ஒருவருடைய ஜாதி என்ன என்று தெரிந்து கொள்ள அன்று முதல் இன்று வரை ஏதுவாக இருக்கும் கேள்வி இதுதான். நீங்கள் எந்த ஊர்? அந்த ஊரில் எந்தப் பகுதி என்று கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வாழும் இடத்தைத் தெரிந்து விட்டால், ஜாதியை மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அதன் பிறகு, அவரது ஜாதியின் அடிப்படையில் உறவைத் தொடரலாம் அல்லது நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் இப்படிக் கேள்விகள் இன்றும் நிலவுகின்றன. அப்படி, வாழும் இடத்தை வைத்தே ஜாதியை அறிந்து கொள்ளும்படி இறுக்கமான ஜாதி நடைமுறைகளை வகுத்துள்ளது இந்து மதமும், அதன் மனுசாஸ்திரங்களும்.

“இவர்கள் அனைவரும் பட்டணத்திற்கும் ஊருக்கும் வெளியில், மரத்தடி, தோப்பு, சுடுகாட்டிற்குச் சமீபமான இடத்தில் இவர்களது தொழில் இன்னதென்று பிறருக்குத் தெரியும்படி, தொழிலைச் செய்துகொண்டு வாழ வேண்டும்.

இவர்களுக்கு உலோக பாத்திரங்கள் கூடாது. அவர்கள் தீண்டின பாத்திரங்கள் சுத்தம் செய்தாலும் பரிசுத்த மாகாது. அவர்கள் நாய் வளர்க்கலாம். மாடு முதலிய வற்றை வைத்து வாழக்கூடாது. பிணத்தின் துணியை மட்டுமே உடுத்த வேண்டும். தங்கள் ஜாதியிலேயே திருணம் செய்ய வேண்டும்.

- மனுசாஸ்திரம், அத்தியாயம் 10, ஸ்லோகம் 49, 53

என்று மனு சாஸ்திரம் கூறுகிறது. இந்த வகைத் தீண்டாமைக்குத் தீர்வுகாணும் வகையில் தோழர் பெரியார் கூறகிறார்.

“கிராமத்தில் ஜாதியசாரமும், குலஆசாரமும் ஒருவன் தனக்கிஷ்டமான தொழிலைச் செய்வதற்குத் தடையா யிருக்கின்றன. சில ஜாதிகள் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்கக்கூடாது. குதிரையேறக் கூடாது. வண்டியேறக்கூடாது. வேட்டியை முழங்காலுக்குக் கீழே தொங்கவிட்டுக் கட்டிக்கொள்ளக் கூடாது என்ற பல கொடுமைகள் இன்னும் அனேக கிராமங்களில் இருந்து வருகின்றன. இவ்வித நிர்பந்தங்களுக் கடங்கித்தான் சுயமரியாதையை இழந்து தொழில் செய்து கிராமங்களில் வாழ்வதை விடப் பட்டணங் களுக்கு போவது மேல் என்றார்

(தோழர் பெரியார், பகுத்தறிவு, மே, 1936 )

தோழர் பெரியாரின் திராவிடர் பண்பாட்டு அடிப்படையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிறப்புடன் வாழ்ந்து கொண்டுள்ள இணையர் $தேவி - வெள்ளைத்துரை அவர்களின் அனுபவங்களைப் பார்க்கலாம். வாருங்கள்

இருவருடைய அறிமுகம்

எங்களது வாழ்க்கைப் பயணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடை கிறேன். எனது பெயர் $தேவி. நான் ஒரு சமூகப் பணியாளர். எனது துணைவர் வெள்ளைத்துரை. அரசுப்பள்ளி அசிரியர். நாங்கள் சாதிமறுப்பு மண வாழ்வை வாழ்ந்து கொண்டுள்ளோம். தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட என்று சொல்லப் படுகிற ஜாதிப் பிரிவுகளைச் சார்ந்த நாங்கள் காதலித்து மணம் செய்து கொண்டோம். 12 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இருவரும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வைப் பற்றிக் கூறுங்கள்?

நான் தூத்துக்குடி மாவட்டம். எனது துணைவர் திண்டுக்கல் மாவட்டம். இருவரும் சென்னையில் உள்ள சமூக சேவை நிறுவனத்தில் பணிபுரியும்போது அங்கு அறிமுகமானோம். நல்ல நண்பர்களாகப் பழகினோம். பிறகு, நிறைய விடயங்களில் ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பதைப் புரிந்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்வதெனத் தீர்மானித்தோம். எந்தச்சடங்கு, சம்பிரதாயமும் இன்றி இருவரும் 25.12.2005-ம் தேதியிலிருந்து நாங்கள் இணைந்து வாழத் தொடங்கினோம்.

திருமணத்திற்கு பிறகு நீங்கள் இருவரில் யாருடைய கிராமத்தில் குடியேறினீர்கள்?

திருமணம் முடிந்ததும் இருவருடைய சொந்தக் கிராமங்களுக்குச் செல்லாமல் நகரத்தில் வாழ்வதென முடிவெடுத்து திருப்பூர் சாமுண்டிபுரம் குமார்நகரில் குடியேறினோம். அதற்குக் காரணம் சாதிக் கட்டுப்பாட்டை அதிகமாய் இறுக்கி பிடித்திருக்கிற இடமாகக் கிராமங்கள் உள்ளன. அந்த நெருக்கடிகளையும், கொடுமைகளையும் தவிர்ப்பதற்காகத்தான்.

நீங்கள் குடியேறிய நகரத்தில் நடந்த அனுபவங்களைப் பற்றிக் கூறங்கள்?

திருப்பூர் நகரம் பெயருக்குத்தான் நகரம். அங்கும் சில கசப்பான அனுபவங்களை உணர்ந் தோம். வீடு வாடகைக்குக் கேட்டுச் செல்லும் போது மிக வெளிப்படையாக “நீங்க என்ன ஆளங்க?” என்று கேட்டனர். ஏன் என்று கேட்ட போது “இல்லை தண்ணி பொழங்காத சாதிக் கெல்லாம் வீடு தரமாட்டோம். அதனால்தான் கேட்கிறோம். நீங்க தப்பா எடுத்துக்காதிங்க” என்றனர்.

மிக ஆழமாய் யோசித்துப் பார்த்தேன். தண்ணீர் பொழங்காமல் உயிர் வாழும் மனித ஜாதியும் மண்ணில் இருக்க முடியுமா என்று, அதற்கான பொருள் புரிய வெகுநேரம் ஆகவில்லை. அது பச்சைத் தீண்டாமை வடிவம்தான். பிறகு எனது துணைவரின் கல்லூரி நண்பர்களின் உதவியோடு வீடும், வேலையும் கிடைத்தது. இருவரும் வேலைக்குச் சென்று வாழ்ந்தோம். அங்கேயும் நாங்கள் எந்தெந்த ஜாதியைச் சார்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடுதான் அனைவரது விசாரிப்புகளும், அறிமுகங்களும் இருந்தன. இதுபோன்ற குப்பைத் தொட்டியிலா நாம் பிறந்து வாழ்கிறோம் என்ற எரிச்சல் இந்த நாட்டின் மீது வராமலில்லை.

இந்தக் கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு இருவரும் இணைந்து என்ன முடிவு எடுத்தீர்கள்?

இருவருடைய குடும்பத்தின் ஆதரவுமின்றி வாழ்க்கையைத் தொடங்கினோம். எந்தக் கஷ்டம் வந்தாலும் நாம் சந்திப்போம் என்று உறுதியுடன் இருந்தோம். எம்.காம். வரை மட்டுமே படித்திருந்த என் கணவர் 2008-ஆம் ஆண்டு மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பான பி.எட்., படிக்க விரும்பினார். நான் உடனே “தாராளமாய்ப் படியுங்கள், .நான் வேலைக்குப் போய் உதவி செய்கிறேன்” என்று அவரை படிக்க அனுப்பி வைத்தேன். இதற்கிடையில் எங்களைப் பிரிக்க எங்கள் பெற்றோரும், உற்றாரும், சமூகமும் பல் முனைத் தாக்குதலில் ஈடுபட்டார்கள். பயமுறுத்தி னார்கள். பாசமாகப் பேசினார்கள். இரண்டிற்கும் அஞ்சாமல் உறுதியோடு நின்றோம். நானும் சமூகப்பணி மூலம் சுற்றியுள்ள மக்களிடையே நன் மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றேன். ஆனாலும், வறுமை எங்களை விட்டுச் செல்ல மன மில்லாமல் இருந்தது.

திருப்பூர் சாமுண்டிபுரம் குமார் நகரில் ஒரு வருடம் வாழ்ந்துவிட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் திங்களூரில் குடியேறினோம். மேலும், எனது துணைவரும் படிப்பை முடித்த பின் என்னோடு சேர்ந்து அதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது பாரதி பிறந்தாள். 2013 ஆம் வருடம். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய (டி.ஆர்.பி) தேர்வில் தேர்ச்சி பெற்று எனது துணைவர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியினைப் பெற்றார்.

இரண்டாவது மகள் மார்க்ஸ் பிறந்தாள். நாங்கள் 7ஆண்டுகளாக குடியிருந்த வீட்டை உரிமையாளர் விற்பதாக அறிவித்திருந்தார். அப்போழுது நாங்கள் இருவரும் ஆலோசித்தோம். இந்த இடத்தை விட செளகரியமாகக் குடி இருப்பதற்கு வேறு எங்கும் செல்ல வேண்டாம். இந்த இடத்தை நாமே விலைக்கு வாங்கி விடலாம் என்று முடிவெடுத்தோம். வங்கியில் கடன் பெற்றோம். எனது நகைகளையும் அடகு வைத்து அதே வீட்டை நாங்கள் சொந்தமாக வாங்கினோம். அதனைச் சற்று விரிவுபடுத்தி, 6 குடும்பங்களுக்குத் தற்போது வாடகைக்கு விட்டுள்ளோம்.

சுயபெருமைக்காக இதனைச் சொல்ல வில்லை. எந்தச் சாதி, எந்த மதம் என்றெல்லாம் நாங்கள் விசாரித்து யாரையும் புண்படுத்துவது இல்லை. கிறிஸ்துவர், இசுலாமியர் உள்ளிட்ட அனைவரும் எங்கள் வீட்டில் குடியிருக்கிறார்கள். எங்களை என்ன ஆளுங்க என்று கேட்ட அந்த ஜாதியைச் சார்ந்த சகோதரரும் கூட எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள்.

ஜாதி கடந்து மணம் புரிந்த தம்பதியினருக்கு முதலிடம் அளித்து வீட்டை வாடகைக்குக் கொடுத்து இருக்கின்றோம். இந்திய நாட்டிற்கு பிடித்திருக்கிற கொடிய நோயான ஜாதியை, ஜாதி மறுப்புத் திருமணங்கள்தான் குணப்படுத்தும் என்று நாங்கள் முழுமையாக நம்பி, உன்னதமான பெரியாரிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இருவருடைய கிராமங்களிலிருந்து வெளியேறி இம்மாதிரியான ‘தனிக்குடித்தனம்’ என்ற வாழ்க்கை முறையை உங்கள் இருவரின் குடும்பத்தினரும் உங்களைச் சுற்றி வாழ்பவர்களும் எப்படிப் பார்க்கிறார்கள்?

எங்க அத்தை எங்க வீட்டிற்கு ஒவ்வொரு முறையும் வரும் போதெல்லாம் என்னிடம் சொல்ல மாட்டார். எங்கள் வீட்டில் குடியிருப்பவர்களிடம் கூறுவார். அவர்கள் என்னிடம் வந்து சொல்லு வார்கள். “என் பையனுக்கு நாங்களே ஒரு பொண்ணப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருந்தா அந்த கிராமத்திலேயே அவன் வாழ்க்கை முடிந்திருக்கும். அவனே தேடிக்கிட்ட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கான் .மருமகளோட திறமை யான வாழ்க்கை முறையால எல்லாருக்கும் எடுத்துக் காட்டா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பெருமையா இருக்கு” அப்புடின்னு சொல்லுவாங்க.

எல்லாரும் வழக்கமா சொல்லுவாங்க, தனிக் குடித்தனம் போய்ட்டாலே பெத்தவங்களை மதிக்க மாட்டாங்க. கடைசி காலத்துல கொண்டு போய் ஆசிரமத்துல அனாதையா விட்டு வருவாங்கன்னு சொல்லுவாங்க. ஆனால், எங்களுடைய வாழ்க் கையில் அப்படி இல்லை. தேவியுடைய அப்பா திருமணத்திற்கு முன்னாலேயே இறந்துவிட்டாங்க. அவுங்க அம்மாவ நாங்கதான் பார்த்துக்கிட்டோம். நாங்க சொந்தவீடு வாங்கினதுக்கு அப்புறம் தேவி யுடைய அம்மாவை எங்க வீட்டிலேயே தங்க வைச்சிக்கிட்டோம். ஆகஸ்ட் 30ஆம் தேதி 2017 அன்றுதான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால காலம் ஆயிட்டாங்க. உறவினர்களும், தோழர்களும் மத்தியில நல்லடக்கம் செஞ்சிட்டோம். பெற்றோர் களை கடைசிக் காலத்துல நல்லமுறையா பாத்துக் கிட்டோம்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரும், ஜாதியை மறுத்து வாழ விரும்புவோரும், ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று கூறுகிறீர்கள்?

சுய ஜாதிக்குள் மணம் செய்து வாழ்வில் சாதித்து விட்டதாகப்  பெருமை பேசுகிறவர்களைப் பார்த்தால் நான் மனதுக்குள் சிரித்துக்கொள்வேன். காரணம் அங்கே எதையும் எதிர்த்து போராட வேண்டிய அவசியமில்லை. எந்த இலக்கும் இல்லாமல் சுகமாய் வாழலாம். அதைச் சாதனை என்று பேசினால் சிரிப்பு வராமல் இருக்குமா?

மனிதனை மனிதன் நாயினும் கீழாக, புழுவினும் அருவருப்பாய்ப் பார்க்க ஜாதி அமைப்பு தான் காரணம். கண்ணுக்குத் தெரியாத அந்த அமைப்பு தகர்க்கப்பட வேண்டுமென்றால் ஜாதி மறுப்பு திருமணங்கள்தான் தீர்வு. அதிலும் வெறுமனவே ஜாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டால் மட்டும் போதாது. தனது சுய குடும்பப் பற்று, பெற்றோர், உறவினர் பற்று, சாதியைத் தக்க வைக்கிற மூடத்தனமான சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றைத் தூக்கி எறிந்து விட்டு அவற்றையெல்லாம் வலுப்படுத்தி வைத்திருக்கும் கிராமங்களை உதறிவிட்டு வெளியேறும் துணிவும், வீரமும் காதலோடு கைக்கோர்க்க  வேண்டும். அவ்வாறு இல்லாத ஜாதிமறுப்பு மணங்களால் எந்தச் சமூக மாற்றமும் நடைபெறாது. ஒரு குப்பைக் குழியில் இருந்து வேறு ஒரு குப்பைக் குழிக்கு இடம் பெயர்ந்து செல்வதைப் போலத்தான் இருக்கும்.

Pin It