வாழ்க்கையின் மிக இனிமையான பருவம் என்றால், அது பதின்பருவம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். குழந்தை பருவம் மகிழ்ச்சியானது. வாழ்க்கையை துய்க்கத் தொடங்குகின்ற பதின்பருவம்தான் இனிமையான பருவம். இந்த வயதில் உலகமே தன்னைச் சுற்றி மட்டுமே இயங்குவதாகத் தோன்றும். பார்க்கின்ற அத்தனையும் அழகாக இருப்பதாக மனதும், கண்களும் காட்டும். ஆனால் இந்த வயதில்தான் பிள்ளைகளை ஆபத்துகளும் அதிகமாகச் சூழும் என்பதை நாம் உணரவேண்டும்.

இன்று நம் குழந்தைகள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக, பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் போன்றவை இருக்கின்றன. வயது வந்த வளர்ந்த குழந்தைகள்தான் என்றில்லாமல், சின்னஞ்சிறு குழந்தைகள் கூட இக்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

நடைபாதைகளிலும், தெருவோரங்களிலும் இருக்கின்ற, ஆதரவற்ற குழந்தைகள்தான் பாலியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்று கருதிவிட வேண்டாம். தாய், தந்தையரின் அரவணைப்பில், வீட்டிற்குள் வளர்கின்ற குழந்தைகளும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். அன்றாடம் செய்தித்தாள்களில் இதுபற்றி படிக்க நேரும்போது, பேரதிர்ச்சி நம்மைத் தாக்குகிறது.

வீடுதான் பாதுகாப்பானது என்று கருதிக் கொண்டிருந்த நமக்கு, இந்த செய்திகள் அதிர்ச்சியைத் தருவது வியப்பில்லையே. வீடும், அவர்கள் ஓடியாடி விளையாடுகின்ற தெருவும் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகின்றன என்றால், உறவினர்கள், நண்பர்கள் மூலமும் ஆபத்து காத்திருக்கிறது என்று தெரியவரும்போது, எப்படித்தான் நம் குழந்தைகளை, நம் செல்வங்களைப் பாதுகாப்பது?

குழந்தைகளிடம் தங்கள் வக்கிரத்தைக் காட்டும், மிருகங்களை (மிருகங்கள் கோபித்துக் கொள்ளுமோ?!) சட்டங்கள் சில நேரங்களில் தண்டித்தாலும், முழுமையாகத் தடுக்க முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. இது ஒருபக்கம் இருந்தாலும், நம்முடைய சொத்துக்களை நாம் தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நம்முடைய குழந்தைகளுக்கு உடலியல் பற்றிய அறிவியல் உண்மைகளைச் சொல்லித்தர வேண்டும். குழந்தை உளவியல் நிபுணர்கள் சொல்வதைப் போல, கெட்ட தொடுதல் எது, நல்ல தொடுதல் எது என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்களுடைய உடல் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை, அந்நியர்களின் அத்துமீறலை எப்படித் தடுப்பது என்பதையயல்லாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதையயல்லாம் யார் சொல்லிக் கொடுப்பது?

வேறு யார், பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான்! அவர்கள் தானே குழந்தைகளுக்கு நெருக்க மானவர்கள். படித்த பெற்றோர்களாக இருந்தால், பெண் பிள்ளைகளிடம் ஓரளவுக்குப் பக்குவமாக இவற்றையயல்லாம் புரியவைத்துவிடுவார்கள். பகல் முழுவதும் கூலிவேலைக்குப் போய்விட்டு, இரவில் வந்து உணவு சமைக்கும் நிலையில் இருப்பவர்களால் இது முடியுமா?

இதற்குத்தான் பள்ளியிலேயே பாலியல் கல்வி என்பதை ஒரு பாடமாகவே வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இது இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கருத்தன்று. பல ஆண்டுகளாகவே பாலியல் கல்வி என்பது கல்வியாளர்களால் வற்புறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பழமைவாதிகளும், கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் இதை எதிர்த்து வருகின்றனர். காரணம் இதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததுதான்.

அண்மையில் நாடாளுமன்றத்தில், குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. உடலுறவுக்கான அங்கீகரிக்கப்பட்ட வயது வரம்பு 16லிருந்து 18ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அது தெரிவிக்கிறது. இது தொடர்பாக தில்லி அமர்வு நீதிமன்றம் ஒரு சிறப்பான கருத்தினைக் கூறியிருக்கிறது. ‘18 வயதுக்குக் கீழே உள்ள ஒரு ஆணும், பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டாலும் அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதித் தண்டிக்க இந்தச் சட்ட முன்மொழிவு வகை செய்கிறது. பெற்றோர்களும், காவல்துறையினரும் அவர்களைத் துன்புறுத்தவே அது பயன்படும். 16, 17 வயதில் உடலுறவு பற்றிய புரிதல் இருக்காது என்பது இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. அவர்களுக்குப் புரிதல் இருக்கிறது என்பதே உண்மை நிலவரம். எனவே வயது வரம்பை உயர்த்துவது இந்தப் பிரச்சினையை எந்த வகையிலும் தீர்க்காது. நல்ல பழக்கங்களையும், நல்லது கெட்டதை உணரும் சக்தியையும் குழந்தைகளிடம் சட்டங்களால் உருவாக்கிவிட முடியாது. பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியைக் கொண்டு வந்து, பொறுப்பைப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் விடுவதுதான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி ’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு, சட்ட முன்மொழிவு நிறைவேற்றப்பட்டுச் சட்டமாகவே ஆகிவிட்டது)

பாலியல் வன்கொடுமைகள் என்பதை இருபால் குழந்தைகளும் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்போதுதான் குழந்தைகளின் மீதான இந்த வன்முறைகள் தடுக்கப்படும்.

ஆனால் பாலியல் கல்வி என்றதும், ‘அய்யய்யோ பிள்ளைகள் கெட்டுப் போவார்கள். நம் நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு என்னாவது’ என்றெல்லாம் கூச்சலிடுபவர்கள் பாலியல் கல்வி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாலியல் கல்வி என்றால் உடற்கூறு அமைப்பினைச் சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும் வழிகளைச் சொல்லி, நம் உடல் மீது நமக்கிருக்கும் உரிமையைச் சொல்லி, இந்த உரிமைக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை எதிர்கொள்வது எப்படி என்பதையயல்லாம் சொல்லிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த அடிப்படைப் பாடம் அவ்வளவுதான்.

இதில் பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு என்ன இருக்கிறது. ஒரு தவளையின் உடற்கூறைப் பற்றிப் படிக்கும் போது, நம்முடைய உடற்கூறைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு? பாலியல் கல்வி என்றதும், ஏதோ உடலுறவு பற்றிச் சொல்வது என்பது போன்ற தவறான தோற்றத்தைப் படித்தவர்களே ஏற்படுத்துவதுதான் கொடுமை. திரைப்படங்களும், இணையத்தளங்களும் ஆண், பெண் பால் உறவு பற்றிய செய்திகளைத் தாராளமாகக் கடைவிரித்து வைத்திருக்கின்றன. இவற்றிலிருந்துதான் நம்முடைய பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியதிருக்கிறது. அதற்கும் இந்தப் பாலியல் கல்வி உதவியாக இருக்குமே தவிர, பிள்ளைகளைக் கெடுத்துவிடாது.

நாங்கள் எல்லாம் சின்னப்பிள்ளையிலேயே இதெல்லாம் தெரிந்தா வளர்ந்தோம். அதெல்லாம் உரிய வயது வரும்போது அவர்களாகவே தெரிந்து கொள்வார்கள் என்று வியாக்கியானம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். அறிவு சொல்லாத பாடத்தை அனுபவம் சொல்லும் என்பது உண்மைதான். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு அது பொருந்தாது. பிள்ளைகளைத் தவறான பாதைக்குக் கூட்டிச் சென்றுவிடும்.

உடற்கூறுகளைப் பற்றிய அவர்களின் சந்தேகங்களுக்குக் கோபப்படாமல், பொறுமையாக, சரியான பதில்களைச் சொல்லிவிட்டால் போதும். அதற்கு முதலில் நாம் தயாராக வேண்டும். நமக்குத் தெரியாத விளக்கங்களை உரிய மருத்துவர்களிடம் பெற்றுப் பிள்ளைகளுக்குச் சொல்லலாம், அல்லது அவர்களையே மருத்துவர்களிடம் நேரிடையாக அழைத்துச் சென்று தெளிவுபெற வைக்கலாம்.

குழந்தைகள் விளையாட்டாகக் கேட்கிறார்கள், இதைப்போய் பெரிதாக எடுத்துக்கொண்டு, இந்த அசிங்கத்தை எல்லாம் இப்போதே சொல்வதா என்று அலட்சியப்படுத்தினால், தங்கள் சந்தேகத்திற்குரிய விளக்கங்களை வெளியில் தேடத் தொடங்குவார்கள். அந்தத் தேடலில், தவறான விளக்கங்களும், வழிகாட்டல்களும் இருந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

எனவே இத்தனை சிக்கல்களுக்கும், உளவியலை உள்ளடக்கிய அறிவியல் விளக்கங்களுடன் விடை சொல்வதே பாலியல் கல்வி. நீதிநெறி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள், பாலியல் கல்வி வேண்டும் என்று சொல்ல முன்வருவதில்லை. ஆனால் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கட்டாயம் வேண்டும் என்பது காலத்தின் தேவையாய் இருக்கிறது.

குஜராத்தில் ஆபாசக் கல்வி - காலத்தின் கொடுமை

அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், குஜராத் அரசு சார்பில், தொடக்க நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, “பஜ்ஜில் மேஜிக்” என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

50 பக்கங்கள் கொண்ட இப்புத்தகங்கள், 35 ஆயிரம் தொடக்க நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்புத்தகத்தில் நகைச்சுவை என்ற பெயரில் படுகேவலமான, ஆபாசமான (நகைச்சுவை?) துணுக்குகள் மாணவச் சிறார்களின் மனத்தில், நச்சுப் பாலியல் வக்கிரங்களைத் திணிக்க முயன்றுள்ளன.

மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோசமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?

கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்

மனைவி: அவமானம்! அவளின் கணவன் என்னிடம் வரும்போது, ஐம்பது ரூபாய் மட்டுமே கொடுத்தான்.

கடவுள் நம்பிக்கையுள்ள, கடைந்தெடுத்து இந்துத்துவவாதி மோடியின் அரசாங்கம் பிஞ்சுகளுக்குக் கற்றுத் தருகின்ற கல்வியின் தரம் எப்படி இருக்கிறது பாருங்கள்.

இப்படிப்பட்ட மதவாதிகள்தான் அறிவியல் கல்வியான பாலியல் கல்விக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

Pin It