இந்த கூட்டத்தை சுற்றும் முற்றிலும் பாருங்கள்.. நாகரீகமான உடை உடுத்தியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், அறிவார்ந்த பெருமக்கள், பெயருக்கு பின்னால் எம்.பி.பி.எஸ், எம்.காம், எம்.ஏ.பி.எல் போன்ற பட்டங்கள், பையில் பணம், ஒரு மகிழ்ச்சியான உளநிலை.... நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இந்த உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். மகிழ்ச்சியான ஒரு நல்ல சூழ்நிலை நிலவுவதாக நாம் கருதுகிறோம். ஆனால் இது ஒரு நூறாண்டுகளுக்குள் உருவானதுதான். நான் பேசுவதை உரையாக யாரும் கருத வேண்டாம், ஆனால் உருப்படியான தகவல்களாக கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

இந்த உலகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி கிடையாது. பல தெருக்களில் நம்மை போன்ற பெரும்பான்மையானோர் நடக்கவே உரிமை கிடையாது. சில ஜாதிகளுக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை கிடையாது. சொத்து வைத்துக்கொள்ள உரிமை கிடையாது. இப்போதும் சில பகுதிகளில் சைக்கிளில் செல்ல முடியாது. ஊருக்கு வெளியே சென்றுதான் அவன் சைக்கிளை ஓட்ட முடியும். 1920களில் உள்ள நிலையைக் கூட சில தோழர்கள் பதிவு செய்துள்ளனர். பெண் பார்க்க செல்லும்போது, ஆண்ட ஜாதியிடம் அனுமதி பெற்றுதான் வேட்டி, சட்டை அணிய முடியும். அதுவும் சட்டை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு ஊர் தாண்டிய பிறகு, புளிய மரத்தின் கீழ் நின்று உடையை மாற்றிக்கொண்டு, பெண் பார்த்து வந்த பிறகு மீண்டும் ஊருக்குள் நுழையும் முன் பழைய அழுக்கு உடையை மாற்றிக்கொண்டு, புது துணியை கக்கத்தில் வைத்துகொண்டுதான் ஊருக்குள் நுழைய முடியும். இத்தகைய அவல நிலைதான் அப்போது இருந்தது.

பல இளைஞர்களுக்கு நம் நிலை என்னவாக இருந்தது, எப்படி மாறியது என்பதே தெரியாது. ஆண்டாண்டுகாலமாக இந்த உலகம் இப்படித்தான் இருந்து வருகிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த சூழ்நிலையையைக் கொண்டுவருவதற்கு பல தலைவர்கள் கடுமையாக பாடுபட்டுள்ளனர். அதில்தான் இந்த நிலை கிடைத்துள்ளது. நாம் படித்ததற்கு பெரியார் எப்படி காரணமாவார் என்றெல்லாம் பலரும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் இப்போது நாம் படித்துவிட்டோம், நம் பெற்றோர்கள் அதிகபட்சம் ஐந்தாவது வரைதான் படித்திருப்பார்கள். தாத்தாவுக்கு அந்தப் படிப்பும் கிடையாது.

கல்விக் கடவுளாக வணங்கப்படும் சரஸ்வதியை கொண்டுள்ள இந்த நாட்டில் நாம் படித்துவிட்டோம், ஆனால் நம் தந்தை, தாத்தா உள்ளிட்டோர் படிக்க முடியவில்லையே ஏன்? இன்றைக்கு சரஸ்வதிக்கு படையல் போடுவது போல, அன்றைக்கும் படையல் போட்டார்களே? அவர்கள் மட்டும் ஏன் படிக்கவில்லை? ஏனென்றால் நம்முடைய பாட்டன், பூட்டன் காலத்தில் பெரியார் பிறக்கவில்லை, அதனால் அவர்களால் படிக்க முடியவில்லை. அண்ணல் அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்கள் அன்று பிறக்கவில்லை. ஆனால் இந்தத் தலைவர்கள்தான் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தனர்.

நம் வீட்டுப் பிள்ளைகள் காவல்துறையில், வழக்கறிஞராக, ஆட்சியராக, வட்டாட்சியராக உள்ளனரென்றால் அதற்குப் பல பேர் உழைத்து இருக்கிறார்கள். அந்த உழைப்பை நல்கியவர்தான் தந்தை பெரியார். இன்றைக்கு இருக்கக்கூடிய நாகரீகமான வாழ்க்கைக்கு அவர்களது போராட்டங்கள் தான் காரணமாக அமைந்தது. தந்தை பெரியார் மறைந்து ஐம்பது ஆண்டுகளாகி விட்டது. ஐம்பது ஆண்டுகள் கழித்து எல்லோரும் பெரியாரைத்தான் பேசுகிறார்கள். சில பேர் பெரியாரை தூற்றுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் பெரியாரை தூற்றுவதற்கு என்ன காரணம்? இவ்வளவு நாள் கழித்து இவ்வளவு தலைவர்களில் பெரியார் ஒருவரை மட்டும் ஏன் தூற்றுகிறார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டுமா?

“சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது, அநியாயமானது. அது நம்மை அடிமையாக்குகிறது. திராவிடம் அதை எதிர்த்து போராடி வந்திருக்கிறது, போற்றத்தக்கது. அதுதான் நமக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது” என்பது வரைக்கும் நம்முடைய இளைஞர்களுக்கு புரிகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று அதில் இன்னும் புரியவில்லை. சனாதனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? என்ற குழப்பம் இருக்கிறது. நன்றாக தெரியும் கண்ணாடியாக இருந்தாலும், தூசியை துடைத்துவிட்டால் இன்னமும் நன்றாகத் தெரியுமே! அதுபோல. சனாதனம் பற்றிய வரலாறு, திராவிடம் பற்றிய வரலாறு, அதன் ஆணிவேர் இதைப் பற்றியெல்லாம் இளைஞர்களுக்கு புரிய வைத்துவிட்டால் மீதி வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

இப்போது ஆர்.என்.ரவி என்ற ஆளுநர் இருக்கிறார். எங்கு சென்றாலும் சனாதனம், சனாதனம் என்று அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார். சனாதனத்தால்தான் இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது, முனிகளும், ரிஷிகளும்தான் இந்தியாவை உருவாக்கினார்கள் என்றெல்லாம் பேசிவருகிறார். ஜாதியை மறுத்து சமத்துவ சமுதாயம் படைக்க விரும்பிய வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று அவரை கபளீகரம் செய்யும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைக்கின்றனர் வடநாட்டு சாமியார்கள். பாஜகவை சேர்ந்த அமித் மாளவியா “இனப் படுகொலை செய்ய சொல்கிறார் உதயநிதி” என்று அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறுகிறார். பாஜகவை சேர்ந்த கஜேந்திரசிங் செகாவத் என்பவர் அமைச்சர் உதநிதியின் நாக்கை வெட்ட வேண்டும், கண்ணை நோண்ட வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார். சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றுச் சொல்வது இவ்வளவு பெரிய குற்றமா? அப்படியானால் சனாதனம் என்றால் என்ன? அது எப்படி வளர்ந்தது என்பதைப் பற்றி முதலில் சொல்கிறேன்.

வரலாற்றை நாம் கிபி, கிமு என்று இரண்டாகப் பிரிக்கிறோம். கி.மு. 1200 -இல் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் ஆரியர்கள் என்ற ஒரு கூட்டம் நுழைகிறது. வரும்போதே பாட்டுப்பாடிக்கொண்டுதான் வந்தார்கள். அந்த பாடலின் தொகுப்புக்கு ரிக் வேதம் என்று பெயர். அந்த ரிக்வேத பாடல்கள் 10 மண்டலங்களாக உள்ளன. அதில் 10வது மண்டலத்தில் மிக முக்கியமான ஒன்று உள்ளது. அதுதான் ‘புருஷ சூத்தம்’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கும் நமக்கும் தொடர்பு கிடையாது. இந்த புருஷ சூத்தம் ஒரு யாகத்தை பற்றி பேசுகிறது. “ஒரு பெரிய உடல் யாகத்தில் பலியிடப்படுகிறது. பலியிடப்பட்ட அன்றிலிருந்து தலையில் இருந்து பிராமணனும், தோளில் இருந்து சத்திரியனும், தொடையில் இருந்து வைசியனும், காலில் இருந்து சூத்திரனும் தோன்றினார்கள் என்று எழுதிவைத்துள்ளனர்.

பிராமணன் படிக்க, கற்பிக்க, யாகம் செய்ய உரிமை உள்ளவன். சத்திரியன் என்பவன் போர் புரிய, நாட்டை ஆட்சி செய்ய உரிமைப் பெற்றவன், வைசியன் என்பவன் வளம் பெருக்க, தொழில் செய்ய உரிமை உடையவன். இதில் நான்காவதாக உள்ள சூத்திரர்கள், அவர்களது நிறம் கருப்பு, அவர்களது உணர்வு துயரம், துன்பம், அவர்கள் மேலே இருக்கிற மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டு செய்வதற்காகவே பிறந்தவர்கள். சொத்து வைத்துக்கொள்ள, பொருள் வைத்துக்கொள்ள உரிமை கிடையாது. இதற்குத்தான் நால்வருண பகுப்பு என்று பெயர்.

தமிழர்களுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது. ஆரியர்களின் சமூகம் என்பது Vertical முறையில் (மேலே இருந்தே கீழே) படிநிலைகளாக இருக்கும், ஏற்றத்தாழ்வு மிகுந்தது. அதை அம்பேத்கர், “இந்த நான்கு வர்ணங்கள் இருக்கிறதே, இது ஒரு நான்கு அடுக்கு மாளிகை. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன். ஆனால் ஒரு அடுக்கில் இருப்பவன் இன்னொரு அடுக்குக்குப் போக முடியாது. அந்த மாளிகையில் படிக்கட்டு என்பதே கிடையாது” என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லுவார்.

அதைத்தான் பெரியாரும் சொல்வார். “ஒருவன் தாழ்ந்த ஜாதியாகப் பிறந்து வேறு உயர்ந்த ஜாதிக்கு போனதாக வரலாறு உண்டா?” என்று பெரியார் கேட்டார். ஒருவன் அறிவாளியாகலாம், பணக்காரனாகலாம், ஆனால் அவன் பிறந்த ஜாதியில் இருந்து தப்பிக்கவே முடியாது. இது ஆரியர்களுடையது. இந்த நான்கு வர்ணங்களும் கலக்காத அளவுக்கு அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர். அப்படி ஒருவேளை கலந்துவிட்டால்... ஒரு பிராமண பெண்ணை ஒரு சூத்திரன் திருமணம் செய்து குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு சண்டாளன் என்று பெயர். இந்த நான்கு வர்ணங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து குழந்தை பிறந்தால் சங்கர ஜாதிகள் என்று பெயர். பல்வேறு ஜாதிகள் இப்படித்தான் உற்பத்தி ஆனது. இது ஆரியர்களின் நிலைமை.

ஆனால் நமக்கு அப்படி இல்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகள் இருந்தன. அவர்கள் தனித்தனி குடிகளாக இருந்தனர். அந்த குடிகளும் ஜாதிகளும் ஒன்று என்று இன்று சிலர் பேசி வருகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. குறவர்கள் என்று இருக்கிறார்கள். அது கெட்ட வார்த்தை இல்லை. குன்றுக்கு தலைவர் இருப்பார், அவர் குன்றவர். அந்த குன்றவர் என்பவர்தான் குறவரானார். அவர்கள் மதிக்கப்பட்டவர்கள். குறவர் கோன் என்று இருந்தார்கள், கோன் என்றால் மன்னன் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக நம்ம்முடைய நிலைமை வேறு, ஆரியர்களுடைய நிலைமை வேறு. அந்த ஆரியர்கள் வட இந்தியா முழுவதும் பரவினார்கள். அவர்கள் பரவிய பகுதிக்கு பிரம்ம வர்தம் என்று பெயர். கங்கை சமவெளி பகுதிக்குள் பரவினார்கள், ஆரிய வர்தம் என்று பெயர் பெற்றனர். அந்த ஆரியப் பார்ப்பனர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து வந்தனர். சத்திரிய, வைசியர்கள் அதிகம் வரவில்லை. ஆனால் இங்கு வந்தவர் பார்ப்பனர்கள் அந்த ஆரிய சமூகக் கட்டமைப்போடு வந்தனர்.

(தொடரும்)

- பேராசிரியர் த.செயராமன்

தொகுப்பு: விஷ்ணு

(ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் 24.12.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்மண் தன்னுரிமைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் பேசிய உரை)