பொருளாதார ஆய்வறிக்கை ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு ஒன்றிய அரசால் வெளியிடப்படுகிறது. மோடி அரசு அமைந்த பிறகு 2வது பொருளாதார ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் வெளியிடப்படும் பொருளாதார அறிக்கைகளில் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குத் தனித்திறமை தேவை. காரணம் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு வடிவமைக்கப்படு கின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் படிப்பதே இல்லை. புதுதில்லியில் உள்ள புத்தகச்சாலைகளில் அறிக்கை வந்த இரண்டாம் நாளிலேயே முன் பக்க அட்டையை நீக்கிவிட்டு விற்பனை யாளர்கள் இந்த அறிக்கையை விற்கிறார்கள். எனவே இப்பொருளாதார அறிக்கையைப் பற்றிய விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அதிகம் நடைபெறுவதில்லை.
பொருளாதார ஆய்வாளர்களும் ஏட்டாளர்களும்தான் இந்த அறிக்கையைப் படித்துவிட்டு ஆய்வு நோக்கோடு கட்டுரையை வெளியிடுகின்றனர். இதைப் படித்தாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை. இந்த ஆண்டோ யாரும் முன்பே படிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் நாடாளுமன்றம் முடியும் கடைசி நாளில் இவ்வறிக்கை கொடுக்கப்பட்டது. எனவே காங்கிரசுக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜிவ் கௌடாவும் ஆய்வாளர் சாலமன் சோசும் இவ்வறிக்கையைப் பற்றி இந்து ஆங்கில நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளனர். இக்கட்டுரையில் இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவினைச் சந்தித்து வருகின்றது என்பதற்கான தரவுகளையும் அளித்துள்ளனர். பொருளாதாரத்தில் பெரும் ஓட்டை (Big Hole) விழுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆண்டு வளர்ச்சி 7.5, 6.5 விழுக்காட்டு அளவிற்கு இந்தியப் பொருளாதாரம் வளரும் என்று மோடி அளித்த நம்பிக்கைகள் சிதைந்து வருகின்றன. இந்தப் பொருளா தார ஆய்வறிக்கை இதற்கு ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்துள்ளது. குறிப்பாகத் தொழில் துறையில் முதலீடுகளும் குறைந்துள்ளன. தொழில் துறையின் உற்பத்தித் திறனும் வீழ்ந்து வருகிறது. இந்த வீழ்ச்சி 2016-17இல் முதல் நான்கு மாதங்களில் தொடங்கி ஆண்டின் மூன்றாம் காலாண்டிலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பொருளாதாரத்தைப் பின்னோக்கித் தள்ளி விட்டது. குறிப்பாக தனியார் வணிக நடவடிக்கைகள் 2016 மார்ச்சில் 11 விழுக்காடாக இருந்தது. 2017 மார்ச்சில் அது 4 விழுக்காடாகப் பெருமளவில் வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு முதன்மையான தகவல்களை அளிப்பதில் பிரதமருக்கும் நிதியமைச்சருக் கும் உயர் அலுவலர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஒன்றிய அரசு மாறி வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் நாள் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றியபோது இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 34 இலட்சம் புதிய வரிகட்டுவோர் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். பொருளாதார அறிக்கையின் 2ஆம் பாகம் வெளியிடும் போது ஒன்றிய அரசின் பொருளாதாரத் தலைமை ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியம்- 5.4 இலட்சம் புதிய வருமான வரி செலுத்துவோர் இந்தப் பணமதிப் பிழப்பு நிகழ்விற்குப் பிறகு இணைந்துள்ளனர் என்று கூறுகிறார். நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ 91இலட்சம் புதிய வருமானவரி கட்டுவோர் இணைந்துள்ளனர் என்று அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசின் நிதித்துறை இணை யமைச்சர் சந்தோஷ் கெங்வார் ஆகஸ்ட் 2ஆம் நாளன்று 33இலட்சம் புதிதாக வருமானவரி கட்டுவோர் இணைந் துள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.
பிரதமர் மோடி தனது விடுதலை நாள் பேச்சில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 இலட்சம் கோடிகள் வங்கிகளில் வைப்புத் தொகையாக வந்துள்ளது என்று குறிப்பிட்டார். வங்கிகளில் வந்து சேர்ந்துள்ள தொகையில் 1.75 இலட்சம் கோடி கறுப்புப் பணமா என்பதை மத்திய அரசு ஆய்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால் நிதியமைச்சகத்தின் சார்பில் நான்கு முறை கறுப்புப் பணத்தின் விவரத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
1)2017ஆகஸ்ட்1ஆம் நாள் நாடாளுமன்றத்தில் துணை நிதியமைச்சர் சந்தோஷ்குமார் கெங்வார் கறுப்புப் பணத்தின் அளவைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ மான மதிப்பீடும் கிடைக்கவில்லை என்று கூறியுள் ளார். இதற்கு முன்பு,
2) 2017ஜூன் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிதிய மைச்சர் அருண் ஜெட்லி வெளிநாடுகளிலும் வெளி நாட்டு வங்கிகளிலும் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தின் அளவைப் பற்றியும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
3) 2017ஏப்ரல் 7 அன்று சந்தோ`ஷ்குமார் கெங்வார் ரூ.500 ரூ.100 தாள்கள் செல்லாது என்று அறிவித்த பிறகு வங்கிகளில் செய்யப்பட்ட வைப்புத்தொகையின் அளவு பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
4) 2017 மார்ச் 17இல் துணை நிதியமைச்சர் இந்தியாவில் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்பது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்று கூறினார்.
2017ஆகஸ்ட் 20 அன்று மும்பையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நக்சல்பாரி இயக்கத்தினருக்கும் காஷ்மீர் தீவிரவாதி களுக்கும் நிதி கிடைப்பதில்லை என்ற ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களின்படி, பா.ஜ.க. தான் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரசியல் நன் கொடையாகப் பெற்று இந்திய அரசியல் கட்சிகளில் நன்கொடை பெறுவதில் முதலிடத்தில் உள்ளது.
தேசியப் பொது நிதியியல் மையம் ( National Instiute of Public Finance) ஒன்றிய அரசின் நிதியுதவியோடு செயல்படுகிற தன்னாட்சி நிறுவனமாகும். இந்த ஆய்வு மையம் 2013இல் அன்றைய நிதியமைச்சர் சிதம்பரம் அவர்களிடம் இந்தியாவில் ஆண்டுதோறும் 23 இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது என்ற அறிக்கையை அளித்தது. இந்தத் தகவலை மும்பையில் இருந்து வெளி வரும் பொருளாதார அரசியல் வார ஏடு வெளியிட்டது. இப்படிப்பட்டத் தகவல்களையும் புள்ளி விவரங்களையும் வைத்துக் கொண்டு கறுப்புப் பணக்காரர்கள் யார் என்பதைக் கண்டும் காணாமல் மக்களை ஏமாற்ற நாள்தோறும் ஒரு பொய்யான அறிக்கையை ஒன்றிய அரசின் அமைச்சர்கள் மாறி மாறி வெளியிடுகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவதில் பெருந்தொழில்களும் சிறுதொழில்களும் முதன்மையான பங்கினை வகிக்கின்றன. 2017 மார்ச் புள்ளிவிவரப் படி வங்கிக்கடன் வளர்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத சரிவைச் சந்தித்து அதன் வளர்ச்சி 5.1 விழுக் காடாக வீழ்ந்துள்ளது. தனியார் துறையும் கடனைப் பெறவில்லை. தொழில் துறையின் உற்பத்தி அளவும் பெருமளவில் வீழ்ந்துள்ளது. இந்தியத் தொழில் உற்பத்திக் குறியீடு சுருங்கிக் கொண்டே வருகிறது. மேலும் வங்கிக ளில் கடன் பெற்றுத் திரும்ப அளிக்காதவர்களின் கடன் தொகை அளவு 2014இல் ஒரு இலட்சத்து 73ஆயிரத்து 800 கோடிகளாகும். 2017இல் அதன் அளவு 7இலட்சத்து 79ஆயிரத்து 153கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் போற்றப்படுகிற வங்கிகளில் கடன் பெற்றுப் புதிய முதலீடுகள் வழியாகத் தொழில்களைத் தொடங்க யாரும் முன்வரவில்லை.
கடன் பெற்ற பெரு முதலாளிகள் கடனைத் திருப்பி யளிக்கும் திறன் இருந்தும் திருப்பியளிக்கவில்லை. குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் ஸ்டேட் வங்கி ஆகிய இரு பொதுத் துறை வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ள முதலாளிகள் திருப்பாமல் இருக்கும் தொகையின் அளவு 2015-16 நிதியாண்டில் 76 ஆயிரத்து 685 கோடியாகவும், 2016-17 நிதியாண்டில் 92 ஆயிரத்து 376 கோடியாகவும் உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் வராக்கடன் அளவு 20.4விழுக்காடாக உயர்ந் துள்ளது மோடி அரசின் சாதனைதானே? இச்சூழலில் வெளிநாட்டிலிருந்து வரும் முதலீடுகளைப் பெருக்குவதற் காக இந்திய மைய வங்கி வட்டி வீதத்தைக் குறைத் துள்ளது. தற்போது உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 2.3 விழுக்காடாகும். எவ்வாறு வெளிநாட்டு முதலீடுகளைப் பெருக்கிப் பொரு ளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகும்.
மாநிலங்களின் நிதியாதாரங்களும் குறைந்து கொண்டே வருகின்றன. தனியார் துறையும் சாய்ந்து வருகிறது. இதன் காரணமாக தேவையார்வம் மக்களிடம் குறைந்து வருகிறது. இவ்வாறு ஒன்றையொன்று பின்னி, பொரு ளாதார வளர்ச்சி சுருங்கினால் இதைப் பொருளாதார அறிஞர்கள் பணவாட்டம் (Deflation) என்று குறிப்பிடு வார்கள்.
இந்தப் பணவாட்டம் இந்தியப் பொருளாதாரத்தை இறுக்கமாகக் கவ்விக்கொண்டுள்ளது. இதன் விளைவால் ஏழை எளிய நடுத்தர வருமானப் பிரிவினர் பெருமளவில் பாதிக்கப்படுவர். வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும். இதை உறுதி செய்யும் வகையில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் ( Centre for Monitoring of Indian Economy) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 15 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆண்டிற்கு 2 கோடி பேர்களுக்கு வேலையளிப்பேன் என நாடாளு மன்றத் தேர்தல் நேரத்தில் இந்திய பிரதமர் அறிவித்தது பொய்யாகிவிட்டது என்பதையே மேற்கூறிய புள்ளி விவரம் சுட்டுகிறது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப் பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடியாகும். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 48கோடி மக்கள் 15 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள்தான் வேலை வாய்ப்பை நம்பி வாழ்பவர்கள். இவர்களுக்குப் போதிய அளவிற்குச் சுகாதார வசதிகள் இல்லை என்பதையும் நோய்வாய்ப்பட்டால் தங்கள் சொந்தச் செலவில் மருத்துவம் பார்த்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை 69 விழுக்காட்டினர். மாநில அரசு பொதுச் சுகாதாரத்திற்காக 11 விழுக்காடுதான் செலவிடுகிறது. ஒன்றிய அரசு 6.6 விழுக்காடுதான் செலவிடுகிறது. இச்சூழலில் கடன் வாங்கித்தான் மருந்துகளை மக்கள் வாங்கிப் பயன்படுத் தும் நிலையில் உள்ளனர். மருந்துகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது விதிக்கப்பட்ட சரக்கு சேவை வரியால் மக்கள் நுகரும் பொருட்களும் மருந்து விலைகளும் பன்மடங்காக உயர்ந்து வருகின்றன.
தொடக்கப் பள்ளிக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை மாநிலங்களுக்கு மாநிலம் ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் உள்ளன. இந்தியாவில் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் 93விழுக்காடு உள்ளனர். இவர்களது வீட்டுப் பிள்ளைகள் பள்ளிப் படிப்பைத் தொடர்வதில் பல பொருளாதார நிதித் தடைகள் உள்ளன. எனவேதான் வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக உத்திரப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர்க்கும் தொடக்கக் கல்வியை அந்தந்த மாநில அரசுகள் முழுமையாக அளிப்பதற்குப் பெரும் நிதி தேவைப்படுகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2011-12இல் கல்விக்கான செலவு 3.2 விழுக்காடாக இருந்தது. 2016-17இலும் 3.2 விழுக்காடாகவே தேங்கிய நிலையில் உள்ளது. கடந்த ஆறாண்டுகளில் நிதிநிலை அறிக்கைகளில் கல்விக்கான பொதுச் செலவு உயர்த்தப்படவில்லை என்பதையே ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையின் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.
சான்றாக ஒன்றிய அரசின் 2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு மாணவர்களைச் சேர்க்க வேண்டும்; அதற்குரிய கல்விக் கட்டணத்தை ஒன்றிய அரசு மாநில அரசிடம் அளிக்கும். தமிழ்நாட்டில் இச்சட்டத்தின்படி 1,6,11 ஆகிய வகுப்புகளில் 69000 மாணவர்கள் சேர்க்கப் பட்டார்கள். இதற்கான கட்டணத்தைத் தமிழக அரசு வழங்கிவிட்டது. ஒன்றிய அரசோ இதுவரை மாநில அரசிற்கு அந்தக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்பது உண்மையிலும் உண்மை.
பொதுச்சுகாதாரத்திற்கு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் 2011-12இல் 1.3 விழுக்காடு செலவிடப் பட்டது. 2016-17இல் 1.5 விழுக்காடுதான் உள்ளது. மனிதவள ஆற்றலை வளர்க்கின்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை மேற் கூறிய புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன. 1965 இல் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி கல்வி வல்லுநர் குழு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 விழுக்காட்டைக் கல்விக்காகச் செலவிட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இன்றைய சூழ்நிலையில் அது 10 விழுக்காடாக உயர்ந்திருந்தால் தான் கல்வி வளர்ச்சியில் மாநிலங்களிடையே இன்று காணப்படும் வேறுபாடும் தேக்க நிலையும் ஏற்றத்தாழ்வுகளும் ஓரளவாவது குறைந்திருக்கும். மனித வள ஆற்றலைப் பெருக்காமல், தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை உயர்த்த முடியாது. விதிவிலக்காக தமிழ்நாடு தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை மாணவர் சேர்க்கையில் இந்திய மாநிலங்களிலேயே முதல் மூன்று இடங்களில் உள்ளது. அதே போன்று குழந்தைகளைத் தொற்றும் பல நோய்கள் தமிழ்நாட்டில் அறவே ஒழிக்கப்பட்டுள்ளன. சான்றாக கக்குவான், காலரா, பிளேக், அம்மை போன்ற நோய்கள் குழந்தைகளைத் தாக்குவதில்லை. அதற்குக் காரணம் தடுப்பூசிகளும் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான சொட்டு மருந்துகளும் பெருநகரான சென்னை முதல் ஊர்ப்புற மருத்துவமனை வரை இலவசமாக அளிக்கப்படுகின்றன. இந்தியா விலேயே மக்கள்தொகைக்கு ஏற்ப நிறுவப்பட்டுள்ள பொது மருத்துவமனைகளையும் தொடக்க சுகாதார நிலை யங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்நாடு முதன் மையாக உள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 22 தனியார் கல்லுரிகளும் உள்ளன. 20 கோடி மக்கள் தொகையுள்ள உத்திரபிரதேசத்தில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்த்து 21 மருத்துவக் கல்லூரிகள்தான் உள்ளன.
அண்மையில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் இதுவரை 103 குழந்தைகள் உயிர்வளிமப் (ஆக்சிஜன்) பற்றாக்குறையால் இறந்துள்ளனர். இன்றைய முதல மைச்சர் யோகி கடந்த இருபதாண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இத்தொகுதியில்தான் கோரக்பூர் மருத்துவமனை அமைந்துள்ளது. மருந்துகள், தடுப்பூசிகள் வளிமங்கள் ஆகியவற்றை வாங்குவதில் தொடர்ந்து பெரும் ஊழல்கள் இருப்பதாக அண்மைச் செய்திகள் உறுதி செய்கின்றன. ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கைகளில் நாட்டிற்குத் தேவையான பல புள்ளிவிவரங்கள் வெளியிடப்படு வதில்லை. திட்டமிட்டே மறைக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.
தமிழ்நாட்டினுடைய அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை நீட் தேர்வின் வழியாக வடநாட்டுக்காரர்களுக்கும் உயர் சாதியினருக்கும் தாரை வார்க்கும் திட்டமும் இதில் ஒன்றாகும். இதற்குச் செண்பகம் துரைராசன் வழக்கில் (1951) தமிழக உயர் நீதிமன்றத்தில் தலைமை பார்ப்பன நீதிபதியும் உச்ச நீதிமன்றப் பார்ப்பன நீதிபதியும் இணைந்து சமூக நீதியை 1951இல் அழித்தார்கள். இன்றும் அதே நிகழ்வுதான் ஒன்றிய அரசிலும் உச்ச நீதிமன்றத்திலும் உள்ளவர்களால் மீண்டும் நடத்திக் காட்டப்படுகிறது. இச்சூழலில் யாருடைய பணம் யாருக்காகச் செலவிடப்படுகிறது என்பதை ஆய்வது அவசியமாகிறது. குறிப்பாக இந்தியா வில் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்கள்தான் ஒன்றிய அரசிற்கு 80 விழுக்காட்டிற்கு மேல் வரிவருவாயை ஈட்டித் தருகின்றன. சமூக-பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை கடந்த 70 ஆண்டுகளாக முன்னிறுத்திச் செயல்படுத்தாத வட மாநிலங்களுக்குத்தான் இந்த 6 மாநிலங்களின் வரிவருவாய்ப் பிரித்துக் கொடுக்கப் படுகிறது. இச்செயல் வளர்கின்ற மாநிலங்களின் வளர்ச்சியைத் தடை போடும் செயலாகும். இன்னும் எத்தனை ஆண்டுகள் வடமாநிலங்களுக்கு இந்த ஆறு மாநிலங்கள் கப்பம் கட்டப் போகின்றன! இது போன்ற புள்ளிவிவரங்களை ஏன் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடுவதில்லை என்ற கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்புவதே இல்லை. எனவே நாடாளு மன்றம் என்கிற ஒரு போர்வையில் முதலாளித்துவச் சக்திகளும் அதற்குத் துணைப் போகின்ற உயர் சாதி ஆதிக்கச் சக்திகளும் நம்மை ஆட்டிப்படைத்து அடிமைகளாக நடத்துகின்றன.
கடலில் மூழ்குகிற கப்பலின் ஒரு சிறு முனை தெரிவதுபோல, இப்பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு நுண்ணிய புள்ளியளவுதான் உண்மையாக வெளி வந்துள்ளது. இது போன்ற உண்மையான காரணிகளை மறைத்து ஓர் ஒற்றையாட்சி முறையை நிறுவ முற்படும் பாஜக அரசு பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கிறது.
‘பாடப் பாட ராகம் மூட மூட ரோகம்’
என்ற தமிழ் முதுமொழிக்கு ஏற்ப மக்கள் பஞ்சப் பாட்டைப் பாடுகிறார்கள். ஒன்றிய அரசோ கடும் நோயாளியைப் போல உண்மைகளை மூடி மறைக்கிறது.