சராசரி வாழ்க்கைக்குள் ஒளிந்து கிடக்கும் அற்புதத் தருணங்களை அடையாளப்படுத்துவது கலை. இயந்திரத்தனமான உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது. கலையை கலைக்காகக் கொண்டாடும் போக்கு ஒருபுறம்; கலை மக்களுக்கானது என்று வாதாடும் சூழல் மற்றொரு புறம். இலக்கியத்துக்குள்ளும் இந்த வாதங்கள் பிரதிபலிக்கின்றன. இயற்கையின் உன்னதங்களைப் படம்பிடிக்கும் புலவன் உண்டு; வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் காட்சிப்படுத்தும் படைப்பாளன் உண்டு; உலகத்தின் முதுகை வருடிவிடும் கவிஞன் உண்டு; நூல் பிடித்தது போல் வாழும் மனநிலைகளை எடுத்து வைக்கும் கலைஞன் உண்டு. இந்தப் போக்குகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் எழுத்தாளனும் இலக்கிய உலகில் உலா வருகிறான்.
சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் சுதந்திர உணர்வு கொண்ட படைப்பாளி இலக்கியத்தை மக்களுக்காக மாற்றும் மாயத்தை நிகழ்த்தி விடுகிறான். அந்த வரிசையில் எழுத்தாளர் அ. கரீமின் ‘முகாம்’ நாவல் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. சொந்த மண்ணில் அகதிகளாக்கப்படும் சிறுபான்மை மக்களின் உள்ளக் குமுறலின் குரலாக ஒலித்திருக்கிறது. ஒரு வரலாற்றைச் சாளரத்தின் வழியாக இல்லாமல் வாசல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு பார்த்து, அதை வாசகன் உள்ளத்திற்கு நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார். கதைகளில் ஊடாடும் அவலச் சுவை புதிய விடியலுக்கான வாசலைத் திறந்திருக்கிறது.
காடு நாடாக மாறியதற்குப் பின்னால் ஓர் அரசியல் நிலவுகிறது; குகைகளில் வாழ்ந்த நிலையிலிருந்து நாகரிகம் அடைந்த நிலைக்குப் பின்னணியில் ஓர் அரசியல் நிலவுகிறது; உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதற்குள்ளும் ஓர் அரசியல் நிலவுகிறது. காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை எவற்றையெல்லாம் பயன்படுத்த வேண்டும், எவற்றை உண்ண வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டளையிடும் விளம்பரங்களுக்கு அப்பாலும் ஓர் அரசியல் நிலவுகிறது. அதற்கு, பொருளும் - அதிகாரமும் என்று பெயர். மனிதன் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்வதிலிருந்து பிரித்துத் தனித்தனித் தீவுகளாக மாற்றிக் கொடுங்கோல் ஆட்சி செய்ய நினைக்கிறது அந்த ஹிட்லர் மனம்.
வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழும் இந்த நாட்டின் மக்களாட்சி முறைக்குக் கொள்ளி வைப்பதைக் கடமையாக நிறைவேற்றி வருகிறது சர்வாதிகாரம். இளைஞர்கள் தான் அணியும் ஆடையின் நிறத்தைப் போல, கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொள்ள விரும்புவார்கள். பெண்களும் தங்கள் உடைகளின் நிறத்தில் கம்மலும், வளையலும் அணிந்து கொள்ள ஆசைப்படுவர். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை. ஆனால் நாட்டின் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினால் அது சரியாகுமா!
ஒரு பகுதியின் தட்பவெப்ப நிலையும், அடுத்த பகுதியின் தட்பவெப்ப நிலையும் வேறானது; செம்மண்ணில் முளைக்கும் தாவரங்கள் கரிசல் மண்ணில் முளைப்பது இல்லை; குளிர்ச்சியான இடத்தில் வாழும் விலங்குகளால் வெப்பமான இடத்தில் வாழ இயலாது. தான் தேர்ந்தெடுக்கும் வேலைக்குத் தகுந்தபடி ஆடைகளைத் தன் வசதிக்காக உடுத்திக் கொள்ளும் சுதந்திரம் நாட்டில் உண்டு. இந்தச் சூழலில் ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கல்வி, ஒரே திட்டம் என்பவை இயற்கைக்கு எதிரானது. மக்களிடையில் முரண்பாடு இருப்பது போலத் தோன்றினாலும் அவர்கள் தங்கள் சாதி, இனம், மதம், மொழி என்று எல்லாவற்றையும் கடந்து அன்பு பாராட்டி வருகின்றனர்.
ஒருவருக்கொருவர் அன்போடும் ஆதரவோடும் பழகும் சூழலில் இன்றைய பாசிச அரசியல் மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது முகாம் நாவல். குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை ரத்தமும் சதையுமாக வடித்திருக்கிறது கதை. இயல்பான வசீகர நடையும், உணர்வுகளைக் கடத்தும் விதமும் செவ்வியல் தன்மைக்கு நிகராக நோக்கத்தக்கது. மாற்றுக் கருத்தின் குரல்வளையைக் கடித்துக் குதறும் பாசிச ஆட்சி குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆண்களால் கட்டமைக்கப்பட்ட உலகத்தில் பெண்களை மையப்படுத்தும் படைப்புகள் மிகப் பெரிய ஆறுதல். கதையைப் பெண்கள் மீது பயணம் செய்ய வைத்த நாவலாசிரியருக்குப் பாராட்டுகள்! மண்ணின் விடுதலைக்காக முதன்முதலில் தன்னை ஒப்புக் கொடுத்தவர்கள் இசுலாமியர்கள். இன்றும் அடுத்த சமயத்தைச் சார்ந்தவர்கள் இசுலாமியர்களை உறவுமுறை சொல்லி அழைப்பதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்களை வன்முறையாளர்களாக, அந்நியர்களாகத் தொடர் பொய்ப் பிரச்சாரம் செய்யும் போக்கை மதவாதம் கையில் எடுத்திருக்கிறது. இந்த மண்ணில் சகோதரர்களாக வாழும் அவர்களின் பண்பாட்டு வேர் இங்கேயே ஊன்றி இருக்கிறது என்பதற்குப் பல சான்றுகளைத் தருகிறது படைப்பு.
விவசாயத் தொழில் பார்க்கும் மைதீன் பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்று வாசகனுக்குத் தோன்றும். ஆனால் அறுவடைத் திருவிழாவாக, தமிழர் திருவிழாவாகப் போற்றப்படும் பொங்கல் விழாவைத் தன் வயல் வெளியில் சக ஊராரோடு கொண்டாடும் குடும்பமாகக் காட்டியிருப்பதில் இசுலாமியர்களின் மனநிலையை உணர்ந்து கொள்ளலாம். வயல்வெளிக்கான சாமியைக் கும்பிடும் ஒரு குடும்பமாக இருக்கும். வீட்டில் என்ன நல்லது கெட்டது நடந்தாலும் முதலில் இறக்கி வைப்பது சாமியிடம்தான். ‘‘டே மைதீனு, நாம அல்லாவத்தான் வணங்குறோம். ஆனா நம்ம காட்ட காக்குற சாமிக்குக் காலங்காலமா செய்யற மரியாதைய எப்போதும் நிறுத்திடக் கூடாது. இது என் வாபா எனக்குச் சொன்னது, நான் உனக்குச் சொல்லுறேன். நான் இருக்க வர இந்த வழக்கத்தப் பார்த்துப்பேன். எனக்குப் பின்னாடி நீதான் பார்த்துக்கோணும்,’’ என்ற உரையாடலில் மண்ணின் மரபைக் காத்த பண்பு தெளிவாகிறது.
விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு, முதுகுத் தண்டில் அடிபட்டு, படுத்த படுக்கையாகக் கிடந்து இறந்து போன சுலைமானின் கொள்ளு பேத்தி மைமூன். விடுதலை வேட்கையும் தமிழ் மண்ணின் பண்பாட்டையும் போற்றக்கூடிய மைதீனின் பேத்தி மைமூன். சாலை விபத்தில் கணவன் இறந்துவிட, அதே சோகத்தில் அப்பாவும் இறந்துவிட, பொருளாதார உதவி இல்லாமல், ஊரைவிட்டு வெளியேறி, மில் தொழிலாளியாக மாறி, மதரசா பள்ளியில் (ஆதரவற்றோர் பள்ளி) சேர்த்துத் தன் மகளின் வருங்காலத்திற்கு உத்தரவாதத்தை ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வு கொண்ட தாய்க்குப் பிறந்தவள் மைமூன்.
மதரசா பள்ளியின் அன்போடும் ஆதரவோடும் வளர்க்கப்பட்ட மைமூனை விரும்பி மணந்து கொள்கிறான் இப்ராகிம். மகிழ்ச்சியான இல்லற வாழ்வின் நிறைவுப் பகுதியிலிருக்கும் மைமூனை எங்கே பிறந்தாள் என்ற ஆதாரம் கேட்டு அச்சுறுத்துகிறது குடியுரிமை திருத்தச் சட்டம். அதற்கான ஆவணம் உடனடியாகக் கிடைக்காததால், பிறந்த நாட்டிலேயே அகதி என முத்திரை குத்தப்பட்டு முகாமில் அடைக்கப்படுகிறாள். சுத்தமான உணவு, சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாமல் அதிகாரத்தின் கோரப்பிடிகளில் சிக்கித் தவிக்கும் கொடுமை கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது.
குறிப்பிட்ட காலம் வரை ஓர் இடத்தில் வாழ்ந்தால் அந்த நாட்டிற்கான குடியுரிமை கொடுத்துவிடும் சூழலில் இங்கேயே பிறந்து வளர்ந்து திருமணம் முடித்து வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஒருவரை அவர் மாற்றுச் சமயத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே குடியுரிமை மறுப்பது பெருங்கொடுமை!
இரண்டாவது முக்கியக் கதாபாத்திரமாகப் பேசப்படுபவள் ஷாகிரா. ஜைதூனின் தங்கைக்குத் தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகள் பிறக்கின்றன. பெண் குழந்தைகளை வளர்த்து, ஆளாக்கித் திருமணம் செய்து முடிப்பது பெரிய சவாலாகிவிடும் என்று அத்தம்பதியினர் கருதுகின்றனர். எனவே குழந்தை இல்லாத ஜைதூனுக்குத் தத்து கொடுத்தால் அவளும் மாமனும் நல்ல முறையில் வளர்த்துக் கொள்வர் என்று கருதும் அத்தம்பதியினர் மூன்றாவது பெண் குழந்தையைத் தத்து கொடுக்கின்றனர்.
இசுலாமியர்கள் வீட்டில் நிழற்படம் எடுத்துச் சுவரில் மாட்டும் பழக்கமில்லாத போதும் மகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பூரித்துப் போகும் முகமது அலி மகளின் படத்தைச் சுவரில் மாட்டிவைத்து அழகு பார்க்கிறார். செல்வச் செழிப்புடன் வளரும் ஷாகிரா பட்ட மேற்படிப்பு முடித்தவள். அவளின் திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் செய்து முடிக்கிறார். இதற்கு மத்தியில் சிறுபான்மையான இசுலாமியினரின் கடைகளுக்குத் தீ வைக்கும் மதவாத கும்பல், ஊர் முழுக்க பதற்றம் எற்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம் என்று கதையை வேகமாக நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர்.
மகள் கருவுற்றிருப்பது அறிந்து மகிழ்ந்து போகும் முகமது அலியும் ஜைதூனும் அவளுக்கு நல்ல முறையில் பிரசவம் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றனர். பிரசவம் முடிந்த ஒரு சில மாதங்களில் மிகப்பெரிய துயரம் காத்திருக்கிறது. ஷாகிராவின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டுக் காவல் துறையினர் வீட்டை முற்றுகையிட்டு, சரியான சான்றிதழ் இல்லாத சூழலில் அவளை வலுக்கட்டாயமாகக் குழந்தையுடன் முகாமிற்குள் தள்ளுகின்றனர். ஏதும் அறியாத பச்சிளங் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு மனு கொடுக்கப்படுகிறது. குழந்தையும் ஷாகிராவின் கணவனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
குழந்தைக்குப் பாலூட்ட வேண்டிய மார்புகள் வேளை தவறாமல் சுரந்து கொண்டே இருக்கின்றன. புகட்டப்படாத பால் நெஞ்சத்தைக் கனக்க வைக்கிறது. வலி தாங்க முடியாமல் கதறும் ஷாகிராவுக்கு மைமூன் ஆறுதலாக இருக்கிறாள். பாலைச் சுவரில் பீய்ச்சிவிடு என்று வழியும் சொல்கிறாள். சுவரில் பாம்பு போல நெளிந்து காணப்படும் பாலை அருந்தும் எறும்புகளாவது பலம் பெறட்டும் என்று நினைக்கும் தாய் மனம் வாசிப்பவரை வேதனைப்பட வைக்கிறது.
குட்டி போட்டு மூன்று நாள்கள் ஆன ஒரு பெண் மான் வேடன் வீசிய வலையில் அகப்பட்டுக் கொள்ளும். அதன் மடியிலிருந்து பால் தானாகவே வழிந்து கொண்டிருக்கும். இதைப் பார்த்து நபிகள் நாயகம் இரக்கப்படுவதாக, சீறாப்புராணத்தில் ஒரு படலம் உண்டு. அது தன் கூட்டத்தாரைப் பார்த்து விட்டு வருவதற்காக மானுக்குப் பதில் தான் பிணையாக நிற்க நபிகள் ஒப்புக் கொள்வார். பெண் மான் தன் கூட்டத்தாரைப் பார்த்துவிட்டு மீண்டும் வேடனுக்கு உணவாகிவிட திரும்பி வருவதைப் பார்த்து மனம் திருந்தும் வேடனின் நிலைப்பாடு எங்கே? இளம் தாயின் துயரத்தைப் பார்த்து இரக்கப்படாத அரசாங்கம் எங்கே?
தகுந்த பிறப்புச் சான்று இல்லாதவர்கள்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று நினைத்தவர்கள் எண்ணத்தைத் தவறு என்று சுட்டிக் காட்டுகிறது நாவல். அரசாங்கத்திற்கு எதிராக மாற்றுக் கருத்து பேசுவோரையும், பத்திரிகைச் சுதந்திரத்துடன் உண்மைச் செய்திகளை வெளியிட்டவர்களையும் வன்முறையாளர்களாகக் காட்டி அவர்களைத் தனியாக அடைத்து வைத்துக் கொடுமை படுத்துகிறது. இங்கே பெரும்பான்மை மதமான இந்து மதத்தைச் சேர்ந்த ரோஜா என்ற பெண்ணும் அகதியாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள். அதற்கு அவளின் அப்பாதான் காரணம் என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.
தன் மகள் இசுலாமியனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள். மகிழ்ச்சியான இல்லறத்தின் அடையாளமாகக் குழந்தையுடன் வாழும் அவளின் நிம்மதியைச் சீர்குலைக்கத் திட்டமிடுகிறது தந்தை மனம். தன் பேச்சைக் கேட்க மறுத்த அவளைப் பழி வாங்கத் துடிக்கும் அப்பாவுக்கு இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் சரியான வழியாகத் தெரிகிறது. பெற்றோர் சம்மதமில்லாமல் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்து கொண்டதால் அவளுக்கான சான்றிதழ்கள் பிறந்த வீட்டிலேயே தங்கிவிட்டன. அவளின் பிறப்புச் சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் குடியுரிமை மறுக்கப்பட்டு முகாமுக்கு அழைத்து வரப்படுகிறாள்.
கடைசியாக, மைமூன் படித்த மதரசா பள்ளிக்குச் சென்று அங்கிருந்த குறிப்புகளைக் கொண்டு அவளின் பிறந்த ஊரைத் தெரிந்து கொண்டார் இப்ராகிம். மைமூன் பிறந்த ஊருக்குப் போய் அவளின் குடும்பம் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொண்டு வியப்பின் எல்லைக்கே செல்கிறார். காமராசர், பெரியார், காயிதே மில்லத் போன்ற தலைவர்களுடன் அவளின் குடும்பம் கொண்டிருந்த நட்பை நினைத்துப் புளகாங்கிதம் அடைகிறார். விரைவில் மனைவியை அழைத்து வந்துவிடுவோம் என்று இப்ராகிமும், சீக்கிரமாக வீட்டிற்கு வந்து விடுவோம் என்று மைமூனும் காத்திருந்த காத்திருப்புக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. விடிந்ததும் அவளைப் பற்றிய ஆவணங்களைக் கொடுத்து அவளை மீட்டு வர வேண்டும் என்று நேரத்துடன் படுக்கைக்குச் செல்கிறார் இப்ராகிம்.
வெளிச்சம் பரவி விடிந்த பின்னும் உறங்கிக் கொண்டிருந்தார். அவரைச் சிறிது நேரம் கழித்து எழுப்பலாம் என்று மகன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அலைபேசியில் ‘அம்மா இறந்துவிட்டார்’ என்ற செய்தி இடியாக இறங்கியது. இந்தத் துயரத்தை அப்பாவிடம் சொல்ல வேதனையுடன் வந்து எழுப்பினான் மகன். அதற்குள் அவர் ஆவி எப்போதோ கூட்டை விட்டுப் பறந்து விட்டிருந்தது. குறைந்த அளவில் இருந்த தண்ணீரைத் தாகத்தோடு இருந்த ஆண் மானும் பெண் மானும் பார்க்கின்றன. பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும், ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும் விட்டுக் கொடுத்து இரண்டுமே குடிப்பதைப் போல் பாவணை செய்யும் சங்க இலக்கியக் காட்சியைப் போல, மைமூன் ஆவியைத் தேடி இப்ராகிம் உயிர் பறந்ததா அல்லது இப்ராகிம் ஆன்மாவுடன் மைமூன் சீவன் கலந்ததா என்று சிந்திக்கும் அளவுக்குச் செவ்வியல் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது.
ஊருக்கு நியாயம் சொல்ல எல்லோரும் ஆவலுடன் புறப்பட்டு வருவர். ஆனால் தன் வீட்டு நியாயம் பேசுவதற்கு யாருக்கும் துணிவு இருப்பது இல்லை. தன் வீட்டுக் குறைகளைப் பெரிய திரை போட்டு மூடி வைத்திருப்பர். அப்படி இல்லாமல் தான் சார்ந்த சமயத்தில் சரி செய்யப்பட வேண்டிய கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுகிறார் எழுத்தாளர் கரீம். மதவாதிகளால் இசுலாமியர்கள் தாக்கப்படும் போது அவர்களின் கூக்குரல் கலவரத்தின் சத்தத்தில் அடங்கிப் போனது. அவர்கள் கடவுளை அழைத்த போது அது கடவுளின் காதில் விழாமல் போனது என்று சொல்லும் இடம் முக்கியமானது. கடவுளின் பெயரால் நடக்கும் கலவரங்களைத் தண்டிக்கத் தவறும் கடவுளையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுகிறது கதை.
ஆங்கிலேயர்களின் ராணுவ மையத்தைத் தாக்க ரகசியத் திட்டம் தீட்டிச் செயல்படுத்திக் கொண்டிருந்தனர் விடுதலைப் போராளிகள். பிரிட்டிஷ் காவல்துறையிடமிருந்து மற்றவர்களைக் காப்பாற்றிவிட்டு, தான் பிடிபட்டார் முகம்மது ஹசம். இந்தியர்களின் தாக்குதல் திட்டத்தைத் தெரிந்து கொள்ள ஹசம்மைப் பலவாறாகத் துன்புறுத்தியது ஆங்கிலேயே அரசு. ஆணுறுப்புகளில் குச்சி விட்டுப் பல வகையிலும் சித்திரவதை செய்தது. இருப்பினும் எந்த உண்மையையும் அவர்களால் வரவழைக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் இந்த வேதனை தாங்க முடியாமல் எங்கே உண்மையைச் சொல்லி விடுவோமோ என்று நினைத்த ஹசம் தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறார். அப்போது மார்க்கக் கொள்கை தற்கொலை தவறு என்று போதிக்கிறது. தேசத்தின் நலனுக்காக மார்க்கத்தை விட்டுக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து தற்கொலை செய்து கொள்வதாக ஹசமின் வாழ்க்கை முடியும். இப்படி இந்த நாட்டின் சுக துக்கங்களில் கலந்து விட்ட மக்களை அந்நியர்களாகப் பேசுவது முழுப்பொய்.
குழந்தைகளைத் தத்தெடுப்பது பற்றிய சட்டங்கள் இசுலாம் சமயத்தில் இல்லாத நிலை இன்றும் நீடிக்கிறது. குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்குப் பெரிய இக்கட்டான சூழ்நிலை உருவாகி இருப்பதால் இது குறித்த சரியான பார்வை வேண்டும் என்று வாதாடுகிறது நாவல். இக்கதையின்படி ஷாகிராவுக்கு உண்மையான பிறப்புச் சான்றிதழ் இல்லாததற்குக் காரணம் அவள் தத்தெடுக்கப்பட்டதால் ஏற்பட்டது என்று சொல்லும் போது சமயவாதிகள் இது போன்ற பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோளும் சேர்த்தே வைக்கப்படுகிறது.
மொத்தத்தில் இந்தியா முழுக்க ஒரே சமயத்தை, ஒரே கொள்கையை, ஒரே மொழியை, ஒரே கருத்தை அறுவடை செய்ய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற பொய் விதைகளை விதைக்கக் காத்திருக்கும் அரசியலைத் தோலுரித்துக் காட்டும் இக்கதை தமிழ் இலக்கியத்தின் மட்டுமல்லாமல் தமிழ் அரசியல் சூழலின் மிக முக்கியமான படைப்பு. யாருக்கோ ஏதோ நடந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கும் போதே அதே பாதிப்பு நமக்கு வந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்ற எச்சிரிக்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படைப்பு ஒரு பாடமாகக் கருதப்பட்டுப் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!
- முனைவர் மஞ்சுளா