

நம் நாட்டிற்குச் சுதந்திரம் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு, மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களான ஒரு சிலர் கைக்குத்தானே ஆட்சி ஆதிக்கம் வர நேர்ந்ததே தவிர, பொதுமக்கள் கைக்கு ஆட்சி வர முடியவே இல்லை. “சுதந்திரம்”ஏற்பட்டு 20ஆண்டுகள் கடந்த பிறகும் “தகுதி,திறமை” என்பதும் - அந்தத் தகுதி, திறமை என்பதற்கு மேல் ஜாதிக்காரர் என்பவர்களே உரிமையாளர்களாக இருக்கமுடியும் என்கின்ற நிலை இருக்குமானால், அதிலும் இந்தத் தகுதி - திறமை என்பதற்கு மேலும் மேலும் நிபந்தனைகளைச் சுமத்திக்கொண்டே இருக்கவேண்டி இருக்குமானால், தகுதி, திறமை என்பது யோக்கியமானதாக, நாணயமானதாக இருக்கமுடியுமா?என்றுதான் சிந்தித்து வேதனைப்படுகிறேன்.

மேலும் வேதனைக்கு இடம் தரும் கொலைபாதகமான விஷயம் என்னவென்றால், இந்தப் பாழாய்ப் போக வேண்டிய நீதிமன்றங்கள் சட்டத்திற்கு வியாக்கியானம் என்ற பெயரை வைத்துக் கொண்டு பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட இடங்களை, “மோசடிக் கருத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டதாகும்” என்று தீர்ப்புக் கூறி அதை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று அவர்களது எண்ணிக்கைச் சமமான அளவு விகிதம் சட்டத்தின் மூலமே ஒதுக்கி வைத்திருக்க, மற்றும் அதுபோலவே ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியமுள்ள, அதுவும் சட்டப்படி அவசியமுள்ள பிற்படுத்தப்பட்டுள்ள சமுதாயத்திற்கு அந்த மக்கள் விகிதப்படி ஒதுக்கி வைக்காமல், மிகக்குறைந்த அளவில் அரசாங்கம் ஒதுக்கி வைத்தாலும் அதையே “இது மோசடி” என்று நீதிமன்றம் அதுவும் மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அது அரசாங்கம் செய்தது மோசடியா? நீதிமன்றம் செய்தது மோசடியா? என்று தீர்ப்புக் கூறுவான்? கண்டிப்பாய் நீதிமன்றத்தைதானே - நீதியற்ற மோசக்காரர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மோசடியான நீதிமன்றம் என்றுதானே சொல்லுவான். அரசாங்கமே அக்கிரம, அநியாய அரசாங்கம் என்றால், அய்கோர்ட் அதைவிட அக்கிரமமான அய்கோர்ட் என்று சொல்லும்படியாக ஏற்பட்டு வருகிறது.

அந்தத் தீர்ப்பு சொன்ன ஜட்ஜிடம் கடுகளவு நியாயப் புத்தி இருந்தாலும், அந்தப் புத்தியைப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி இருப்பார். தன் சுயநலம் காரணமாகவே ஒரு பெரிய சமுதாயத்திற்குக் கேடு செய்ய வேண்டியதாகிவிட்டது. அது மாத்திரமா? பள்ளியில் சேர்க்கப்பட 40 மார்க்கு வேண்டுமென்றும், பிறகு 45 மார்க்கு வேண்டுமென்றும், பிறகு 50 மார்க் வேண்டுமென்றும், அரசாங்கமே கடும் நிபந்தனை வைத்தால் இதைப் போக்கிரித்தனம் என்பதல்லாமல் வேறு என்ன சொல்லமுடியும்?

அயோக்கியத்தனம் என்பதற்கு ஓர் அளவுகூட இல்லாமல், ஜில்லாவுக்கு இத்தனை வீதம் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் செய்த முடிவை, அய்கோர்ட்டு அது கூடாது என்று தீர்ப்பு செய்துவிட்டது! இந்த மாதிரிக் காரியங்களில் அரசாங்கத்தின் மேல் அய்கோர்ட்டுக்கு என்ன கவலை வந்தது? இதற்கு ஜாதிக் குறும்பு என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

நாட்டிலே நூற்றுக்கு 90 பேர்கள் தற்குறிகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்து வந்த நிலையையும், ஒரே ஜாதியாரே படித்தவர்களாக - பதவி ஆளராக இருந்த நிலைமையயும் மாற்ற ஆசைப்பட்டு எவ்வளவோ முயற்சியின் பயனாய் ஒரு சிறு மாறுதலை ஏற்படுத்தினால், அதையும் இந்த மாதிரி யோக்கியமும்,நேர்மையும் அற்ற முறையில் பாழாக்கிக்கொண்டே வந்தால், அந்தக் கூட்டத்தை மக்கள் எப்படி வாழும்படி வைத்திருக்க முடியும்?

இன்றைய ஆட்சி பகுத்தறிவாளர் ஆட்சியோ, வெங்காய ஆட்சியோ, எப்படி இருந்தாலும், மனிதாபிமான ஆட்சியாய் இருந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்தையும், முன்னேற்றத்தையுமே முக்கியமாய்க் கொண்டு அவர்கள் மற்றவர்களுக்கும் சமமாய் வருவதற்கு ஏற்ற காரியங்களைச் செய்யவேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பையோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பையோ சேர்ந்த நீதிபதிகூட இன்று அய்கோர்ட்டில் இல்லை. அய்கோர்ட் தலைமை நீதிபதி மேல்ஜாதியைச் சேர்ந்தவராக ஆகிவிட்டதால், மற்ற நீதிபதிகள் அவர் தயவுக்கு ஆக அவர் செய்யக்கூடியதற்கு மேலாகவே செய்து பயனடையப் பார்க்கிறார்கள்..இதனால் அய்க்கோர்ட்டுக்கு இருக்கும் சிறு மதிப்பும் மறைந்து போகுமே என்றுதான் பயப்படுகிறேன்.

தோழர் பெரியார், விடுதலை 16.03.1968

Pin It