1

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்று ஒரு கருத்துண்டு. அப்படியான ஒன்றுதான் இவ்வாறானதொரு கட்டுரை எழுதுவதற்கான உந்துதலும். சமீபத்தில் படித்த இரண்டு விடயங்கள் குறித்துத்தான் எனது சில அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். ஓன்று நன்பர் அசோக் யோகன் எழுதிய எஸ்.வி.ஆர் என்று தமிழகச் சூழலில் அழைக்கப்படும் எ.ஸ்.வி.இராஜதுரை பற்றிய சர்ச்சைகள், மற்றைய ஈழத்து தமிழச் சூழலில் பிரபல மார்க்சியர் என்று அவரது சகபாடிகளால் அழைக்கப்படும் போராசிரியர்.சி.சிவசேகரத்தின் புல்லரிக்க வைக்கும் நேர்காணல்.

உண்மையில் சமீபகாலமாக எழுதுவதில் பெரிய நாட்டமெதுவும் என்னிடமில்லை. குறிப்பாக சமீபத்தைய அரசியல் அனுபவங்களின் பின்னர், குறிப்பிட்ட நபர்களை மையப்படுத்தி அல்லது தனிப்பட்ட ரீதியாக தாக்குகின்ற விமர்சனங்களில் என்னளவில் எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. ஏனென்றால் அவ்வாறான எழுத்துக்களால் ஏதும் பெரியளவில் நன்மைகள் விழையுமென்று நான் நம்பவில்லை. ஆனால் சில வேளைகளில் சில பொது விடயங்களை சுட்டிக்காட்டுவதற்கு குறிப்பிட்ட ஒருவரின் கருத்துக்களை மறுதலிக்கவோ அல்லது பின்பற்றவோ வேண்டிய தேவை எழுகிறது. அப்படித்தான் இந்த இரு விடயங்களையும் பார்க்கிறேன். அது மட்டுமல்லாது சில கருத்துக்களுக்கு உரிய வேளைகளில் எதிர்வினைகள் வெளிவராதபோது, அதுவே முற்றிலும் சரியானதென்னும் அபிப்பிராயம் தோன்றிவிடும் ஆபத்துமுண்டு. இந்த பின்புலத்திலேயே எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

2

முதலில் சமீபகாலமாக விடுதலைப்புலிகளின் தோல்வி குறித்து மேலெழும் விமர்சனங்கள் பற்றி சிறிது பார்ப்போம். முதலில் புலிகள் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்கள் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை என்பதில் என்னிடம் அபிப்பிராய பேதங்கள் இல்லை. ஆனால் அவைகள் ஆரோக்கியமான விமர்சனங்களாக இருக்க வேண்டுமென்பதுதான் இங்குள்ள முன்நிபந்தனை. இன்று புலிகளின் இராணுவ ரீதியான தோல்விக்குப் பின்னர் முன்வைக்கப்படும் அனைத்து விமர்சனங்களும் நிலைகொண்டிருப்பது புலிகளின் கடந்த காலத்தில்தான். அதிலும் குறிப்பாக பல்இயக்க செயற்பாடுகள் இருந்த காலத்தில் அதனை மாற்று அரசியல் அறம் என்ற நிலையில் எதிர்கொள்ளாது, புலிகள் தம்மை மையப்படுத்திய ஒற்றை அரசியல் பார்வையொன்றை முதன்மைப்படுத்தியது, அதற்காக பல்வேறு இயக்கங்களையும் தடை செய்தது அல்லது தகர்த்தது. இவைகள்தான் புலிகள் மீது முன்வைக்கப்படும் எதிர் விமர்சனங்கள். இவைகள் விமர்சனத்துக்குரிய பக்கங்கள்தான், நான் மறுக்கவில்லை. ஆனால் விடயம் என்னவென்றால் தமது விமர்சன வித்துவத்தை காட்ட வேண்டுமென்ற ஆர்வக் கோளாறில் புலியெதிர் விமர்சகர்கள் தலையை விட்டுவிட்டு வாலை பிடித்துத் தொங்கும் விமர்சனத்தைத்தான் முழு மூச்சுடன் செய்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் தொட்டு நிற்கும் விமர்சனப் புள்ளிக்கும் புலிகளின் இன்றைய தோல்விக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை.

பூகோள மற்றும் பிராந்திய நலன்களை தமது வலிமையான இருப்பு நலனுடன் இணைத்துக் கொள்வதில் ஏற்பட்ட சறுக்கல் அல்லது புரிந்து கொள்வதில் இருந்த போதாமைகள் இவைகள்தான், எவருமே நம்ப முடியாதளவிற்கானதொரு தோல்வியை புலிகள் எதிர்கொள்ள வேண்டி வந்ததிற்கான காரணம். மற்றும்படி அவர்களது கடந்த காலம் அது இது என்பதெல்லாம் வெறும் தனிப்பட்ட வெறுப்பனுபவங்களின் வெளிப்பாடுகளே. நமது விமர்சகர்கள் சொல்லுவது போன்று புலிகளின் கடந்தகாலத் தவறுகள்தான் அவர்களது இன்றைய தோல்விக்குக் காரணம் என்றால் அவர்களது தோல்வி இன்றல்ல எப்போதோ நடந்திருக்க வேண்டும். அது பிரமேதாச காலத்தில் நடந்திருக்கும் அல்லது சந்திரிகா காலத்தில் நடந்திருக்கும். அப்போதெல்லாம் செல்வாக்கு செலுத்தாத அவர்களின் கடந்தகாலத் தவறுகள் இப்போது மட்டும் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியிருக்க முடியும்? இதில் எந்தவொரு தர்க்கமும் இல்லையே நண்பர்களே! சமகாலத்தில் வெளிவரும் அனேக விமர்சனங்கள் விழுந்தவர்களை ஏறி மிதிக்கும் ஆர்வக் கோளாறின் வெளிப்பாடாக இருக்கின்றனவேயன்றி தோல்வியை எவ்வாறு படிப்பினையாக்கிக் கொள்வது என்ற அக்கறையை வெளிப்படுத்துவதாக இல்லை. விதிவிலக்காக சில விமர்சனங்கள் உண்டு. மற்றும்படி விழுந்தவர்களை ஏறி மிதிப்பதற்கு பெரிய அரசியல் அறிவோ, தர்க்க ஆற்றலோ தேவையில்லை அதற்கு சாதாரண பொதுப் புத்தியே போதுமானது.

3

அடுத்த விடயம் உடைவுறும் பிரமிப்புகள் பற்றியது, சமீபத்தில் அசோக் யோகனின் எஸ்.வி.இராஜதுரை பற்றிய இருகட்டுரைகளைப் படித்தேன். முதலாவது கட்டுரையைப் படித்தபோது அது குறித்து எழுத வேண்டுமென்று எண்ணினேன். ஆனாலும் அந்த சந்தர்ப்பத்தில் இருந்த வேலைப்பளுவின் காரணமாக முடியாமல் போய்விட்டது. அசோக் இராஜதுரையை நோக்கி உருக்கமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். யோகனின் கேள்வியிலிருந்தே அவர் எஸ்..வி.இராஜதுரை மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. தற்போது அந்த நம்பிக்கையை இராஜதுரை தகர்த்து விட்டார் என்பது, அசோக் யோகனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும். இது ஒரு சிக்கலான விடயம்தான். நமது நம்பிக்கைக்குரியவர்கள் நமது நம்பிக்கையிலிருந்து விலகும்போது ஏதோ பாறாங்கல்லை நம் தலை மீது போட்டுவிட்டது போன்றதொரு வலி ஏற்படுகின்றது. இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி எவரையும் பிரமிப்புகளற்று நெருங்குவதுதான். கருத்துக்களை நமது தேவையிலிருந்து மட்டும் பார்ப்பதுதான்.

எஸ்.வி.இராஜதுரை என்றதும் முதல் முதலாக அவரைச் சந்தித்ததே நினைவுக்கு வருகிறது. நிச்சயமாக எஸ்.வி.ஆருக்கு என்னை நினைவிருக்காது. அது காலம் சென்ற கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் வீடு. எஸ்.வி.ஆர் வந்திருக்கிறார் என்றதும் எனக்குள் இருந்த பிரமிப்பு துள்ளிக் குதித்து ஓடியது. சிறிது நேரம் அவரும் வில்வரெத்தினமும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சுசீந்திரன் பற்றியும் பேச்சுக்கள் அடிபட்டன. சுசீந்திரன் தமிழகம் வந்து தன் வீட்டுக்கு வராமல் போனது குறித்து தான் மிகவும் கவலையடைந்ததாகவும் தனக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்ததாகவும் குறிப்பிட்டார் எஸ்.வி.ஆர். அந்தளவிற்கு நெருக்கமானவர், அந்த நிகழ்வுக்கு போகாமல் இருப்பாரா?

பின்னர் அன்று மாலை ஒரு கலந்துரையாடல் ஒன்றும் எங்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. தான் பிரிந்து செல்லும் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரிக்கவில்லை சேர்ந்திருப்பது குறித்துத்தான் யோசிக்க வேண்டும் என்று சாதாரணமாகக் குறிப்பிட்டார். அப்போது இடதுசாரி செயற்பாட்டாளர்கள் என்றால் சாதரணமாகவே அவர்கள் மீது எனக்கு நாட்ட மேற்படுவதுண்டு. அதிலும் ஈழத் தமிழருக்காக பேசும் இடதுசாரி அறிஞர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் என்றால் சொல்லவா வேண்டும்? ஆனால் அன்றைய முதல் சந்திப்பிலேயே இராஜதுரை குறித்து எனக்குள் இருந்த பிரமிப்பு ஆட்டம்கானத் தொடங்கியது. பின்னர் ஈழத்தின் முன்னனி அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் நூலுக்கு முன்னுரை வழங்க மறுத்ததை அறிந்தபோது எஞ்சியிருந்த அடுத்த கால்வாசி பிரமிப்பும் ஆட்டம் கண்டது. ஈழத் தமிழர்கள் அழிந்து கொண்டிருந்தபோது, அதற்கு எதிராக தமிழகத்தைச் சோந்த எழுத்தாளர்கள், கவிஞர்களான பலர் குறிப்பாக பா.செயப்பிரகாசம், இன்குலாப் போன்றவர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருந்தபோது எங்கும் எஸ்.வி.இராஜதுரையின் குரல்களைக் கேட்க முடியவில்லை. ஒருவகையான மேதாவித் தனத்துடன்தான் அவ்வப்போது இராஜதுரை கருத்துக்களை உதிர்த்து வந்தார்.

இப்போது என்னளவில் இராஜதுரை ஒரு பிரமிப்புக்குரிய மனிதரல்ல; பலரையும் போல் ஓர் எழுத்தாளர். வேண்டுமானால் சற்று ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் என்றும் சொல்லலாம் அவ்வளவுதான்; ஆங்கில அறிவு இருப்பதால் தான் ஆங்கிலத்தில் படித்ததை தமிழ்ப்படுத்தும் போது அந்தத் தவல்களை தேடிப் பெறுவதில் சிரமமுள்ளவர்களுக்கு அது புதிய விடயமாகவும் பெரிய ஆளுமையாகவும் தெரிய வாய்ப்புண்டு. இதற்கு மேல் எஸ்.வி.ஆர் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பிரமிப்புகளற்று இராஜதுரையை அணுகும்போது என்னால் சாதாரணமாக எழுத முடிகிறது. இங்கு நமது எழுத்தாளர்களின் பிரச்சனை தங்களுக்கு பிடித்தமான பலரை ஒரு வகை பிரமிப்புடன் அணுக முற்படுவதுதான். இதன் காரணமாகவே தடுமாற்றத்திற்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாக நேர்கிறது. என்னிடமும் இந்தக் குறை இருந்தது உண்மைதான் அனால் இப்போது அதனை திருத்திக் கொண்டு விட்டேன்.

4

அடுத்தது சி.சிவசேகரத்தின் நேர்காணலுக்கு வருவோம். என்னளவில் எஸ்.வி.இராஜதுரைக்கும் சிவசேகரத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது ஒரு காலத்தில் இருவருமே எனது பிரமிப்புக்குரியவர்களாக இருந்தவர்கள் ஆனால் துரதிஷ்டவசமாக இன்று, என்னால் மிகவும் சாதாரணமாகப் பார்க்கப்படுபவர்கள். இதில் இராஜதுரை தமிழகத்தைச் சேர்ந்தவர் அவர் குறித்து ஏன் நாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டும்? ஆனால் சிவசேகரம் அப்படியல்ல தன்னை ஈழத்தின் மார்ச்சியர் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவராகவும் அடையாளப்படுத்திக் கொண்டு ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காகவே எழுதியும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகவே பேசியும் வரும் ஒருவர். இவர் சார்ந்த, சிறிலங்காவின் தலைநகரிலிருந்து வெளிவரும் (இடதுசாரித்துவ முழக்கத்துடன்) புதிய பூமி பத்திரிகையில் தாம் விரும்பியவாறு தமக்குப் பிடிக்காதவர்களை பரிகசிக்கும், ஏளனப்படுத்தும் இவர், தான் சார்ந்த அமைப்பு பற்றியோ அல்லது நபர்கள் பற்றியோ எவரேனும் விமர்சனங்கள் வைத்துவிட்டால் உடனே அவர்களுக்கு கொடுக்கும் பட்டம் அமெரிக்க கைக் கூலிகள், சி.ஜ.ஏயிடம் பணம் பெறுகிறார்கள் என்பதுதான். ஆனால் இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றச் செல்வதற்கும் சி.ஜ.ஏயிற்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ என்று எவரும் தவறுதலாகவும் கேட்டுவிடாதீர்கள். அப்படி நீங்கள் கேட்டால் ஒரு வேளை உங்களுக்கு பாக்கிஸ்தானிய உளவுப்பிரிவான ஜ.எஸ்.ஏயில் ஏதாவது பதவி கிடைக்கலாம். 

இப்பொழுது சிவசேகரத்திற்கு பரிகசிப்பதற்கும் கொச்சைப்படுத்துவதற்கும் கிடைத்திருக்கும் பெயர்கள்தான் புலி, பிரபாகரன். சிவசேகரத்தின் (மார்க்சியத்தின் பெயரால்) வறட்டுத்தனமான கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அடிப்படையில் அவரிடம் ஒரு நேர்மையிருக்கிறது என்ற வகையில் அவர் மீது எனக்கு மதிப்பிருந்தது. ஆனால் அவர் சமீபத்தில் தமிழகத்திலிருந்து வெளிவரும் புதிய ஜனநாயம் என்னும் இதழுக்கு வழங்கிய நேர்காணலை பார்த்தபோது அதுவும் முடிந்துபோன கதையாகிவிட்டது. (அந்த நேர்காணலை இனியொரு இணையத்தில் பார்க்கலாம்). நான் விமர்சனத்தின் எதிரியல்ல; ஆனால் நிச்சயமாக கொச்சைப்படுத்தலின் எதிரிதான். இந்த நேர்காணலில் இலங்கை அரசியலை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் போல் பதிலளித்திருக்கும் சிவசேகரம் கீழே உள்ள கேள்விக்கு அளித்திருக்கும் பதில் புல்லரிக்க வைக்கிறது. இதனை வாசித்தபோது உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன் சிவசேகரத்தினது அறிவிலித்தனத்தை என்ணி.

கேள்வி இதுதான்: “பிரபாகரன் ஆயுதம் தாங்கிய அமிர்தலிங்கம்; அமிர்தலிங்கம் ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்” என இலங்கை புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான செந்தில்வேல் கருத்துக் கூறியிருக்கிறார். எதன் அடிப்படையில் அப்படி ஒரு ஒப்புமை செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டது என விளக்க முடியுமா?

இதற்கு சிவசேகரத்தின் பதில் : அண்மையில் ஒரு நேர்காணலில் தோழர் செந்தில்வேல் இப்படிக் கூறியுள்ளார். இதை முன்பே கூறியிருக்கலாம் என்றாலும், இப்போதுதான் நன்கு எடுபடுகிறது. “போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்” என மாவோ கூறியதன் அடிப்படையில் இந்தக் கூற்றை விளங்கிக் கொள்ளலாம். பிரபாகரன், அமிர்தலிங்கம் இருவரிடமும் தமிழீழத்தைத் தவிர, ஏகாதிபத்திய எதிர்ப்போ, மக்கள்திரள் அரசியல்வழியெல்லாம் கிடையாது. அமிர்தலிங்கத்தைவிட பிரபாகரன் தீவிர கொள்கை பிடிப்புள்ளவர் என்பதை நான் ஏற்கிற அதே நேரம், அடிப்படையில் இருவருக்கும் வேறுபாடில்லை என்கிறேன். அமிர்தலிங்கம் பின்னாட்களில் எதிர்க்கட்சித் தலைவராக மாறி அரசுடன் சமரசம் செய்து கொண்டார். ஒருவேளை பிரபாகரன் சரணடைந்து கொல்லப்படாமல் இருந்திருந்தால், அவரும் இதையே செய்திருப்பார். இப்போது பிரபாகரனது வாரிசாகக் கருதப்படும் கே.பி கூட தமிழீழத்தைக் கைவிட்டிருக்கிறார். அவர்களால் முடிந்தபோது தமிழீழமும், முடியாதபோது சமரசமும்தான் அவர்களுடைய கொள்கை. அதில் பிரபாகரனுக்கும், அமிர்தலிங்கத்திற்கும் வேறுபாடில்லை”

அடுத்து இன்னொரு புத்திசாலித்தனமான கேள்வி எழுப்பப்படுகிறது, "விடுதலைப் புலிகளின் அரசியல் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கோ, இந்தியாவிற்கோ எதிரானதல்ல இருப்பினும் கிழக்கு திமோர், கொசாவோ போன்று தமிழ்ஈழ விடுதலையை ஏகாதிபத்தியங்கள் ஏன் அங்கீகரிக்கவில்லை? ஏகாதிபத்தியங்களால் முன் தள்ளப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தையின் நோக்கம்தான் என்ன? அதன் தோல்விக்கு யார் காரணம்?

சிவசேகரம்: புலிகளைப் பொறுத்தவரை அவர்களிடம் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டமில்லை. அதன்காரணமாக ஏகாதிபத்திய, முதலாளித்துவ உற்பத்திமுறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களுடைய கண்ணோட்டமென்பது, ஆக மிஞ்சினால் ஒரு நடுத்தர வர்க்கக் கண்ணோட்டமே. உலகமயமாக்கத்தை ஆதரிப்பது, ஏகாதிபத்தியங்களை விமர்சிக்காமல் தவிர்ப்பது என்ற வகையில்தான் அவர்கள் செயல்பட்டார்கள். இன்றுவரையிலும் புலிகள், பாலஸ்தீன மக்களுக்காகவோ, ஈராக் மக்களுக்காகவோ குரல் கொடுத்தது கிடையாது. ஏகாதிபத்தியங்களைப் பகைப்பது நல்லதல்ல என்ற கண்ணோட்டமே புலிகளிடம் நிலவியது”

மீண்டும் சிவசேகரத்தின் பத்தாம்பசலித்தனமான கருத்துக்களை படிக்க நேர்ந்ததில் ஒரே புல்லரிப்பு.

மீண்டும் மீண்டும் இடதுசாரித்துவத்தின் பெயரால் முன்வைக்கப்படும் இந்த ‘ஏகாதிபத்தியம்’ என்ற சொல்லிற்கு இன்றைய புதிய உலக ஒழுங்கில் என்ன பெறுமதி இருக்கிறது? உண்மையிலேயே அப்படியொன்று இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் இன்றைய சூழலில் அதனை எவ்வாறு புரிந்துகொள்ளவது என்றெல்லாம் நாம் முதலில் சிந்திக்க வேண்டும். ஆனால் இங்கு சிவசேகரம் போன்ற நபர்களிடம் அது எப்போதுமே இருந்ததில்லை. எல்லா நேரங்களிலும் தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் சில சுலோகங்களை பயன்படுத்திக் கொள்வது, அந்த சுலோகங்களை முன்னிறுத்தி மற்றவர்களை விமர்சிப்பது இதைத் தவிர உருப்படியாக இவர்களிடமிருந்து ஏதாவது வெளிவந்ததாகத் தெரியவில்லை. நான் எனது முன்னைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டவாறு தூய இடதுசாரி அரசியல், தூய வலதுசாரி அரசியலின் காலம் முடிந்துவிட்டது, அப்படி இருப்பதாக சொல்வது ஒரு வகையான பிழைப்பு வாதமேயன்றி அதில் எந்தவிதமான யதார்த்தரீதியான நோக்கும் கிடையாது. இன்றைய தாராளவாத அரசியல் போக்கானது ஒரு வட்டத்திற்குள் பல கூறுகளை உள்வாங்குவதான தன்மையைத்தான் வெளிப்படுத்தி நிற்கிறது.

இந்தப் போக்கை சீனா, வடகொரியா போன்ற எதேச்சாதிகார நாடுகள்தான் எதிர்க்கின்றன. அவ்வாறு எதிர்ப்பதால் மட்டுமே இந்த நாடுகள் புரட்சிகர நாடுகளாவிடாது. இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகள் மாற்றுக் கருத்துக்களை அங்கீகரிக்கவில்லை என்று விமர்சனம் செய்யும் சிவசேகரம்தான் மறுபுறம் மனித உரிமைகள், ஜனநாயகத்தின் மீதான மதிப்பை உதாசீனம் செய்யும் சீன எதேச்சாதிகாரத்திற்கு வக்காலத்து வாங்கிவருகிறார். அடுத்தது புலிகள் பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கவில்லை ஈராக் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்றவகையான கருத்துக்கள். இப்படியான வாதங்களை கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இவ்வாறான அர்த்தமற்ற வாதங்கள் குறித்து நான் முன்னர் எழுதியுமிருக்கிறேன். இவ்வாறு கேள்வி எழுப்புபவர்கள் மறுபுறமாக தமது கேள்வியை போட்டுப் பார்ப்பதில்லை.

தமிழர்கள் பெரும் துன்பங்களை சந்தித்தபோது, சந்தித்துக் கொண்டிருக்கும்போது ஏன் அங்கிருந்து எந்தக் குரலும் வரவில்லை? ஏன் அவர்கள் நமது மக்கள் குறித்து கவலைப்படவில்லை? அவர்கள் அவ்வாறு எதிர்வினையாற்றாதது அவர்களது தவறுமல்ல உண்மையில் அது அவர்களுக்கு சாத்தியமற்ற ஒன்றாகும். அதற்காக பல்வேறு முற்போக்கான அமைப்புக்களுடனும் நட்புறவுகளை பேணிக்கொள்ளக் கூடாதென்பதல்ல வாதம். இங்கு சிவசேகரம் போன்றவர்கள் கவனம் கொள்ள வேண்டிய புள்ளி எதுவென்றால், ஒரு  கொள்கைப் பற்று என்பது வேறு அந்த கொள்கையை சமகாலத்துடன் இணைத்து அதன் பொருந்தும், பொருந்தாக் கூறுகளை பரிசீலித்து சிந்திப்பதென்பது வேறு. அவ்வாறானதொரு புரிதல் நம்மிடம் இலலாதபோது நமது கொள்கைப் பற்றென்பது வெறுமனே (ரெஜி ரெப்கே) சூத்திரங்களில் சுகம்காணுவதாகவே இருக்கும். அனேக சந்தர்ப்பங்களில் சிவசேகரம் என்னும் மார்க்சியர் சூத்திரங்களில் சுகம்காணும் ஒரு வயதுபோன மணிதராகவே தெரிகிறார்.

5

சிவசேகரத்தின் புலிகள் தொடர்பான விமர்சனத்தைப் படித்ததும் அவர் முன்னர் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்ட விடயமே நினைவுக்கு வந்தது, (பார்க்க – சண்முகதாசன்: ஒரு புனர் மதிப்பீட்டிற்கான அவசியம்)

“மாசேதுங், ஸ்டாலின் மீதான தனது மதிப்பீட்டில், ஸ்டாலின் 60 பங்கு சரியாகவும் 40 பங்கு தவறாகவும் பங்களித்ததாக எழுதியதாக நினைக்கிறேன். இந்த 60-40 பங்களிப்பை வைத்தே ஸ்டாலினின் ஒட்டு மொத்தமான பங்களிப்பு மிகவும் பயனுள்ளதும் வரலாற்று முக்கியத்துவமுடையதும் என்ற முடிவுக்கு மாவோவால் வரமுடிந்தது. தவறு செய்யாதவன் எதையுமே செய்யாதவன் என்பது மாவோவின் கருத்து”

ஆனால் இங்குள்ள விடயம் என்வென்றால் புலிகள் தொடர்பில் இப்படியொரு விமர்சனத்திற்கு சிவசேகரத்தால் வரமுடியாது இருப்பதுதான். சோவியத் அரசியல் பற்றிய மாவோவின் கணிப்பை விளங்கிக் கொள்ள முடிந்த சிவசேகரத்தால் தனக்கு அருகில் இருக்கும் உயிருள்ள விடயமொன்றை விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த மக்களின் பிரச்சனையை, அவர்களின் அரசியல் வெளிப்பாடுகளை விளங்கிக்கொள்ள முடியவில்லை. உண்மையில் சிவசேகரத்திற்கு விளங்கிக் கொள்ள விருப்பமில்லை என்பதுதான் இங்குள்ள விடயம். அவ்வாறு விளங்கிக் கொள்ள முற்பட்டால் தனது கொச்சைப்படுத்தல் விருப்பத்தை நிறைவு செய்ய முடியாமல் போய்விடும். ஆனால் சிவசேகரத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. அவர் பல நாட்களாக, மாதங்களாக புலிகளின் தோல்விச் செய்திக்காகவும் அதன் தலைவரின் மறைவு செய்திக்காகவும் நாக்கில் உமிழ்நீர் சுரக்க காத்துக் கிடந்திருக்கிறார். தற்போது அது ஈடேறியதும் அவரால் உற்சாகத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை அவரைப் பொறுத்தவரையில் இது இனிப்புச் செய்தி.

மீண்டும் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புவது, நான் விமர்சனத்தின் எதிரியல்ல. ஆனால் நிச்சயமாக கொச்சைப்படுத்தலின் எதிரிதான். தவிர நாம் ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் போது நமது தகுதிப்பாடுகள் என்ன என்பது குறித்தும் நம்மிடம் ஒரு கணிப்பு இருக்க வேண்டும். இன்று சிவசேகரத்தின் கருத்துக்களை விமர்சிக்கும் நான் புலிகள் குறித்து சாதாரண வன்னிக் குடிமகன் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தால் எனது நிலைப்பாடு மௌனம் என்பதாக இருக்கும். ஏனென்றால் அதற்கு பதிலளிக்கும் அல்லது அதில் குறுக்கிடும் தகுதி எனக்குக் கிடையாது. அந்த குடிமகனுக்கு இது குறித்து கேள்வி எழுப்புவதற்கு உரிமையுண்டு அதற்குப் பதிலளிக்க வேண்டியது உரியவர்களின் பொறுப்பாகும். ஆனால் சிவசேகரத்தின் கதை அவ்வாறானதல்ல. யுத்தத்தின் சத்தத்தையே கேட்டறிய விரும்பாதவராகவே அவரது கடந்தகாலம் கழிந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் தடாலடியாக அபிப்பிராயம் சொல்ல முற்படுவதானது நிச்சயமாக அவரது தனிப்பட்ட அற்ப நலன்களுடன் சம்மந்தப்பட்டதாகவே இருக்கமுடியும். ஏனென்றால் விமர்சனம் செய்யும் போது நாம் விமர்சன அறத்தை மறந்துவிடக் கூடாது. விமர்சனம் வேறு கொச்சைப்படுத்தல் வேறு அது எத்தகைய உயர்ந்த சுலோகத்துடன் இணைந்திருந்தாலும் கூட.

- யதீந்திரா

Pin It