யார் தமிழர் என்று அவ்வப்போது சர்ச்சை எழுந்து கொண்டிருக்கிறது. இனத்துக்கான வரையறையை பலர் பல்வேறு விதமாக வைக்கிறார்கள். ஓர் இனக்குழுமம் என்றால் என்ன என்று ஒரு சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை.

Tamil flagவரலாற்றில் தோன்றிய இனக்குழுக்களை அறிவியலாளர்கள் ஆராய்ந்து, அவர்கள் எது போன்ற வரையறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கற்று, அதிலிருந்து பொதுவான காரணிகளை எடுத்து இனக்குழுக்கான வரையறையை உருவாக்குகிறார்கள். இந்த வரையறை வரலாற்றில் தோன்றிய இனக்குழுக்களுக்கு பொதுவாக பொருந்துவதால், அவ்வரையறை அக்குழுக்களின் வளர்ச்சிக்கும் தற்காப்புக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அக்குழுக்கள் எப்பொழுதோ அழிந்திருக்கும்.

சமூகவியலை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான மேக்சு வேபர் (Max Weber) அவர்கள் ஓர் இனக்குழுமத்துக்கு வைத்த வரையறையை இன்னும் யாரும் விஞ்சவில்லை என்பது சமூகவியலாளர்களின் பொதுவான கருத்து. அவர் கூறுவது என்னவென்றால், ஓர் இனக்குழு என்பது அம்மக்களால் ஒரு பொதுவான மரபுவழியில் (Common descent) வந்தவர்கள் என்று நம்பிக்கையின் அடிப்படையில் கருதப்படுகிறது, மாறாக உண்மையான இரத்த உறவினால் அல்ல. சுருக்கமாகச் சொல்லப் போனால் ஓர் இனக்குழு என்பது ஒரு பெரிய கற்பிதக் குடும்பம் (Imagined Family)”[1]. உதாரணமாக யூதர்கள் தங்களை பைபிளில் வரும் ஆபிரகாம், ஐசக்கு ஆகியோரின் வழித்தோன்றல்களாகப் பார்க்கின்றனர். யூதர்களில் வெள்ளையரும் உண்டு, ஆப்பிரிக்கர்களும் உண்டு. குரோசியர்கள் இடைக்காலத்தில் தோன்றிய ஒரு ஐந்து சகோதரர்களின் வழித்தோன்றலாகப் பார்க்கின்றனர். இவற்றை எல்லாம் உண்மை என்று நிறுவ முடியாது, எல்லாம் கற்பிதங்களே. அந்த கற்பிதங்களின் அடிப்படையிலேயே இனக்குழுக்கள் தோன்றுகின்றன.

ஓர் இனக்குழு மொழியின் அடிப்படையில் அமையலாம், மதத்தின் அடிப்படையில் அமையலாம், அல்லது குலத்தால் (race) அமையலாம். இதை அனைத்து சமூகவியலாளர்களும் ஏற்றுக்கொள்ளும் பார்வை அல்ல. ஆனால் இவை அனைத்தும் ஒரே மாதிரியான உளவியலைக் கொண்டதால், அவை ஒரே மாதிரியான அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.[1]

ஒருவர் பேசும் மொழியையோ அல்லது மதத்தினையோ வைத்து மட்டும் அவர்கள் இந்த இனம் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் அவை மட்டும் இனத்தை தீர்மானிப்பது அல்ல, அவற்றிற்கும் இனத்திற்கும் தொடர்பில்லாமலும் இருக்கலாம். ஒருவர் எந்த இனம் என்பதைப் பெரும்பாலும் அவர் தான் எந்த இனம் என்று நினைக்கிறார் என்பதும், ஓரளவு மற்றவர்கள் அவர் எந்த இனம் சார்ந்தவர் என்று நினைக்கிறார்கள் என்பதையும் பொறுத்தே அமைகிறது. ஓர் இனக்குழுவில் உள்ள மக்கள், ஒருவரை ஒருவர் அக்குழுவின் அங்கத்தினர் என்று அங்கீகரிக்கின்றனர். சிலநேரம் அடையாளங்களில் குழப்பங்கள் ஏற்படும். உதாரணமாக 1930-இல் ஜெர்மனிய யூதர்கள் தங்களை ஜெர்மனியர்களாகக் கருதினார்கள், ஆனால் பெரும்பான்மையான ஜெர்மனியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அது முடிவில் இனப்படுகொலையில் முடிந்தது. இன்னொரு உதாரணம், இன்று ஈழத்தில் தமிழ் பேசும் இசுலாமியர்கள் தங்களை தமிழர்கள் என்ற அடையாளப் படுத்தாமல், வேறு இன அடையாளத்தைக் கொண்டுள்ளனர். ஒரு குழுவினர் அவர்களின் அடையாளம் என்ன என்று நினைக்கிறார்களோ, அதுதான் அவர்களின் அடையாளம்.[1]

ஓர் இன அடையாளம் என்பது வரலாறு மற்றும் பண்பாட்டின் வழியாக கற்பிதங்களின் துணையோடு உருவாக்கப்படுகிறது. இன அடையாளம் என்பது மாற்ற முடியாதபடி கல்லில் செதுக்கப்பட்டது அல்ல. இன அடையாளம் என்பது நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டது. அறிவுசீவிகளும் அரசியல்வாதிகளும் வரலாற்றை புதிய பார்வையுடன் அணுகி புதிய அடையாளத்தை முன் வைப்பர். உதாரணமாக திராவிட இயக்கம் திராவிடர் என்ற அடையாளத்தை முன்வைத்தது. இப்பொழுது சிலர் யார் தமிழர் என்று ஒரு புதிய வரையறையை வைக்கிறார்கள். முடிவில் எந்த அடையாளம் மக்களால் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப் படுகிறதோ, அதுவே புதிய அடையாளமாக மாறி நிற்கும். ஆனால் அதே நேரம் வரலாற்றிலிருந்து விலகி, பண்பாட்டிலிருந்து விலகி, மக்களின் பொதுவான நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு அடையாளத்தை அரசியல்வாதிகள் வைத்தால் அது நிராகரிக்கப்படும். உதாரணமாக யூகசுலோவியா, சோவியத்து நாடுகள் பொதுவான ஒரு தேசிய அடையாளத்தை அரசின் முழு ஆற்றலைக் கொண்டு பல ஆண்டுகளாக உருவாக்க முயற்சி செய்தும் வெற்றி அடைய முடியவில்லை. முடிவில் அந்நாடுகள் இன அடையாளப்படி பல நாடுகளாக உடைந்தன. யூகசுலாவியா நாட்டில் இருந்த செர்பியர்கள், குரோசியர்கள், போசுனியர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளும் ஒரே மொழியைப் பேசினாலும், வெவ்வேறு இன அடையாளங்களால் அந்நாடு உடைந்தன [2]. அவர்களின் இன அடையாள அரசியலால் அவர்கள் பேசும் மொழிக்கும் தனித்தனியாக வெவேறு பெயர்கள் சூட்டியுள்ளனர். ஒரே மொழி பேசினாலும், அரசியலால் அது வெவ்வேறு மொழிகளாக உடையலாம்.

அடிப்படையில் ஒரு சமூக அடையாளம் என்பது ஒரு சமூகத்தினால் கட்டமைக்கப்படுவது. ஒரு சமூகம் தனது வரலாற்றைப் பற்றிய நினைவுகள், நம்பிக்கைகள், புனைவுகள், குறியீடுகளைக் கொண்டு இன அடையாளத்தையும், அந்த இன அடையாளத்திற்கான பொருளையும் தீர்மானிக்கிறது. ர் இனக்குழு எது மாதிரியானக் கற்பிதங்களைக் கொண்டுள்ளது என்பது அடிப்படையில்முக்கியமல்ல. அந்தக் கற்பிதங்களை ஏற்று மக்கள் ஒருவரை ஒருவர் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்கிறார்களா, அவர்களின் நிலத்தை தாய்நாடு என்று கருதுகிறார்களா என்பதுதான் முக்கியம். [1]

ஏன் சமூகங்கள் கற்பிதத்தின் அடிப்படையில் அடையாளத்தை அமைக்கின்றன? ஏன் உண்மையான இரத்த அடையாளத்தில் அமைக்கக் கூடாது? இதற்கு பரிணாமத் தத்துவத்தின் மூலம் விடை காணலாம்:

  1. மரபணுக்களால் (இரத்தத்தால்) மக்களை ஒன்று திரட்டுவதற்கு ஏற்ற மாதிரி மனிதன் இயற்கையில் வடிவமைக்கப் படவில்லை. ஒரு சிறிய 100-200 பேர் கொண்ட காட்டுவாசிக் குழுக்களால் மட்டுமே இரத்த உறவுகொண்டு குழுக்களை உருவாக்க முடியும். ஒரு பெரிய சமூகத்தில் அனைவரும் இரத்த உறவா என்பதை எப்படிப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்? பெரிய குழுக்களில் கற்பிதங்களின் மூலமே அண்ணன் தம்பி தங்கை உறவுகள் சாத்தியம். அந்தக் கற்பிதங்கள் ஒரு பொதுவான பண்பாட்டின் வழியாக சென்று மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அதனால் ஒற்றுமை என்பது பண்பாட்டின் வழியாக வருவது, மரபணுக்களால் அல்ல.
  1. எந்த குழுக்கள் கற்பிதங்களின் மூலம் மற்றவரையும் தங்கள் குழுவில் இணைக்கிறதோ அது பெரிதாக பலமுடன் வளர்கிறது. குழுக்களிடையேயான போர்களில் பெரிய குழுக்கள் வெல்வது எளிதாகிறது. எந்த குழுக்கள் மற்றவர்களை தங்கள் குழுவில் இணைக்காமல் இரத்தத் தூய்மை காணுகிறதோ, அவை பரிணாமப் போட்டியில் ஈடு கொடுக்க முடியாமல் அழிந்து விடுகின்றன. மதங்கள் அனைத்து விதமான மக்களையும் ஒரு அடையாளத்தினுள் கொண்டுவர முடிவதால், அவை வரலாற்றில் பலமுடன் வந்திருக்கின்றன. யூதர்கள் தங்கள் அடையாளத்தினுள் மற்றவர்களை சேர்க்காததால் அவர்கள் 2000 வருடங்களாக சிறிய குழுவாகவே இருந்து வந்துள்ளனர். அதுவும் பல இனப்படுகொலைகளை சந்தித்துதான் பிழைத்திருக்கிறார்கள். வேறு எந்த சிறிய இனமும் இவ்வாறு பிழைத்த சரித்திரம் இல்லை. இந்து மதத்தில் ஒவ்வொரு சாதியும் இறைவனின் ஒவ்வொரு உறுப்பிலிருந்து பிறந்ததாகவும், உயர்ந்தவர்கள் தலையிலிருந்தும் தாழ்ந்தவர்கள் காலிலிருந்து பிறந்ததாக கற்பிதத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கற்பித்ததைக் கொண்டு ஏற்றத்தாழ்வுகளுடன் சாதிகளை ஒன்றிணைத்து ஒரு பெரிய குழுவை உருவாக்க முடிந்தததால்தான் அதுவும் பிழைத்தது.
  1. பல்லாயிர வருடங்களாக நடந்த மரபணு-பண்பாட்டு கூட்டு பரிணாம வளர்ச்சி [3] என்பது, சமூக அடையாளத்தை பண்பாடுகளின் வழியாக அடையும் தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு குழந்தை ஒரு சமூகத்தில் வளரும்பொழுது, அது தானாக அந்த சமூகத்தின் பண்பாட்டிலிருந்து அடையாளத்தைப் பெறுகிறது. வளர்ந்து பெரியவரானபின் அந்த அடையாளத்தை எளிதில் மாற்ற முடியாது. அந்த அடையாளம் அவர்களின் உணர்வுகளில் நிரந்தர அங்கமாகிவிடுகிறது. ஒருவரை அவர் சார்ந்த குழு மிகமோசமாக நடத்தி பிரிக்காமல், அவர் தனது அடையாளத்தை மாற்றுவது கடினமானது. அடையாளம் பகுத்தறிவினால் சிந்தித்து வருவதல்ல, மாறாக ஒரு குழந்தை எந்த முயற்சியும் செய்யாமல் மொழியைத் தானாக கற்பதுபோல அடையாளத்தையும் உள்வாங்கிக் கொள்கிறது. அடையாளம் மரபணுக்களால் வருவதல்ல, மொழியைப் போல அது வாழும் சமூகத்திலிருந்து வருகிறது. [3, 4]

இன்றைய தமிழ்ச்சமூகத்தில் தமிழர் என்ற அடையாளம் மையப் படுத்தப்படாமல், சாதி மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுக்குப் பகுத்தறிவு இல்லை என்பதல்ல. அவர்கள் வளர்ந்த சமூகச் சூழல், கற்றுக்கொடுக்கப்பட்ட விதம்தான் காரணம். அவர்களின் இளவயதில் சாதி, மத அடையாளங்கள் நன்றாகக் கற்பிக்கப் பட்டிருப்பதுதான் காரணம். அடையாளம் இளவயதில் வருவதால், தமிழர் என்ற அடையாளத்தை வளர்க்க எதுபோன்ற பள்ளிகள், சமூக அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என ஆராய வேண்டும். இதனை ஒட்டி நான் எழுதிய மற்ற கட்டுரைகளைப் பார்க்கவும் [4, 5].

தமிழ்ச் சமூகத்தின் தமிழர் என்பதற்கான கற்பிதம் என்ன என்பது ஆராயப்பட வேண்டியது. மேலோட்டமாக பரவலாக நிலவும் கருத்துக்கள் என்னவென்றால்: தமிழர்கள் உலகின் மூத்த குடி, முதல் மொழி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பெரும்பாலான தமிழுணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் கற்பிதம். அதனால் அனைவரும் நமது உறவினர் என்பதால், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற சிந்தனையும் மக்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்தனைகள். இந்தக் கற்பிதங்கள் அனைவரையும் தமிழர் என்ற அடையாளத்தில் இணைப்பதற்கு ஏற்றவாறே இருக்கின்றன. நமது பண்பாடு என்பது அனைவரையும் அரவணைத்து ஏற்றுச் செல்லும் பண்பாடு. இது நமது பலவீனம் அல்ல, இதுதான் நமது பலமே. வரலாறு சொல்லும் பாடமும் அதுதான். நமது பண்பாட்டைக் கொண்டு எவ்வாறு அனைவரையும் இணைத்து தமிழர் என்ற அடையாளத்தை மையப் படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றி தங்கியிருக்கிறது.

உசாத்துணை:

  1. Kaufman, Stuart J. Nationalist passions. Cornell University Press, 2015.
  2. Crystal, David. Language death. Ernst KlettSprachen, 2000.
  3. Gifford, Adam. "Peter J. Richerson and Robert Boyd, Not by Genes Alone: How Culture Transformed Human Evolution." (2008): 193-198.
  4. சு.சேது,மொழி வளர்ச்சிக்கு எது முக்கியம்?
  5. சு.சேது, தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்
Pin It