சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் செயல்பாட்டிற்கும்

1.     தமிழ்நாட்டுக்கு ஆய்வுக்கு வந்த தேசிய பட்டியலின ஆணையத்திற்கு புள்ளி விவரம் தர மறுத்த அல்லது தருவதற்கு யோசனை செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

2.     தமிழ்நாட்டிற்கு வருகை தந்த தேசிய பட்டியலின ஆணையத்திடம் தமிழ்நாட்டிற்கு பட்டியலின தொடர்பு அதிகாரிகள் (Liaison Officers) தேவை இல்லை என்று தலைமைச் செயலர் கூறியது உண்மையா? உண்மை எனில், பட்டியலின நலனுக்கு எதிராக ஆணையத்திடம் பேசிய தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

3.     இந்திய அரசின் திட்டக்குழு அனுப்பிய 23.11.2009 நாளிட்ட கடிதத்தில் (M1304/24(கூN) 2008குக(கு) 200910 பட்ஜெட்டில், பட்டியலின துணைத்திட்டத்தின் கீழ் ரூ.3250 கோடிக்குப் பதிலாக ரூ.2722 கோடிதான் திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ஆகவே கூடுதலாக ரூ.528 கோடியை திருத்த மதிப்பீட்டில் ஈடுசெய்ய வேண்டும் எனவும் வேண்டியவாறு செய்யப்பட்டதா? இல்லை எனில், ஏன் செய்யப்படவில்லை?

4.     ஆதி திராவிடர் நலம், பள்ளிக் கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலம், வேளாண்மை ஆகிய துறைகள் தவிர வேறெந்தத் துறைகளும் பட்டியலினத்தவர்களுக்காக திட்ட ஒதுக்கீடு செய்யவில்லை என்பது உண்மையா? எனில், இதை மாற்ற அரசு முன்வருமா? எனில், 2010-11 இல் இத்துறைகளில் பிரித்தறியும் திட்டங்களில் (Divisible Schemes) பட்டியலினத் துணைத் திட்டஒதுக்கீடு வழங்க அரசு உறுதி செய்யுமா?

5.     ‘தாட்கோ'வில் பட்டியலின ஒப்பந்ததாரர்களுக்கு என்று இருந்த தனித்திட்டத்தை ‘தாட்கோ' மேலாண்மை இயக்குநரும் ஆதி திராவிட செயலரும் காலாவதி ஆக்கியது அரசுக்குத் தெரியுமா? எனில், இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? பட்டியலினத்திற்கு எதிராக இந்த ஆணை உடனே விலக்கப்படுமா? (ஆதிதிராவிடர் நலச் செயலரின் 20800 / ஆதி திராவிடர் நலம் 5 / 08 4 நாள் : 8.2.2010)

6.     பட்டியலினத்தவருக்கான கீழ்க்கண்ட அரசாணைகளை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளும், தலைமைச் செயலரும் மறுத்து வருவது அரசுக்குத் தெரியுமா? எனில், இந்த அரசாணைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு முன்வருமா?

1) அரசு ஆணை 65 / பற்றாளர் கூட்டம்.

2) தவறிழைக்கும் அதிகாரிகள் மீது தலைமைச் செயலர் நடவடிக்கை.

3) மேயர் சிவராஜ் ரூ.10 லட்சம் அறக்கட்டளை - சென்னை பல்கலைக் கழகம் - சட்டத்துறை

4) அயற்படிப்பு உதவி (Scholarships to study Abroad)

5) தலைமைச் செயலாளர் தலைமையிலான இடஒதுக்கீட்டு கண்காணிப்புக் குழு, (அ.ஆ.110, பணியாளர் நிர்வாகம், நாள்: 22.6.2000)

6) அரசு துறைகளில் பட்டியலினத்தவரின் இடஒதுக்கீடு நிரப்புதல் குறித்த ஆண்டறிக்கை (Annual Statement of SC Representation in Departments).

7.     தலைமைச் செயலர் எல்லா செயலர்களுடன் நடத்தும் மாதக் கூட்டங்களில், பட்டியலின மக்கள் பற்றிய எந்த கருத்துகளும் பேசக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது அரசுக்குத் தெரியுமா? அப்படி இல்லை எனில், 2006 முதல் நடத்தப்பட்ட தலைமைச் செயலர் மாதக் கூட்டங்களில் எத்தனை கூட்டங்களில் பட்டியலின மக்களின் பிரச்சினைகள் பேசப்பட்டன என்பதைத் தெரிவிக்க அரசு முன்வருமா?

8.     பட்டியலினத்தவருக்கான ஒதுக்கீடு, பட்டியலினச் சான்று வழங்குதல், பட்டியலினத்தவர் துணைத் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஆதிதிராவிடர் செயலருக்கு தலைமைச் செயலக நடைமுறை பனுவலில் (Secretariat Business Rules) அதிகாரம் படைக்கப்படவில்லை என்பது உண்மையா? எனில், உரிய அதிகாரத்தை வழங்க அரசு முன்வருமா?

9.     பட்டியலின அமைச்சர்களும்,பட்டியலின அதிகாரிகளும், பட்டியலினப் பணியாளர் சங்கங்களும், பட்டியலின சமூக அமைப்புகளும் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்லக்கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள் என்பது அரசுக்குத் தெரியுமா? அவ்வாறு கலந்து கொண்ட பட்டியலின அதிகாரிகள் யார் யார் மீது குற்றச்சாட்டு வனையப்பட்டது எனத் தெரிவிக்க அரசு முன்வருமா? எதிர்காலத்தில் இவ்வாறு தடுக்காமல் இருக்க, உரிய அரசாணைகள் பிறப்பிக்கப்படுமா?

10.    பட்டியலினத்தவர் துணைத் திட்டம் தொடர்பாக பட்டியலின அறிவர்களுடனும் (Experts) சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு திட்டக்குழுவும், அரசு திட்ட வளர்ச்சித் துறையும்,ஆதிதிராவிடர் துறையும் மறுத்து வருவது அரசுக்குத் தெரியுமா? எனில், இவர்கள் ஆண்டுக்கு மூன்று முறையாவது பட்டியலினத்தவர் துணைத் திட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்த அரசு ஆவன செய்யுமா?

11.    2008-09 துணை ஆட்சியர் பதவி உயர்வுப் பட்டியலில் 25 பட்டியலினத்துக்கான இடங்கள் நிரப்பப்படாமல் அநீதி விளைக்கப்பட்டது அரசுக்குத் தெரியுமா? எனில், அரசு ஆணையின்படி இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

12.    புதுச்சேரியில் சுயநிதித் தொழிற் கல்லூரிகளில் பயிலும் பட்டியலினத்தவருக்கு, அக்கல்லூரிகள் வசூலிக்கும் முழுக்கட்டணத்தையும் உதவித் தொகையாக வழங்க அந்த அரசு முன் வந்துள்ளது போல, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்குமா?

13.    தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் 1980களில் 20 சதவிகிதமாக இருந்த பட்டியலின மாணவர் எண்ணிக்கை, தற்போது 8 சதவிகிதமாகக் குறைந்து விட்டது அரசுக்குத் தெரியுமா? எனில், உரிய கல்வி உதவித் தொகைகள் தரப்படாமையே இதற்குக் காரணம் என்பதால், கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்க அரசு முன்வருமா?

14.    +2 வில் பொது மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை விட பட்டியலின மாணவர்களின் சேர்க்கை சதவிகிதம் 2 சதவிகிதம் கூடுதல் என்பது அரசுக்குத் தெரியுமா? ஆனால் கல்லூரி மாணவர் எண்ணிக்கையில் சேர்க்கை சதவிகிதம், பொது சதவிகிதத்திற்குள் பாதியாகக் குறைந்துள்ளது ஏன் என்பதை அரசு விளக்குமா?

15.    தமிழக அரசில் அங்கீகாரம் பெற்ற, அரசு உதவிபெறும் 354 பள்ளிகளில் +2வில், 1 சதவிகித பட்டியலின மாணவர்கள் கூட சேர்க்கப்படவில்லை என்பதும், இப்படியுள்ள பட்டியலினத்தவர் / பழங்குடியின மாணவர்கள் இல்லாத தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இருப்பது, அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டும் எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, அரசுக்குத் தெரியுமா? எனில், அனைத்துப் பள்ளிகளிலும் +2 இல் 20 சதவிகிதத்திற்கும் குறையாமல் பட்டியலினத்தவர் / பழங்குடியின மாணவர்கள் சேர்க்கப்படுவதை அரசு உறுதி செய்யுமா?

16.    30 சதவிகிதத்திற்கும் மேலாக பட்டியலின மாணவர்களைச் சேர்க்கும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் உதவிபெறும் ஆசிரியர் பணியிடங்களை வழங்க அரசு முன்வருமா?

17.    தமிழக அரசு கட்டித்தரப்போகும் கான்கிரீட் வீடுகள், ஏற்கனவே, மனைப்பட்டா உள்ளவர்களுக்குதான் (மாவட்ட நடப்புக் கணக்கெடுப்பின்படி) என்கிறபோது, பட்டா இல்லாத நத்தம் - புறம்போக்கில் அல்லது அரசுப்புறம்போக்கில் தலைமுறைகளாக குடிசை வீட்டில் வாழும் பட்டியலினத்தவர் விடுபடப் போகிறார்களா? தமிழக அரசின் பட்ஜெட் புத்தகத்தில், சிறப்புக்கூறுத் திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் கணக்கில், கலைஞர் வீட்டுவசதித் திட்டமாக காட்டப்படுகிற ரூ.780 கோடி, பட்டியலினத்தவருக்கே என்று உறுதி செய்யப்படுமா? அல்லது பட்டா இல்லாத பட்டியலினத்தவருக்கு மறுக்கப்பட்டு, பட்டா உள்ள மற்றவருக்குப் போய்ச்சேருமா? இது குறித்து அரசு உரிய விளக்கம் தருமா?

18.    2006 தி.மு.க. கட்சியின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட அனைத்து உறுதிகளும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும், கீழ்வரும் மூன்று உறுதி அளிப்புகளில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அரசு அறியுமா? எனில், இம்மூன்று உறுதி அளிப்புகளையும் உடனே நிறைவேற்ற அரசு முன்வருமா?

  1. 1) ‘‘சிறப்புக்கூறு திட்டத்தினை சிறப்புறச் செயல்படுத்தி, முழுப்பலன்கள் அச்சமுதாய மக்களுக்கு உரிய காலத்தில் சேருவதற்குரிய முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.''
  2. 2) ‘‘தனியார் துறைகளிலும், மேலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத ஏனைய அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்படவேண்டுமென்று வலியுறுத்துவோம்.''
  3. 3) ‘‘மனிதக் கழிவை மனிதனே கையால் அள்ளும் கொடுமையை நிறுத்தி, அந்தப்பணியை ஆற்றி வருபவர்களுக்கு தகுதியான வேறு பணி வழங்கப்படும்.'' (மேற்கோள் குறிப்புகள்: தி.மு.க.தேர்தல் அறிக்கை 2006)

19.    அனைத்துத் துறைத் தலைவர்களும் பட்டியல் இன பணியாளர்கள் புள்ளி விவரத்தை ஆதிதராவிடர் நல இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆணையை, இதுவரை எந்தத் துறையும் மதிக்கவில்லை என்பதை அரசு அறியுமா? எனில், அனைத்துத் துறைகளுக்குமான இந்த ஆண்டு அறிக்கையை ஆதிதிராவிடர் நல இணையதளத்தில் வெளியிட அரசு ஆவன செய்யுமா?

20.    மய்ய அரசுத் துறைகளின் ஆண்டு அறிக்கையில் பட்டியலின பணியாளர் பற்றிய புள்ளி விவரம் ஆண்டாண்டு வெளியிடப்படுவதை அரசு அறியுமா? எனில், தமிழ்நாடு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்படும் கொள்கைக் குறிப்பு அறிக்கைகளில் இதைக் கடைப்பிடிக்க அரசு ஆவன செய்யுமா?

21.    2008ஆம் ஆண்டு 520 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு பட்டியலினத்தவர் பின்னடைவு நியமனம் செய்யப்படும் என அறிவித்து விட்டு, இதுவரை 420 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு பட்டியலினத்தவர் ஏமாற்றப்பட்டுள்ளதை அரசு அறியுமா? எனில், இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முறைகேடாக 2009இல் பொது நியமனம் மேற்கொண்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

22.    தமிழக அரசில் மூன்றாம் அடுக்கு ஆளுகையில், பட்டியலினத் தலைவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கக்கூடிய இடங்களில், அவர்கள், பட்டியலினத்தவரல்லாதத் துணைத் தலைவர்களாலும், ஊராட்சி மன்றக் கணக்கர்களாலும் ஆதிக்கம் செய்யப்படுவது அரசுக்குத் தெரியுமா? இதனால், ஊராட்சி மன்றத் திட்ட முன்னுரிமை பட்டியலினத்தவர்க்கு மறுக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? எனில், இத்தகையப் போக்கைத் தடுத்து நிறுத்த அரசு என்னென்ன வழிவகைகளை மேற்கொள்ளப் போகிறது என்கிற விளக்கத்தை தமிழக அரசு பட்டியலினத்தவர்க்குத் தர முன்வருமா?

23.    ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு பட்டியல் இனத்தவரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற குறுகிய பார்வையைக் கொண்ட நடைமுறையை அரசு மாற்ற முன்வருமா?

24.    2 ஏக்கர் நிலம் வழங்கும் ‘தாட்கோ' திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது? யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? ஆளுக்கு எத்தனை ஏக்கர் வழங்கப்பட்டது? எவ்வளவு நிதி செலவிடப்பட்டது? என்ற புள்ளி விவரம், மாவட்ட வாரியாக 2010 - 11 பட்ஜெட் தொடரில் வெளியிடப்படுமா?

25.    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பட்டியலினத்தவர் 40 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கிறார்கள் என்றபோதும், உயர்கல்வித் துறை நிதி ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவருக்கென்று தனியாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பதும், அவர்களுக்கு என்று தனியான திட்டங்கள் ஏதும் இல்லை என்பதும் உண்மையா? எனில், உயர்கல்வி பட்ஜெட்டில் பட்டியலின கல்லூரி மாணவர்களுக்கென்று தனித்திட்டங்களை கொண்டுவர அரசு முன்வருமா?

26.    இதுவரை, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களில் (தனியார் உட்பட) 222 துணை வேந்தர்கள் பதவி வகித்திருப்பினும், பட்டியலினத்தவர் ஆறுபேர்மட்டுமே மிகக் குறுகிய காலத்திற்குத் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது, பட்டியலினத்தவர் உயர் கல்வியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்பதை அரசு உணர்ந்துள்ளதா? எனில், எதிர்காலத்தில் குறைந்தது 5 துணை வேந்தர்களாவது ஒரே காலத்தில் பட்டியலினத்தவராக இருப்பதை அரசு உறுதி செய்யுமா?

27.    பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்ட 10 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 9 லட்சம் ஏக்கருக்கு மேல் சாதி அதிகாரம் செய்பவர்கள் அபகரித்துவிட்டனர் என்பது உண்மையா? இந்த நிலங்களை பட்டியலினத்தவருக்கு மீட்டுத்தர, தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற முன்வருமா?

28.    பழங்குடியினர் இடங்களைப் பாதுகாக்க, பிற மாநிலங்கள் எல்லாம் சட்டம் இயற்றி இருக்க, தமிழ்நாடு அரசு மட்டும் சட்டம் இயற்றாமல் இருக்கிறது என்பது அரசுக்குத் தெரியுமா?

29.    நாடாளுமன்றத்தில் பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு இருப்பது போன்று தமிழ்நாட்டில் பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க, தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் மறுத்து வந்திருப்பதை இந்த அரசு அறியுமா? எனில், பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க இந்த அரசு உடனே முன் வருமா?

30.    காலிப் பணியிடங்களை அறிவிக்கை செய்யும் போது, (Notifying Vacancies) பட்டியலினத்தவர் / பழங்குடியினர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடங்களைச் சரியாகக் குறித்து வெளியிட வேண்டும் என்ற அரசு ஆணைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், பல்கலைக் கழகங்கள் ஆகியோர் நடைமுறைப்படுத்த மறுத்து வருவதை அரசு அறியுமா? எனில், அவர்கள் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வருமா?

31.    தமிழ்நாட்டில் உள்ள பட்டியலினத்தவர் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்னும் தமிழில் அறிவிக்கை செய்யவில்லை என்பதை அரசு அறியுமா? இந்தத் தமிழ்ப் பெயர்கள் கொண்ட பட்டியலை, தமிழ்நாடு அரசு உடனே அரசிதழில் வெளியிடுமா? அவ்வாறு வெளியிடும்போது பெயர்களுக்கு இறுதியில் ‘ன்' விகுதி போட்டு இழிவு செய்யாமல் ‘ர்' விகுதி போட்டு வெளியிட்டு, பட்டியலினத்தவரின் மாண்பைக் காக்க இந்த அரசு உடனே ஆவன செய்யுமா?

32.    50 சதகிவிதத்திற்கு மேல் பட்டியலினத்தவர் வாழும் கிராமங்கள், பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள், குக்கிராமங்கள் பட்டியலை அரசு வெளியிடுமா?

33.    50 சதவிகிதத்திற்கு மேல் பட்டியலினத்தவர் வாழும் கிராமங்கள், குக்கிராமங்கள், பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு பட்டியலினத் துணைத் திட்டத்தில் (Scheduled Caste Sub Plan) தனிவளர்ச்சித் திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்க அரசு ஆவன செய்யுமா?

34.    முனைவர் படிப்பைத் தொடர பட்டியலினத்தவருக்கு 100 சதவிகித முழு கல்வி உதவித் தொகை வழங்க ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தலைக்கு ரூ.5 கோடி கொண்ட நிதிக்குவையை (Corpus Fund) உருவாக்க அரசு ஆவன செய்யுமா? எனில், ஓராண்டுக்கு 4 பல்கலைக்கழகங்கள் என 5 ஆண்டுகளுக்குள் இதை நிறைவேற்ற அரசு ஆவன செய்யுமா?

35.    பட்டியலினத்தவர் நடத்தும் செய்தித்தாட்களுக்கும், காலமுறை இதழ்களுக்கும் அரசு விளம்பரம் தரக்கூடாது என்ற தடை இருப்பதை அரசு அறியுமா? எனில், அரசு தரும் விளம்பரங்களில் 20 சதவிகிதத்தை தலித் இதழ்களுக்குத் தர அரசு ஆணை பிறப்பிக்குமா?

36.    தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து இந்தியப் பணி அதிகாரிகளுக்கும் (IAS, IPS, IFS) மாவட்ட வருவாய் அதிகாரிகள், துணை ஆட்சியர்கள் போன்ற முதல் வகுப்பு (Group I) அதிகாரிகளுக்கும் பட்டியலின துணைத்திட்ம் (SCSP), வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (1989 PA Act), ஒதுக்கீடு விதிகள் (Reservation Rules) ஆகியன பற்றி ஆண்டுப்பயிற்சிகளை நடத்த அரசு உடனே ஆவன செய்யுமா?

அண்ணா மேலாண்மை நிறுவனம், பவானிசாகர் மாநிலப்பயிற்சி மய்யம், பஞ்சாயத்துகளுக்கான பயிற்சி மய்யம், தலைமைச் செயலகப் பயிற்சி மய்யம், மற்றும்திட்டக்குழு இவை யாவும் இந்தப் பொருள்கள் பற்றி பயிற்சி நடத்துவதைத் தடை செய்து வைத்துள்ளன என்பதையும் அரசு அறியுமா?

37.    தமிழ்நாடு அமைச்சரவையின் வரிசைப் பட்டியலில் (Warrant of Precedence) பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களை கடைசி 5 இடத்திற்கு மேல் வைக்கக்கூடாது என்ற மரபு இதுவரை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை இந்த அரசு அறியுமா? எனில், பட்டியலின அமைச்சர்களை முதல் 5 இடத்தில் வரிசை வைக்க இந்த அரசு முன்வந்து பட்டியலினத்தவருக்கு மாண்பு செய்யுமா?

38.    அரசு நடத்தும் தொழில்கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை தரப்பட்ட பின்னர் கட்டணம் கட்ட முடியாமையால் 2009 - 10 ஆம் ஆண்டு மட்டும் 250 பொறியியல் கல்லூரிக்கு இடம் கிடைத்த பட்டியலினத்தவரும் 5 மருத்துவக் கல்லூரிக்கு இடம் கிடைத்த பட்டியலினத்தவரும் கல்லூரிகளில் சேர முடியாமல் போனது அரசுக்குத் தெரியுமா? எனில், அவர்களுக்கு நிதி உதவி செய்ய அரசிடம் போதிய நிதி இல்லாமல் போனதா என்பதை அரசு விளக்குமா?

39.    பல ஆண்டு காலமாகத் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நடிகர் திரும்பத் திரும்ப ‘‘சண்டாளன், சண்டாளி, மாதாரி'' போன்ற வன்கொடுஞ்சொற்களைச் சொல்லி பட்டியலினத்தவருக்கு எதிராக வன்கொடுமை இழைத்துக் கொண்டு வருவதை அரசு அறியுமா? அதே போன்று திரைப்படப் பாடல்களிலும் இந்த வன்கொடுமை அரங்கேறி வருவதை அரசு அறியுமா? எனில், இவ்வன்கொடுமை இழைத்துவரும் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு ஆவன செய்யுமா?

40.    11ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்திற்காக க்எஇ தலைவர் தோராட் தலைமையிலான மய்ய திட்டக்குழு, பட்டியலினத்தவரின் வளர்ச்சிக்காக அளித்த அறிக்கைகளை தமிழ்நாட்டின் அனைத்து செயலர்களுக்கும், தலைமைச் செயலருக்கும், மாநிலத் திட்டக் குழுவிற்கும் அனுப்பி இருந்தும் - அனைவரும் அவ்வறிக்கையை இருட்டடிப்பு செய்துவிட்டது அரசுக்குத் தெரியுமா? எனில், அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அரசு ஆவன செய்யுமா?

41.    அண்ணல் அம்பேத்கர் படத்தை தமது அலுவலகத்தில் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள், செயலர்கள், தலைமைச் செயலர் ஆகியோர் மறுத்து வருவதை அரசு அறியுமா? எனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?

42.    சென்னை அடையாறு பகுதியில் அரசு அமைத்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு, இதுவரை பட்டியலினத்து அமைச்சர்களைத் தவிர வேறு அமைச்சர் எவரும் இதுவரை சென்று வணங்கியது இல்லை என்பதை அரசு அறியுமா? எனில், இதை மாற்றுவதற்கு அரசு முன்வருமா?

43.    அம்பேத்கர் பிறந்த நாளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் நடத்திச் சிறப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எதிர்த்து வருவதை அரசு அறியுமா? எனில், இதை மாற்ற அரசு முன்வருமா?

44.    பதவி உயர்வில் ஒதுக்கீடு தருவது குறித்து 4 மாதங்களுக்குள் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் (WP 13780/1998 & WP 14676 / 1996 Dt. 11.01.2007) இல் தீர்ப்பு வழங்கியும் அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தலைமைச் செயலர் தடுத்து வருவதை அரசு அறியுமா? எனில், உடனே கொள்கை முடிவை அறிவிக்க அரசு முன்வருமா?

45.    அனைத்து பஞ்சாயத்து நூலகங்களுக்கும் அரசு செலவில் புத்தகங்கள் வாங்கித் தரும் திட்டத்தின் கீழ், தமிழில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் படைப்புகளை வாங்கத் தடை இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? எனில், அனைத்து நூலகங்களிலும் தமிழில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் படைப்புகளின் தொகுதிகள் 37 எண்களும் வழங்கப்பட, அரசு ஆவன செய்யுமா?

46.    ஒவ்வோராண்டும் 20,000-க்கும் மேற்பட்ட பொறியியற் கல்வி இடங்கள் நிரப்பப் படாமல் காலியாக விடப்படுவது அரசுக்குத் தெரியுமா? எனில், அந்தக் கல்வி காலி இடங்களை பட்டியலின மாணாக்கருக்கு ரூ.10,000 என்கிற கட்டணத்தில் வழங்க, தனியார்க் கல்லூரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு முன்வருமா? அந்தக் கட்டணத்தை முழுமையாக அந்தக் கல்லூரிகளுக்கு வழங்கவும் அரசு முன்வருமா?

47.    அடிப்படைக் கட்டாயக் கல்வி மய்ய அரசினால் அடிப்படை உரிமையாக்கப்பட்டது போல, உயர்கல்வி பெறத் தகுதியான, 60 சதவிகித முதல் 80 சதவிகிதத்திற்கும் மேல்) மதிப்பெண்கள் பெறும் அனைத்துப் பட்டியலின - பழங்குடியின மாணாக்கருக்கும் உயர்கல்வி உரிமையாக்கப்பட அரசு ஆவன செய்யுமா?

48.    2009 - 2010 ஆம் ஆண்டு பட்டியலினத் துணைத்திட்டத்தில் ரூ.528 கோடி விடுபட்டதாக மய்யத்திட்டக்குழு கண்டுபிடித்து அறிவித்த தொகையை புதிய சட்டமன்ற கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா? இல்லையெனில், இந்தத் தொகை எப்படிச் செலவிடப்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்துமா?

49.    பட்டியலின மாணாக்கருக்கு வழங்கப்பட்டுவரும், உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகை, ஒவ்வோர் கல்வியாண்டும் செப்டம்பர் மாதத்திற்குமேல்தான் வழங்கப்பட்டு வருவதை அரசு அறியுமா? எனில், அதற்கு முதற்காரணம் நிதித்துறை ஒப்பளிப்பை, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரல் - மே திங்களிலேயே) வழங்க மறுத்துவருவதுதான் என்பதும் அரசுக்குத் தெரியுமா? எனில், கல்லூரி தொடக்க நாளன்றே கல்லூரிகளுக்கு கல்வி உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்யும் வண்ணம், முந்தைய மாதத்திலேயே உரிய தொகையை ஆதிதிராவிட நலத்துறைக்கு வழங்க, அரசின் நிதித்துறை முன்வருமா?

50.    தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்க்கு சூரிய - மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்க, நிலங்களை வழங்க அரசு முன்வருமா? மய்ய அரசின் நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டு சட்டமன்றத்திலும் விடைகாண வேண்டிய பொதுவான, ஒரு நீண்ட நாளையக் கேள்வி:

பட்டியலினத்தவர்களுக்கு மய்ய அரசின் பட்டியலினத் துணைத்திட்ட வழிகாட்டுதல்களின்படி, விகிதாச்சார ரீதியில், அணைத்துத் துறைகளுக்கு திட்ட ஒதுக்கீடு செய்யவில்லை. என்பது உண்மையா? (எ.கா. கீழ்க்காணும் துறைகள், மய்ய அரசிலும் சரி, மாநில அரசிலும் சரி, நிதிஒதுக்கீடே செய்வதில்லை) எனில், இதை மாற்ற அரசுகள் முன்வருமா? 2010 - 11 இல் இத்துறைகளில் பிரித்தறியும் திட்டங்களில் (Divisible Schemes) பட்டியலினத் துணைத் திட்ட ஒதுக்கீடு விகிதாச்சார ரீதியில் முழுமையாக வழங்க, தமிழக அரசு உறுதி செய்யுமா? வெறும் எண்களால் காட்டப்படும் (National Allocations) இந்த பட்ஜெட்டிலாவது தவிர்க்கப்படுமா?

மய்ய அரசிலும், மாநில அரசிலும் பட்டியலினத்தவர்களுக்காக பிரித்தறியும் திட்டங்களென்று, பட்டியலினத் துணைத் திட்டத்தின் கீழ் திட்ட ஒதுக்கீடு செய்ய முடியாதென்று சாதிக்கும் திட்டத் துறைகள்

மய்ய அரசின் துறைகள்

1     நிலக்கரி சுரங்கத் துறை

2    கனிம வள சுரங்கத் துறை

3    எக்கு உற்பத்தித் துறை

4    தரைவழிப் போக்குவரத்து

5    வேளாண்மை அறிவியல் மற்றும் கல்வி

6    ரசாயன மற்றும் எரிசக்தி ரசாயனத் துறை

7    வான்வழிப் போக்குவரத்துத் துறை

8    சுற்றுலாத் துறை

9    நுகர்பொருள் துறை

10   சர்க்கரை மற்றும் உணவு எண்ணெய்த் துறை

11    விநியோகத் துறை

12    அஞ்சலகத் துறை

13    இந்திய மருத்துவ இயல் துறை

14   பண்பாட்டுத் துறை

15    பொது நிறுவனத் துறை

16    கனரகத் தொழில் துறை

17    செய்தி ஒளிபரப்புத்துறை

18    அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை

19   அணு–எரிசக்தித் துறை

20   கடலாராய்ச்சித் துறை

21    விண்வெளி ஆராய்ச்சித் துறை

22   கம்பெனி விவகாரத் துறை

23   பொதுப்பணித் துறை

 

மாநில அரசின் துறைகள்

1     பாசனநீர் கட்டுப்பாட்டுத்துறை

2    மின்சக்தித் துறை

3    தொழில் மற்றும் கனிம வளங்கள் துறை

4    சாலைப் போக்குவரத்துத் துறை

5    அறிவியல், தொழில் நுட்பம்  சுற்றுச் சூழல் துறை

6    பொதுவானப் பொருளாதாரப் பணிகள்

7    கலை மற்றும் விளையாட்டுத் துறை

8    செய்தி விளம்பரத் துறை

9    நகர்பகுதி வளர்ச்சிப் பணி

10   மருத்துவத் துறை

11    தொழில் நுட்பக் கல்வித் துறை

12    நுகர் பொருள் வழங்கல் துறை

13    பொருளாதார ஆலோசனைகள்  புள்ளி விவரத்துறை

14   உயிரின வாழ்க்கைச் சூழலும் சுற்றுச் சூழலும்

15    அறிவியல் பணிகளும் ஆராய்ச்சியும்

16    நடுத்தர மற்றும் பெருந்தொழில்கள் துறை

17    கிராம மற்றும் சிறுதொழில்கள் துறை

18    சுரங்கவியல் மற்றும் உலோகவியல் தொழில்கள் துறை

19   மரபுசாரா– நவீன எரிசக்தி ஆதாரத் துறை

20   பாசனப் பகுதி மேம்பாட்டுத் துறை

21    நிலச் சீர்திருத்தத் துறை

22   பால்பண்ணை வளர்ச்சித் துறை

23   ஆராய்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சித் துறை

 

தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் இனத்தவர் பெயர்களை ‘ர்' விகுதியோடு அரசு வெளியிடுமா?

ஆதி ஆந்திரர்

ஆதி திராவிடர்

ஆதி கர்நாடகர்

அஜிலர்

அருந்ததியர்

அய்யனவர்

பைரர்

பகுடர்

பாண்டி

பெல்லாரர்

பரதர்

சக்கிலியர்

சலவாடி

சமார், முக்கி

சண்டாளர்

செருமார்

தேவேந்திர குலத்தார்

தோம்பரர்

தொம்பர்

கோதகளியர்

கோத்தர்

கோட்டா

கோசாங்கி

ஹலையர்

ஜாக்கலியர்

ஜம்புலுவர்

கடையர்

கக்காலர்

காலடி

கணக்கர்

கரிம்பாலர்

கவரர்

கோலியர்

கூசா

கூத்தர்

குடும்பர்

குறவர்

மாதாரி

மாதிகா

மைலா

மன்னர்

மாவிலர்

மொகர்

முண்டாளர்

நாளகேயவர்

நாயõடியர்

பாடணர்

பகடையர்

பள்ளர்

பல்லுவர்

பாணர்

பஞ்சமர்

பன்னாடியர்

பன்னிலாடியர்

பறையர், சாம்பவர்

பறவர்

பாதியர், சேரமார்

புலையர்

புதிரை வண்ணார்

ரானேயர்

சமகரர், சாம்பர்

சபரி, செம்மார்

தாண்டர்

தோட்டி

திருவள்ளுவர்

வல்லோர்

வள்ளுவர்

வண்ணார்

வதிரியர்

வேலர்

வங்கனுர்

வேப்பூர் பறையர்

வேடர்

வெட்டியார்

வேட்டுவர்

(தலித் முரசு மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It