கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிடாதே!

கல்வி அந்தந்த மாநிலங்களுக்கான பிரச்சினை; இதில் அவ்வப்போது மத்திய அரசு தலையிடுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? 1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் அன்றைய காங்கிரஸ் ஆட்சி கல்வியின் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடலாம் என்று பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டதுதான். அதன் காரணமாக தமிழ்நாட்டில் இனி மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர வேண்டுமானால் ‘பிளஸ் டூ’ மதிப்பெண் மட்டும் போதாது; அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்றை எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. இதை உச்சநீதிமன்றமும் வலியுறுத்திவிட்டது.

•             நுழைவுத் தேர்வு கிராமத்திலிருந்து படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் தடை என்பதால் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டது. இப்போது அந்த சுமை மேலும் ஏற்றப்பட்டுவிட்டது.

•             மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கல்வி அமைப்பு முறைகள் இருக்கும் போது அனைத்து மாநிலங் களுக்கும் ஒரே மாதிரியான அகில இந்திய தேர்வு முறையை நுழைப்பது நியாயமா?

•             இப்படி ஒரு நுழைவுத் தேர்வை நடத்தினால், ‘சி.பி.எஸ்.இ.’, ‘அய்.சி.எஸ்.ஈ.’ பாடத் திட்டங்களில் படிக்கும் மேல்தட்டுப் பிரிவினருக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகமிருக்கும். மாநில அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

•             நுழைவுத் தேர்வு வந்து விட்டால் போட்டி போட்டுக் கொண்டு வர்த்தகக் கொள்ளை நடத்தும் பயிற்சி நிறுவனங்களும் குவிந்து விடும். வசதியற்ற பெற்றோர்கள், ‘பிளஸ் டூ’ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும்கூட மாணவர்களை பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி பல்லாயிரக்கணக்கில் ரூபாயை கொட்டி அழ வேண்டியிருக்கும்.

•             மாநில அரசு நடத்தும் ‘பிளஸ் டூ’ தேர்வுகளை நம்பவோ, மதிக்கவோ மத்திய அரசு தயாராக இல்லை என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. அகில இந்திய நுழைவுத் தேர்வு முறைகளில் நடக்கும் முறைகேடுகள் மோசடிகள் ஏராளம். இவை அவ்வப்போது செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

•             மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கும் வர்த்தகமாக நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கும் வேண்டு மானால் மத்திய அரசு நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளட்டும்.

                ஏற்கனவே உச்சநீதிமன்றம் (மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு) இந்த நுழைவுத் தேர்வை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சிலும் மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குப் போனதால், இப்படி ஒரு பேரிடி விழுந்திருக்கிறது.

                மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் விசாரணையை நடத்தி முடிப்பதற்கு முன்பே நுழைவுத் தேர்வை நடத்த ஆணையிட்டிருப்பது மிகப் பெரும் சமூக அநீதி; நீதிமன்ற நடைமுறைக்கு எதிரானது. எனவேதான் வலியுறுத்துகிறோம்.

•             மருத்துவ மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வை திணிக்காதே!

•             கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளை குலைக்காதே!

•             மாநில கல்வி உரிமைகளில் மத்திய அரசே தலையிடாதே!

- திராவிடர் விடுதலைக் கழகம்