கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இயக்குநர் சமுத்திரக்கனியின் 'அப்பா' எனும் திரைப்படம் கல்வி பற்றிப் பேசுகிறது. சமீப காலத்தில் சாட்டை, நண்பன், தங்க மீன்கள் போன்ற படங்கள் நம் கல்வி முறை குறித்த விமர்சனங்களை முன்வைத்தன. சமுத்திரக்கனியும் கல்வி குறித்து நீண்ட காலமாகத் இந்திய மற்றும் தமிழ்ச் சூழலில் முற்போக்குவாதிகளால் அலசப்பட்டு வரும் சிந்தனைகளை இப்படத்தின் மூலம் முன்வைக்கிறார்.

    'புத்தகங்களே
    குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்'

எனும் அப்துல் ரகுமானின் கவிதை வரிகளை ஒரு காட்சியில் திரையில் தெரிய வைக்கிறார். அது தவிர, ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூலை வாசிப்பது, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு எனும் நூலைக் காட்டுவது போன்ற காட்சிகளின் வழியாகப் படத்தில் தான் சொல்ல வரும் கருத்துக்களைச் சில அடையாளங்களாகப் பார்வையாளனுக்கு உணர்த்துகிறார்.

மெக்காலே கல்வி என்று சொல்லப்படும், பாடத்தை மையமாகவும் வேலைவாய்ப்பை நோக்கமாகவும் கொண்ட கல்வி முறையின் உச்சகட்ட ஆதிக்கத்தின் கீழ் நம் பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களின் உளச்சிக்கல்களையும், ஆளுமைப் பிரச்சினைகளையும் இந்தப் படம் விளக்க முற்படுகிறது. குறிப்பாகப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களையும், அதற்குப் பிந்தைய மேல்நிலைக் கல்வி சார்ந்த நடைமுறைகளையும் கையாளுகிறது. இவற்றைப் பேசுவதற்கு வசனங்களை மட்டுமே இயக்குநர் நம்பியிருப்பது படத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.

குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கை அழுத்தமாகப் படம் சொல்கிறது. ஆனால் அந்த அதை அழுத்தமாக வெளிப்படுத்த குழந்தையின் அம்மாவை எதிர்நிலைப் பாத்திரமாக வைப்பது சரியான கையாளுகைதானா (treatment)? படத்தில் நான்கு (வகையான) அப்பாக்கள் வருகிறார்கள். ஆனாலும் முக்கியமாக தயாளன் (சமுத்திரக்கனி) மற்றும் சிங்கப்பெருமாள் (தம்பி ராமையா) எனும் இரண்டு அப்பாக்களை ஒப்பிட்டுத் தன் கதையைச் சொல்லுகிறார் இயக்குநர். இந்த இரண்டு பேரில் தயாளனின் வளர்ப்பு முறையே சரி என்று நிறுவ சிங்கப் பெருமாளைக் கொடூரமான தந்தையாகக் காட்சிப்படுத்துகிறார். அது சரிதான். ஆனால் சிங்கப் பெருமாளுக்குச் சற்றும் குறைவில்லாத எதிர்நிலைப் பாத்திரமாக மலரைத் (தயாளனின் மனைவி) திரையில் காட்டுகிறார். அதாவது நல்ல அப்பா x கெட்ட அப்பா எனும் முரண்களைப் போலவே, அப்பா x அம்மா எனும் முரணையும் சொல்ல வருகிறார் என்று புரிந்துகொள்ளும் வகையில் காட்சிகள் நகர்கின்றன.

குழந்தை வளர்ப்பு என்பது அக்குழந்தையின் உடல் நலன், பண்பு நலன், ஆளுமை, அறிவுத்திறன், எதிர்காலம் போன்றவற்றைப் பற்றியதாக இல்லாமல், இன்று குடும்பங்களின் கவுரவம் சார்ந்ததாக மாறிவிட்டது என்பதை இப்படம் சரியாகவே எடுத்துரைக்கிறது. இரண்டு தலைமுறை கால இடைவெளியில், ‘உங்கள் பிள்ளை என்ன படிக்கிறது’, ‘எப்படிப் படிக்கிறது?’ என்ற கேள்விகளைப் பின்னுக்குத் தள்ளி, ‘உங்கள் பிள்ளை எங்கு படிக்கிறது?’ என்ற கேள்வி முன்னுக்கு வந்துள்ளது. இந்தக் கேள்வி ஒவ்வொரு பெற்றோரையும் மிரட்டுகிறது; பதட்டம் கொள்ளச் செய்கிறது. அரசுப் பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ பிள்ளையைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போது அவர்களை லஞ்சம் வாங்காத அரசு ஊழியரைப் போல் கூனிக் குறுகி நிற்கச் செய்வதில் தனியார் கல்வி முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்குப் பலியாகும் அப்பாவி அம்மாக்களைப் பாத்திரங்களையும் வார்த்தைகளையும் விட்டெறியும், அடியாட்களுக்கு (தாய்மாமன்கள்) செல்போனில் கட்டளையிடும் பெண் தாதாக்களைப் போலக் காட்டுவது எந்த வகையில் நியாயம்?

மகன் (வெற்றீஸ்வரன்) காணாமல் போனதும் அவனைத் தயாளன் தேடியலையும் மிக நீண்ட காட்சி நாடகத்தனமானது என்றே சொல்லலாம். மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை ஒரு போதும் பொய்த்துப் போகாது என்பதைப் பார்வையாளனுக்கு உணர்த்தும் நோக்கில் வைக்கப்பட்டுள்ள இக்காட்சி மிகை உணர்ச்சிகளால் நிரம்பியது. அதுவும் போதாதென்று மகன் கிடைத்ததும், அவன் தாய்மாமன்கள் கையில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக தடகளம், நீளம் தாண்டுதல் போன்ற சாகசங்கள் எல்லாம் செய்து காப்பாற்றுவது அக்காட்சியை போலித்தனமானதாக்குகிறது. திருநங்கை ஒருவர் பையனை மீட்டுக் கொண்டு வருவதாகக் காட்டுவதும், அவர்கள் மீது நல்லெண்ணம் வரச் செய்வதற்காக வலிந்து உருவாக்கப்பட்ட காட்சியே. நடப்பியல் சார்ந்த உண்மைகளைத் திரைப்படம் வழியாகச் சொல்லும்போது நேரடியாகப் பொட்டில் அறைந்தாற்போலச் சொல்லும் யதார்த்தவாதம்தான் அந்த உண்மைக்கு வலு சேர்க்கும்; படம் பார்த்த பின்னும் பார்வையாளனைச் சிந்திக்கச் செய்யும். மிகை உணர்ச்சிகளால் நிரம்பிய நாடகப்பாங்கு பார்வையாளர்களைக் கண்கலங்கச் செய்தாலும், அந்தக் கண்ணீருடன் கரைந்து போய்விடும்.

அதிக மதிப்பெண் பெறுவதை விட ஆளுமை வளர்ச்சியே முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக, வெற்றீஸ்வரனை அரசுப் பள்ளியில் சேர்க்கிறார் தயாளன். அவனுடைய நீச்சல் ஆர்வத்தைக் கண்டறிந்து அத்திறனை வளர்க்க உதவுகிறார். அது வரை சரிதான். ஆனால் அவன் கின்னஸ் சாதனை செய்வதாகக் காட்டுவதில் இயக்குநரின் நோக்கம் சிதைகிறது. அவ்வாறு அரசுப் பள்ளியில் படைத்து இது போன்ற உலக சாதனைகளை நிகழ்த்தாத மாணவர்களை எப்படி மதிப்பிடுவது? உலக சாதனை புரிவது எனும் இலக்கை முன்வைப்பது முதல் மதிப்பெண் எடுப்பது எனும் இலக்கை முன்வைப்பது போலாகதா? பிற்பாதியில் நடிகர் சசிகுமார் எல்லோரும் நூறு மதிப்பெண்கள் எடுத்தால், எண்பது, தொன்னூறு மதிப்பெண்கள் எல்லாம் யார் எடுப்பது என்று கேட்கிறார். இந்த வசனத்துக்கும் வெற்றீஸ்வரனின் உலக சாதனைக்கும் முரண் இருப்பதாகவே படுகிறது.

படத்தின் முன் பாதியில் தயாளன், தன்னுடைய மகனை உட்கார வைதøதுப் போதனை செய்வது போன்ற காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், குழந்தையை வளர்ப்பதில் ஒரு தந்தைக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வுகளை சில சின்னச் சின்னக் காட்சிகளால் அழகாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம். பதின் பருவத்தில் முளை விடும் இயல்பான எதிர் பாலின ஈர்ப்பை இயல்பானதாகப் பார்க்கப் பயிற்சியளிக்கும் காட்சி அப்படிப்பட்டது.

படத்தின் பிற்பாதியில் கல்விச் சூழலின் இன்னொரு களத்திற்குத் திரைக்கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். தமிழ்நாட்டில் (குறிப்பாக நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில்) கடந்த சில ஆண்டுகளாகவே அதிகளவில் முளைத்து வரும்  உறைவிடப் பள்ளிகளின் (Residential schools) கொடூர கல்விச் சூழலைத் தோலுரித்துக் காட்ட இப்படம் முயற்சித்திருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய அம்சம். பெற்றோர்களின் மதிப்பெண் வேட்டைக்குத் தீனி போட்டு அவர்களிடமிருந்து கட்டணக் கொள்ளையடிக்கும் இப்பள்ளிகளில் மாணவர்கள் நடத்தப்படும் விதத்தைத் துணிச்சலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் அப்பள்ளிகளை ஒரு சிறைச்சாலைகளைப் போல் காட்ட வேண்டும் என்கிற எத்தனிப்பைக் குறைத்து, அவற்றின் நடைமுறைகளை விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். திரைக்கதையிலும் அதற்கான அவகாசம் போதிய அளவில் உள்ளது.

தங்களுடைய பிள்ளைகள், மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்களை விட, தனியார் பள்ளிகள் அதிக அக்கறை காட்டுகின்றன. ஒரு முறை அப்படி எடுத்துவிட்டால், அந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின் போது அப்பள்ளிகளின் நன்கொடைக் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக நடுத்தர வர்க்கம் அப்பள்ளிகளின் வாசலில் தவம் கிடக்கிறது. எனவே முதல் மதிப்பெண்கள் எடுப்பதற்காக எந்த எல்லை வரையும் போக சில தனியார் பள்ளிகள் தயாராகின்றன. பொதுத்தேர்வு நடக்கும் போது அரசு அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொள்வது, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு முறைகேடாக 'பிட்' கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து முழு மதிப்பெண்கள் பெற வைப்பது சில பள்ளிகளில் சாதாரண நிகழ்வாகி விட்டது. ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களை இரண்டு ஆண்டுகள் நடத்துவதும் இப்பள்ளிகளில் இயல்பான நிகழ்வாகி விட்டன.

மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களை விடுதிகளில் அடைத்து வைத்து, மதிப்பெண் என்கிற ஒற்றை இலக்கை மட்டுமே அவர்களின் மூளைக்குள் திணித்து, கடிவாளம் மாட்டிய குதிரைகளைப் போல் ஓட வைக்கிறார்கள். இதனால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி பலவிதமான விபரீத நடத்தைகளைக் கைக்கொள்கிறார்கள். சோப், ஷாம்பு போன்றவற்றைத் தின்பது, கண்ணாடியைப் பொடியாக்கி வைத்திருப்பது (தற்கொலை முயற்சிக்காக) போன்ற இன்னும் எண்ணிப்பார்க்க முடியாத நடைமுறைக்கு மாறான (abnormal) செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் இப்பள்ளிகளில் ஏராளம். (அவ்வப்போது தற்கொலைச் செய்திகளும் நாளிதழ்களில் வருகின்றன.) இந்த உளவியற் சிக்கல்களை ஒரு மாணவனின் தற்கொலை என்கிற ஒற்றை நிகழ்வுடன் முடித்திருக்கிறது படம். இப்படிப்பட்ட சூழலில் உருவாகும் மாணவர்கள் கையாளப் போகும் எதிர்காலச் சமூகத்தின் நிலையை யோசித்தால் கலவரமாக இருக்கிறது. இப்பள்ளிகளின் விளம்பரங்களில் கைகூப்பிச் சிரிக்கும் கல்வித் தந்தைகளின் முகமூடியை ஒரளவு கிழித்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். வகுப்பறையில் பள்ளி மாணவன் ஆசிரியையைக் கொலை செய்வது, பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து பள்ளிக்குழந்தை விழுந்து இறப்பது, விழுப்பரத்தில் மூன்று கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம் போன்ற சம்பவங்களின் பின்னணியில் நம் தனியார் கல்விச் சூழலுக்குப் பங்கில்லை என்று எப்படிச் சொல்வது?

படத்தில் தனியார் கல்விக்கு மாற்றாக அரசுப் பள்ளிகளை முன்வைக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் மோசமான நிர்வாகம், பொறுப்பில்லாத அல்லது பொறுப்பாக இருக்கத் தேவையில்லாத ஆசிரியர்கள், நிதியின்மை, நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள், தரமற்ற உள்கட்டமைப்பு போன்ற பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது. மாணவர் சேர்க்கை குறைவால் பல பள்ளிகளை மூடப்போவதாகச் செய்திகள் வருகின்றன. இதற்கும் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்குமே தொடர்பு உள்ளதை மறுக்க முடியாது. ஆனாலும் இன்னமும் மாணவர்களின் சிந்தனை வளர்ச்சி, ஆக்கத்திறன் போன்றவற்றை மேம்படுத்துவதில் அரசுப் பள்ளிகளில்தான் சரியான சூழல் நிலவுகிறது என்பதே உண்மை. இதை மக்களுக்குச் சொல்வதில் இந்தப் படத்தை முன்னெடுப்பாகக் கொண்டு ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். ஆனால் அரசுப் பள்ளிகளின் நல்ல அம்சங்களை மக்கள் உணரத் தொடங்கினால், அந்த அம்சங்களையும் தனியார் பள்ளிகள் உள்வாங்கி விளம்பரம் செய்யும்; வியாபாரமாக்கும்.

திரைப்படக் கலை நோக்கில் பார்த்தால் தம்பி ராமையாவின் நடிப்பு, இளையராஜாவின் பின்னணி இசை (மகனைக் காணாமல் அப்பா தேடும் போது மெல்ல மெல்ல அதிகரிக்கும் அந்தப் பதட்ட உணர்வை மெல்லிய இசையில் தொடங்கி நேரம் செல்லச் செல்ல அதிரும் இசையால் உணர்த்துவது ஞானியால் மட்டுமே முடியக் கூடிய நுட்பம்), சமுத்திரக்கனியின் கூர்மையான வசனங்கள் போன்றவற்றை படத்தின் மிகப்பெரும் பலமாகச் சொல்லலாம். வழக்கத்துக்கு மாறாகத் திரையரங்கம் குடும்பங்களால் நிறைந்திருந்ததைக் காணமுடிந்தது. இது நிச்சயமாக இயக்குநர் சமுத்திரக்கனியின் சாதனைதான். தனியார் கல்விக்கு எதிரான வசனங்களின் போதெல்லாம் பலமாகக் கைதட்டினார்கள், தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்த மற்றும் சேர்க்கப் போகும் அப்பாக்கள்.