நெருக்கத்தை துரோகம்
உற்றுப் பார்த்துக்கொண்டே
இருக்கிறது
வீழ்த்துவதற்கான
நேரத்தைக் கணித்தபடி
நிகழ்வதோ தள்ளுவதோ
அன்பின் ஆழமெல்லாம்
காலத்திற்குத்தான்
அத்துப்படி
ஃ
காலமும் மனதும்
இருவேறு திசைகளில்
பயணிக்கிறது
வெறும் வேகத்தடைகளை
இலக்குகளென
பாசாங்கு செய்துகொள்கிறது
வாழ்க்கை
ஃ
மீண்டும் ஒரு இரவு வந்தது
நாம் காதலிக்கிறோம் என்று
சொல்லிக்கொள்வதை நிறுத்தி
வெகு நாட்களானது
வழக்கம் போல் நினைவுக்கு வந்தது
சோரம் போய்விட்டிருந்த
கனாக் காலங்கள்
இருளை நீலமாக்கியது
படிப்படியாய்
பழக்கம் மறந்த
உடல்கள் சாதிக்கும்
கோர மவுனத்தை
நம் அகந்தைகள்
தின்று கொறித்திருந்தன
தூங்கி எழும்
ஒவ்வொரு காலையிலும்
நம்மிடையே ஒரு பிரேதம்
கிடக்கிறது
வெளியில் யாருக்கும்
தெரியாமல்
அதை அப்புறப்படுத்துவதில்
அக்கறை செலுத்துகிறோம்
பகல்கள் பெரும்பாலும்
சிரமம் கொடுப்பதில்லை
ஃ
என் வீட்டின் நடு அறையில்
ஒரு வசீகரமான
சவப்பெட்டி
வைக்கப்பட்டிருந்தது.
அதன் வேலைப்பாடு
அதி நூதனமான
ஒளியோடிருந்தது
தொட்டுப் பார்த்ததில்
என் பிரேதத்தைத் தொடும்
கிலி ஏற்பட்டது
ஒத்திகை பார்த்துக்கொள்ள
தோன்றிய ஆவலை
சற்று ஒத்தி வைத்தேன்
இறந்த பின் நான்
தெரிந்துகொள்ளக்கூடிய
ஒரே விடயமாக
ஏதோவித குதூகலத்தை அது
ஏற்படுத்தியது
பெட்டியை
தூசி துடைத்து
பத்திரப்படுத்தி
எப்போதும் கையோடு
எடுத்துக்கொள்ளும்
சிறு கைப்பை மற்றும்
நாட்குறிப்பையும்
மறக்காமல் அதில்
வைத்துக்கொள்ள முடிவு
செய்தேன்
ஃ
தோணி கழிக்கும் நீராய்
இந்த மாலை
தளும்பி தளும்பி
திரும்புகிறது
கதி தவறாது
இசை நின்ற சொல்லில் அலைகிறது
கணங்களின் கனம் தாளாமல்
குழைகிறது இருப்பு
நிலை கொள்ளவில்லை
எதுவும்
என்னோடு வர மறுக்கும்
உடலை
உன்னிடமே விட்டுவிட்டேன்
ஃ
அதி தீவிரமாக நேசிக்கவோ
அதி தீவிரமாக வெறுக்கவோ
மட்டுமே முடிகிறது
நடுவில் ஏதுமற்றதாய்
இருள், வெள்ளை இருள்
வானத்தின் மற்ற வண்ணமெல்லாம்
வெறும் மனதின் விளைவுதான்
ஃ
கடந்துகொண்டே இருக்கின்றன
கணங்கள்
ஒரு தட்டாம்பூச்சியின் இசையோடு
பறப்பதை ஓடி ஓடி
பிடித்து திரியும் பக்கமெல்லாம்
மைல்கல்லையும் பாதையையும்
பதித்துக்கொண்டே விரிகிறது
வாழ்மையின் திசைகள்
ஃ
துரோகம்
உடலுள்
உருண்டை வடிவ
துக்கமாக
இயங்குகிறது
நம்பிக்கைகள்
ஆறுதல்கள்
கனவுகள்
எவற்றாலும்
கரைக்க முடியாமல்
ஒரு அடைப்பானின்
திறன் கொள்கிறது
இனம்புரியாத
ஊனத்தை
எங்கோ எப்படியோ
ஏற்படுத்திவிட்டே
இறுதியில்
வெளியேறுகிறது
ரத்தமும் திசுக்களுமாய்
காலத்தின் கரை
ஏறுவதும் சரிவதுமாய்
துரோகம்
ஃ
கனவுகளை மென்று தின்றேன்
குடலெங்கும் உன் வாசனை
நாவில் உவர்ப்பும், துவர்ப்பும்
இனிப்பும், புளிப்பும்
ஒன்றை ஒன்று
மிஞ்சுவதில் தோற்றபடி
ஃ
தணலைத் தொட்டுக்
கொண்டிருக்கும்
அதே நேரத்தில்
ஈரத்தையும் விரல்கள்
வேண்டுகின்றன
வேண்டுதல்களுக்குத் தெரிவதில்லை
சாத்தியப்பாடுகள்
ஃ
ஆச்சர்யப்படுத்திக்
கொண்டேயிருப்பது அலுப்பாக
இருக்கின்றது
நேசிப்பதைச் சற்று
தள்ளிப் போடலாம்.
பொய்கள் வரையறை மீறி
தீர்ந்துவிட்டிருக்கின்றது
நட்பாக இருப்பதை
பரிசீலித்துப் பார்க்கலாம்
சுமுகமாகவே தோன்றுவது
சோர்வைத் தருகின்றது
உறவு கொண்டாடுவதை
நிறுத்திக்கொள்ளலாம்
தயார்நிலை வித்தைகள்
சலித்துப்போகின்றன
பணியிலிருந்து உடனே
நீக்கிவிடலாம்
கதவுகள் திறந்தே இருப்பது
கண்கள் கூறுகின்றன
இந்த தடவை நீங்கள்
ஓய்வெடுங்கள்
நானே கதவை சாத்திக்
கொள்கிறேன்
ஃ
என் குப்பியில்
பச்சை குறைந்திருந்தது
மரமும் கானகமும்
அடர்ந்தெழுந்தன
என் குப்பியில்
நீலம் கசிந்திருந்தது
கடலும் ஆகாயமும்
படர்ந்திருந்தன
என் குப்பியில்
வண்ணம் குழைந்திருந்தன
மண்ணும் மனிதமும்
விளைந்திருந்தன
என் குப்பி
உடைந்திருந்தது
பூகம்பமும் சரிவும்
வெடித்திருந்தன
என் குப்பி
காணாமல் போயிருந்தது
புதிய கண்டம்
பிறந்திருந்தது
ஃ
சாதி இனம்
மதம் பகை
ஏதோவதொரு பெயரில்
எம் உடல்கள்
காலந்தோறும்
போர்க்களமாயின
காயங்கள் நாறும்
முலைகள்தோறும்
சிதைவுற்றழிந்த
கருப்பைகள்தோறும்
எமது மானுடத்தின்
வெற்றிக்கும் தோல்விக்கான
குறுதி தோய்ந்த
கொடித்தடங்கள்
போரில்
காணாமல் போன
தலைகளில் எல்லாம்
பறிக்கப்பட்ட பூக்களின்
நீண்ட முடி
ஆயுதங்கள்
தீரும் பின்
யோனிகளற்றுப் போகட்டும்
பிரபஞ்சம்
வேட்டையாடுவதற்கும்
வேட்டையாடப்படுவதற்கும்
எந்த உயிருமின்றி
இடுகாடாகட்டும்
ஃ
ரயில் சந்திப்புகள்தோறும்
பிரிவுகளின் சாட்சியாய்
அழுது சிவந்த முகங்கள்
தண்டவாளங்களின் சத்தங்கள்
பெரும் கேவல்களென
குரலெடுக்கின்றன
கண்ணீரில் தோய்ந்த பயணங்கள்
கசகசத்துக்கொண்டே இருக்கின்றன
பிரிந்துவிடுவதில்
இருக்கும் தைரியம்
பிரிவைப் பார்ப்பதில்
இருப்பதில்லை
ஃ
கசந்தும் கிளர்த்தும்
மதுவைப் போல
ரகசிய உறவுகள்
பிடிக்கவே செய்கின்றன
கிசுகிசுப்பதற்கு
மூச்சிலும்
வேறொரு வெப்பம்
தேவையாய் இருக்கிறது
கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட
சூசகங்களை நிகழ்த்துவதில்
ஒரு நொடியேனும்
கர்வம் ஏற்படவே செய்கிறது
அசூயையில்
இனி ஒருபோதும் இல்லை
என்று எடுக்கப்படும் முடிவுகளை
மாற்றுவதற்குரிய தடங்களை
ஒவ்வொரு தடவையும்
சந்திப்புகள்
கவனமாய் சேகரித்து
கொள்கின்றன
ஃ
உறவுகள் அறுந்துபோயும்
துரத்தும் முகங்களை
என்ன செய்வதென்று
தெரியவில்லை
நினைவுகளின் பிரதிகளென
புதைய புதைய
பெருகுகின்றன
எரியூட்டிவிட்ட பிரேதங்களின்
புகை
விட்டுச் செல்ல மறுப்பது போல்
மூச்சை இறுக்குகின்றன
அன்பொழிந்தவுடன்
தலைகளைக் கொய்துவிடும் திடம்
வாய்க்கப் பெறுவதில்லை
ஃ
பார்த்தலின் கசியும் துவாரங்கள்
கடும் பாறைகளென
உருண்டிருந்தன
கேட்டலின் விடைக்கும்
அங்கங்கள்
செத்த நாய்களென
சுருண்டிருந்தன
தீண்டலின் திகைக்கும் புலன்கள்
சிறகுகளை உலர்த்தி
உறங்கியிருந்தன
சங்கேத மொழிகளை
மறந்துவிட்டிருந்தன உணர்வுகள்
திணை மாற்றம் பெற்றுவிட்ட
நம் உடல்கள்
இனி ஒருபோதும்
சந்தித்துக்கொள்ளாது
வெறும் கூடுகள்
மறு கூடு பாயும்
திறனற்றவை
இனி உங்களிடம்
கேட்டுவிட்டுத்தான்
எழுத வேண்டும்
என்றிருக்கிறேன்
என் சொற்களுக்கு
நீங்கள் நிறுவியிருக்கும்
ஒழுக்கப் பயிற்சிகளைத்
தரலாம் என
முடிவு செய்திருக்கிறேன்.
என் மொழிக்கு
‘பால்’ தேர்வு முத்திரை
ஒன்றை நீங்கள்
குத்தியபின் நான்
பயன்படுத்துவதாகவும்
உறுதி பூண்டிருக்கிறேன்.
கன்னியா
கன்னியில்லையா
திருப்தியா
திருப்தியில்லையா
உங்கள் ஆத்ம
கேள்விகளுக்கு
பகிரங்கமாக
பதிலளித்துவிட்டே
வரிகளின்
இடைவெளியையும்
நிர்ணயிப்பதாக உள்ளேன்.
ஆயின்
இனி உங்களிடம்
கேட்டுவிட்டுத்தான்
எழுத வேண்டும்
என்றிருக்கிற
என் கவிதைக்கு
ஒரு விலை மட்டும்
தர வேண்டும்
நீங்கள் பேசுகின்ற
அதே கலாச்சாரக் காவலுக்கு
உட்படுத்த வேண்டிய
உங்கள்
அத்தனை பேரின்
புணர்வுறுப்புகளும்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
லீனா மணிமேகலை கவிதைகள்
- விவரங்கள்
- லீனா மணிமேகலை
- பிரிவு: கதைசொல்லி - பிப்ரவரி 2007