mar28 strike2022 மார்ச் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் இந்திய நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (HMS, INTUC, AITUC, CITU, AIUTUC, TUCC, SEWA, LPF, AICCTU, UTUC) பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு சம்யுத்த கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) ஆதரவு தெரிவித்ததோடு விவசாயிகள் கிராமப்புறங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவித்தது. அதோடு மத்திய மாநில அரசு ஊழியர்கள், வங்கி இன்சூரன்ஸ் ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஏன் இவ்வளவு ஆதரவு என்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள நரேந்திரமோடி அரசு பல்வேறு வகைகளில் மக்களுக்கு விரோதமான
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் இந்த ஒன்றுபட்ட வேலை நிறுத்தம்.

? தொழிலாளர்கள் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிடு
? மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறு
? அனைத்த தரப்பு தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் 21 ஆயிரம் வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.
? பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்து
? தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயரிலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே
? முறைசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்று.
? புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்து
? கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கி வரும் சலுகைகளை ரத்து செய்
? 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திடு. இந்த திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்திடு.
? குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்க (எம்.எஸ்.பி) மத்திய சட்டம் கொண்டு வர வலியுறுத்தி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.

வேலை நிறுத்தம் - மறியல்

இந்த பொது வேலை நிறுத்தத்தையொட்டி நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பேரணி ஊர்வலங்கள், பைக், சைக்கிள், வேன் பிரச்சாரங்கள், தெரு நாடகங்கள், தெருமுனைக் கூட்டங்கள், சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள், சுவர்எழுதுதல் என பல வடிவங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் ஸ்தம்பித்தன. மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்கள் முழு அளவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கேரளாவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை பிரச்சாரம் செய்ய பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அனைத்து பஞ்சாயத்துக்களிலும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், மத்திய தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். மேற்கு வங்கத்தில் விவசாயிகள் மற்றம் கிராமப்புற ஏழைகள் 700க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் மற்றும் ரயில்களை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி மொத்தத்தில் பந்த் நடத்தினர். அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள், அரசின் அடக்குமுறையை மீறி திரிபுரா முழுவதுமாக பந்த் போராட்டம் நடைபெற்றது. மாநில பிஜேபி அரசின் தவறான ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு வந்தனர்.

தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் பெரும் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. 1.2 லட்சத்துக்கும் அதிகமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கின. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கூட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஜார்க்கண்டில் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர் மார்ச் - 28 அன்று 12 மணி நேர சாலை மறியல் / வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்தனர். மேலும் மார்ச் 29 அன்று வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டன. அஸ்ஸாமில் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் நகரங்களிலும், கிராமங்களிலும் நடைபெற்றது பலர் கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்கம் மற்றும் கிஷான் சபாவைச் சேர்ந்த 1148 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டன.

உத்திரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம், உத்திரகாண்ட், சத்தீஸ்கர், மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் போராட்டங்களில் மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். நகர்புறம் மற்றம் கிராமபுறங்களில் நடைபெற்ற வேலை நிறுத்த நடவடிக்கைகளில் பெருமளவில் மக்கள் பங்கேற்றதாக பீகார் மாநில விபரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஆட்டோ, டாக்சிகள் மற்றும் தனியார் பேரூந்துகள் அனைத்தும் ஓடவில்லை. இதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டன. இரண்டு நாள் பாரத் பந்தின் போது தற்செயலான விடுப்பு அல்லது அரைநாள் விடுப்பு எடுக்கக்கூடாது என்று மேற்கு வங்க அரசு அதன் ஊழியர்கள் மீது சாட்டை அடித்த போதிலும் இடதுசாரித் தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் ரயில்களை மறித்து தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஹரியானாவிலும் பானிபட், ரோஹ்தக், கைத்தால், குருசேத்ரா, சிர்சா, அம்பாலா, ஃபதேஹாபாத், யமுனா நகர் மற்றும் கர்னால் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. குருகிராம் முனிசிபல் கார்பரேஷனைச் சேர்ந்த 100 தொழிலாளர்கள் டெல்லி அருகே உள்ள குர்கானில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரத்துறையில் உள்ள ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் மின்சாரத் திருத்த மசோதா 2021ஐ திரும்ப பெற வேண்டும், அனைத்து தனியார் மயமாக்கல் செயல்முறைகளையும் நிறுத்த வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். குறிப்பாக, யூனியன் பிரதேசங்களான சண்டிகர், தாத்ரா நகர் ஹாவேலி, டாமன் டையூ மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் சிறப்பாக மின்ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, வருமானவரி, தபால், வங்கி, உருக்கு, எண்ணெய், நிலக்கரி, தாமிரம், காப்பீடு, உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த முறைசாரா தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இடதுசாரி மற்றும் திமுக எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர். சிபிஐ எம்.பி., பினோய் விஸ்வம் மாநிலங்களவையில் விதி 267ன் கீழ் மத்திய அரசின் பெரு நிறுவனமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் அழைப்பு விடுத்துள்ள இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை ராஜ்ய சபாவில் வழங்கினார்.

தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகத்தில் போக்குவரத்து பெரும்பாலும் இயங்கவில்லை. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கின. வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரவு மிகக்குறைவாக இருந்தன. இதனால் அரசுப்பணிகள் முற்றிலும் முடங்கின. 500க்கும் அதிகமான இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கைதாகினார்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்கள் பெ.சண்முகம் விழுப்புரத்திலும், வி.சுப்பிரமணியன் திருவாரூரிலும் கே.பி.பெருமாள் சிவகங்கையிலும், டி.ரவீந்திரன் திண்டுக்கல்லிலும், கே.முகமதுஅலி திருச்சியிலும், சாமி.நடராஜன் புதுக்கோட்டையிலும், பி.டில்லிபாபு சேலத்திலும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர்கள் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் கார்ப்பரேட் மயக் கொள்கைகளை கைவிடவும் வலியுறுத்தி இந்த பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த பொது வேலை நிறுத்தத்தில் அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் உட்பட 25 கோடிக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வெற்றியடைந்துள்ளது. விவசாயிகள் கிராமப்புறங்களில் சாலை மறியலை சிறப்பாக நடத்தியுள்ளனர். மொத்தத்தில் வரலாற்று சிறப்புமிக்க வேலை நிறுத்த போராட்டம். நாம் தொடர்ந்து போராடுவோம். மோடி ஆட்சியை வெளியேற்றும் வரை போராடுவோம் வெற்றி பெறுவோம்.

- கே.பி.பெருமாள்

Pin It