தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை கோவையின் 14 வது அமர்வு.. ரயில் நிலையம்- கோவையில்- அண்ணாமலை அரங்கத்தில் மிக மெல்லிய கோட்டில் வெகு நேர்த்தியாக 17.04.2022 - ஞாயிறில் நடந்தது.

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு "வானம்பாடிகள் காலத் தமிழ் கவிதைகள்"

ஐயா புவியரசு.... ஐயா தமிழன்பன்... ஐயா சிற்பி... ஐயா மேத்தா போன்ற வானம்பாடி கவிஞர்களை போற்றும் விதமாக... அடுத்த தலைமுறைக்கு அவர்களை கொண்டு செல்லும் நோக்கத்தோடு நடந்த இந்த "வானம்பாடிகள் காலத் தமிழ் கவிதைகள்" நிகழ்வு மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. வானம்பாடி கவிஞர்களின் கவிதைகளை படித்து வளர்ந்த நாம் அவர்களைப் போற்றும் விதமாக அவர்களைப் பற்றிய கூட்டத்தை நடத்தினோம் என்றால்... அது கண்டிப்பாக கடமையையும் தாண்டி திருப்தி தான். கூட கொஞ்சம் பெருமையும் தான். 70 களில் கோவையை மையமாக கொண்டு உருவான "வானம்பாடி" இயக்கம் பற்றியும் அதன் ஆணிவேர்கள் பற்றியும் அடுத்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று இருக்கிறது. கவிதையில் மரபு மட்டுமே புழங்கி கொண்டிருந்த காலத்தில் யார் வேண்டுமானாலும் மனதில் தோன்றியதை எழுதலாம் என்று புது கவிதைக்கான பெரிய... அதே நேரம் காலத்தின் தேவையுமான கதவை திறந்து விட்டது இந்த வானம்பாடி இயக்கம். கவிதை என்பது மேட்டுக்குடிக்கு மட்டுமே சொந்தம் இல்லை. அது விளிம்பு நிலை மனிதனுக்கும் சொந்தம் தான் என்று கவிதையை பொதுமைப்படுத்தியது வானம்பாடி இயக்கம். இது குறித்து நாம் ஐயா புவியரசு.... ஐயா சிற்பி... ஐயா மேத்தா... மூவரிடமும் நேரடியாக நேர்காணலே செய்திருக்கிறோம். அத்தனை பொக்கிஷமான தகவல்களை நம்மிடையே அவர்கள் பகிர்ந்து கொண்டது நமக்கு கால பெருமை. அரசியல் ரீதியாகவும் சமூகத்தின் வாயிலாகவும் எத்தனை நெருக்கடியை சந்தித்தார்கள் என்று ஐயா புவியரசும்... ஐயா சிற்பியும் நம்மிடையே பகிர்ந்து கொண்டவைகள் ஏராளம்.

இலக்கியம் என்ன செய்யும் என்பதற்கு சாட்சி -வானம்பாடி. அரசியலும் இலக்கியமும் இரு கோடுகள் என்றால் அதை நிதர்ச படுத்தியது வானம்பாடி. அதன் வடிவம் குறித்தும் எழுச்சி குறித்தும் நாம் நடத்திய நிகழ்வு அரங்கம் நிறைந்த அறிவு.

ஐயா தமிழன்பன் பெயரால் தான் நமக்கு முதலில் எழுத்தாளருக்கான அங்கீகாரம் கிடைத்தது என்பதில் நன்றியும் இருக்கிறது. எல்லா புகழும் என் ஆசான் புதுவை அகன் அவர்களையே சாரும்.

கூட்டம் 10.45 க்கு ஆரம்பித்தது. எதிர்பார்த்த கூட்டம் இல்லையே தவிர எதிர்பார்த்த கொண்டாட்டம் இருந்தது.

தம்பி காதலாரா நெறியாள்கை செய்தான். அவனுக்கே உரிய மொழியில்... நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அடக்கி வாசித்தான். அத்தனை அறிவு கொண்ட இளைஞன். அறிவிருக்கும் இடத்தில் இயல்பாகவே சமூக கோபம் இருக்கும் தானே. ஆனாலும்... என் கண்களுக்கு கட்டுப்பட்டு மிக கவனமாக கடந்தான்.

வரவேற்புரையை கவிஜி செய்ய... ஆரம்பமே.. "மேடை"யின் முன்னாள் தலைவர் செல்லம் ரகு சாருக்கும்... மரபிலும் புதுமையிலும் தனக்கென பாதை கொண்ட கவிதை அரசி எங்கள் கிறிஸ்டிக்காவுக்கும் மௌன அஞ்சலி செலுத்தினோம். இலக்கியத்தின்பால் கிடைத்த இதய நெருக்கம் இருவரும். இத்தனை சீக்கிரம் உலகம் விட்டு நகர்ந்தது உள்ளூர எப்போதும் இருக்கும் பெரும் வலி. பகிர்ந்து கொண்டோம். பகிர்கையில் துயரம் துகள் ஆகும் என்பது நம்பிக்கை. ஆனது. ஆகட்டும்.

கோவையின் "மேடை" அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா குறித்த சிறு உரையை தலைவர் தோழர் பாஸ்கரன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். உடல் நலமில்லாமல் இருந்த சூழலிலும்... நமக்காக சென்னையில் இருந்து வருகை தந்து நம்மை வழி நடத்தினார். நிறைய யோசனைகளை தன் அனுபவத்தில் இருந்து மிக மெல்லிய கோட்டில் வழி காட்டினார்.

நேரம் கூட வானம்பாடி சிறகு விரிக்க ஆரம்பித்தது. அடுத்து... வரவேற்புரையை வெகு அழகாக தன் சிறு உரை மூலம் நிகழ்த்திய எங்கள் இளைய வேள்வி... சுகன் சேகுவேரா.... பெருத்த அறிவின் மதகை நுட்பமாக திறந்தான். வாழ்த்துரையில் அவன் மொழி கண்ணாடி அணிந்து கொண்டு மேடை சுழன்றது அவன் கற்றறிந்த சூட்சுமம். மனம் உள்ள மார்க்கம் மலை உச்சி சேர்ந்தே தீரும் என்பதின் வடிவம் அவன். மகிழ்கிறோம்.

அடுத்து எப்போதும் அடித்தாடும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக... எங்கள் கவி காமு (க.முருகானந்தம் ) சார். சும்மா பேச சொன்னாவே சலங்கை கட்டிக் கொண்டு அசரடிப்பார். அதுவும் ஐயா புவியரசு கவிதைகள் பற்றிய பேச்சு என்றால் கேட்கவா வேண்டும். ஆரம்பம் முதல் அடுத்த அரை மணி அள்ளு இல்லை எங்களுக்கு. அவர் கவிதையின் காலத்தை இவர் மொழியில் காட்சிப்படுத்தினார். வானம்பாடி என்ன செய்தது. அது செய்த பின் இந்த தமிழ்க்கவிதை சமூகத்தில்... புதுமை எங்கனம் தன்னை பூரித்து பூத்துக் கொண்டது என்று கிடைத்த நேரத்தில் சுவற்று ஓவியம் என சொற்களில் வரைந்து போனது நமக்கு கற்றல். மௌனம் விடுத்து கை தட்டி ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு நம்மை மடைமாற்றிய காமு சாருக்கு தமிழ் மொழியும் உடல்மொழியும் அதுவாகவே சித்திரம் வரைகிறது. கை கூப்பி வணங்குகிறோம்.

புவியரசு கவிஞர் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதைத் தாண்டி அவர் ஒரு ஆக சிறந்த உலகளாவிய மொழி பெயர்ப்பாளர். மிர்தாதின் புத்தகம் போதும்... அவர் யார் என்று சொல்லி விட. கரமசோவ் சகோதரர்கள் போதும்... காலத்துக்கு அவரைக் கொண்டாட.

அடுத்து புதுவையில் இருந்து வருகை புரிந்த என் ஆசான் கவிஞர்... எழுத்தாளர் அகன் (அமிர்தகணேசன்) சார். உச்சரிப்பில் உயிர் பேசும் லாவகம் கொண்ட பெரும் மனிதர். என்னை எனக்கே அடையாளப் படுத்திய முதல் மனிதர். ஐயா ஈரோடு தமிழன்பன் கவிதைகள் குறித்து அடுத்த முக்கால் மணி நேரம் இவர் செய்ததெல்லாம் சித்து வேலை. கவிதை கர்ஜனை. அவர் மேடையில் இருந்த கணமெல்லாம் கண் நிறைந்த மனம் தான் நமக்கு. அத்தனை உயரத்தில் கம்பீரம் கதகளி ஆடியது. ஒவ்வொரு வார்த்தையும்... அழகு கூடி ஒவ்வொரு வாக்கியமாய் ஆதுரம் பாடியது. அசரடித்தல் என்பதன் அர்த்தம் மேடையில் நாம் கண்டோம். பரபரவென வானம்பாடி உலகத்துக்குள் வானம் செய்து அதில் வண்ணமும் பூசிவிட்டு மாயத்தில் மனம் பறக்க செய்தவை சிறப்பு. காட்டு வெள்ளம் கண்ணுக்கு மிரட்சி தானே. அவர் காட்டிய கவிதை வெள்ளத்தில் மகாகவி புரட்சி தான். மிரட்டிய சொற்களோடு மீட்டிய வாக்கியங்கள் ஐயா தமிழன்பனை வானளாவ உயர்த்தி கொண்டு போனது... காண காண அற்புதம்.

அடுத்து ஐயா சிற்பி அவர்களின் கவிதைகள் பற்றி பேச இருந்த தோழர் கலைக்கோவன் வர இயலாத சூழல்....

சிற்பி ஐயாவின் கவிதைகள்.... பாரதி கண்ட சொற்களில் உருவானவை. பாரதி சொன்ன அந்த அக்கினி குஞ்சொன்று தான் ஐயா சிற்பி. அவர் கவிதைகள் மூலமாக அவரோடு பேசியதிலிருந்து.... பாரதியின் நீட்சியாகத்தான் அவரைக் காண முடியும். வானம்பாடியின் கடைசி இதழ்களை கோவையில் செய்ய முடியாத சூழல் - பொள்ளாச்சிக்கு எடுத்து சென்று நடத்திக் காட்டியவர்.

வானம்பாடி எனும் விலையில்லாத மடலை நமக்கு சூட்டி அறிவு காட்டிய ஆசான்களை வணங்க நமக்கு கிடைத்த வாய்ப்பாகவே இந்த நிகழ்வை உணர்கிறேன்.

அடுத்து ஐயா மேத்தா- வின் கவிதைகள் பற்றி சென்னையில் இருந்து வருகை புரிந்த எழுத்தாளர் பாரதி சந்திரன் பேசினார்.

இப்படி சிக்கலில் மாட்டி விட்டு விட்டீர்களே என்று வேடிக்கையாக ஆரம்பித்தாலும்... முன்னே இரு பெரும் தூண்கள் தேரை இழுத்து போகையில்... நான் என்ன பெரிதாக தள்ளி விட முடியும் என்று சொன்னாலும்... மெல்ல சொற்கள் கூட்டி மெல்லிய சிரிப்பில்... தன் வல்லமையை காட்டத் துவங்கினார். தமிழ் படித்தோர் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர் எப்போதும் இல்லை என்று இன்னொரு முறை ஊர்ஜிதமானது. நின்று நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தவர் ஒரு கட்டத்துக்கு பின் அடித்தாடவும் தயங்கவில்லை. அவர் பங்குக்கு அரை மணி நேரம் அசரடித்த பேச்சு. மேத்தாவின் கண்ணீர் பூக்கள் தொட்டு... நிலவை பற்றி சலித்து விடாமல் அத்தனை கவிதைகளை எழுதியது மேத்தா என்ற தகவலோடு... நிறைய நிறைய சேகரிப்புகள். அத்தனை விவரணைகள். இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா எனும் போது மிகு வலிமையோடு நேர்மையோடு தன் கருத்துக்களை முன் வைத்து மேடையை விட்டு இறங்கினார்.

நமக்காக நம் சொல்லுக்காக...சென்னையில் இருந்து வந்து பேசிய எழுத்தாளர் பாரதி சந்திரன் அவர்களுக்கும் புதுவையில் இருந்து வந்து பேசிய அகன் சாருக்கும்.. இங்கே அருகே இருந்தாலும்... குறித்த நேரத்தில்.. இன்னமும் வளர்பவர் போல வந்திருந்து பேசிய காமு சாருக்கும்... மனம் கனிந்த நன்றிகள். இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

இடையே பெருமன்ற தோழர்கள் ஜான் மற்றும் K.S இருவரின் வருகையும் இன்ப அதிர்ச்சி. தோழர் கங்காதரின் வருகை எப்போதும் உவகை தான். சொன்னால் சொன்னபடி வந்து நிற்கும் அந்த நேர்மைக்கு எப்போதும் கட்டிக்கொள்தல் தான் நம் வழக்கம். பாசிட்டிவ் அதிர்வு கொண்ட மனிதர். அந்த பக்குவத்துக்கு எப்போதும் நம் அன்பு. வேண்டுமென்றே வராதவர்கள் பட்டியல் நம்மிடையே உண்டு. வர முடியாத சூழல் கொண்ட நண்பர்களை நாம் அறிவோம். தோழர்களை போல திகில் கொடுக்கும் மாந்தர்களை மிக கவனமாக கையாள வேண்டும் என்ற அறிவும் இம்முறை நாம் பெற்றோம். எதிரே இருப்போர் நெஞ்சில் குத்துவதை தாங்கும் மனது... கூட இருப்போர் முதுகில் குத்துவதில் தடுமாறி விடுகிறது. இனி அதற்கும் தயாராக வேண்டும்...

வாக்கு கொடுத்து விட்டால் செத்தால் தான் திரும்ப பெற வேண்டும். அல்லது அதற்கு சமமான ஒன்றால் தான் வாபஸ் ஆக வேண்டும். மற்றபடி பேக் அடிப்பதெல்லாம் முன்னுரிமை இல்லாததுதான் என்பது நாம் அறிந்ததே. எல்லாம் தாண்டி வர இயலாத சூழல் இருக்கும் பட்சத்தில் அதை அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தியிலாவது தெரிவிப்பது தான் முறை.. மரியாதை. மற்றபடி உடல்நிலை சரி இல்லை என்று சொல்லி குடும்பத்தோடு ஊர் சுற்றி விட்டு அதையும் போட்டோவாய் எடுத்து போட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் இருப்பது குறித்து பேசுவதற்கு இல்லை.

எல்லாம் தாண்டி நண்பன் கமல்...தம்பி காதலாரா... டியர் சுகன் சேகுவேரா.. சிறு தாய் மழை... சகோதரி சரண்...அன்பன் விவெ...தோழி கார்த்தீ... முனைவர் வேலு... கவிஞர் இந்து... மானசீகமாக எப்போதும் நம்மோடு நமது அமர்...இவர்களோடு மேடையின் ஆணிவேர் தோழர் விசாகன்... தோழர் லட்சுமி விசாகன்...மற்றும் நண்பர்கள்... என்று மனம் விரும்பிகள் கூட இருந்தது... குறை ஒன்றுமில்லை கண்ணாதான்.

நோக்கம் தூரத்தில் இருக்க.. அருகாமை அறியாமை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளல் இந்த நிகழ்வின் கற்றல். கற்றலின் வழியே கடக்கும் காலம் கலர்புல் கவரேஜ்.

- கவிஜி

Pin It