கெட்டவார்த்தை என்பது இரண்டு சந்தர்ப்பங்களில் பயன் படுத்தப்படுவது. முதலாவதாக, நமக்கு நெருக்கமானவர்களி டம் நாம் அந்தரங்கமாகப் பயன்படுத்துவது; இரண்டாவதாக, நாம் வெறுப்பவர்களுக்கு எதிராக மிக இழிவான முறையில் பயன்படுத்துவது. கிட்டத்தட்ட கருத்து சுதந்திரம் குறித்த அளவுகோல்களும் வரையறைகளும் அதைப் பயன்படுத்து கிறவரையும் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து கெட்டவார்த்தையின் மதிப்பைப் பெற்றுவிட்டன. தமிழ் நாட்டில் யார் கருத்து சுதந்திரத்தைப் பற்றிப் பேசினாலும் அதற்குள் இருக்கும் முரண்பாடுகள் கேட்கிற ஒருவருக்குக் கடும் தலைவலியையே ஏற்படுத்துகின்றன. இது கருத்துச் சுதந் திரம் ஏற்படுத்தும் தலைவலியைக் காட்டிலும் மிக மோசமானதாக இருக்கிறது.
லீனா மணிமேகலையின் கவிதைகள் ஆபாசமாக இருப்பதாக வும், அவற்றைத் தடைசெய்ய வேண்டும் என்றும் கோரி இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாநகரக் காவல்துறை ஆணைய ரிடம் புகார் கொடுத்தது தொடர்பாக எழுதவேண்டும் என்று சில வாரங்களாகவே கை அரித்துக்கொண்டிருந்தது. ஆனால் என்னிடம் காரணமற்ற விரோதம் பாராட்டும் யாருக்கு ஆதர வாகவாவது நான் நடந்துகொண்டால் அவர்களிடம் வலியப் போய் சமாதானம் செய்துகொள்கிறேன் என்று நம்ப ஆரம் பித்துவிடுகிறார்கள். நான் சமாதான சக வாழ்வில் நம்பிக்கை யற்றவன் என்பதால் இந்த விவகாரத்தை மறந்துவிடவேண் டும் என்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால் ‘காலச்சுவடு' இதழின் ஆசிரியர் இந்த விவகாரம் பற்றி அவரது சில கருத்துக்களை மே இதழில் எழுதியிருந்தார். லீனாவோடு இழந்த நட்பை இதன் பொருட்டு புதுப்பித்துக் கொள்ளக்கூடிய அபாயம் இருந்தாலும் பரவாயில்லை என்று இப்போது இவ்விவகாரம் குறித்து எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகி விட்டது.
மேலும் லீனா தமிழில் ஒரு அதிகார மையமாக உருவாக்கி வரும் சூழலில் (அதிகார மையமாவதற்கு ஒரே வழி தொடர்ச்சி யான அதிகார எதிர்ப்பே) அவரை இலக்கிய உலகில் இதுவரை துச்சமாக எண்ணியவர்களெல்லாம் ஒவ்வொரு பாளையக் காரர்களாகப் பணிந்து அவரது மேன்மைகளைப் பற்றி எழுதி வரும் சூழலில் அவரது பக்கம் சேர்ந்துவிடுவதுதான் சரி என்று எனக்கும் படுகிறது.
‘காலச்சுவடு' இதழில் ‘எது கருத்து சுதந்திரம்' என்ற தலைப் பில் கட்டுரையாசிரியர் வெளிப்படுத்தியுள்ள அவரது உளக் கிடக்கை (அல்லது அகவிழி) மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. லீனா மணிமேகலை மீது புகார் கொடுத்த இந்து மக்கள் கட்சியினர் சார்பாக அவர் கீழ்க்கண்ட விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.
‘இந்து மக்கள் கட்சியினர் பெண் கவிஞர்களை மிரட்ட வில்லை. .... இந்தியச் சட்டவியல் கணிசமான கருத்துரிமையை நமக்கு வழங்குகிறது.'' ('எது கருத்து சுதந்திரம் கண்ணன், காலச்சுவடு மே 2010) லீனாவின் மீது அளிக்கப்பட்டுள்ள காவல்துறை புகார் என்பது படைப்புச் சுதந்திரத்தின்மீது அதிகாரம் சார்ந்த வன்முறையை ஏவுவதற்கான, அதிகாரம் சார்ந்த கண்காணிப்பை உருவாக்குவ தற்கான, மிக மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கும் முயற்சி என்பதைக் குறைந்தபட்ச சமூக அறிவு உள்ள யாரும் வெகு எளிதில் புரிந்துகொள்ளலாம். தமிழில் இலக்கிய மதிப்பீடுகளுக்காக நிற்பதாக நாடகமாடிவரும் ஒரு பத்திரிகை மிகவும் அருவருக்கதக்க வகையில் தணிக்கையாளர்களுக்கு சாதகமான ஒரு கருத்தை தர்க்க ரீதியாக நிறுவமுற்படும் காட்சியை இன்று நாம் பார்க்கிறோம்.
வெளிப்படையான பாலியல் தூண்டுதல்களில் ஈடுபடும் காட்சி மற்றும் எழுத்து சார்ந்த வெளிப்பாடுகளுக்கு எதிராக ஆபாச தடைச் சட்டம் என்ற ஒன்று ஏற்கனவே நடைமுறையில் இருந்தபோதும் அது காவல்துறையினருக்கு வருமானம் ஈட்டித்தரும் ஒரு பிரிவாக மட்டுமே இன்று நடைமுறையில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். கிட்டத்தட்ட விபச்சார தடைச்சட்டம் போல கலை, இலக்கியம் சார்ந்த விஷயங்களில் இந்த சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்திருப்பதும் அதை அவர்களது ஜனநாயக உரிமை என்று ‘காலச்சுவடு' ஆதரித்து எழுதுவதும் காவல்துறையினரின் அதிகாரத்தின் நிழலை கலை, இலக்கியப் பிரதிகள்மீது படரச் செய்கிற ஒரு இழிவான முயற்சியேயாகும்.
இது ஒரு முன்னுதாரணமாக கொள்ளப்பட்டால் எந்த ஒரு சிறுகதை, நாவல் அல்லது கவிதையை எழுதியவர்மீதும் தமி ழகத்தில் உள்ள எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் யார்வேண்டு மானாலும் புகார் அளிக்கலாம். அந்தப் புகாரின் அடிப்படை யில் ஒரு பெண் கவிஞரையும் அவர் ‘முலை' அல்லது ‘யோனி' என்ற வார்த்தையை அவரது கவிதையில் பயன்படுத் தியதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரிக்கலாம். அதன் மூலம் அவரது குடும்பம் மற்றும் பணியிடங்களில் அவருக்குத் தீராத அவமானத்தையும் நெருக்கடிகளையும் ஏற் படுத்தலாம். லீனாமணிமேகலைக்குப் பிரச்சினையில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாலும் பத்தாவது நிமிடத்தில் வெளியே வந்துவிடும் அளவுக்கு அரசியல் தொடர்புகள் உள்ளவர். சல்மாவுக்கும் பிரச்சினையில்லை. அவர்தான் பிறர் மீது காவல்துறையைத் தூண்ட முடியுமே தவிர, அவருக்கு எதிராக யாரும் தூண்ட முடியாது. ‘காலச்சுவ' டின் ஆஸ்தான எழுத்தாளர்களில் ஒருவரான சுகிர்தராணி போன்றவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். ‘காலச் சுவடு' வெளியிட்ட 'இரவு மிருகம்' தொகுப்பிற்காக இந்து மக்கள் கட்சியினர் தங்களது கருத்து சுதந்திரத்தை வெளியிடும் பொருட்டு ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத் தால் பிறகு அவர் பள்ளி ஆசிரியையாகப் பணி புரிய முடியுமா?
மேலும் ஒடுக்கப்படும் தரப்பினரின் கருத்து சுதந்திரத்தையும் ஒடுக்கும் தரப்பினரின் கருத்து சுதந்திரத்தையும் ஒரே அளவு கோலில் வைக்கும் கட்டுரையாளரின் தரப்பு மிகவும் ஆர்வ மூட்டுவதாக உள்ளது. பெண்களின்மீதான உடல் சார்ந்த வன்முறையும் ஒடுக்குமுறையும் வரலாற்றின் கொடுங்கன வாக அவர்கள்மீது படிந்திருக்கிறது. இந்தக் கனவிலிருந்து வெளியேறுவதற்கான போராட்டம்தான் இன்றைய பெண்களின் வாழ்வாகவும் எழுத்தாகவும் இருக்கிறது. பெண்களின் மனங் களின்மீதும் உடல்களின்மீதும் தங்களது பண்பாட்டு சங்கிலி களை மீண்டும் மீண்டும் இறுக்கமாகப் பூட்டுவதற்கு விழை யும் சக்திகளான இவர்கள் தங்களது தங்குதடையற்ற சுதந்தி ரத்தைப் பல நூற்றாண்டுகளாக அனுபவித்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான பெண்களைத் தங்களது பண்பாட்டின் சித்ரவதைக்கூடங்களில் தள்ளி வதைத்து அழித்திருக்கிறார்கள். இனவெறியர்களின், சாதி வெறியர்களின், நிற வெறியர்களின், மத வெறியர்களின் சுதந்திரம் சமூகத்திற்கு ஆபத்தானது என்ப தால் உலக சமூகம் இன்று அவர்களின் சுதந்திரத்தை மறுக்க வும், கட்டுப்படுத்தவும் முயற்சிக்கிறது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் பிறரை இழிவுபடுத் தும் உரிமையை மறுக்கிறது. இந்த மறுப்பிலிருந்துதான் ஒடுக்கப்பட்டவர்களின் சுதந்திரம் தொடங்குகிறது. பெண் களின்மீது பண்பாட்டு ஒடுக்குமுறையைத் தூண்டுபவர்களும் மத, இன, சாதிய வெறியர்களுக்கு நிகரானவர்களே. இவர்களது வரலாற்று ரீதியான பண்பாட்டு உரிமையை மறுப்பதிலி ருந்தே தங்கள் உடல்களையும் மனங்களையும் இழந்தவர்கள் தங்களது உரிமைகளைப் பற்றிப் பேசமுடியும்.
லீனாவின் கவிதைகள் ஆபாசமானதா இல்லையா என்பது ஒரு இலக்கியம் சார்ந்த பிரச்சினையே தவிர, சட்ட ஒழுங்கு சார்ந்த பிரச்சினை அல்ல. ஏனெனில் அவரது கவிதைகள் எந்த சாதிய, மதப் பிரிவினரையும் இழிவுபடுத்தவில்லை. எந்த மனிதரை யும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தவில்லை. யாருக்கும் சட்டவிரோதமான வாழ்க்கை முறை எதையும் போதிக்க வில்லை. இந்திய அரசியல் அமைப்புக்கு எதிராக அவர் எந்தவித காரியத்திலும் ஈடுபடவில்லை. அவரது புத்தகத்தை தடைசெய்யவேண்டும் என்ற பழமைவாத அமைப்பு காவல் துறையினரை அணுகுவது என்பது பண்பாட்டு அமைப்புகள் மேல் இந்த அமைப்புகள் செலுத்தவிரும்புகிற கட்டுப் பாட்டிற்கான ஒரு விருப்பம் மட்டுமே. பெண்களை ஒடுக்கும் கருத்துக்களைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் சங்கா ராச்சாரியார் தொடங்கி இராமகோபாலன் வரை யார்மீதும் லீனா மணிமேகலை இதுவரை காவல்துறையில் புகார் செய் யாத சூழலில் அவர் எழுதிய கவிதைகளுக்காக அவர் மீது காவல்துறையில் புகார் செய்வதை இந்து மக்கள் கட்சியினரின் கருத்து சுதந்திரம் என்று சொல்பவரின் அக விழிப்பு நிலையை எப்படிப் புரிந்துகொள்வது? பாபர் மசூதியை இடிப்பதில் இந்துக்களுக்கு உள்ள பண்பாட்டு சுதந்திரம் போன்றதுதானா இதுவும்? (பெரும்பாலான இந்துக்கள் பாபர் மசூதி இடிப் பால் மனோரீதியாக காயம் அடைந்தார்கள் என்பது வேறு விஷயம்)
தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கத்தினர் போல இந்து மக்கள் கட்சியினர் தரக்குறைவாகப் பேசவில்லை என்று கட்டு ரையாளர் வாதிடுகிறார். ஹூசேனின் ஓவியங்களை எரித்தவர் கள் யார்? தமிழகத்தின் மேடைகளில் பிற மதப் பெண்களை ஆபாசமாகப் பேசி மதக் கலவரங்களுக்கு வித்திடுபவர்கள் யார்?
இன்று காவல்துறையில் புகார் அளிப்பவர்கள் நாளை இந்தப் பெண்களின் புத்தகங்களை எரிப்பார்கள். இந்தியப் பண்பாட் டிற்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி சமூக விலக்கம் செய்ய முற்படுவார்கள். அவர்களுடைய ‘நாகரிக நடத்தை'க்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
ஆனால் இந்தக் கட்டுரையாளர் இலக்கிய விவகாரங்களில் காவல்துறையில் புகார் அளிப்பதை ஆதரிப்பதில் தர்க்க ரீதியான ஒரு தொடர்ச்சி உண்டு. இவர்தான் கருத்துகளுக்காக வழக்குகள் தொடுக்கும் நடைமுறையை நவீன இலக்கியச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியவர். சுந்தரராமசாமி உருவாக்கிய ‘மதிப்பீடு சார்ந்த' பயணத்தில் இவர் கடைசியாக வந்து சேர்ந்த இடம் இதுவே. வெங்கட் சாமிநாதனுக்கு அவர் தெரிவித்த ஒரு கருத்துக்காக லாயர் நோட்டீஸ் அனுப்பினார். இன்னும் தனக்கு ஒவ்வாத கருத்துக்களைத் தெரிவித்த பல பத்திரிகை களுக்கு இவர் தொடச்சியாக லாயர் நோட்டீஸ் அனுப்பியிருக் கிறார். இது ஒரு மட்டரகமான கிளுகிளுப்பு. ‘உன்னை சட்ட ரீதியாக நான் துன்புறுத்துவேன்' எனும் கிளுகிளுப்பு.
தமிழ் இலக்கிய உலகில் எவ்வளவோ கடுமையான சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. குடித்துவிட்டு அடித்துக்கொண்டிருந்திருக் கிறார்கள். கூட்டங்களில் கலாட்டா செய்திருக்கிறார்கள். அகாலத்தில் குடிபோதையில் சக எழுத்தாளனின் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்திருக்கிறார்கள். ஆனால் யாரும் யாரை யும் இதுவரை போலீசில் பிடித்துக்கொடுக்க முயற்சி செய்த தில்லை. யாரையும் ஜெயிலில் கம்பி எண்ண வைப்பேன் என்று தோன்றியதில்லை. ஏனெனில் எழுத்து என்பது சட்டத்தின் ஆட்சி செல்லுபடியாகாத இடம் என்று ஒவ்வொரு எழுத்தாளனும் நம்புகிறான். அப்படி நம்புகிறவன் மட்டுமே எழுத்தாளனாகவும் இருக்கிறான். அத்தனை பகைமைக்கும் காழ்ப்புணர்சிக்கும் இடையில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக் கும் உணர்வுபூர்வமான வெளி இது.
கட்டுரையாளர் ‘கலகம் கலகம்' என புலம்பும் இந்தக் கலகங் களில் யாரும் எதையும் சீர்குலைத்து விடுவதுமில்லை. இதற்கு சம்பந்தமில்லாத ஒரு நபர் இதற்குள் வரும்போது அவருக்கு இதற்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அவர் தனது வளர்ப்பு மற்றும் பழக்க வழக்கம் காரணமாக அதிர்ச்சி அடைகிறார். இது ஏதோ ஒரு பயங்கரமான இடம் என்று அவருக்குத் தோன்றிவிடுகிறது. இந்தக் காட்டுமிராண்டிகளை அல்லது சமூக விரோதிகளை ஜெயிலுக்கோ மனநோய் விடு திக்கோ அனுப்பவேண்டும் என்று அவருக்குத் தோன்றுகிறது. அவருக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை. ‘இது உங்களுக்கு சம்பந்தமில்லாத இடம்..வெளியே போய்விடுங் கள்' என்று.
இவர் வீட்டின் முன் லஷ்மி மணிவண்ணன் குடித்துவிட்டுக் கலாட்டா செய்ததற்காக அவரை இரண்டு நாள் உள்ளூர் காவல் நிலையத்தில் அடைத்துவைக்க இவர் ஏற்பாடு செய்ததைக் கேளிவிப்பட்டேன். (இதே வீட்டிற்கு சுந்தரராமசாமியின் அணுக்கமான தோழராக அவர் நூற்றுக்கணக்கான முறை வந்து சென்றிருக்கிறார்) இதே வீட்டில் விக்கிரமாதித்யன் குடித்து விட்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சுந்தரராமசாமி அவரைத் தன்னுடைய சக எழுத்தாளனாகவே நடத்தியதையும் பார்த்திருக்கிறேன்.
கட்டுரையாளர் எழுத்தாளர்கள்மேல் சட்டத்தின் ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்று தீராத விருப்பம் கொண்டவர். அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார்
கட்டுரையாளர் குறிப்பிடும் இன்னொரு கருத்தும் இங்கு பரிசீலிக்கத்தக்கது ‘கருணாநிதியை விமர்சிக்கும் ஞாநியின் உரிமைக்கு எதிராக அணிதிரண்டு, ...எதிர்கொள்ள வேண்டும் (‘எது கருத்துச் சுதந்திரம்கண்ணன், காலச்சுவடு மே 2010) ஞாநி கருணாநிதியின் உடல் சார்ந்து தனிப்பட்ட முறையில் வைத்த விமர்சனத்தை (கழிவறைக்குப் போனால் கருணாநிதிக்கு வேட்டி நனைந்துவிடுகிறது) கண்டித்து அன்று கனிமொழி அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இலட்சக்கணக்கான மக்கள் படிக்கும் ‘ஆனந்த விகட'னில் எழுதப்பட்ட அந்தக் கருத்துக்களை மறுத்து முன்னூறு பேர் அமர்ந்திருந்த ஒரு சிறிய அரங்கில் கனிமொழி எதிர்வினைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்று பேசியவர்களில் ஞாநியை 'அவன் இவன்' என்று இழிவாகப் பேசியவர் கவிஞர் சல்மா மட்டுமே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவர் ‘காலச்சுவ'டால் முன்னிறுத்தப்படும் ஒருவர். அவர் வேறு எந்த மேடை நாகரிகத்தையும் வெளிப்படுத்த முடியாது. அந்தக் கூட்டத்தால் ஞாநியின் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அழிவும் வந்துவிடவில்லை. அவர் இன்னும் தீவிரமாக கருணாநிதியை எதிர்த்து எழுதினார். ‘விகட'னில் எழுதமுடியாத நிலை வந்த போது அதே பக்கத்தை ‘குமுத'த்தில் தொடங்கினார். அவரைத் தனிபட்ட முறையில் யாரும் துன்புறுத்தி எழுதவிடாமல் செய்யவில்லை.ஞாநிக்கு இருக்கும் அதே கருத்து சுதந்திரம் ஞாநியை மறுப்பவர்களுக்கும் அன்றும் இன்றும் இருக்கிறது. கட்டுரையாளர் ஞாநியின் கருத்துச் சுதந்திரத்தைப் போற்று கிறார். ஞாநியை விமர்சிப்பவர்களின் கருத்து சுதந்திரத்தைக் காய்கிறார். அதுதான் சொன்னேன், கருத்து சுதந்திரம் என்பது ஒரு கெட்ட வார்த்தை. அது தனக்கு அணுக்கமானவர்களுக் காக வெளிப்படும்போது கொஞ்சலாகவும் எதிரானவர்களுக்காக வெளிப்படும்போது வன்முறையாகவும் அர்த்தம் பெறுகிறது.
ஜெயமோகன் மற்றொரு உதாரணம். அவர் தி.மு.க.வையும் கனிமொழியையும் எதிர்த்து எழுதிய பக்கங்களை யாருக்கும் நினைவூட்ட வேண்டியதில்லை. கனிமொழி ஏதோ ஒரு கூட்டத்தில் ஜெயமோகனைப் பதிலுக்குத் திட்டியது கூகுளில் காணக் கிடைகிறது. அவ்வளவுதான், கனிமொழியின் எதிர்ப் பின் தீவிரம். கட்டுரையாளர் கனிமொழியின் இடத்தில் இருந் திருந்தால் இந்நேரம் ஜெயமோகன் என்னவாகியிருப்பார் என் பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. இன்று கட்டுரை யாளர் தனது தனிப்பட்ட ஒரு விவகாரத்திற்காக தி.மு.க.வை யும் கனிமொழியையும் கிட்டத்தட்ட ஒரு பாசிச சக்தியாகவே சித்தரித்து வருகிறார். அவரது சுதந்திரம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
கட்டுரையாளர் தமிழக அறிவுச்சூழலில் மாற்றுக் கருத்துகளை யும் மாற்றுக் கருத்தாளர்களையும் எதிர்கொள்ள நமது ‘முற் போக்கு'ச் சக்திகள் மேற்கொள்ளும் வழிமுறைகளாக, சூழலில் தனது அனுபவத்தில் கண்ட உண்மைகளாக கீழ்க்கண்ட உண்மைகளை முன்வைக்கிறார்
1. மாற்றுக் கருத்தாளர்களைக் கூட்டம் கூட்டி அவதூறு செய்வது. அவர் வாழும் அறிவுச் சூழலிலிருந்து அவர் களை அன்னியப்படுத்துவது. .....
5. ‘குடி'யை முகாந்தரமாகக் கொண்டு மாற்றுக் கருத்து களுக்கான அரங்குகளைக் குலைக்க முயல்வது (‘எது கருத்துச் சுதந்திரம்கண்ணன், காலச்சுவடு மே 2010).
நான் தமிழ் இலக்கியச் சூழலில் எனது அனுபவத்தில் கண்ட சில உண்மைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழில் இலக்கியப் பத்திரிகை நடத்தும் ஒரு ஆள் என்ன வெல்லாம் செய்யமுடியும் என்பதற்கான நான் கண்ட உண்மை கள் இவை. இதில் ஏதாவது கட்டுரையாளரைத் தற்செயலாகக் குறித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
1. இலக்கிய ஆர்வத்தோடு நாடி வரும் இளைஞர்களை, பத்திரிகையை ப்ரோமோட் செய்வதற்கான கூரியர் பாய்களாக வும் பேப்பர் பாய்களாகவும் பயன்படுத்துவது. அவர்கள் விலகிச் சென்று வேறு பத்திரிகைகளில் வேலைக்குச் சேர்ந்து தனக்கு எதிரான கருத்துக்களை எழுதினால் அவர்களை வேலையை விட்டு எடுக்க மேனேஜ்மெண்ட்டைத் தொடர்பு கொள்வது. தனக்கு ஒவ்வாத கருத்தை எழுதும் பத்திரிகை யாளனை அவன் முன்னாள் டெர்ரரிஸ்ட் என்ற அளவுக்கு போலீசிற்கும் நிர்வாகத்திற்கும் ஆள்காட்ட முயற்சிப்பது.
2. தனது தந்தையின் இலக்கிய ஆளுமைக்கு எதிராக ஒரு கருத்து ஒரு பத்திரிகையில் எழுதப்பட்டால் அந்தப் பத்திரிகைக்கு எதிராக அதன் தலைமை அலுவலகத்தில் புகார் அளித்து அதன் பிராந்திய ஆசிரியரைத் தண்டிப்பதற்காகத் தனது தந்தையை டெல்லிவரை அனுப்பி வைப்பது
3. ஒரு மூத்த எழுத்தாளரின் அபிப்பராயத்திற்காக அவரை நீதிமன்றத்திற்கு அலைய வைக்கவேண்டும் என்று லாயர் நோட்டீஸ் அனுப்புவது.
4. நூலகத் தேர்வுக் குழுவில் தனது அடியாட்கள் இருந்தால் அதன்மூலம் தனக்கு உவக்காத பதிப்பகத்தின் நூல்களைத் தேர்வு செய்யவிடாமல் தடுத்து அதை அழிக்க முற்படுவது.
5. தனக்கு உவக்காத ஒரு பத்திரிகை சங்கராச்சாரியாருக்கு எதிராக ஒரு கட்டுரை வெளியிட்டால் அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்கும் நிறுவனத்தை அணுகி ‘இந்தப் பத்திரி கையை நடத்துகிறவன் துலுக்கன்..அதனால்தான் இந்துக் களின் மனநிலையைப் புண்படுத்துகிறான்' என்று அவதூறு செய்து விளம்பரத்தை நிறுத்தி அந்தப் பத்திரிகையை அழிக்க முயற்சி செய்வது (பிறகு இஸ்லாமிய மதவெறிக்கு எதிராக அந்தப் பத்திரிகை என்னவெல்லாம் எழுதியிருக்கிறது என்பதை அதன் ஆசிரியர் சுட்டிக்காட்டி தனது நடுநிலையை நிறுவ வேண்டும்).
6. தனக்கு எதிராக யார் அபிப்ராயம் தெரிவித்தாலும் சட்ட ரீதியான விளைவைச் சந்திக்க நேரிடும் என சட்டம் பற்றி அறியாத சிறுபிள்ளைகளை அச்சுறுத்துவது.
7. அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் சிற்றிதழ் சூழலோடு எந்தத் தொடர்பும் இல்லாதபோதும் அவர்கள் பின்புலம் தரும் பேராசை காரணமாக அவர்களை வற்புறுத்தி ஆசிரியர் குழுவில் சேர்த்துக்கொள்வது. பிறகு காரியம் நடக்கவில்லை என்றாலோ அல்லது எதிர்மறையான காரியங்கள் நடந்துவிட் டாலோ அவர்களுக்கு எதிராக இந்தியப் பிரதமர் மட்டுமல்ல, பில் கிளிண்டன் வரை தந்தி அனுப்புவது.
கருத்து சுதந்திரத்தை இதெல்லாம்கூட அழிக்கக்கூடியவை தான். இந்தக் கட்டுரையாளர் அனேமாகத் தமிழில் செயல் படும் பெரும்பாலான படைப்பாளிகளை இழிவுபடுத்தி எழுதிய பிறகும், அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டும் பத்திரிகை நடத்திக்கொண்டும் இருப்பதும் இங்கு நிலவும் கருத்து சுதந்திரத்திரன் வலிமையால்தான்.
இங்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ‘சொல் புதிது' இதழில் வெளிவந்த ஒரு சிறுகதைக்காக ஜெயமோகனுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தையே ‘காலச்சுவடு' நடத்தியது. எழுத்தாளர்களை ஜெயமோகனுக்கு எதிராக அணிதிரட்டவேண்டும் என்று விரும்பியது. அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பியது. இதற் கிடையில் ஜெயமோகன் என்னிடம் குறிப்பிட்ட ஒரு தகவல் இது. மதுரையில் ‘சொல்புதிது' இதழைப் பொறுப்பேற்று நடத்திய நண்பர் காவல்துறையினரால் இந்தக் கதைக்காகக் கூப்பிட்டு மிரட்டப்பட்டார் (யாருடைய தூண்டுதலில் மிரட்டி னார்கள் என்று தெரியாது). அந்த மிரட்டலின் விளைவாகவே ‘சொல் புதிது' இதழ் தொடர்ந்து நடத்தமுடியாமல் நிறுத்தப் பட்டது. ‘சொல் புதிது' பிரசுரித்த கதை எவ்வளவு அவமான கரமானது என்றபோதும் அந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளிவரவேண்டும் என்பதோ, அதை நடத்திய எழுத்தாளர் சமூக விலக்கம் செய்யப்படவேண்டியதில்லை என்பதோ இங்கு கருத்து சுதந்திரப் போராளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய கடமை (தலைவலி ஜாஸ்தியாகிவிட்டது).
இரண்டாவதாக, சுந்தரராமசாமியின்; ‘பிள்ளை கெடுத்தாள் விளை' கதை சாதிய மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது என தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அழகிய பெரியவன் ‘சுந்தரராமசாமியை வன்கொடுமை தடைச் சட்டத் தின்கீழ் கைது செய்யவேண்டும்' என ‘குமுத'த்தில் பேட்டி கொடுத் தார். சுந்தரராமசாமியை அது அந்தரங்கமாகக் காயப் படுத்தியது. ஏனெனில் அவர் சாதியமனோபாவம் கொண்டவர் அல்ல என்பதால்தான். ஆனால் அந்த விமர்சனத்திற்குப் பதில் சொல் லாமல் கடைசிவரை அவர் மௌனமாகவே இருந்தார். ஆனால் அந்தக் கருத்திற்கு எதிராக ‘காலச்சுவடு' எழுத்தாளர்களிடமி ருந்து கருத்துக்களைத் திரட்டித் தொகுத்தது. ‘உயிர்மை'யில் சுந்தரராமசாமிக்கு ஆதரவாக ஜெயமோகன் எழுதினார். ஆனால் கட்டுரையாளரின் அளவுகோலின்படி சுந்தரராமசாமிக்கு ஆதார வாகக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் கருத்து சுதந்திரத்திற்கான போராளிகள். சுந்தரராமசாமியின் கதைக்கு எதிராக அபிப்ராயம் தெரிவித்வர்கள் எல்லாம் படைப்புச் சுதந்திரத்தை நெறிக்கும் வன்முறையாளர்கள். மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத வர்க ள்.
அழகிய பெரியவன் சுந்தரராமசாமியை வன்கொடுமை தடை சட்டத்தின்கீழ் கைது செய்யவேண்டும் என்று பேட்டிதான் கொடுத்தார். கட்டுரையாளரின் கருத்துப்படி அவர் காவல் துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்து தனது கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டி இருக்கவேண்டும் போலிருக்கிறது (ஒரு டீ குடித்தால் இந்தத் தலைவலி சரியாகும் என்று தோன்ற வில்லை. மட்டமான கள்ளச்சாராயாம் 2 குவளை அருந்த வேண்டும் போலிருக்கிறது). இறுதியாக, கட்டுரையாளர் தன்னை மாற்றுச் சிந்தனையாளர் மற்றும் தனது பத்திரிகையை மாற்றுச் சிந்தனைக்கான தளம் என பேச்சோடு பேச்சாக நிறுவ முற்படுகிறார். இது மிகவும் ஆபாசமானது. ‘உயிர்மை', ‘காலச்சுவடு', ‘தீராநதி' போன்ற இதழ்கள் எதுவும் பரந்த கருத்துகளுக்கான ஒரு களமே தவிர மாற்றுச் சிந்தனைக்கான இதழ்கள் அல்ல. மாற்றுச் சிந்தனை என்பது திட்டவட்டமான அரசியல் கருத்தியல்களையும் கோட் பாடுகளையும் கொண்டது. Alternative thinking என்பதையும் difference of opinion என்பதையும் கட்டுரையாளர் குழப்பிக் கொள்வது அவருக்குத்தான் ஆபத்தானது. தி.மு.க. எதிர்ப்பு என்பதை மாற்றுச் சிந்தனை என்று கொண்டால் ‘நமது எம்.ஜி.ஆர்' தான் தமிழின் சிறந்த மாற்றுப் பத்திரிகை. ‘காலச்சுவடு' அல்ல.
- உயிர்மை.காம்