கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த மயிலாப்பூர் திராவிட இளைஞர் கழகத்தின் சார்பாக பேசும்படி எனக்கு வாய்ப்பு அளித்த செயலாளர்களுக்கு எனது நன்றி. வரவேற்றுப் பத்திரம் வாசித்தளித்து புகழ்மாலை கூறியதற்காகவும் எனது நன்றி. அதிலே கூறியிருக்கிற புகழுக்குத் தகுதியற்றவன் ஆனாலும் உங்களுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடக்க முயற்சிக்கிறேன். இவ்வளவு ஆடம்பரமாக பணம் செலவு செய்து பூமாலைகள் போடுவதைவிட கருப்புத் துணியாவது போடலாம். முதன் முதலிலே இந்த இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். இளைஞர்களாகிய நீங்கள் கட்டுப்பாடாக இருந்து ஒழுங்காய், மற்றவர்கள் நம்மைப் பார்த்து மதிக்கும்படி நடந்து கொள்ளுங்கள். வெற்றி ஒலி முழங்குகிற காலங்களிலும், கழகக் கொள்கை ஒலி முழங்குகிற காலங்களிலும், கேட்கிறவர்கள் இதற்கு வசப்படும்படியாக இணங்கும்படியாக இருக்க வேண்டும் மற்றவர்கள் மன வருத்தம் அடையும்படியாகவோ வெறுப்பு அடையும் படியாகவோ ஆத்திரப்படக் கூடியதாகவோ இருக்கக் கூடாது. வேண்டுமானால் அறியாமை ஒழிய வேண்டும், மூட நம்பிக்கை ஒழியவேண்டும் என்பது போன்ற சொல்லைச் சொல்லுங்கள். எப்பொழுதும் 'வாழ்க' என்றே முழக்கம் செய்யுங்கள்.

ஏன்? இப்பொழுது நாம் நல்ல வெற்றியடைந்து வருகிறோம். யாரையும் நாம் வைது வெற்றியடைய வேண்டியதில்லை. நம்முடைய குறைபாடுகளைச் சொல்வதன் மூலமே, நம்மை நொந்து கொள்வதன் மூலமே இனி நாம் வெற்றியடையப் போகிறோம். சிறிது காலமாக நம் மக்களுக்குச் சிறிதாவது மான உணர்ச்சி உண்டாகும்படி செய்து வந்திருக்கிறோம். இது வளர்ச்சியடைய வேண்டும். எதிரிகளும் திருந்தும்படிச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும். இதில் நம்பிக்கை வைத்து ஒழுங்காய் நடக்க வேண்டும். நமது கழகக் கொள்கையைப் பற்றிய போராட்டம் நமக்குள்ளேயே நடக்கக்கூடாது. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு எப்பொழுது
கழகத்தில் சேர்ந்து விட்டோமோ அதற்குமேல் அந்தக் கொள்கையைப் பற்றிச் சந்தேகப்படக் கூடாது. தலைவர்களை உண்மையாய் பின்பற்ற வேண்டும். சுயநலத்துக்காக வஞ்சகக் கருத்தோடு கட்சிப் போர்வையில் இருக்கக் கூடாது. தலைவரைக் குறைகூறிக் கொண்டு வைது கொண்டு கட்சிக்குள்ளேயே கலகம் செய்யக்கூடாது. இது எல்லாக் கட்சிக்கும் உள்ள பொதுவான விதி.

தோழர்களே சிந்தித்துப் பாருங்கள். கட்சிக்குள்ளேயே கலக உணர்ச்சியும் கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்பட்டால், கட்சி கலகலத்து விடாதா? தோழர்களே! நம்முடைய நிலைமை இன்றைய தினம் மிக மிக பரிதாபகரமான தன்மையிலேயே இருக்கிறது. நாம் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறோம். நமக்கு ஏற்படும் தொல்லைகள் ஏராளம். நமது கட்டுப்பாட்டைத் தடுக்கும் சூழ்ச்சிகள் ஏராளம் நம்முடைய திட்ட நடப்பைத் தடுக்கும் காரியங்கள் ஏராளமாய் நடைபெறுகின்றன. வெள்ளையாகப் பேசுகின்றேன். நமக்கு யாருடைய ஆதரவு இருக்கிறது? ஒரு சர்.ராமசாமி முதலியார், சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்ற அறிவாளிகளுடைய செல்வான்களுடைய ஆதரவு உண்டா? எந்தப் பிரபுக்கள் மிராசுதார்கள் நம்மை ஆதரிக்கிறார்கள்? எந்தப் பத்திரிகை நம்மை ஆதரிக்கிறது? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். யாரையும் குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை.

கார்ப்பரேஷனில் உள்ள ஒரு பார்ப்பனன் ஆயிர ரூபாயைத் திருடிவிட்டால், திருவாங்கூரிலுள்ள திவான் கவர்னருக்குச் சிபாரிசு செய்ய வருகிறார், நமக்கு என்ன ஆபத்து வந்தாலும் கேட்க நாதியில்லை. நமது கொட்டகையைக் கொளுத்தினார்கள். நம் தோழர்களை அடித்தார்கள். கண்களைக் குத்தினார்கள். சட்ட சபையிலே இதைப்பற்றி யாராவது கேட்டார்களா? சட்ட சபையிலே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகள் இல்லையா? யாராவது ஒரு வார்த்தை கேட்டார்களா? நமது நிலைமை அவ்வளவு நாதியற்றதாக, கதியற்றதாக இருக்கிறது. பத்திரிகை வசதி யாராவது உண்டா? நமது செய்தியை ஒரு பத்திரிகைக் கூட போடுவதில்லை. இல்லை பத்திரிகை ரிப்போர்ட்டர்களாவது நம்மைப் பற்றிச் சரியாக எழுதுகிறார்களா? அவர்கள் இங்கே எதற்காக வருகிறார்கள் என்றால், நமது கூட்டத்தில் கல், செருப்பு விழுந்ததா? கலகம் நடந்ததா என்பவைகளைக் காணவும், எழுதவும் தான் வருகிறார்கள். இந்த ஊரில் எப்படி இருந்தாலும் வெளியூர்களிலேயுள்ள ரிப்போர்ட்டர்கள் அப்படித்தான், நம் இயக்கப் பத்திரிகைகள் என்பவைகளால் நமக்குத் தொல்லை தான் அதிகம். எனவே நமக்கு நாதியுண்டா? நமக்குள்ள குறைபாடுகள் அவ்வளவு இருக்கின்றன. இவைகளுக்கிடையே தான் நாம் வளரவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்கத்தில் தொண்டாற்றி வருகிறோம். இயக்கமும் வளர்ந்து வருகிறது.

தோழர்களே, நமது திராவிட கழகம் என்பது கட்சியல்ல. காங்கிரசைப் போல் நமது கழகம் கட்சியல்ல; இயக்கமாகும். கட்சி என்பது தோல்விக்கும், வெற்றிக்கும் கட்டுப்பட்டது. இயக்கம் என்பது இவைகளுக்கெல்லாம் கட்டுப் பட்டதேயல்ல. ஒரு தனி மனிதனுடைய உள்ளத்தில் உணர்ச்சி யிருக்கும் வரையில் அது இருந்துதான் தீரும்.

ஜஸ்டிஸ் கட்சி ஒரு கட்சியாயிருந்தால் தோல்வி நிலைக்கு வந்தது. அதேபோல காங்கிரஸ் இப்போது வெற்றியடைந்து பதவியேற்கும் நிலைமைக்கு வந்துங்கூட அது சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றே சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வைசியராய், முதன் மந்திரி, கவர்னர் போன்ற பதவிகளும் பட்டங்களும் காங்கிரஸ்காரர்கள் காலடியிலே வந்து விழுகின்றன என்றாலும் அவர்கள் தலைவர்களே சொல்கிறார்கள் "இனி காங்கிரஸ் இருக்க வேண்டியதில்லை. கலைத்துவிடலாம்" என்று, அந்த நிலைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் கட்சி என்பது அழியவேண்டியது தான். ஆனால் நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இயக்கம் ஒழிய வேண்டியதில்லை. ஒரு மனித சமுதாயம் உள்ள வரையில் அது பணியாற்றியே தீரும்.

நமது இயக்க வேலைகளை, நாம் மந்திரிப் பதவியடைவதன் மூலமே அடையமுடியும் என்று கருதுவதும் பிசகு. ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தோல்வியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளானார்கள். அதுபோல காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வெற்றியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளாகி வருகிறார்கள். இப்பொழுது பார்க்கிறோமே தினம் தினம் வேடிக்கையை, ஹோம் ரூல் கட்சி என்ன ஆனது? ஆங்காங்கே கிளை ஸ்தாபனங்களை ஏற்படுத்தி நல்ல அமைப்பு அமைந்ததிலே அன்னிபெசன்ட் அம்மையார் பேர் எடுத்தார்கள். ஸ்தாபன ரீதியாக வேலை செய்தார்கள். சி.பி. ராமசாமி அய்யர் போன்ற பார்ப்பனர் எல்லாம் பெரும் பெரும் பதவிகளை அடைந்தார்கள். இப்பொழுது அந்தக் கட்சி எங்கே இருக்கிறது? அழிந்துவிட வில்லையா? ஆனால், இயக்கம் அப்படியல்ல. அது தன்னுடைய காரியத்தை பதவியின் மூலம் தான் செய்ய முடியும் என்பதில்லை. மக்களுடைய உள்ளத்தில் கருத்துக்களைப் புகுத்தி வைப்பதன் மூலம் தான் அது வெற்றி அடைவது.

மற்றும் எதைச் சொன்னால் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள், எதைச் சொன்னால் மக்களுடைய ஆதரவு கிடைக்கும். எதைச் சொன்னால், மக்களுடைய ஆதரவு கிடைக்காது என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து கட்சி என்பது பணியாற்றும். ஆனால், நாம் இயக்கத்தவர்களாகிய நம் மக்களைத் திருத்த வேண்டும். அவர்களுடைய மனதை மாற்ற வேண்டும். அவர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். அவர்களுடைய புத்தி திருந்த வேண்டும். அவர்கள் உள்ளத்தில் மாறுதல் அடைய வேண்டும் என்று வேலை செய்பவர்கள் அப்பொழுதுதான் நமது லட்சியம் வெற்றி அடையும்.

மக்களுடைய ஆதரவுக்காக நாம் கவலைப்பட மாட்டோம். மக்கள் ஏற்றாலும் வைதாலும் கவலைப்படாமல் இருப்போம். நம்மைப் பொறுத்தவரையில் நம் பின்னாலே மக்கள் வரவேண்டுமே தவிர, பாமர மக்கள் பின்னாலே ஓடுவது இல்லை. கல்லடி பட்டாலும் சரி, வெற்றியடைந்தாலும் சரி, நமக்குப் பட்டதைச் சொல்லியே தீருவோம். அப்படி நாங்கள் எங்களுடைய பின்னாலேயே மக்கள் பின் தொடரவேண்டும் என்று வேலை செய்தனாலேயே தான், இப்பொழுது எங்களுக்கு ஓரளவு வெற்றி கிடைத்து வருகிறது.

எங்களைக் கல்லால் அடித்தவர்கள் எல்லாம், "அப்போது உங்கள் மீது கல் போட்டது ஒரு கை; இப்போது உங்களைக் கூப்பிடுவது இரு கையால்", என்று கூப்பிட்டு அழைக்கிறார்கள். ஓடி ஓடிக் காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு ஆதரவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் உள்ளத்தில் உள்ள பல தவறுதல்களை, மக்களுடைய மனதில் படிந்துள்ள மாசுகளை, மக்களுடைய அறியாமையைத் திருத்தி அவர்களுடைய உள்ளத்தையே திருப்பும் புரட்சிகரமான வேலையையே நாம் லட்சியமாகக் கொண்டிருக்கிறோம். நாம் திராவிடர்கள் என்பதையும், நமக்கு இருந்ததை நம் எதிரிகள் மறைத்து விட்டதை ஞாபகப்படுத்தி நாம் யாவரும் திராவிடர் உணர்த்துவதும் நமது திராவிடர் கழக வேலை திராவிடர்கள் என்றால், சில உரிமைகளுக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள். இழிவுகளைத் தாங்குபவர்கள் என்பது கூடவே ஞாபகத்துக்கு வருகிறது. திராவிடர்கள் என்றால், திராவிடர்கள் எப்படி இருந்தார்கள்? திராவிடனுடைய உரிமை என்ன? திராவிடனுடைய தனிப் பண்புகள் என்ன? திராவிடனுடைய நாகரிகம் எப்படி இருந்தது? என்பவைகளையும் உணரும் தன்மை கூடவே வருகிறது.

திராவிடன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட்டால், வேறு மாறு பெயர் சூத்திரன் என்று கூறிக் கொள்ளத்தான் வேண்டும். சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம். திராவிடர் கழகம் என்றால் இன்று சூத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கழகம் என்றுதான் அர்த்தம். ஏன் சூத்திரர்களுக்கும் கழகம் என்று கேட்டால், அந்த இழிவு நீங்குவதற்காகக் கழகம் வைத்துக் கொண்டிருக்கிறோம். சூத்திரர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறோம். அதனால் ஏற்படும் இழிவை ஒழிக்க விரும்புகிறோம் என்பதற்காகவே திராவிடர் கழகம் இருக்கிறது.

பிராமணர்கள் என்று கூறிக் கொள்ள பிராமணர்கள் பெருமைப்படுகிறார்கள். ஆகையால், அவர்கள் பிராமணர்கள் சங்கம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவே, இந்தக் குறைபாடுகள் ஒழியவேண்டும். சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனன் என்ற தன்மைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

நமது முன்னேற்றத்துக்கு இருந்து வருகிற தடைகள் எல்லாம் நீங்க நமக்கு மனிதத் தன்மை ஏற்பட வேண்டும். நமது அறியாமை ஒழிய வேண்டும்; இதற்குப் பாடுபடவே நாம் இருக்கிறோம். நம்மைத் தவிர வேறு யாரும் இன்று இவ்வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் சூத்திரராய் இருப்பதற்குக் காரணம் ஹிந்து மதம். ஆகையால் அது ஒழிய வேண்டும் என்கிறோம். வேறு மார்க்கம் இருந்தால் சொல்லுங்கள். நம்மைச் சூத்திரனாக்கியது இந்த இந்து மதமும், இந்து மதக் கடவுள்களுமாதலின் அவை ஒழிய வேண்டும் என்கிறோம். இதில் என்ன பிசகு. சூத்திரர்கள் இருப்பதற்கு இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்து குழவிக் கற்கள் சாமிகள் தான் காரணம். இவைகளை ஒழிக்காமல் இருப்பது மானமுள்ள ஒருவன் செயலாகுமா? எண்ணிப் பாருங்கள். இவை ஒழிந்து ஒழுக்கமுள்ள கடவுள், எல்லோரையும் ஒன்றாகவே பாவிக்கும் கடவுள் இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

வேறு யார் இவைகளையெல்லாம் சொன்னார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், விவேகானந்தர்கள், மகாத்மாக்கள் என்பவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வார்த்தை இந்தப் பேதங்கள் எல்லாம் ஒழியவேண்டும், என்று சொன்னார்களா? இவைகளைச் சொல்லாததற்காக இவர்கள் எல்லாம் "சாமிகள்" ஆனார்கள்; இவைகளைச் சொன்னதற்காக நாங்கள் "பாவிகள்" ஆனோம். வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன் தோழர்களே, எல்லாருடைய இழிவைப் போக்கத்தான் நாங்கள் போராடுகிறோம்.

(தந்தை பெரியார் - "குடிஅரசு" 30.05.1947)