ரயிலில், பேருந்தில் பயணம் செய்யும் போது யாரேனும் புத்தகம் படித்தால், என்ன புத்தகம் படிக்கிறார்கள் என்று கண்டறிவது (குனிந்து, நெளிந்து, பார்த்து) என் வழக்கம்.
நெதர்லாந்தில் வந்திறங்கியதில் இருந்து இங்குள்ள பெரும்பாலானோர் படிக்கும், நான் அடிக்கடி பார்க்கும் புத்தகம், யூத சிறுமி ஆன்னி பிராங்கின் டைரிக் குறிப்புகள்.
நாஜி ஹிட்லரின் ஜெர்மனியில் இருந்து குடியுரிமை அற்றவள் என விரட்டி அடிக்கப்பட்டு, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமுக்கு வந்து, தன் தந்தை வேலை செய்த இடத்தில் இரண்டு ஆண்டுகளாக ஒளிந்து இருந்த அந்த 13 வயது சிறுமி ஆன்னி பிராங்க் எழுதிய டைரிக் குறிப்புகள் தான் இந்தப் புத்தகம். இரண்டு ஆண்டுகளாக ஒளிந்திருந்த போது, தன்னிடம் இருந்த, பிறந்த நாள் பரிசாக கிடைத்த நாட்குறிப்பில் (Diary) எழுதினாள் அந்தச் சிறுமி. டச்சு மொழியில் ஆன்னியால் எழுதப்பட்ட அந்த டைரிக் குறிப்புகள் 70 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிகளில் இன்றும் உலகெங்கும் பரவலாக படிக்கப்படும் புத்தகமாக உள்ளது.
13 வயதில் இப்படி சுவைபட எழுதும் திறன் படைத்த அந்தச் சிறுமி, பின்னர் ஜெர்மனியின் நாஜிப் படையால் சிறைப்பிடிக்கப்பட்டு Concentration Camp-ல் அடைக்கப்பட்டு 15 வயதில் உயிர் இழந்தாள்.
ஆசிபாவுக்கு வயது 8 தான். ரோகித் வெமுலாவிற்கு சுவைபட எழுதத் தெரிந்திருந்தது. ஸ்னோலின் கவிதைகள் எழுதினாள். வாயால் கோஷம் போட்டாள். வாயில் சுடப்பட்டாள். இவர்கள் சொந்த நாட்டு மக்கள்தான். ஆன்னியும் தன் சொந்த நாட்டு அரசாங்கத்தால்தான் நாடற்றறவள் என விரட்டி அடிக்கப்பட்டாள். வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி நெதர்லாந்தில் ஒளிந்தாலும், அயல்நாட்டிலும் அவளை வாழவிடவில்லை அவள் சொந்த நாட்டு ராணுவம்.
“விரோதிகள் மட்டுமல்ல உங்கள் சொந்த மக்களும் உங்களைக் கண்டு பயப்பட வேண்டும். இராணுவம் நட்பானதுதான். ஆனால் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க அழைக்கப்படுகையில், மக்கள் எங்களுக்கு பயப்பட வேண்டும்”என்று பேசியவர் இன்று இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி.
ஆனி நீண்ட காலம் உயிரோடு இருந்திருந்தால் சைமன் டி போவர் போன்று மிகச் சிறந்த எழுத்தாளராக வந்திருக்கலாம். யாருக்குத் தெரியும் எத்தனை ஆன்னி பிராங்குகள் கொல்லப்பட்டனர் என.
நாஜிக்கள் குறிவைத்தது படித்தவர்களைத் தான். படித்தவர்கள் ஒன்று நாஜிக்களாக மாற வேண்டும், மீறியவர்கள் தாக்கப்பட்டனர்.
“... அவரது (ஹிட்லரின்) வார்த்தைகள் வெறும் வெற்று முழக்கங்களாகவும், கோஷங்களாகவும் இருந்தன. கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்த அதே கோஷங்கள். நன்கு படித்தவர்கள் கூட இந்த வெற்றுக் கோஷங்களுக்கும் தேசியப் பெருமைக்கும் மயங்கி விட்டார்கள், ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நம்பிக்கையையும் தலைமைத்துவத்தையும் முன்வைக்க இந்த கோஷங்கள் உதவின. இத்தகைய பொதுமைப்படுத்தல்கள் அவரவர் கேட்க விரும்பிய அனைத்தையும் கேட்க வாய்ப்பளித்தன….” - நியூரம்பெர்க் விசாரணைகள் (Nuremberg Trials) ஆவணத்தில் உள்ள வார்த்தைகள் இவை.
இன்று இந்தியாவின் மெத்தப் படித்த ஆட்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளும் இவை தான். இன்று இந்தியாவில் பெரும்பான்மைவாதம் பேசுவோர் மொழியும் இது தான். மயங்கி விழுந்து கிடக்கிறது இந்திய படித்த சமூகம்.
வெற்றுக்கோஷங்களை கேட்டு மயங்காதவர்கள், வன்முறைக் கும்பல்களின் தாக்குதல்களில் ரத்தம் சிந்துகிறார்கள்.
ஜமாலியா பல்கலை, அலிகார் முஸ்லீம் பல்கலை, தற்போது (ஜனவரி 05) டெல்லி ஜவகர்லால் பல்கலை விடுதியில் கண்ட காட்சிகள் இவை தான்.
“நாம் நகரத்தில் போராடினால் நம்மீது வழக்குப் போடலாம். காட்டிற்குள் போராடினால் நம் நெஞ்சை தோட்டா துளைக்கலாம்” என்று ஒரு கட்டுரையில் எழுதினார் அருந்ததிராய். இன்று பல்கலை விடுதியில் இருந்தவர்களை இரும்புக் கம்பிகள் பதம் பார்க்கின்றன. ரத்த வெள்ளம் ஓடுகிறது.
நாஜி ராணுவத்திடம் இருந்து தப்பி ஓடிய ஆனியின் குடும்பம் ஓர் பூட்டிய அறைக்குள் வந்தடைந்தபோது ஆனியின் தந்தை சொன்னார். “இனிமேல் ஒரு பூட்டிய ரகசிய வீட்டில்தான் இருக்கப் போகிறோம்” என்று. அவர்களால் நீண்ட காலம் அந்த ரகசிய வீட்டுச் சிறையில் இருக்க இயலவில்லை. இந்தியாவில் 85 லட்சம் காஷ்மீர் மக்கள் திறந்தவெளி ரகசியச் சிறையில் 5 மாதங்களாக இருக்கின்றனர்.
நம் ஆயுதத்தை எதிரிகள் தீர்மானிக்கின்றனர் என்ற மாவோவின் வார்த்தைகள் உணர்ச்சியூட்டுகின்றன. ஆனால் இரும்பு லாடத்தால் துளைக்கப்பபட்ட தலையில் இருந்து ஓடும் ரத்தம் பயமுறுத்துகிறது. எத்தனை இழப்புகளைத் தாங்க முடியும்?
“அப்பா என்னிடம் உனக்குப் பிடித்தமான பொருட்களை உன் பெட்டியில் வைத்துக் கொள். அடுத்த பல வருடங்களுக்கு நாம் தலைமறைவாகவே வாழப் போகிறோம் என்று சொன்ன போது, முதலில் என் பெட்டியில் என் டைரியைத்தான் வைத்தேன். அதற்குப் பிறகு சீப்புகள், கைக்குட்டைகள், பள்ளிப் புத்தகங்கள்.... போன்றவை. ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நான் நினைத்தது, யாராலும் களவாட முடியாத என் ஞாபகங்களைத்தான்..’’
ஆனி அந்த டைரியில் முதல் முதலாக இப்படி எழுதினாள். ஆனியின் ஞாபகங்கள் இன்றும் பத்திரமாக 75 ஆண்டுகள் கடந்தும் 70 மொழிகளில் பாதுகாக்கப்படுகின்றன. நம் உயிரை, நம் குடிஉரிமையை, நம் கல்விஉரிமையைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது ஆனிபோன்று நாமும் நமது ஞாபகங்களைப் பாதுகாத்து வைக்கவா?
வார்த்தைகளும், இரும்புக் கம்பிகளும், துப்பாக்கிக் குண்டுகளும் ஒரு சேரத் தாக்குகின்றன. அதேவேளையில் அமைதி காக்குமாறு எங்கிருந்தோ குரல்கள் எழுப்பப்படுகின்றன. உயிரா, அமைதியா, நிகழ்காலமா, எதிர்காலமா? எதிலும் நம்பிக்கை இல்லை. நிச்சயம் இல்லை. பயமும், அச்சமும் மட்டுமே மீதமுள்ளன.
75 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் பிறந்த யூதச் சிறுமிக்கு நடந்த கொடுங்கோன்மை இந்தியாவின் பிறந்த ஒரு சிறுமிக்கோ இன்றோ நாளையோ நடந்துவிடும் என்றே தோன்றுகிறது.
ஆனி பிராங்க் 15க்கு மேற்பட்டு வாழாவிட்டாலும் அவளின் டைரிக்குறிப்புகள் மூலம் எண்ணற்றோர் சிந்தனைகளில் வாழ்கிறாள். இன்னும் பல நூறு ஆனி பிராங்க் போன்ற மிகச் சிறந்த இளம் எழுத்தாளர்கள் உருவாவதை விரும்புகிறேன். ஆனால் அவர்கள் ஆனி பிராங்க் போன்று இளம் வயதில் இறப்பதைத் தாங்க முடியாது. தடுக்க வேண்டும். வரலாறு திரும்புவதை அனுமதிக்க முடியாது. 75 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிப்பதை மனசாட்சியுள்ள சமூகம் விரும்பாது.
பின்குறிப்பு: ஹிட்லரின் நாசி ஜெர்மனியின் அரசியல் கொலைகள், இராணுவச் செயல்பாடுகளை விசாரணை செய்ய இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட பன்னாட்டு விசாரணை ஆணையம் தான் நியூரம்பெர்க் தீர்ப்பாயம்.
- சு.விஜயபாஸ்கர், நெதர்லாந்தில் பணிபுரியும் மென்பொறியாளர்