இந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் ஒரு பொங்கல் விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாக, அமைப்புகளில் பொறுப்பாளராகப் பணியாற்றிய காலங்களில்கூட பொங்கல்விழாமீது எனக்கு மாற்றுக்கருத்துத்தான் இருந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக, கிராமங்களோடு மட்டுமே தொடர்புடையவன் என்பதால் பொங்கல் விழாக்களின் போக்கை நேரடியாக அறிய முடிந்தது.

சேரியில் தனிப்பொங்கல்; ஊரில் தனிப் பொங்கல். சேரியில் தனி ஜல்லிக்கட்டு; ஊரில் தனி ஜல்லிக்கட்டு. சேரியிலும், ஊரிலும் சமையலறையில் பெண்கள் மட்டும்; ஜல்லிக்கட்டில் ஆண்கள் மட்டும். இவை தான் தமிழ்ப்பண்பாட்டு அடையா ளங்கள், பாரம்பரியங்கள் என்றால் - இவற்றைத்தான் மீட்டெடுக்க வேண்டும் என்றால்… நாங்கள் தமிழர்கள் அல்ல! இவை இந்துப் பண்பாடு என்றால் நாங்கள் இந்துக்கள் அல்ல! இல்லை, இல்லை; இவை திராவிடர் பண்பாடுகள்தான் என்றால்… நாங்கள் திராவிடர்களும் அல்ல! இவற்றையெல்லாம் மாற்ற முயற்சிக்காமல், புத்தர் சிலைக்கு மெழுகுவர்த்தி களையும், ஊதுபத்திகளையும் ஏற்றிக் கொண்டு மட்டும் இருந்தால் நாங்கள் பெளத்தர்களும் அல்ல!

நல்ல நேரம் பார்த்து, பொங்கல் பொங்கி வழியும் திசையையும் பஞ்சாங்கப்படிச் சரிபார்த்து, பானையில் பச்சை ஓலையைக் கட்டி - மின்சார அடுப்புகளும், கேஸ் அடுப்புகளும் கண்டுபிடிக்கப் படாத காலத்தில் சமைக்கப் பயன்படுத்திய கருங்கல், செங்கல் அடுப்புகளைப் பயன்படுத்தி - அலுமினிய, பித்தளை, இரும்பு, காப்பர் பாட்டம் பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பயன்படுத்தப் பட்ட மண்பானைகளைப் பயன்படுத்தி - இந்துக் கடவுள்களின் முன் படைக்கப்படும் பொங்கல் எந்த வகையில் தமிழ்ப் பண்பாட்டு அடையாளமாகும்?

நல்ல நேரமும், பஞ்சாங்கமும் பார்ப்பது இந்துப் பண்பாடு. இந்தியா முழுவதும் வேட்டி, சேலை தான் உயர்ந்த ஆடையாக உள்ளது. சங்கராச்சாரிகள் ‘தூய இந்துக்கள்’ என்பதற்கு அடையாளமாகப் பரிந்துரைப்பது வேட்டி, சேலைகளையே. சமத்துவப் பொங்கல் என்று எவராவது நடத்தினாலும், அதிலும் சமைப்பது பெண் மட்டும் தானே? இந்து - இந்திய - ஆணாதிக்கப் பண்பாடாக மீண்டும் மாறியுள்ள பொங்கலைப் புறக்கணிப்போம்!

இதுதான் பொங்கலைப் பற்றிய எனது நிலை என்றாலும், எனக்கு அழைப்புவிடுக்கப்பட்ட பொங்கல் விழாவில், தோழர் அம்பேத்கரின் ‘நான் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன்’ என்ற புரட்சி கரமான நூலை அறிமுகப்படுத்திப் பேசவேண்டும் எனத் தோழர்கள் கூறியதால், விழாவுக்குச் சென்றேன்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள ‘கெளாப்பாறை’ என்ற கிராமத்தில் தான் விழா. காதல் இளவரசனின் நத்தம்காலனி, நாய்க்கன் கொட்டாய்களுக்கு அருகில் உள்ள ஊர் அது. ஊரின் நுழைவாயிலில் அந்தத் தொகுதியின் எம்.பி யான டாக்டர் அன்புமணி, சந்தனக்கட்டை வீரப்பன் இருவருக்கும் மிகப்பெரிய கட் அவுட். ஊரே விழாக் கோலம் கொண்டிருந்தது. முழுக்க முழுக்க வன்னியர் களின் அடக்குமுறைகளும், ஆதிக்கமும் கொண்ட ஊர் எனப் புரிந்தது. அந்த இடத்தில் அம்பேத்கரின் நூல் அறிமுகம் என்று நினைத்து மிகவும் மகிழ்ந்தேன்.

சில நொடிகளில், விழாக்கூட்டத்தைக் கடந்து வண்டி சேரியை நோக்கிச் சென்றது. இது வன்னியர் களின் பொங்கல். நமது விழா சேரிப் பொங்கலாகத் தனியாக நடக்கும். அங்குதான் நூல் அறிமுகம் என்றார்கள். விழா நடந்தது. முடிந்தது. மீண்டும் என்னை அரூர் நகருக்கு வழியனுப்ப, எனது காரிலேயே ஒரு தோழர் உடன்வருகிறேன் என்றார். “வேண்டியதில்லை தோழர் வந்த வழிதானே? தெரியும்” என்றேன்.

“இல்லை தோழர் அவங்க ஏரியாவக் கடந்து போகணும்...ஏதாவது சிக்கல் ஆகிடக்கூடாது” எனக்கூறினார். சரி உள்ளூரைப் பற்றி அவர்களுக்குத் தான் தெரியும் என்று சம்மதித்தேன். வன்னியர்கள் பகுதிக்கு கார் சென்றது. 20 அடி அகலமுள்ள பொதுப்பாதையில் நட்டநடுவே இரண்டு டூவீலர் களை நிறுத்தியிருந்தனர். அந்த வண்டிகளை அப்புறப்படுத்த, காரில் இருந்த கோவைத் தோழர்கள் இறங்க முயற்சித்தனர். அதற்குள் அந்த உள்ளூர்த் தோழர் பதட்டத்துடன், “வேண்டாம் தோழர்...பிரச்சனை ஆயிடும்...நாம் வேறு வழியாப் போய்விடலாம்” எனக்கூறி, பாதையே இல்லாத காட்டுவழியில் மெயின்ரோட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வன்னியர்கள் வாழும் பகுதியில் வீம்பாக, பொதுவழியை அடைத்துக்கொண்டு நிற்கும் இரு வண்டிகளை அப்புறப்படுத்தக்கூட அச்சப்படும் மனநிலையில் அங்குள்ள பறையர்கள் வாழ் கிறார்கள். ஊரைச்சுற்றி, வன்னியர்களின் கிராமங் களும், ஒரு கவுண்டர் கிராமமும் சூழ்ந்துள்ளது. ஓட நினைத்தால்கூட ஏதோ ஒரு பிற்படுத்தப்பட்டவரின் ஊருக்குள் தான் ஓடமுடியும் என்பது தான் நிலை. வன்னியர், கவுண்டர்களின் வயல்களை நம்பித்தான் கெளாப்பாறை சேரி மக்களின் வாழ்க்கை இருக்கிறது.

சேரிப்பகுதியில் நூலகம் இல்லை. மருத்துவ வசதி இல்லை. குடிநீர், மின்சார, கழிப்பிட வசதிகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிச் சுடுகாடு. கிடைக்கும் சொற்பக்கூலிக்காக, அந்த வன்கொடுமைக் காட்டில் வாழ்ந்துவருகிறார்கள்.

நாய்க்கன் கொட்டாய் தாக்குதல் போன்று நடந்து விடக்கூடாது என்ற அச்சம், தொழிலும் வாழ்வாதாரமும் முடங்கிவிடும் என்ற அச்சம். இவற்றின் காரணமாக, கெளாப்பாறைச் சேரி மக்கள், தினமும் ஆதிக்க நடவடிக்கைகளை நேரடியாகச் சந்தித்தாலும், அவற்றை மனதுக்குள் போட்டு அழுத்திக்கொண்டு, குமுறிக்கொண்டே வாழ்கிறார்கள். அங்கே தீண்டாமைச் சுவர்கள் இல்லை. முள்வேலி முகாம்கள் இல்லை. ஆனால், அந்த இரண்டையும் விடக் கொடுமையாக, மனதிலேயே, சிந்தனையிலேயே ஒரு அச்சத்தையும், தடையையும், வேலியையும் உருவாக்கி வைத் துள்ளது இந்துமதம்.

சேரியில் பலர் அச்சமான மனநிலையிலும், பலர் அடிமை மனநிலையிலும் வாழ்ந்துவரும் நிலையில், அதை எதிர்த்துக் களமாட வேண்டிய முற்போக்கு அமைப்புகள் எதுவும் அப்பகுதியில் இயங்கவில்லை. இன்னும் நுழையவே இல்லை. விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு மட்டும் உள்ளது. அங்குள்ள இளைஞர்களிடம் இயக்குநர் பா.இரஞ்சித் குறித்து ஒரு நல்ல நம்பிக்கை நிலவுகிறது.

நான் சென்றிருந்த பொங்கல் விழாவுக்காகக் கெளாப்பாறை ஊரின் பேருந்து நிறுத்தத்தில், விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. அதில் தோழர் பெரியார், தோழர் அம்பேத்கர் இருவரது படங் களும் வரையப்பட்டிருந்தன. இருவரது ஓவியங் களையும் கரியைப் பூசி அழித்துவிட்டனர் அப்பகுதி வன்னியர்கள். ஆனால் விழா விளம்பரம் அப்படியே உள்ளது.

பெரியாரைப் பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவராகவும், காந்தி, நேரு போன்ற ஒரு பொதுத்தலைவராகவும் காட்ட முயற்சிக்கும் சில புதிய மேதைகள் கெளாப்பாறை போன்ற கிராமங்களுக்குச் சென்றுவர வேண்டும்.

கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில், சேரிப்பகுதியின் சில இளைஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான அன்புமணிக்கே வாக்களித்துள்ளனர். மிரட்டி வாக்களிக்க வைத்தார்களா எனத் தோழர்களிடம் கேட்டேன். இல்லை. இங்கிருக்கும் “எங்களுக்கான இயக்கங்கள்” என்று நாங்கள் நம்பிய அமைப்புகளைவிட எதிரியே பரவாயில்லை என முடிவுசெய்துதான் அன்பு மணிக்கு வாக்களித்தோம் மனம் நொந்து பேசினர்.

ஜாதி ஒழிப்புப் பேசிக் கொண்டிருக்கும் அமைப்புகளைவிட - தங்களது பக்கத்து ஊர் களையே கொளுத்திய வன்கொடுமைக்காரர் களுக்கே ஓட்டுப் போடலாம் என்று முடிவெடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அமைப்புகள் இதைக் கவனத்தில் கொண்டு சுயவிமர்சனத்தோடு பணி யாற்ற வேண்டும்.

அன்று அந்த ஊரில் அய்ந்து இடங்களில் பொங்கல் விழாக்கள் நடந்தன. வன்னியர் பொங்கல், பறையர் பொங்கல், சக்கிலியர் பொங்கல், மலைவாழ் மக்களில் உள்ள இரண்டு ஜாதியினருக்கும் தனித்தனியாகப் பொங்கல். 5 ஜாதிகளுக்கு 5 பொங்கல் விழாக்கள். அங்குள்ள மலைவாழ் மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களைவிட ஜாதி ஆதிக்கச் சிந்தனையில் வாழ்கின்றனர்.

சக்கிலியர்களின் நிலைதான் அங்கே மிகவும் கொடுமையானது. வன்னியர்களுக்கு எதிராகப் பறையர்களோடு ஒன்றிணைந்து போராடும் நிலை அங்கு உருவாக வாய்ப்பில்லை. அதுகூட நமது பேராசை என்று வைத்துக்கொள்வோம். பறையர் களோடு இணைந்து ஒரு விழாவைக்கூடக் கொண்டாட முடியவில்லை என்பது தான் இந்து மதப் பிரிவினைவாதத்தை நமக்கு முகத்தில் அறைந்து புரியவைக்கிறது.

பட்டியலின மக்களும் உட்ஜாதிகளை மறந்து இணைந்து பொங்கல் கொண்டாட முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களும் உட்ஜாதிகளை மறந்து இணைந்து விழாக் கொண்டாடமுடியவில்லை. இந்த நிலைதான் இந்து மதத்தின் ஆதிக்க வாதிகளான பார்ப்பனர்களின் திட்டமிடப்பட்ட - நிறுவனப் படுத்தப்பட்ட சுரண்டல் இயந்திரம். சுரண்டல் அமைப்பு.

எனவே, முதன்மைக் காரியமாக, இந்து மதத்தைத் தகர்க்காமல் வேறு எந்த ஆதிக்கத்தையும் தனியாக, எதிர்த்துப் போராடி வென்றுவிட முடியாது. சாதி ஒழிப்பே சமூக விடுதலை என்பதற்கு மாற்றாக, “இந்து மத அழிப்பே சமூகவிடுதலை” என்ற முழக்கத்தை முன்னெடுப்போம்.

Pin It