சமீபத்தில் லீனா மணிமேகலையின் 'ஒரு பெட்டை நாயின் கூச்சல்' என்று தலைப்பிட்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரை குறித்து சில விடயங்களைச் சொல்லத் தோன்றுகிறது.

 1. லீனா மணிமேகலை தனது கட்டுரையில், 'ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப்பார்த்தால் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட புனிதங்களின் மீது சந்தேகங்களும் அவற்றின் மேலான ஒரு ரணச்சிகிச்சையும் பெண்கவிதை உளவியலாக மேற்கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளலாம்' என்று கூறுகிறார்.

 leena_220இக்கருத்து உண்மைக்கு முரணாக உள்ளது. யாரோ ஒருசிலருக்கு இதுபொருந்தலாம். ஆனால் எல்லோருக்கும் இது பொருந்தாது. இருப்பினும் இப்படித் திறந்த மனதுடன் கூறியிருப்பது நல்லதே.

 ஒளவை முதல் இன்றுவரை எழுதப்பட்ட பெண்கவிதைகள் யாவும் தெளிவற்றவை, சுதந்திரமற்றவை, ஆணாதிக்கத்துள் அடைபட்டுக் கழிவிரக்கம் கோருபவை, பன்முகத்தன்மையற்றவை, லிங்கமைய வாதத்தையே முன்வைப்பவை என்பன போன்ற விமர்சனங்கள் போகிற போக்கில் ஆய்வு அடிப்படையற்று முன்வைக்கப்பட்டுள்ளன. 

 ஆணாதிக்க சமூகத்திற்குள் ஒடுங்கிப்போன பெண்ணிருப்பு சொல்லப்பட்ட போதிலும் சங்கப் பெண் கவிதைகளையும் மருதத்திணைக் கவிதைகளையும் (மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி. அகம்-146 முதலியன) வாசித்தால் பெண் ஆளுமை பதிவாகியிருப்பதை உணர முடியும். ஒளவையின் 'முட்டுவென்கொல்....' கவிதைக்கு இணையேது.

 2. மகாஸ்வேதா தேவியின் 'திரௌபதி' கதையை முன் உதாரணமாகக் கொண்டு லீனா பேசுகிறார். இங்கு படைப்பில் நிர்வாணத்தை ஆணுடலுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிலையினில்தான் லீனா மணிமேகலை இருக்கிறார். அரசுக்கு எதிராக, அரசப் பயங்கரத்திற்கு எதிராக நிர்வாணத்தை ஆயுதமாக அவர் முன்வைக்கவில்லை. ஆனால் மகாஸ்வேதா அரசுப் பயங்கரத்துக்கு எதிராக உடலை முன்நிறுத்துகிறார். (மேலும் காண்க: உலக அளவில் நிர்வாணத்தைப் பெண்கள் ஆயுதமாகக் கொண்ட விபரங்கள், விடுதலையை எழுதுதல் ப.61-64, மாலதி மைத்ரி:2004)
 
 3. "தமிழ்ப் பெண் கவிதையின் தொப்புள்கொடியை சங்ககாலத்திலிருந்து எடுக்கிறார்கள். நீலி, பத்ரகாளி எனத் தொன்மத் தெய்வங்களோடு உருவகப்படுத்திக்கொள்வது, பெருங்கதையாடல்களைப் புறந்தள்ளி ஒருவித பேகனிஸ்ட் கலகத்தைச் செய்தாலும் உயர்வு நவிற்சிகள் விட்டில் பூச்சிகள் போல திரும்பத் திரும்ப லிங்க மய அழகியலுக்குள்ளேயே விழவைக்கிறது என்ற அபாயத்தைப் புறந்தள்ள முடியாது. ஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல கீழானவளும் அல்ல வேறானவள் என்ற புள்ளிக்கு பெண்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. இந்த நகர்வைக் கொண்டுவந்தவர்கள் பெண்கவிஞர்கள்தான் என்பதை மறைக்க இயலாது" என்று லீனா கூறுவன‌ முரண்பாடுடையவை.

 மனித  சமூக அமைப்பே தொன்மங்களாலும் புனைவுகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆக எந்த ஒரு புத்தெழுச்சியும், மாற்றுச்சிந்தனை மரபும், கலகமும் அங்கிருந்து துவங்காமல் வேறு எங்கிருந்து துவங்க முடியும்? சங்கப் பெண்கவிதையின் ஆளுமைகள் அசாத்தியமானவை. நவீனப் பெண்கவிதைகளின் ஆளுமையும் அதன் தொடர்ச்சியே. ஏனெனில் இக்கவிஞர்கள் வேற்று மரபில் இருந்து வந்தவர்களல்லர்.

 4. "சமணம், பௌத்தம் என்று பெருமதக் காலங்களில் மடிந்து....." என்ற லீனாவின் கூற்று சமண, பௌத்த இலக்கிய மரபிலுள்ள பெண் அடையாளம், பெண் சார்ந்த தத்துவங்களை அறியாததனால் முன்வைக்கப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் உள்ள கவுந்தியடிகள், மணிமேகலை, கண்ணகி, மாதவி போன்ற பாத்திரங்கள் வழியாக முன்வைக்கப்படும் பெண் சார்ந்த விவாதங்களை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. இது பற்றி “இந்த இரு காப்பியங்களும் ஆண்மையம் என்பதையும் முற்றுண்மை என்பதையும் கேள்விக்குள்ளாக்கிய இரு சிந்தனை மரபுகளின் பின்னணியில் மொழிப்படுத்தப்பட்டவை." என்று பிரேம் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். (சிலப்பதிகாரம் - மணிமேகலை: பெண்மையின் நாடகம் பின்நவீனத்துவ ஆய்வு. பிரேம், ஜனவரி-மார்ச்:2000,சொல்புதிது)
 
 5. 'வேட்கை, விழைவு, இச்சை என்பவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் பக்தி உணர்வை காமவிழைவாக எழுதிய ஆண்டாள் தனித்துவமிக்கவராகத் தெரிகிறார்' என்ற கருத்தும் மற்றும் ஒரு தன்னிலை, படிநிலை நீக்கம் போன்ற சொல்லாடல்களும் ப.2 ல் உள்ள கருத்துக்களும் பிரேம்-ரமேஷ் வாசகர்களுக்கு அறிமுகமாகாதவையல்ல.

  'சிதைவுகளின் ஒழுங்கமைவு: பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள்' (காவ்யா:2000) கட்டுரை தொகுப்பில் 'சிலப்பதிகாரம் - மணிமேகலை: பெண்மையின் நாடகம் பின் நவீனத்துவ ஆய்வு' (7ஆம் கட்டுரை) மற்றும் 'ஆண்டாள்களின் தேடல்களும் பிம்பங்களின் வன்முறையும்' (8ஆம் கட்டுரை) ஆகிய இரு கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாரமாக ப.2 ல் உள்ள கருத்துகள் அமைந்துள்ளன.

 "வரலாறு என்பதும் நிகழ்வுகள் என்பதும் வேட்கை, விழைவு, இச்சை என்பனவற்றின் ஊடாட்ட வினைக்களம் என்பதிலிருந்து தொடங்கலாம் ...." (சிலப்பத்திகாரம் - மணிமேகலை பெண்மையின் நாடகம்... ப.96) என்று அவை குறித்து விரிவாகப் பேசுகிறது பிரேமின் கட்டுரை.

  ".... உடல் இருப்பைக் கடத்தல் என்பது அதிதன்மை பிம்பங்களுக்குள் ஒடுங்குதல் மற்றும் அதன் மூலகங்களால் கட்டப்பட்ட குறிகளுக்குள் புதைதல் என்பவையாகவே இருக்கின்றன, இவ்விடத்திலிருந்தே நாம் மதம் சார்ந்த கருத்தாக்கங்களையும் சிதைத்துப்பார்க்க வேண்டியவர்களாக நிற்கிறோம். ..." (ஆண்டாள்களின் தேடல்களும் பிம்பங்களின் வன்முறையும் ப.119) என்ற பிரேமின் கருத்தாக்கங்கள் லீனா மணிமேகலையால் "வேட்கை, விழைவு, இச்சை என்பவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் காமவிழைவாக எழுதிய ஆண்டாள்..." என உள்வாங்கப்பட்டிருக்கிறது. இங்கு சொல்ல விரும்புவது, எந்த ஒரு குறிப்பையும் தராமல் தாமே சுயமாக எழுதியது போன்ற பாவனையில் லீனா கட்டுரையை அமைத்திருப்பதைத்தான்.

 நிலம் - உடல் - மனம் இவற்றிற்கான பிணைப்பை தொன்மங்கள், மரபுகளினூடே பின்னப்பட்ட அதிகார முறைகளை அதன் அடிப்படைகளை நுட்பமாக ஆய்ந்து அப்பின்னல்களைக் கலைத்துப்போட்டு விவாதத்திற்கு முன்வைக்கும் திறனாய்வை பிரேமின் கட்டுரைகள் பேசுகின்றன. ஆக முற்குறிப்பிட்ட அவ்விரு கட்டுரைகளையும் வாசித்தவர்கள் படித்தால் லீனா மணிமேகலையின் இந்தக் கட்டுரை தனக்கு முன்னோடியான, அடிப்படையான ஒரு ஆய்வை இருட்டடிப்புச் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தும் போக்கினைக் கொண்டுள்ளது என்று கருதாமலிருக்க முடியாது. அட்ரியன் ரிச் மற்றும் காதரீன் மக்கின்னென் போன்ற மேலைநாட்டு பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும் கட்டுரை தமிழில் இச்சிந்தனை பதிவாகியிருப்பதை முற்றிலும் மறைத்துவிட்டு தன் சுய கண்டுபிடிப்பு போல பேசுவதும் அதிலும் தெளிவற்றுப் பேசுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழ்ச்சூழலில் இது புதியதன்று. ஆயினும் குறிப்பினைத் தராமையின் பொருட்டு தனது கருத்தாக அவற்றை முன்வைக்கும் முனைப்பை லீனா கொண்டுள்ளார்.

 6. மாலதி மைத்ரியின் கவிதைகள் குறித்துப் பேசுகையில் 'ஆண்-பெண் இணைமுரணை தலைகீழாக மாற்றிப் போட்டு பெண்-ஆண் என்று பெண்ணை முதன்மைப்படுத்தும் செயல்பாடுகளை மாலதியின் கவிதைகள் செய்து பார்க்கின்றன. ஆனால் அந்த இணைமுரணை முரண்களாகவே நிறுத்திவிடாமல் சிதைத்து கலவையாக்கிவிடும் எழுத்து முறையை, பன்மைத்துவத்தை எழுதிப்பார்க்கும் சவாலை விட்டுவிடுகின்றன. பெண்ணைத் தனிமைப்படுத்தும் மாலதியின் கவிதைகள் அவளின் சுதந்திர இருப்பிற்கான மாற்று வழிகளைச் சொல்லத் தவறுகின்றன' என குற்றம் சாட்டுகிறார்.

 இங்கு நாம் கவனிக்க வேண்டியது, கவிதையென்பது எல்லாவற்றுக்கும் தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்ற இலக்குடன் அமைபவையல்ல. அப்படிச் சொல்ல வேண்டிய தேவையுமில்லை. மௌனங்களாலும் இடைவெளிகளாலும் புனைவுகளாலும் அதிகாரமிக்க சமூகவெளியைக் குலைத்துப் போடும் கலகத்தை உண்டு பண்ணும் கனத்த அடர்த்தியை கவிதை தன் உள்ளியக்கமாகக் கொண்டிருக்கிறது. இது சிக்கல், இதற்கு இது தீர்வு என்று கட்டுரை போல திட்டம் போல அமைவதல்ல கவிதை என்பது யாவரும் அறிந்ததுதான். மாலதி மைத்ரியின் கவிதைகள்தான் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் பன்முகத் தன்மையுடன் இயங்குகின்றன என வாசகர்கள் பரவலாகக் குறிப்பிடுவதை இங்கு நினைவுகொள்ள வேண்டும். 
 
 "எலி கீறிய காலில் குருதி கசிகிறது
 கரப்பான் எகிறிப் பறக்கின்றன
 முதுகில் நடந்துசென்ற புலியின் சுவடுகளை
 எப்படிப் பார்ப்பது"  என்ற சுகிர்தராணியின் எழுத்தில் இருக்கும் களிப்பு ஒரு தாய்வழிச் சமூகப் பெண்ணிற்கே உரிய மூர்க்கத்திலிருந்து வருவது. போலி ஒழுக்கங்களுக்கு கச்சாவான எதிர் அழகியலை உருவாக்கியதில் சுகிர்தராணி முக்கியமான பங்காற்றுகிறார்." என்று லீனா மணிமேகலை எழுதிச் செல்கிறார். இவர் கட்டுரையில் பன்மைத்துவம் இல்லாமல் எழுதுவதாகக் குறிப்பிடப்படும் மாலதி மைத்ரி, ஒவ்வொரு கவிதையும் முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு வடிவத்தில் எழுதும் உத்தி தெரிந்தவரோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது லீனா மணிமேகலையின் இந்த புதிய கண்டுபிடிப்பு. ஏனென்றால் இக்கவிதை மாலதி மைத்ரியின் 'சங்கராபரணி' தொகுப்பில் ‘தெய்வ உடல்’ எனும் தலைப்பில் (ப.33) வருகிறது.  இப்பொழுது பெண்ணிற்கே உரிய மூர்க்கம், எதிர் அழகியல் உருவாக்கம் என்பவை யாருக்குப் பொருந்தும் என்ற கேள்வி முன்னே வந்து நிற்கிறது.

ஆக மாலதி மைத்ரியின் கவிதைகளையும் இவர் முழுமையாகப் படிக்கவில்லை, சுகிர்தராணியின் கவிதைகளையும் இவர் முழுமையாகப் படிக்கவில்லை என்பதிலிருந்து லீனா மணிமேகலையின் 'தீவிர வாசிப்பின்' ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அனைவரின் கவிதைகளையும் ஒருவர் வாசித்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தமில்லை. ஆனால் கவிஞர்களை மதிப்பிட்டு ஒரு வரியில் தீர்ப்பு சொல்லும் உரிமையை எடுத்துக்கொள்ளும் ஒரு கட்டுரையாளர் தான் மதிப்பிட எடுத்துக்கொண்ட கவிஞர்களின் எழுத்துகளை முழுமையாகப் படித்திருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச தேவை. 

 7. மாலதி மைத்ரி முதற்கொண்டு ரிஷி, சல்மா, சுகந்தி சுப்ரமணியன், வெண்ணிலா, இளம்பிறை, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி என்று ஒவ்வொருவரையும் கூறி அவர்களின் கவியாளுமை இவ்வளவே என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடிகிறது? மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றோர் நவீன கவிதையில் தவிர்க்க இயலாத ஆளுமைகளாய் மாறியுள்ளனர்.

 இரா. மீனாட்சி, க்ருஷாங்கினி முதற்கொண்டு இன்றுவரை இயங்கிகொண்டிருக்கும் தமிழ்ப் பெண்கவிதை வெளியென்பது அசாத்தியமானது. 'பறத்தல் அதன் சுதந்திரம்' முக்கியமான ஆவணம். 2000க்குப் பிறகு பெண் எழுத்து பன்முகத் தன்மையுடன் தீவிரம் கொண்டது. அந்தத் தீவிரத்தை தாங்க இயலாமல் தமிழ் பண்பாட்டின் காவலர்களால் மிரட்டப்பட்டதும் அச்சுறுத்தப்பட்டதும் அதன் தொடர்விவாதங்களும் (தீராநதி பிப்-2004, மார்ச்-2004) மாலதி மைத்ரி அவர்களால் விரிவாக எழுதப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பிற பெண்கவிஞர்கள் எதிர்கொண்டு பேசத் தயங்கிய சூழலில் மாலதி மைத்ரி துணிவுடன் அக்காலகட்டத்தை எதிர்கொண்டவர்.

 குறிப்பாக லீனா மணிமேகலை குறிப்பிடும் அளவீடுகளுக்குள் பெண் எழுத்து உள்ளொடுங்கிப் போகவில்லை. இதைத் தமிழின் தீவிர வாசகர்கள் யாரும் உணர முடியும்.

 'பெண் கவிதைகள் ரணச் சிகிச்சையாகத்தான் இருக்கிறது' என்று சொல்லிவிட்டு பெண்கவிதைக்குப் புத்துயிர்ப்பும் புதிய திசைகளையும் காட்டுபவர்போல் கட்டுரையாளர் பேசியிருப்பது பிற பெண் கவிஞர்களின் ஆளுமையையும் வளர்ச்சியையும் தாங்க இயலாத ஆற்றாமையின் வெளிப்பாடுபோல் தோன்றுகிறது.

 ஞானி, எஸ்.என். நாகராஜன், பிரேம் போன்ற பலரும் மனித விடுதலையென்பது பெண்ணின் விடுதலையால்தான் சாத்தியம் என்று தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான நெறியில்தான் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என்று பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் அமைகின்றன. ரிஷியின் 'காலத்தின் சில தோற்றநிலைகள்', 'அன்பின் பெயரால்' போன்ற படைப்புகள் கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல் துறவை மட்டுமே வழிமொழிந்து கொண்டிருக்கவில்லை. அப்படித்தான் மற்றவர்களின் கவிதைகளும்.

 இதுவரைக்குமான பெண் எழுத்து ஆணாதிக்கச் சமூகத்தை கலைத்துப்போடும் வேலையைத் தீவிரமாகச் செய்வதுடன் இயற்கைக்கும் மனிதருக்குமான உறவை நெருக்கமாக்கி பெண்ணுடலை இயற்கையின் சுதந்திர வெளிபோல் கண்டடைந்துள்ளது. இயற்கையின் எல்லையற்ற வல்லமையை தனக்குரியதாக இயல்பில் பெற்றுள்ளமையை நுட்பமாக முன்வைக்கின்றன. உலகமயச் சூழலும் நுகர்வு மயமும் பெண்ணுடல் மீது விதிக்கிற தொடர் வன்முறைக்கு எதிரான கலகத்தை வன்மையாகப் பேசுகின்றன. இதற்கு மாற்றாக பெண் முதன்மை பெற்ற தாய்வழிச் சமூகத்தை, இயற்கையுடன் மாறுபாடற்று இணக்கமுறும் தன்மையை (நும்பினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே -நற். 172) அழகியலாக்குகின்றன.

 சரியாகச் சொன்னால் மனித விடுதலையென்பதும் ஆணுக்கான விடுதலையென்பதும் பெண் விடுதலையின் வழிதான் சாத்தியமானது என்ற தளத்தில் பெண்கவிதை மையம் கொண்டுள்ளது எனலாம். இதற்கு மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணியின் படைப்புகள் சாட்சியங்கள். இங்கு கட்டுரையாளர் பெண் எழுத்தைப் பற்றி பொதுவான ஒரு மதிப்பீட்டைச் சொல்வதன் வழி இதுவரை நிகழ்ந்த வளர்ச்சியை இருட்டடிப்புச் செய்கிறார் என்பதைவிடவும் தன்முனைப்பைக் கூற விழைகிறார் என்றே தோன்றுகிறது. பெண் எழுத்தைப் பற்றிய இவ்வாறான மதிப்பீடுகள் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட பொதுப்புத்திகாரர்களுக்கு இனிப்பான ஒன்றுதான். அத்துடன் பெண் எழுத்தாளர்களுக்கு அறிவுரை சொல்வதுபோல் லீனா மணிமேகலை சிலவற்றைக் கூற விரும்புவது இதுவரை அவர்கள் செய்த ஆக்கங்கள் பயனற்றவை என்று சொல்ல விழைந்து அந்த வெற்றிடத்தில் தன்னை நிறுவ முயல்கிறார்.

 ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்கவிதை வெளியை மதிப்பிடுவதன்வழி தனது முதிர்ச்சியை காட்டிக்கொள்ள விழைகிறார். அதன் உள்ளீடாக பெண் எழுத்தின் பன்முகத்தன்மையை கவனிக்கத் தவறி தன் அறியாமையை ஆர்ப்பாட்டமாக லீனா முன்வைக்கிறார். மாலதி மைத்ரியின் கவிதையை சுகிர்தராணியின் கவிதையென குறிப்பிடுவதன் மூலம் தனது வாசிப்பின்மையை புலப்படுத்திவிடுகிறார். நிதானமாக பெண்கவிதைகள் குறித்து ஆழ்ந்து வாசித்து எழுதியிருந்தால் லீனா தனது கருத்துகளை மாற்றி எழுதியிருக்கக் கூடும். விமர்சனம் ஆக்கபூர்வ வளர்ச்சியை நோக்கியதாக இருப்பதே நன்று. அதுவே தமிழ் கவிதையின் அடுத்தகட்ட நகர்வாக இருக்க இயலும். தன்னை முன்னிருத்துவதற்காக‌ சில உண்மைகளைத் திரிப்பது ஆரோக்கியமானதல்ல.
  
சான்றுகள்:

பிரேம்-ரமேஷ்.2000. சிதைவுகளின் ஒழுங்கமைவு. பெங்களுர்: காவ்யா.
மாலதி மைத்ரி.2004. விடுதலையை எழுதுதல். நாகர்கோவில்: காலச்சுவடு,
---------------------- 2001. சங்கராபரணி. நாகர்கோவில்: காலச்சுவடு.
---------------------- 2008. நம் தந்தையரைக் கொல்வதெப்படி. சென்னை: புலம்.
குட்டி ரேவதி. 2009. காலத்தைச் செறிக்கும் வித்தை. சென்னை: ஆழி.

- யாழ் அதியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)