புதிய கல்விக் கொள்கை - இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி)

பொதுத் தேர்வு முறையை சொல்கிறார்கள் அல்லவா, இப்போது 10 ம் வகுப்பு தேர்வுகளை யார் நடத்துகிறார்கள்?

prince gajendrababuதமிழ்நாட்டில் அரசு 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு தேர்வுகளை நடத்துகிறது. இதில் போதுமான மதிப்பெண் வரவில்லையென்றால் ஒரு மாணவர் தனது தேர்வுத் தாளை மறுகூட்டலுக்கு அனுப்பலாம். திருத்தியதையும் புகைப்படமாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் ஓரளவிற்கு தேர்வு முறை ஊழல் இல்லாமல் நடக்கிறது. பறக்கும் படை போன்றவைகளும் தேர்வு நேரங்களில் கண்காணிப்பில் உள்ளன. இந்தக் கொள்கை என்ன சொல்கிறதென்றால்… மாநிலத் தேர்வு முறை, மத்திய தேர்வு முறை மட்டுமில்லாமல் தனியார் கம்பெனிகளும் தேர்வு முறைக்கு விண்ணப்பித்து அனுமதியை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது. மாநிலத்திலோ அல்லது மத்திய அரசிடமோ விண்ணப்பித்து அந்த உரிமத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தனியாருக்கு தேர்வு நடத்த அனுமதி கொடுத்தால் வெளிநாட்டிலிருந்து ஆட்களை வரவழைப்பார்கள். தன்னுடைய தேர்வு முறை தான் சிறந்தது என்று விளம்பரப்படுத்துவார்கள்.

இது போன்ற விளம்பரங்கள் மூலமாக, ஒரு பள்ளியில் இது போன்ற தனியார் தேர்வு முறை தான் நடக்கிறதென்று அந்த பள்ளி விளம்பரம் செய்தால் அங்கு தான் அதிக மாணவர்களை மக்கள் சேர்ப்பார்கள். அப்போது அரசாங்கத்திடம் மட்டும் இருந்த தேர்வு முறைகளை பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு இதன் மூலம் கொண்டு வந்து விடுவார்கள். பாடப் புத்தகங்கள் மற்றும் பாடங்கள் வரை தேசிய அளவில் இருக்கும். அரசிடம் தேர்வை நடத்தக் கோரவில்லையென்றால் அரசுத் தேர்வு இயக்ககம் மூடப்படும் நிலைக்கு வந்துவிடும்.

பள்ளிகள் இணைப்பு, கல்லூரிகள் இணைப்பு அது மட்டுமில்லாமல் தேர்வுகளையும் தனியார் நடத்தலாம் என்று சொல்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தில், பல்கலைக் கழகங்களை உருவாக்குதல், கலைத்தல் போன்றவைகள் மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று கூறுகிறது. அதே அரசமைப்புச் சட்டத்தில் பல்கலைக் கழகங்களை உருவாக்குதல், ஒழுங்குபடுத்துதல், கலைத்தல் போன்றவைகளின் உரிமை மாநில அரசுக்கு உள்ளது என்று கூறியுள்ளது.

2016இல் நடந்த Modern Dental College வழக்கில் கூட மாநில அரசிற்கு தான் உரிமையுள்ளது என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். இந்த கல்விக் கொள்கையில், பள்ளிகளை இணைப்பது, கல்லூரிகளை இணைப்பது, பல்கலைக் கழகங்களை வேறு வடிவத்திற்கு மாற்றுவது போன்றவைகளைப் பற்றி மத்திய அரசே முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளது. இதனால் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது.

அம்பேத்கர், நவம்பர் 25, 1949 ல் அரசமைப்புச் சட்டத்தை தொகுத்து நாடாளுமன்றதில் பேசும் போது சொல்கிறார், “மாநில அரசிற்கு கொடுக்கப்பட்ட உரிமை அரசமைப்புச் சட்டத்தால் கொடுக்கப் பட்டது. மத்திய அரசாங்கம் இயற்றிய சட்டத்தினால் அல்ல. எனவே, மாநில அரசு மற்றும் மத்திய அரசிற்கான அதிகாரப் பகிர்வை மத்திய அரசு நினைத்தால் மாற்றிவிட முடியாது. நீதிமன்றங்களும் தலையிட முடியாது” என்று கூறுகிறார்.

ஆனால் இந்தக் கல்விக் கொள்கை மத்திய அரசிற்கு அதிகாரத்தை வழங்க வழிவகை செய்கிறது. எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது, மாநில அரசின் உரிமை பறிபோகிறது, இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது. எனவே, இந்தக் கொள்கையைப் பற்றி. நீங்கள் தான் விவாதித்து அரசிற்கு கூற வேண்டும். இவ்வளவு கெடுதல் இருக்கிறதே பிறகு இந்தக் கொள்கை யாருக்குத்தான் சாதகமாக இருக்கும்?

World Trade Organisation-இல் Trade in Service என்ற 200 பக்கங்கள் கொண்ட ஆவணம் உள்ளது. இந்த ஆவணத்தில் என்னவெல்லாம் கேட்கப்பட்டதோ அவையெல்லாம் இந்தக் கல்விக் கொள்கையில் உள்ளது. உலக வர்த்தக அமைப்பு (WTO) உதவித் தொகையை கேட்கிறது, அதனால் வெளிநாடு மற்றும் இந்திய மாணவர்களுக்கும் கொடுப்பதாக உள்ளது விரைவில். முக்கியமாக, நீதிமன்றத்திற்கு போகக் கூடாது என்று WTO இல் உள்ளது.

ஏனென்றால் நீதிமன்றத்திற்கு சென்றால் விதிகள் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்று கேட்பார்கள். அதனால் நீதிமன்றத்தை அணுகக் கூடாது என்று உள்ளது. அதற்காகத்தான், பிரதமர் தலைமையிலான குழுவே எல்லா கொள்கை முடிவுகளையும் மற்றும் அமைப்பையும் உருவாக்குகிறது. மாநில அரசின் குழு இருந்தாலும், தேசிய கல்வி ஆணையம் எதை பரிந்துரைக்கிறதோ அதை நிறைவேற்றும் ஒரு குழுவாகத்தான் இருக்கும். எனவே அரசமைப்புச் சட்டத்திற்கே சவால் விடக் கூடிய ஒரு கொள்கையையை உருவாக்கி யிருக்கிறார்கள்.

- பிரின்ஸ் கஜேந்திர பாபு

Pin It