ambedkar 400இந்திய வரலாற்றில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அரசியல் பங்களிப்பைப் பற்றி பேசும்பொழுது, இந்திய தலித்திய மக்களின் அரசியலை அமைப்பு ரீதியாக முன்னெடுத்தவர் என்று குறிப்பிடுவது வழமை.

அம்பேத்கரைப் பற்றிய ஆய்வுப் படைப்புகள் பெரும்பாலும் இந்தியச் சாதிய அமைப்புக் குறித்த அவர் எழுப்பிய கேள்விகள் குறித்தும் அவரது அடிப்படை அரசியல் செயல்பாடான சமூகநீதி அரசியலை மையமாகக் கொண்டுமே விளக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்ததில் அம்பேத்கரின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் ஏராளாமானவை.

ஆனால், வெகுசில ஆய்வறிஞர்களும் வரலாற்றாய்வாளர்களும் தான், வேளான் மக்களின் இயக்கத்தை கட்டியெழுப்பதில் அம்பேத்கர் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பைப் பற்றி பேசுகின்றனர். உழைக்கும் மக்களான விவசாயிகளை ஒன்றிணைத்து அணிதிரட்டும் பெரும் ஆக்க சக்தியாக அம்பேத்கர் அவர்களது தொடக்ககால அரசியல் அமைந்தது.

கொங்கனப் பகுதிகளில் உள்ள வேளாண் மக்களைத் திரட்டி, குத்தகை நில முறைமைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் என்பது, அவரது அடையாள அரசியலைத் தாண்டி நிலைத்து நிற்கக்கூடிய ஒன்று. 1930-களில் மராத்திய மாநிலத்தின் கொங்கனப்பகுதிகளில் ‘பகிஸ்கரித் ஹித்கரினி சபா, கொங்கணப் பிராந்திய சேத்கரி சங்கம்’ எனும் பெயர்களில் வேளாண் மக்களை ஒருங்கிணைக்கும் அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டதன் மூலமாக உழவர் இயக்கத்தை அவர் நிறுவன ரீதியாக வடிவமைத்தார்.

இவற்றின் விளைவாக கொங்கணப் பகுதிகளில் மிகப்பரந்த அளவில் வேளாண்குடி மக்களை, சாதிகளைக் கடந்து அமைப்பு ரீதியாகத் ஒரு வலிமையான அமைப்பாகத் திரட்டியதோடு மட்டுமல்லாது, இந்தியாவில் விவசாயிகளின் ஒற்றுமையை நீண்ட நெடிய காலத்திற்கு வலிமையாகக் கட்ட வேண்டுமெனில், அதற்கு சமூக - சாதி ஏற்றத்தாழ்வுகளை பற்றிய உரையாடலை அவர்களிடையே மிகத் தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் அவர் தொடக்கத்திலேயே முயற்சி செய்தார்.

ஆனால், அவரது அந்த முயற்சிகள் 1940-களில் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களினால் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் மகராட்டிர மாநிலத்தில் நிலவிய குத்தகை விவசாய முறைமையை 1950-களில் ஒழிப்பதற்கும் இது வழிவகுத்ததோடு மட்டுமல்லாது, புவிசார் அரசியலிலும் அது மிக்கப்பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த குத்தகை நில விவசாய முறைகளுக்கு எதிரான அமைப்பு ரீதியான போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, மகராட்டிர அரசியலில் பல புதிய அரசியல் ஆளுமைகள் தோன்றினார்கள். அவ்வாறு தோன்றியவர்கள், 1940, 1950-களில் மகராட்டிர மாநில அரசியலில் மிக முக்கிய பங்காற்றக்கூடியவர்களாகவும் உருமாறினார்கள்.

1930-களில் அண்ணலின் அரசியல் தலையீடு என்பது சில முக்கியப் படிப்பினைகளை நமக்குத் வழங்குகின்றன. முதலாவதாக, காலானியதிக்கமும் நிலவுடைமையும் சேர்ந்து உருவாக்கியிருந்த நிலவுடைமை அதிகார வருக்கத்திற்கு எதிராக, தலித் விவசாய கூலித்தொழிலாளர்களை ஏனைய பிற வேளாண் மக்களோடு இணைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டுக் குழுவாக வேளாண் இயக்கத்தை கட்டியெழுப்பியது அவரது முதன்மையானப் பணி எனலாம்.

இரண்டவதாக, இந்த வேளாண் மக்களின் இயக்கத்தின் ஒற்றுமையை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டுமெனில் அவர்களுக்கிடையே இருக்கக்கூடிய சாதிய முரண்களைப் பற்றிய உரையாடலை நிகழ்த்தாமல் அது சாத்தியாமாது என்பதனையும் அவர் அறிந்திருந்தார். கொங்கனப்பகுதிகளில் குத்தகை நில முறைமைக்கு எதிராக வேளாண் இயக்கங்கள் நிகழ்த்திய போராட்டங்கள், பின்னாளில் சாதிக்கு எதிராக நிகழ்ந்த போராட்டாங்களில் அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் அளவிற்உ ஓர் ஒற்றுமைமிக்க அணியாக மட்டும் அமையவில்லை.

மாறாக, தலித் - சூத்திர உழைக்கும் வேளாண் சமூகத்தின் ஒருமைப்பாட்டை உருவாக்கும் ஒரு சோதனைக்களமாகவும் அது விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சமத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் உள்ளடக்கிய இந்த அமைப்பு முறை செயல்பாடுகளானது, அதன் தன்னியல்பிலேயே ஒரு சாதிக்கு எதிரான அமைப்பாகவும் அத்துடன் இணைந்து ஒரு வருக்க அரசியலை முன்னெடுக்கும் அமைப்பிற்கான தோற்றுவாயாகவும் அமைந்து விட்டது.

மூன்றவதாக, காலனியாதிக்கத்திற்குப் பிறகான காலகட்டங்களில் உயர்சாதி நிலவுடைமை வேளாண் சாதிகள் முன்னெடுத்த வேளாண் அரசியலானது, சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி கேள்விகளுக்கு இடமளிக்காமல் போனதன் விளைவாக, அது நிரந்தரமான சாதிய - நிலவுடைமைக்கும் வழிவகுத்துவிட்டது.

இந்த நிலவுடைமைச் சாதிய மேலாதிக்கத்தின் விளைவாக, உழைக்கும் வேளாண் தலித் கூலித்தொழிலாளர்களின் மீதான வன்முறைத்தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. இவ்வாறாக, அம்பேத்கர் முன்னெடுத்த ‘வேளாண் சமூக மக்களின் ஒற்றுமை’ என்பது தோல்வியைத் தழுவினாலும், நாட்டின் விடுதலைக்குப் பிறகான காலகட்டங்களில் உழைக்கும் தலித் கூலித்தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் அந்த இயக்கத்தின் முன்னோட்டமான செயல்பாடுகள் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்தது.

1930 - அம்பேத்கரும் வேளாண் மக்கள் இயக்கமும்:

அண்ணல் அவர்கள் 1931-ஆம் ஆண்டில், கொங்கணப் பிராந்திய சேத்கரி சங்கம் (Konkan Praant Shetkari Sangh) தொடங்கியிதிலிருந்து வேளாண் இயக்கத்துடனான தொடர்பும் ஈடுபாடும் வலுப்படுகிறது. வேளாண் இயக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர் ஆனந்த் சித்தர் (Anant Chitre) எனுமோர் சாதி இந்து தான்.

இவர், அண்ணல் அம்பேத்கரை பின்பற்றி நின்றவர். சேத்கரி சங்கம் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே கொங்கணப்பகுதி மக்களிடையே அது பரவத் தொடங்கியது. கொங்கனப்பகுதியிலேயே பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கொண்ட அமைப்பாக அது இருந்தது.

சேத்கரி சங்கத்தின் முதல் அறிக்கையை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வெளியிட்டார்கள். அந்த அறிக்கை அவர் நடத்தி வந்த ஜனதா இதழிலும் வெளியானது. அதில், சேத்கரி சங்கத்தின் நோக்கங்களும் இலக்குகளும் தெளிவாகக் கூறப்பட்டிருந்தன.

சுரண்டல் மிக்க குத்தகை நில விவசாய முறையை சட்ட ரீதியில் ஒழித்துக் கட்டுவதோடு மட்டுமல்லாது, வேளாண்மையில் கந்துவட்டிக்காரர்களின் தேவையற்ற தலையீட்டை அறவே ஒழித்துக் கட்டுவது தான் தங்கள் இயக்கத்தின் நோக்கம் என்பதனை அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

மிக முக்கியமாக வேளாண் இயக்கத்தின் பலம், பலவீனங்கள் அந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டிருந்ததன. பல சாதியைச் சேர்ந்த உழைக்கும் வேளாண் மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என ஒரே அமைப்பாகத் திரண்டு நிற்பது அதன் பலம் என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயத்தில், சாதி என்கிற படிநிலையமைப்பு இந்த அமைப்பின் ஒற்றுமையை குலைத்துவ பலவீனப்படுத்தி விடும் என்பதையும் அவர் அதில் அறிவித்திருந்தார்.

சாதி எனும் பலவீனக்கூறையும் மீறி, 1930-களில் சேத்கரி சங்கம் அந்த அமைப்பு நடத்திய பல்வேறு போராட்டங்களின் போதும் சாதிக்கு எதிராக கேள்வி எழுப்பதலை தொடர்ந்து முன் வைத்தபடியே தான் இருந்தது. அதன் மறுபக்கத்தில், 1931-ல் அமைப்புத் தொடங்கிய உடனேயே அதன் நடவடிக்கைகள் பன்மடங்காகப் பெருகின. இதனால் பெருந்திராளன வேளாண் மக்கள் சமூகம் இந்த அமைப்பை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

இது, ஏற்கனவே செல்வத்தில் செழித்து வந்த நிலவுடைமைச் சமூகத்திற்கும் காலனியாதிக்கத்திற்கும் கவலையளித்தது. ஆட்சிக்கு எதிரான தீவிரவாதக் கருத்துக்களை சேத்கரி சங்கம் பரப்புகிறது என குற்றம் சாட்டிய காலனியாதிக்கம் அதே காரணத்தைக் கூறி, 1932லும் 1934-ஆம் ஆண்டிலும் அந்த அமைப்பு தடைச்செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை அம்பேத்கரையும் அவர் நடத்திய அமைப்பின் அரசியல் முக்கியத்துவத்துவத்தையும் சோதனையிடுவதாக அமைந்தது.

அம்பேத்கரின் சேத்கரி சங்கம் 1930-களின் தொடக்கத்தில் காலனியாதிக்கத்தின் தடைக்கும் வரம்பிற்கும் ஆளான போதும் அடுத்த வந்த பத்தாண்டுகளிலும் அது தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நெருக்கடியான காலகட்டங்களில் அம்பேத்கர் சேத்கரி சங்கத்தின் தலைமையை ஏற்றதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வேளாண் இயக்கத்தின் சார்பாக நீதிப்போராட்டமும் நிகழ்த்தினார்.

ஆக, வேளாண் இயக்கத்தில் அவரது அரசியல் ஈடுபாட்டையும் பங்களிப்பையும் பார்க்கும்போது, வழக்கமாக குறிப்பிடப்படும் அவரது அரசியலை வாழ்க்கையிலிருந்து இது வேறுபட்ட முக்கியமான ஒன்றாகத் தென்படுகிறது. அதாவது, வேளாண் இயக்கத்தோடு அம்பேத்கருக்கு இருந்த மிக முக்கியமான அரசியல் ஈடுபாட்டை இதுவரை யாரும் அவ்வளவாக எடுத்து விளக்கவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலும், அம்பேத்கரின் இந்த வேளாண் இயக்க அரசியல் ஈடுபாடு என்பது அவரது இந்து மத எதிர்ப்புக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை என்பதனையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1935-ஆம் ஆண்டில் ஏலா (Yeola) எனுமிடத்தில் நிகழ்ந்த மாநாட்டில் தான், அவரது புகழ்மிக்க ‘இந்து மதத்தை விட்டு வெளியேறுகிறேன்’ எனும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு, 1936-ஆம் ஆண்டில் அவர் சுதந்திர தொழிலாளர் கட்சியை நிறுவினார்.

தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையேயிருக்கும் சாதிய விரோத பகை வெறுப்புணர்வு சுதந்திர தொழிலாளர் கட்சிக்கு ஒரு முக்கியமானப் கருப்பொருளாக இருந்தபோதிலும் அதைத்தாண்டி மேலும் பல பெரிய மாற்றங்களை நிகழ்த்துவதற்கான போராட்டக் களமாக அந்த கட்சி மாற்றியமைக்கப்பட்டது.

சுரண்டல் மிகுந்த குத்தகை விவசாய முறையை ஒழித்துக் கட்டுதல், தொழிற்சாலைகளில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டுதல், இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குதல், கூலித்தொழிலாளர்க்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல் போன்றவை அந்தக் கட்சி எடுத்த மிக முக்கியமான செயல்திட்டங்களாகும்.

1937-ஆம் ஆண்டு நடந்த பம்பாய் மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட சுதந்திர தொழிலாளர் கட்சியினால் 15 இடங்களில் வெல்ல முடிந்தது. அதில், கொங்கனப் பகுதியில் மட்டும் அம்பேத்கர் போட்டியிட்ட தொகுதியையும் சேர்த்து 6 இடங்களில் அக்கட்சி வென்றது. அம்பேத்கர் பம்பாய் நகர்ப்பகுதியில் போட்டியிட்டு வென்றார்.

பம்பாய் நகரப்பகுதியோடு கொங்கண விவசாயச் சமூக மக்களுக்கு இருந்த ஒரு விசித்திர தொடர்பு, அந்தத் தொடர்பின் காரணமாக பம்பாய் நகரம், நகரத் தொழிலாளர்களின் கூடாரமாக விளங்கியது. இது, சுதந்திர தொழிலாளர் கட்சியின் வெற்றிக்கும் சாதிக்கு எதிரான வேளான் மக்களின் இயக்கத்திற்கும் அடிப்படையாக விளங்கியது.

கொங்கனப்பகுதியில் அக்கட்சி பெற்ற வெற்றி வேளாண் மக்களிடையே அதிக செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. வேளாண் மக்களின் பொதுவான பல போராட்டங்களின் வழியே மாற்றுச் சாதி மக்களிடையே ஒற்றுமை ஓங்கியது. வேளாண் சார்ந்த கொங்கனப் பகுதியின் தவிர்க்க முடியாத தலைவராக அம்பேத்கர் வளர்ச்சிப்பெற்றார்.

குத்தகை நில விவசாய முறையை ஒழிப்பதற்கு 1937-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு சட்ட வரைவை முன் வைத்தார். அதனை ஆதரித்து, 1938 ஜனவரியில் கொங்கணி வேளாண் மக்கள் பம்பாய் மாநாகரத்தில் மிக்கப்பெரிய ஊர்வலம் போயினர். சுதந்திர தொழிலாளர் கட்சி ஏற்பாடு செய்திருந்த அந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 20,000-ற்கும் அதிகமான கொங்கனி விவசாய மக்கள் கலந்துகொண்டனர்.

இது கொங்கனி விவசாய மக்களிடம் அம்பேத்கர் பெற்றிருந்த செல்வாக்கை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது. பின்னர், 1942-ஆம் ஆண்டில் சுதந்திர தொழிலாளர் கட்சி கலைக்கப்பட்டதற்கு பிறகு, கொங்கனி விவசாய மக்களிடையே அம்பேத்கரின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

இருந்த போதிலும் 1930-வைத் தொடர்ந்து வந்து பத்தாண்டுகளில் ஒரு செயல்திட்டத்தை முன் வைத்து சாதிக்கு எதிரான அரசியலை கட்டியமைத்ததில் அம்பேத்கரும் அவரது அரசியல் இயக்கங்களும் மிகப் பெரிய ஒரு பங்களிப்பை நல்கியிருந்தன.

1930-களில் அம்பேத்கர் தொடங்கிய வேளாண் இயக்கமானது, தலித் மக்களுக்கும் தலித் அல்லாத மக்களுக்கும் இடையேயான ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான பல வாய்ப்புகளை வழங்கியது. அதற்கு பிறகான அவரது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் இதே அடிப்படையிலான அரசியலைத்தான் அவர் முன்னெடுத்தார்.

சுதந்திர தொழிலாளர் கட்சி இயங்கிய காலம் மிகக் குறுகிய காலம் என்றபொழுதிலும் அது தொடங்கப்பட்ட செயல்பட்டு வந்து 1930-களில் உருவான சாதிய – வருக்க அரசியலின் படிப்பினையின் விளைவாகத்தான் பின்னர் வந்த தசாப்தங்களில் ஒரு தெளிவான தலித்திய அரசியலை முன்னெடுக்க வழிவகுத்தது எனலாம்.

பின்னாட்களில், குறிப்பாக 1970-ல் மகராட்டிர மாநிலத்தில் தோன்றிய தலித் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் எல்லாம் 1930-களின் ஆரம்ப கட்டத்தில் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த வேளாண் மற்றும் தொழிலாளர் நலன் அரசியலிலிருந்து ஊக்கம் பெற்று கிளைத்தன என்றால் அது மிகையாகாது.

கட்டுரையாளர் : பிரபாதன் பால், கருநாடகத்தில் உள்ள மணிப்பால் உயர்கல்வி நிறுவனத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர்.

தமிழில் : ப.பிரபாகரன்

Pin It