kongudc reunion 2018 flyer

kongudc speakers flyer 1 e

அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. நகரில் வரும் செப்டம்பர் 1, 2 ஆகிய நாட்களில் “அமெரிக்க கொங்கு குடும்ப விழா - 2018” என்ற பெயரில் ஒரு ஜாதிச்சங்க மாநாடு நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டிலிருந்து பல கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதியின் முக்கியமானவர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் குடும்ப விழாவை நடத்துபவர்கள் அவர்களது இணையதளத்தின் வழியாக அழைப்பு விடுத்துள்ளனர்.

கொங்கு வேளாளர்கள் மட்டுமல்ல; அமெரிக்காவில் வாழும் பல பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் இதைப் போல குடும்ப விழாக்களை நடத்தி தங்களுக்குள் ஜாதிய உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டு, ஜாதியச் சொந்தங்களை வளர்த்துக் கொண்டும் தான் வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், கணினித்துறையில் சிறந்த அறிவு பெற்ற மென்பொருள், வன்பொருளாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வணிகர்கள் என பல உயர்ந்த நிலையில் வாழும் இவர்கள் கொஞ்சமும் கூச்சநாச்சம் இன்றித் தங்களின் ஜாதி அடையாளத்தை வெளிப்படையர்கக் காட்டிக்கொண்டு, அதன் பெயரில் ஒரு விழாவை அரங்கேற்றுவது என்பது இவர்கள் கற்ற கல்வி இவர்களை மனிதர்களாக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

“தமிழ்வழிப் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும், தாய்த்தமிழ்ப் பள்ளிகளும் தான் சமுதாய அக்கறை உள்ள மனிதர்களை உருவாக்கும். இன்றைய ஆங்கிலவழிக் கல்வி, தனியார் பள்ளிக்கல்வி போன்றவை மனப்பாடப் புலிகளைத்தான் உருவாக்கும். சமூகச் சிந்தனை கொண்டவர்களை உருவாக்காது” என்று சில சினிமாக்களில் கல்வியாளர்கள்(?) நமக்குப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம்.

அவர்கள் முன்மொழியும் அரசுப் பள்ளிகளிலும், தமிழ்வழிப் பள்ளிகளிலும் கல்வி கற்று, அகில உலகமெங்கும் பரவி வாழும் முன்னாள் அரசுப்பள்ளி, தமிழ்வழிப் பள்ளி மாணவர்கள் தான் இந்த ஜாதிச் சங்கங்களை நடத்தி வருகின்றனர். எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா ஜாதிச் சங்கங்களுக்கும் இது பொருந்தும்.

‘கொங்கு’ என்ற சொல், மேற்கு மாவட்டங்களைத்தான் குறிக்கிறது. அந்தச் சொல் எந்த ஜாதிக்கும் அடையாளமான சொல் அல்ல என்று இதுவரை பேசியவர்கள் இருந்தால், அதை மாற்றிக் கொள்ளுங்கள். அமெரிக்கக் குடும்ப விழா மட்டுமல்ல; ஈரோடு, கோவை, சேலம், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ‘கொங்கு’ என்ற பெயரில் இயங்கும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் பொதுச் சமுதாயத்துக்குச் சொல்லும் செய்தி, “இவை கவுண்டர்களின் நிறுவனம் அல்லது கவுண்டர்களுக்கான நிறுவனம்” என்பது தான்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு கொங்குவேளாளர்கள் அதிகமாகக் குடியேறத் தொடங்கியது 1966க்குப் பிறகுதான். அதற்கு முன்பு எண்ணிக்கையில் குறைவான, தங்களுக்குள் அதிகத் தொடர்பு இல்லாத பலர் குடியேறி இருக்கலாம்.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகேயுள்ள செட்டிபாளையம் பகுதியில் பிறந்த சி.கே.இராமசாமிக் கவுண்டர் என்பவர் 1966 இல் அமெரிக்கா செல்கிறார். திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள இராமகிருஷ்ண தபோவனம் என்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மய்யத்தில் இரமண மகரிஷி என்பவரால் பயிற்றுவிக்கப்பட்ட இராமசாமிக் கவுண்டர் 1966 இல் ஸ்ரீஸ்வாமி சச்சிதானந்த சரஸ்வதி என்ற குருவாக அமெரிக்காவில் காலடி வைத்தார். அங்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றார்.

பிரதமர் மோடிக்கெல்லாம் முன்பாக, அமெரிக்காவில் யோகாவைப் பரப்பியவர் அவர்தான். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் புகழ்பெற்ற லோட்டஸ் கோவிலைக் கட்டினார். இவரது யோகா மூலமாக, அமெரிக்காவின் பல முக்கியப் பிரமுகர்களைத் தமது சீடர்களாக்கினார். இவருக்குப் பிறகு தான் அங்கு கொங்கு வேளாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

ஒவ்வொரு ஜாதியின் வெளிநாட்டு ஒருங்கிணைப்புகளையும் கவனமாக ஆய்வு செய்தால், எல்லா ஜாதிகளுக்கும் பின்னணியாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சியாளர் ஒருவர் அவசியம் இருப்பார். ஒருவேளை பார்ப்பனர்களோ, ஆர்.எஸ்.எஸ்.காரர்களோ நேரடியாக இல்லாவிட்டாலும் - இந்தியாவில் உள்ள இந்து ஜாதியச் சமூகமும், இந்து ஆணாதிக்க, ஜாதியப் பண்பாடு, பழக்க வழக்கங்களும் இந்த ஜாதிச் சங்கத்துக்காரர்களுக்குத் அஸ்திவாரங்களாக, தோன்றாத் துணையாக, தூண்களாக உள்ளன.

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கொங்கு வேளாளர்கள் வாழும் பகுதிகளை “ஃபண்டு கிராமங்கள்” என்று அழைப்பார்கள். இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் போல பட்டியல் ஜாதியினர் யாராவது கவுண்டர் பெண்களைக் காதலித்தலோ அல்லது டீக்கடைகளில் கவுண்டர்களுக்குச் சரிசமமாக உட்காருவேன் என்று பேசினாலோ, ஒரே டம்ளரில் தான் டீ தர வேண்டும் என்று கேட்டாலோ அவர்களை அடித்துக் கொல்லவும், கொன்றபின் வழக்கு நடத்தவும் கவுண்டர்களுக்குள் ஒரு நிதி திரட்டும் முறை இருக்கிறது. அந்த முறையைப் பின்பற்றும் கிராமங்கள் தான் ஃபண்டு கிராமங்கள்.

ஒரு நாளைக்கு வெறும் 200 ரூபாய் சம்பாதிக்கும் கவுண்டர் முதற்கொண்டு, அதே ஒருநாளில் ஒரு இலட்சம் சம்பாதிக்கும் கவுண்டர்வரை இந்த நிதிவழங்கும் கிராமங்களில் தங்களது நிதியைச் செலுத்தி வருகிறார்கள். பாட்டாளி வர்க்கம், நிலப்பிரபுக்கள் என இரண்டு வர்க்கமும், ஜாதி என வரும்போது ஒற்றுமையுடன் இயங்குவார்கள்.

இது கவுண்டர் பகுதியில் உள்ள நிலை. தென் மாவட்டக் கள்ளர், வட மாவட்ட வன்னியர் போன்ற ஜாதிகளில் பெரும்பாலும் நிதிதிரட்டும் பண்பு இல்லை. ஆனால், கள்ளர் பெண்களையோ, வன்னியர் பெண்களையோ காதலித்தால் எந்த ஃபண்டையும் எதிர்பார்க்காமல் திரண்டு சென்று கொளுத்துவார்கள். இந்த அனைத்து ஜாதிக்காரர்களும் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வாழத் தொடங்கினாலும், இவர்களுக்குப் பார்ப்பனர்களும், இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்களும் ஊட்டி வளர்த்த பண்பாடு பழக்க வழக்கங்கள் இவர்களை விட்டு அகலாது, அழியாது. அதற்கு மீண்டும் ஒரு சான்றுதான் அமெரிக்கக் கொங்குக் குடும்ப விழா - 2018.

இந்த விழாவை நடத்தும் குழு தங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தைக் கொடுத்துள்ளது. அதாவது, “KONGU DC is a Secular, Non-profit, Non-political, and Non-Partisan organization of Kongu people living in North America”. என்பதாகும். இதில் Non-profit, Non-political என்பவைகளில் நமக்கு அக்கறை இல்லை. ஆனால், Secular - Non-Partisan organization என்று கூறிக்கொள்வது மிகப்பெரும் மோசடியான சொற்களாகும்.

இந்த அமைப்பில் கொங்குப் பகுதியில் வாழ்ந்து, இப்போது அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களையோ, கவுண்டர் அல்லாத கிறிஸ்துவர்களையோ உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வார்களா? இந்து மதத்தில் உள்ள பட்டியலின மக்களையோ, புத்த மதத்தில் உள்ளவர்களையோ உள்ளே நுழையவாவது அனுமதிப்பார்களா? அப்படி ஏதாவது ஒரு உயிர் இந்த அமைப்பில் இருக்கிறதா? குறைந்தபட்சம் அந்த அமைப்பின் விதிமுறைகளிலாவது இதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறதா?

இந்த அமைப்பின் நோக்கம் To preserve, maintain and promote cultural heritage of the people of KONGU VELLALAR COMMUNITY from India என்று அறிவித்துள்ளார்கள். பிறகு எப்படி இந்த அமைப்பு, Secular - Non-Partisan organization என்று கூறிக் கொள்ள முடியும்? கொங்கு வேளாளர்களின் பண்பாடு, பாரம்பரியம், குலம், கோத்திரம், கூட்டம் போன்ற தனித்த பண்பாடுகளைப் பட்டியலிட்டு அவற்றைக் காப்பாற்றுவதும், போற்றி வளர்ப்பதும் தான் இவர்களின் நோக்கம் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்து மதத்தில் உள்ள எந்த ஒரு ஜாதியும் தனது “தனித்த பண்பாட்டைக் காப்பாற்றுவோம்” “எங்கள் குலதெய்வம், எங்கள் குலப்பெருமை இவற்றைக் காப்போம்” என்று கூறினால், அதைவிடப் பிரிவினைவாதம் - பாகுபாடு என்பது வேறு எதுவும் இல்லை. அதைவிட மதச்சார்பின்மைக்கு எதிர்நிலை எதுவும் இல்லை. அமெரிக்காவில் உள்ள பெரியாரியத் தோழர்கள் இந்தப் பிரிவினைவாத, இந்து மத ஆதரவு அமைப்பின் செயல்பாடுகள் பற்றி, அமெரிக்காவின் சங்கங்கள் பதிவுத் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து மதத்தினரையும், அனைத்து ஜாதியினரையும் அவ்வமைப்பில் உறுப்பினராக்காவிட்டால், வழக்குத் தொடுக்க முடியுமா என்ற ஆலோசனைகளிலும் இறங்க வேண்டும்.

கொங்கு வேளாளர்களின் அமைப்பின் மீது மட்டுமல்ல; அமெரிக்காவில் இயங்கும் எந்த ஜாதி அமைப்பாக இருந்தாலும் அதன்மீது பாகுபாடுகளுக்கு எதிரான வழக்குகளைத் தொடுக்க சட்டத்தில் இடமுள்ளதா என ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவை ஏதோ அந்த ஜாதிகளுக்கு எதிராக நாம் எடுக்கும் முடிவு என்பதல்ல. அந்தந்த ஜாதி மக்களின் பிறவி இழிவை ஒழிக்கும் முயற்சியாகும்.

கவுண்டரோ, செட்டியாரோ, நாயக்கரோ, வன்னியர், கள்ளரோ யாராக இருந்தாலும், இந்து மதத்திற்குட்பட்ட இன்ன ஜாதி என அவர்கள் தங்களைத் தனித்துக் காட்டிக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் இந்து மதச்சட்டங்களின்படியும், இந்திய அரசியல் சட்டத்தின்படியும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்றுதான் பொருள். அந்த இழிவிலிருந்து அவர்களை மீட்கும் முயற்சி தான் நம்முடையது.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஜாதிவெறியர்களே

2017 ஆம் ஆண்டு ஃபெட்னா விழாவிற்குப் தோழர் பெருமாள் முருகனை அழைத்தபோது இதே கவுண்டர் சாதிப் பெரியவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால் விழா ஒருங்கிணைப்பாளரும் தன்னார்வலர்கள் சிலரும் உறுதியாக இருந்தபோது பெ.மு வை அழைத்தால் எங்கள் (சாதி) சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி அவர்களைக் கண்டிப்பாக அழைக்க வேண்டும் எனப் பேரம் பேசினார்கள். அதற்கு அனைவரும் ஒத்துக்கொண்டு இருந்தபோது, கடைசியில் சிவசேனாதிபதியை மட்டும் வரவழைத்து பெருமாள்முருகனை வர விடாமல் செய்து விட்டார்கள். இது சிவசேனாதிபதிக்கும் நன்கு தெரியும்.

அதுபோக, சில மாதங்களுக்கு முன்பு இலண்டன் கொங்கு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இதேபோன்ற ஒரு கொங்கு விழாக் கூட்டத்திலும் பேசி இருக்கிறார் சிவசேனாதிபதி. ஜல்லிக்கட்டுக்குப் பிறகு ஒரு தலைவராக அவரை உருவகப் படுத்துவதிலும் விளம்பரப்படுத்துவதிலும் அமெரிக்க, ஐரோப்பியாவில் வாழும் கொங்கு ஆட்கள் உதவி செய்து வருகிறார்கள். ஒருபக்கம் ஜல்லிக்கட்டு ஆதரவு பேசிக் கொண்டு மறுபக்கம் ஜாதிச்சங்கச் செயல்பாடுகளில் தீவிரம் காட்டும் சேனாபதி போன்றவர்களைப் பார்த்தாவது தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டுக் காவலர்களாக உள்ள பெரியாரிஸ்ட்டுகளும், அம்பேத்கரிஸ்ட்டுகளும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

ஜாதிச்சங்கங்களை நெறிப்படுத்திய பெரியார்

பொத்தாம் பொதுவாக, ஜாதிச்சங்கங்கள் என்பவற்றை முற்று முழுதாகப் பெரியார் எதிர்க்கவில்லை. நாமும் எதிர்க்க வேண்டியதில்லை. குடி அரசுக் காலத்தில் பெரியார் ஏறக்குறைய எல்லா ஜாதிகளின் மாநாடுகளிலும் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றியுள்ளார். எந்த ஜாதியின் மாநாடாக இருந்தாலும், அந்த ஜாதி, பார்ப்பனர்களாலும், இந்து சாஸ்திர, சம்பிரதாயங்களாலும் எவ்வளவு இழிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்களுக்கு உறைக்கும் படிப் பேசி, அந்த ஜாதியினரைப் பார்ப்பன எதிர்ப்பாளர்களாக, பார்ப்பனப் பண்பாட்டு எதிர்ப்பாளர்களாக மாற்றிக் காட்டினார்.

அதன் விளைவாக, 1928 - 1930 காலகட்டத்தில், ஆதிதிராவிடர் மாநாடு, வண்ணார் மாநாடு, மருத்துவர் மாநாடு, முத்தரையர் மாநாடு, நாடார் மாநாடு போன்றவற்றில் மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1928 இல் சுயமரியாதை இயக்கம் திருச்சி மலைக்கோட்டை, திருவண்ணாமலைக் கோவில்களில் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று, கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியது. தோழர் ஜே.எஸ்.கண்ணப்பர் தலைமை தாங்கியதால், அவர் தாக்கப்பட்டார். வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருக்காக, “முடிதிருத்துவோர் சங்கம்” நிதி திரட்டிக் கொடுத்த வரலாறுகள் நடந்துள்ளன.

அதன்பிறகு, மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக நடந்த போராட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் ஜாதிச்சங்கங்களும், திராவிடர் கழகம் இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளன. திராவிடர் கழக மாநாடுகளிலும், பிரச்சாரப் பயணங்களிலும் அனைத்து ஜாதிச்சங்கங்களும் பங்கேற்றுள்ளன. திராவிடர் கழகம் மட்டுமல்ல, அதிலிருந்து பிரிந்து திராவிடர் கழகம் (இரா) என்ற பெயரில் தனி அமைப்பு நடத்திய தோழர் கோவை இராமக்கிருட்டிணன் அவர்கள் நடத்திய மண்டல் அறிக்கை ஆதரவு மாநாடுகள், பிரச்சாரப் பயணங்கள், தொடர் கூட்டங்கள் அனைத்திலும் பல்வேறு பிற்படுத்தப்பட்ட ஜாதிச்சங்கங்கள் பங்கேற்றன. பிற்படுத்தப்பட்ட ஜாதிச்சங்கங்களுக்கும், ஆதிதிராவிடர் அமைப்புகளுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக திராவிடர் இயக்கங்கள் பணியாற்றின.

அதற்குப் பிறகு 80 களின் இறுதிக்குப் பிறகு இந்தப் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இரு பிரிவிலும் உள்ள ஒவ்வொரு ஜாதிச் சங்கத்திற்குள்ளும் பார்ப்பன அடிமைகள் நுழைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நுழைந்தனர். இரு பிரிவுக்கும் எதிரியான பார்ப்பனர்கள் இரு பிரிவுக்கும் ஆலோசகர்களாக மாறினர். சங்கர மடம் இதில் முக்கியப் பங்காற்றியது. அதன் விளைவாக,

ஒவ்வொரு ஜாதியும், தனது ஜாதியின் முன்னேற்றத்திற்கு, யார் எதிரி? தனது ஜாதியின் இழிநிலைக்கு என்ன காரணம்? என்ற இரண்டிலும் தெளிவான பார்வை இல்லாமல், தாழ்த்தப்பட்டோரை எதிரியாகக் கருதும் போக்கும் - அதேபோல தலித் அமைப்புகள் பிற்படுத்தப்பட்ட அமைப்புகளை எதிரியாகக் கருதும் போக்கும் அதிகரித்துள்ளன.

அண்மைக்காலமாக, இருதரப்பையும் எதிர் எதிர்த் துருவங்களில் நிறுத்தும் என்.ஜி.ஓ.க்களும் அதிகரித்துள்ளன. இந்த என்.ஜி.ஓ.க்களில் பயிற்சி பெறும் தலித் அமைப்புகளின் தோழர்கள் முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமே எதிரியாகப் பாவிக்கும் மனநிலைக்குத் தயாரிக்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்ட ஜாதிச்சங்கங்களின் ஆலோசகர்களாக உள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமே எதிரியாகக் கட்டமைக்கும் வேலையைச் செய்துவருகின்றனர்.

தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் நிகழ்ந்து வரும் இந்தப் போக்கு, இப்போது வெளிநாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் பரவியுள்ளது. இங்கிருந்து, இந்த இந்து ஜாதியச் சமூகத்திலிருந்து - அமெரிக்கா, இலண்டன், கனடா, மலேசியா போன்ற நாடுகளுக்குப் பணிநிமித்தமாகச் செல்லும் தமிழர்களும், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களும் - ஜாதியைப் பின்பற்றுவதிலும், ஜாதியப் பண்பாடுகளை வளர்ப்பதிலும் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இவ்வகைப் போக்குகளுக்கு மாற்றாக - ஜாதிச்சங்கங்களாகவே இயங்கினாலும்கூட, தங்களின் ஜாதியின் இழிநிலைக்குக் காரணமான பார்ப்பன ஆதிக்கத்திற்கும், பார்ப்பனக் கருத்தியல்களுக்கும் எதிராகப் போராடும் ஜாதிச்சங்கங்களை நாம் வாழ்த்தி வரவேற்கலாம்.

ஜாதிக் குடும்ப விழாக்களால் ஆபத்து உங்களுக்குத்தான்

கவுண்டர் ஜாதிக்குடும்பவிழாவைப் பார்த்து இனி ஒவ்வொரு ஜாதியும் நடத்தத் தொடங்கும் அல்லது ஏற்கனவே நடந்து கொண்டும் இருக்கலாம். அமெரிக்காவிலோ, இலண்டனிலோ இனி விசா பிரச்சனை அல்லது தமிழர்களுக்கு ஏதோ ஒரு சிக்கல் என்றால், இனி எந்த ஜாதித் தமிழனுக்குச் சிக்கலோ, அந்த ஜாதிக்காரன் மட்டும் தான் குரல் கொடுப்பான். மற்ற ஜாதிகள் வேடிக்கை தான் பார்க்கும், முடிந்தால் அவர்களும் அந்த நாட்டுக்காரர்களோடு இணைந்து எதிர் ஜாதியை ஒழிக்கும்.

 

பார்ப்பானின் பண்பாட்டைப் பாருங்கள். பார்ப்பனர்களில் ஏராளமான ஜாதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் பெரும் ஜாதிப் பிரிவுகளாக அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா என்று பிரிந்துள்ளனர். இந்திய அளவில் நூற்றுக்கணக்கான ஜாதிப்பிரிவுகள் அவர்களிடையே உள்ளன. எந்த நாட்டிலாவது அய்யர் சங்கம், அய்யங்கார் சங்கம், மிஸ்ரா சங்கம், பானர்ஜி சங்கம் என்று நடத்துகிறார்களா என்று பாருங்கள். எந்த தேசிய இனத்தைச் சேர்ந்த பார்ப்பனராக இருந்தாலும் ஒரே குடையில் “பிராமணர் சங்க”மாகத்தான் இணைவார்கள்.

மேலும், தமிழ்ச்சங்கம், ஆந்திரா சபா, வங்காளிகள் சங்கம் என தேசிய இனங்களின் அடிப்படையில் சங்கங்கள் வைக்கப்பட்டாலும், அந்தச் சங்கங்கள் அனைத்திலும் தலைமைப் பொறுப்பைத் தக்க வைத்துக்கொண்டு, நமக்குள் பிரிவினைகளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். இந்தியாவுக்குள்ளேயும் அது தான் நடக்கிறது. தமிழர்கள் மட்டுமே ஏன் கவுண்டர் சங்கம், வன்னியர் சங்கம், ஆதிதிராவிடர் அமைப்புகள் எனத் தனித்தனியாகப் பிரிந்து நிற்கிறீர்கள்? இதனால் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கு இலாபம்?

கொங்குக் குடும்ப விழா நடத்துபவர்களுக்குச் சில கேள்விகள்

இந்த ஆண்டு ஃபெட்னா விழாவுக்கு மா.ப. பாண்டியராஜன் அழைக்கப்பட்டார். அவர் தமிழ்நாட்டின் மருத்துவக்கல்வி உரிமையையும், மருத்துவ உரிமையையும் பறிபோவதற்குத் துணை நின்றவர். நீட் தேர்வை ஆதரிப்பவர். அவர் ஃபெட்னா விழாவுக்கு வரக்கூடாது என்று பெரியாரிஸ்ட்டுகளும், அம்பேத்கரிஸ்ட்களும் கலகக் குரல் எழுப்பினர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தான் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்களா? இல்லையே?

இலட்சக்கணக்கான கொங்கு வேளாளர் சமுதாய எதிர்காலத் தலைமுறை மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும் இழந்துள்ளது. அதற்குக் காரணமானவர் ஃபெட்னா விழாவுக்கு வந்த போது எந்த ஜாதிச் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது? கொங்குக் குடும்ப விழா நடத்துபவர்கள் அப்போது என்ன செய்தீர்கள்?

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். ஜே.என்.யு. எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன? பேராசிரியர்களின் எண்ணிக்கை என்ன? உங்களைப் போன்ற ஜாதிச் சங்கங்கள் அதற்கு எடுத்த நடவடிக்கை என்ன? இந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்த கவுண்டர் ஜாதி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு, அந்த உயர்கல்வி நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும், அராஜகமும் கொடிகட்டிப் பறக்கின்றதே? அவர்களை எதிர்த்து இந்தச் சங்கங்கள் என்ன செய்தன?

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக, கவுண்டர் ஆண்கள் திருமணம் செய்வதற்குப் பெண்கள் கிடைப்பதில்லை. பெண்களே இல்லை. அதனால் கேரளாவிற்குச் சென்று தாழ்த்தப்பட்ட பெண்களைத் திருமணம் செய்து வருகிறீர்கள். உங்கள் ஜாதியில் பெண்களே இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? எல்லாப் பெண்களையும் பறையரும், சக்கிலியரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு போய் விட்டனரா? இல்லை. பொறுமையாகச் சிந்தியுங்கள்.

பெண்களுக்கு இந்து மதப் பண்பாட்டின் அடிப்படையில் சடங்குகளை நடத்துவது, திருமணங்களின் போது 100 பவுன், 200 பவுன் என்று நகைகளைப் போடுவது, வரதட்சணை கேட்பது - இந்துப் பண்பாடுகளின் அடிப்படையில் திருமணக்காலங்களில் இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவழிப்பது -இவற்றுக்குப் பயந்து பெண் குழந்தை பிறந்தால் அவர்களைப் பிறந்த உடனேயே கொன்று விடுவது - சொத்துக்கு ஆண் வாரிசுதான் வேண்டும் என்று பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அடுத்தடுத்து ஆண் குழந்தைகளுக்கு முயற்சி செய்வது - ஒரு ஜாதிக்குள்ளேயே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து திருமணங்களை நடத்தி அதன் காரணமாக பிறவிக் குறைபாடுகளும், மரபணுக் குறைபாடுகளும் கொண்ட பெண்களைப் பெறுவது - இதுபோன்ற பார்ப்பன, இந்துமதச் சிந்தனைகளால் தான் உங்கள் ஜாதியில் பெண்களின் எண்ணிக்கையைப் பெரும் அளவில் குறைத்துள்ளது.

பட்டியல் இனத்தவரான ஒரு கோகுல்ராஜ், ஒரு கவுண்டர் பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக அவரைக் கொலையே செய்த நீங்கள், இன்று உங்களின் திருமணத்துக்குப் பெண்களே இல்லை என்ற நிலை உருவாகக் காரணமாக இந்து மதத்தையும், இந்து மதப்பண்பாடுகளையும் எதிர்த்துச் செய்தது என்ன?

இந்தியாவில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று இந்துத்துவா அரசு உத்தரவிட்டது. அதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் யார்? சக்கிலியரும், பறையருமா சொந்தமாக மாடு வளர்க்கிறார்கள்? மாடு வளர்ப்பவர்களில் பெரும்பகுதி கவுண்டர்கள் தான். பார்ப்பனர்களின் உணவு ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்தக் கவுண்டர்களுக்காக உங்கள் ஜாதிச்சங்கங்கள் என்ன செய்தன?

காவிரியில் கர்நாடகா அரசு நீர் விடவில்லை என்றால், முதல் பாதிப்பு யாருக்கு? கர்நாடக மாநில எல்லையிலிருந்து திருச்சி மாவட்டம் வரை காவிரியின் கரையில் வாழும் கவுண்டர்களுக்குத் தான் முதல் பாதிப்பு. சேலம் எட்டு வழிச்சாலையால் அதிகமாக நிலஇழப்புக்கு ஆளானவர்கள் கவுண்டர்கள் தான். ஜி.எஸ்.டி வரி விதிப்பால் திருப்பூரின் பொருளாதாரம் 50 சதம் அழிந்துவிட்டது. அதனால் அழிவுக்குச் சென்றவர்களின் பெரும்பகுதியினர் கவுண்டர்கள் தான்.

மேற்கண்ட எல்லாவற்றிற்கும் எதிராக, கவுண்டர்களைப் போன்ற மற்ற அனைத்துப் பிற்படுத்த ஜாதிகளுக்காகவும் களத்தில் போராடுபவர்கள் யார்? பெரியார் இயக்கத்தினரும், அம்பேத்கரிஸ்ட்களும், கம்யூனிஸ்ட்களும் தான் போராடி வருகின்றனர், சிறைக் கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.

உங்களுக்காகவும், சமுதாயத்தின் அனைத்து ஜாதி மக்களுக்காகவும், அனைவரது விடுதலைக்காகவும் உழைக்கும் தோழர்கள் கேட்கிறோம். கொங்குக் குடும்பவிழா என்பதை தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் இணைந்த குடும்பங்களின் விழாவாக நடத்துங்கள். படித்து, பக்குவப்பட்டவர்கள் என நம்பப்படும் நீங்கள் எடுக்கும் முயற்சி, சமுதாயம் முன்னேற வழிவகுக்கும். அமெரிக்காவில் நீங்கள் தொடங்கும் நன்முயற்சி தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். கொங்கு வேளாளர்களாகப் பிறந்தவர்கள் யாராவது இதைப் படித்தால் இந்தத் தனிமைப்படுத்திக் கொள்ளும் பண்புக்கு எதிர்வினையாற்றுங்கள்.

செ.கேசவன்

Pin It