“அரசியலை இந்துமயமாக்குங்கள்! இந்து மதத்தை இராணுவமயமாக்குங்கள்!” என்று இந்துத்துவ தத்துவ அடிப்படையை உருவாக்கிய சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றத்தை திறந்துள்ளார் பிரதமர் மோடி. 20 எதிர்கட்சிகளின் புறக்கணிப்பிலும், குடியரசுத் தலைவரை தீண்டாமலும் இந்துத்துவ வர்ணாசிரம அடிப்படையில் தனி ஒரு ராஜாவாக நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து “புதிய இந்தியா உருவாகியுள்ளது” என்ற முக்கிய செய்தியை பிரகடனப்படுத்தியுள்ளார் மோடி. அதாவது, சமஸ்கிருத, தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, கணபதி ஹோமம் செய்து, தமிழக ஆதீன மடாதிபதிகளின் ஆசியுடன் செங்கோல் பெற்று, “இந்துராஷ்டிரா” என்ற இந்துராஜ்ஜியத்தின் பாசிச கோலாட்சியை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவுகிறார்- என்பதே அச்செய்தியாகும்.

“புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல. 140 கோடி இந்தியர்களின் நீண்டநாள் கனவு இன்று நனவாகியுள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கான பழமையும் புதுமையும் இணைந்த புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. புதிய இந்தியா, புதிய இலக்குகள் நிர்ணயித்து புதிய பாதையில் பயணிக்கிறது.” என திறப்புவிழாவில் முழங்கினார் மோடி. ஆம்! 140 கோடி மக்கள் வாக்களித்து அனுப்பிய பிரதிநிதிகளிடம் விவாதிக்காமலும், நாடாளுமன்ற அமைச்சரவையில் ஒப்புதல் பெறாமலும், புதிய நாடாளுமன்றக் கட்டுமானத்தை எதிர்த்து 1200 பொதுமக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த எதிர்வழக்குகளை அலட்சியப்படுத்தியும், கொரோனா காலக்கட்டத்தில் உணவின்றி லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு முழுவதும் அலைந்துக் கொண்டிருக்கும்போது 20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்தா என்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் மோடி. இது 140 கோடி இந்திய மக்களின் கனவா? இந்து ராஜ்ஜியம் என்ற கார்ப்பரேட்டுகள் இந்தியாவை கொள்ளையிடும் புதிய இந்து தேச கனவு!modi in new parliamentஒருபுறம் செப்டம்பரில் டெல்லியில் நடைபெறப் போகும் G20 மாநாட்டிற்காக ஏழைமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளனர். மறுபுறம் உச்சநீதிமன்றம் தில்லி மாநில அரசிற்கு அளித்த தில்லி அரசாங்க அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் மாற்றத்திற்கான அதிகாரத்தை துணை ஆளுநரிடம் அளிப்பதற்கான அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளதன் மூலம் அரசியல் சாசன சட்டத்தை காலில் போட்டு மிதித்து தில்லியை முழுவதையும் ஒன்றிய அரசின் ஏகபோகமாக்கியிருக்கிறது. இன்னொருபுறம், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யக்கோரி நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மல்யுத்த வீராங்கனைகள் மீது வன்முறை ஏவி கைது செய்துக் கொண்டிருந்தது காவல்துறை. இக்காட்சிகளினூடேதான் மோடியின் “புதிய இந்தியா” “புதிய இந்துராஜ்ஜியம்” பிறந்துள்ளது. ஏனோ! மோடி “புதிய இந்தியாவை” பிரகடனப்படுத்திய நாளிலிருந்து இந்திய ரயில் தண்டவாளங்கள் தடம் புரண்டுக் கொண்டேயுள்ளன!

புதிய கட்டிடம் பழைய காலனிய சுவடுகளை துடைத்தெறியுமா?

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை வடிவமைத்தவர் அமெரிக்காவில் கட்டிடத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த பிமல் பட்டேல் ஆவர். இவர் வாரணாசியின் காசி விஸ்வநாத கோயிலின் தாழ்வார வடிவமைப்பினை மேற்கொண்டவர். பிமல் முக்கோண வடிவத்தில் கட்டிடம், நாடாளுமன்ற வளாகத்தில் ஆலமரம், மக்களவையில் மயில் மற்றும் மாநிலங்களவையில் தாமரை வடிவங்களைக் கொண்டும் மொத்த நாடாளுமன்றக் கட்டுமானத்தையும் இந்து மதநம்பிக்கையின் அடிப்படையில் அமைத்துள்ளார். 64,500 சது.கி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 4 தளங்களைக் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடம் 888 இருக்கைகள் கொண்ட மக்களவையும், 384 இருக்கைகள் கொண்ட மாநிலங்களவையும் கொண்டு 1200 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

1927-ல் பிரிட்டிஷ் கட்டிட நிபுணர் ஹெர்பர்ட் பேக்கரால் உருவாக்கப்பட்ட பழைய கட்டிடத்தின் கடந்தகால காலனித்துவத்திலிருந்து மீளவும், புதிய மக்களவை தொகுதி அதிகரிப்பிற்காகவும் நவீன வடிவங்களோடு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என பாஜக விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் பழைய கட்டிடத்தில் இந்திராகாந்திக் காலகட்டத்தில் இணைக்கட்டிடம் கட்டப்பட்டு, பின் நூலகம் இணைக்கப்பட்டது. பின் மோடியினால் இணைக்கட்டிடத்தின் விரிவாக்க கட்டிடமும் திறக்கப்பட்டு புணரமைக்கப்பட்டும் விரிவாக்கப்பட்டும்தான் வந்துள்ளது. மேலும் உலகெங்கிலுமுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், 500-600 ஆண்டுகால பழமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டிடங்களையே இன்னும் பயன்படுத்திவரும்போது, (உதாரணத்திற்கு இங்கிலாந்து -1016 ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடம் புணரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.) மக்களின் வரிப்பணத்தில் 1200 கோடியில் கட்டப்பட்டது ஏன்? 5 வயதிற்குட்பட்ட 69% குழந்தைகள் பசியாலும் ஊட்டச்சத்தின்மையாலும் மரணிக்கும் இந்தியாவில்தான் மோடி 20,000 கோடியில் ஆட்சியாளர்களுக்கு சொகுசு கோட்டைகள் கட்டிக் கொண்டுள்ளார்.

சென்றவருடம், சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் பாதையான புலிவர்டு பாதையை மறுபுணரமைப்பு செய்தனர். அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ‘மன்னர் பாதை’ என அழைக்கப்பட்டு, 1947-ல் காங்கிரஸ் ஆட்சியில் ‘ராஜ்பத்’ என அழைக்கப்பட்டது. அதை மோடி “கர்தவ்யபாத்”/ “கடமைகளின் பாதை” என மறுபெயரிட்டார். இந்தியாவின் காலனித்துவ சின்னங்களை “தேசிய சின்னங்களின்” மீட்சிகளால் மாற்றுகிறாராம்! உண்மையில் பிரிட்டிஷ் காலனித்துவ சின்னங்களை நீடித்து வைத்திருந்த காங்கிரசின் “சுதந்திர” ஆட்சியை அம்பலப்படுத்துவது தேவைதான். ஆனால் நாட்டின் பொதுச் சொத்துகளை “பணமாக்கல் திட்டத்தின்” மூலம் விற்ற புதியகாலனியதாசன் மோடிதான் பழைய காலனித்துவ அடையாளங்களை அழிக்கிறாராம்! ஆம்! அவருக்கு புதியகாலனிய சேவைக்கு முற்று முழுதான எதேச்சதிகார ஒற்றை அதிகாரம் கொண்ட புதிய பாசிச வடிவம் தேவைப்படுகிறது.

வலதுசாரி ஜனரஞ்சகமும் எதேச்சதிகார கட்டிடங்களும்

“மோடிக்கும் கட்டிடக்கலைக்கும் இடையே உள்ள தொடர்பு வெறும் இந்தியாவிற்கான தனித்தன்மை கொண்டதல்ல. இது உலகலாவிய நவீன எதேச்சதிகார ஜனநாயகத்தை வழிநடத்தும் வலதுசாரி ஜனரஞ்சக( Populism) தலைவர்களின் பொதுவான அம்சமாகும்.” என டைம் இதழ் குறிப்பிடுகிறது. அதாவது துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இஸ்தான்புல்லில் எழுப்பியுள்ள மிகப்பெரும் காம்லிகா மசூதி போன்று துருக்கி முழுதும் புதிய மசூதிகளை கட்டியெழுப்பி வருகிறார். அதே நேரத்தில் ஹங்கேரியில் பிரதமர் விக்டர் ஆர்பன் 19-ஆம் நூற்றாண்டு கோட்டை மாவட்டத்தை அரசாங்க இடமாக்கியுள்ளார். அதாவது இந்த தலைவர்கள் மக்கள் யார் என்பதற்கு அடிப்படைவாத முறையில் பிற்போக்கு வரலாற்றிலிருந்து தற்போதைய சூழலை கட்டமைக்கின்றனர் என டைம் இதழ் கூறுகிறது.

வர்ணாசிரம வடிவில் புதிய காலனிய சேவைக் கட்டிடம்: வேதகால, வர்ணாசிரம மனுதர்ம வடிவங்கள்

பழைய நாடாளுமன்றக் கட்டிடம் பிரிட்டிஷ் காலனிய வடிவங்களோடு சுதந்திர போராட்டத்தையும், காங்கிரஸ் தலைவர்களையும் முன்னிறுத்தியது. சுதந்திர போராட்டத்தில் பங்குபெறாத, பிரிட்டிசுக்கு விசுவாசமாக இருந்த பாஜகவிற்கு வர்ணாசிரம வடிவத்தை தவிர மாற்று வேறில்லை. புதிய கட்டிடமெங்கும் புராண வேத விளக்கங்களும், சமஸ்கிருத எழுத்துக்களுமே விரிவியுள்ளன. அவையின் நுழைவாயில் சாணக்கியனின் ஆவேச காட்சியோடு வரவேற்கிறது, தொடர்ந்து அகண்ட பாரதம், விஷ்ணுபுராணத்தின் பாற்கடல் கடையும் காட்சி போன்றவற்றோடு உள்செல்கிறது. அரசமைப்புச் சட்டநூல் காட்சிப்படுத்தப்பட்டு நந்தலால் போஸின் 22ல் 19 கலை வடிவங்கள் சுற்றி இடம்பெறுகிறது. நந்தலால் கலைவடிவின் உட்கூறான இந்திய வரலாறு சிந்துவெளியிலிருந்து துவங்காமல் வேதகாலத்திலிருந்து துவங்குவதும், இதிகாசங்களே வரலாறாகவும் மாற்றியமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் முதலாளித்துவ குடியரசுக்கான அரசியலமைப்பு சட்டம் உட்பட அத்துணை வடிவங்களையும் வேதகால வர்ணாசிரம மனுதர்ம வடிவங்களாக புதிய நாடாளுமன்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.new parliament architectural elementsசுதந்திர போராட்டக் காலகட்டத்திலிருந்தே ஆர்எஸ்எஸூக்கு முதலாளித்துவ ஜனநாயகத்திலும், அரசியல் சாசன சட்டத்திலும் உடன்பாடு இல்லை. அரசியல்சாசன சட்டம் அனைத்து சாதிகளுக்கும் சமத்துவத்தை வழங்குகிறது எனக்கூறி “மனுஸ்மிருதி”தான் சட்டப் புத்தகமாக இருக்க வேண்டும் என 1947லிருந்தே கோரி வந்தது. இந்துமகாசபை ஆகஸ்ட் 15,2019ல் உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில், முதல் இந்து நீதிமன்றத்தை அமைத்து, மனுஸ்மிருதிதான் சட்டப்புத்தகமாக இருக்கும் என்று வெளிப்படையாக அறிவித்தனர். இந்தியாவின் மூவர்ண தேசிய கொடிக்கு பதிலாக ஆர்எஸ்எஸின் காவிக்கொடியே தேசியகொடியாக வேண்டும் என பாஜக அமைச்சர்கள் பேசி வருகின்றனர். கடந்த வருடம் உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜ் நகரில் நடைபெற்ற சாமியார்களின் சம்மேளனத்தில், “இந்தியாவை இந்துராஷ்டிரா என பிரகடனப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பிரகடனப்படுத்துவோம்.” என அகோரிகள் மிரட்டினர். சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தியா என்பதற்கு இந்துராஷ்டிரா என அழைக்க தொடங்கி விட்டார். அதன் தொடர்ச்சியாக பாசிச இந்துராஜ்ஜியத்தின் அரசமைப்பு கட்டிடமே புதிய நாடாளுமன்றம் ஆகும்.

செங்கோலும் எதேச்சதிகாரமும்

மேலும் பாஜகவினர் திடீரென சோழர்கால செங்கோலை இழுத்து நடுமனையில் வைத்துள்ளனர். திருவாவுடை ஆதினம் நேருவிற்கு சுதந்திரத்திற்காக கொடுத்த பரிசை, ஆட்சி மாற்றத்திற்காக மவுண்ட் பாட்டனிடம் கொடுத்து நேருவிடம் கொடுக்கப்பட்டது என்ற அண்ட புளுகு ஆகாச புளுகுக்கு ஒன்றிய அரசு வீடியோ தயாரித்து வெளியிட்ட கொடுமையும் நடந்தேறியது. இந்து பத்திரிக்கையாசிரியர் என்.ராம், “ஆதினம் மவுண்ட் பாட்டனிடம் கொடுத்தற்கோ, ஆட்சி மாற்றத்திற்கு மவுண்ட் பாட்டன் நேருவிடம் தந்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை. இது போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. நம் சுதந்திரத்தின் அடிநாதம் முடியாட்சியிடமிருந்தும், அன்னியராட்சியிடமிருந்தும் விடுதலை பெறுவதாகவே இருந்தது.” என சான்றோடு அவ்வீடியோ போலி என அம்பலப்படுத்தியுள்ளார். உண்மையென்னவென்றால் சோழபேரரசின் எதேச்சதிகார வரம்பற்ற அதிகாரம் மோடிக்கு தேவைப்படுகிறது.

2026-க்குப் பிறகுதான் மக்களவை தொகுதி சீரமைப்பின்படி இருக்கை அதிகரிப்பை ஏற்படுத்தும் திட்டமிருக்கும்போது, பாஜக தற்போது 2024 தேர்தலை மையப்படுத்தியே கட்டிடத்திறப்பை விரைவாக முடித்தது. மேலும் தொகுதி சீரமைப்பில் பாஜக ஆளும் மாநிலங்களின் தொகுதிகள் அதிகரித்து நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு ஏகபோக அதிகாரத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஆபத்து எதிர்நோக்கியே உள்ளது.

ஏகாதிபத்திய சுரண்டலுக்கு தயாராகும் அதிகாரம்மிகு பாசிச இந்து ராஜ்ஜியம்

ஏகாதிபத்திய முகாம்களில் இந்தியாவின் நிலை

ஏகாதிபத்தியத்தின் புதிய தாராளமயக் கொள்கையினால் கடும் பொருளாதார அரசியல் நெருக்கடிகள் கூர்மையடைந்துள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. சீன ஏகாதிபத்தியத்தின் அரசியல் பொருளாதார செல்வாக்கு மண்டலங்களின் மீதான மேலாதிக்கம் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான கடும் சவாலாக முன்னின்றுள்ளது. அமெரிக்க மற்றும் ரஷ்ய-சீன ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கத்திற்கான போர்களும், பொருளாதார அரசியல் ஆதிக்கமும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய-உக்ரைன் போரிலும் ஏகாதிபத்திய நெருக்கடிகளிலும் இந்தியா தனக்கான பேரம்பேசும் நிலையை எடுத்தது. ரஷ்யாவிடமிருந்து உலகிலேயே அதிகளவு எண்ணெயும் ராணுவ பாதுகாப்பு உபகரணங்களும் இறக்குமதி (ரிலையன்ஸ் அம்பானி லாபம் கொழிக்க) செய்தது. அமெரிக்க குவாட் அணியில் இருந்துக் கொண்டே பிரிக்சிலும் நீடித்தது. ஆனாலும் ஆசியபசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிராக குவாட் அமைப்பின் சார்பாக இந்தியாவை “பெரும் அதிகாரம்” படைத்த நாடாக முன்னிறுத்தும் அரசியலே மேலோங்கி நிற்கிறது.

ஆசியபசுபிக் பிராந்தியத்தில் புவிசார் முக்கியத்துவம் மட்டுமல்ல, உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தி சென்று கொண்டுள்ளது. சீனா உட்பட பெரும்பாலான தொழில்மயநாடுகளின் மக்கள்தொகை வயதாகி சுருங்கும்போது, இந்தியாவில் அதிக இளமையானவர்களின் மக்கள் படை விரிவடைந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரும் மலிவு கூலிப்படை கொண்ட இந்தியநாடும், அப்படையை ஒடுக்க பெரும் அதிகாரம் கொண்ட எதேச்சதிகார அரசும் தேவைப்படுகிறது. சீனாவிற்கெதிரான பிராந்திய தயாரிப்பிற்காகவும், தெற்காசிய மேலோதிக்கத்திற்காகவும் இராணுவத்திற்கு அதிகம் செலவழிக்கும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்ததாக இந்தியா மூன்றாவதாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபமீட்டும் பொருட்டு, அதாவது 11% ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவியும் வருகிறது.

டெல்லியை இந்து ராஜ்ஜியத்தின் கோட்டையாக்க ஒத்திகை

அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில், “உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்தோ-பசுபிக் பிராந்திய அமைதிக்கு இவ்வமைப்பு வித்திடும்.” என மோடி உரையாற்றினார். மேலும் அடுத்த குவாட் கூட்டமைப்பின் “நாற்கர பாதுகாப்பு உரையாடல்”( அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா) கூட்டத்தை இந்தியாவில் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே செப்படம்பரில் நடைபெறவிருக்கும் G20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்றுள்ளது. முன்பே டெல்லியில் துக்ளாபாத் பகுதியில் ஏழை இஸ்லாமியர் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டாயிற்று. இப்போது G20 மாநாட்டிற்காக டெல்லியில் தலித் மக்கள் உட்பட ஏழை மக்களின் 1600 வீடுகள் இடிக்கப்பட்டு 2.7 லட்சம் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். பாஜக மாநில உரிமைகளை பறித்து ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு பண்பாடு என்று மத்தியில் ஒற்றை அதிகாரத்தை குவித்து வருகிறது. ஒருபுறம் இந்தியா முழுவதும் ஒரு கல்விமுறை, ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே நேரத்தில் தேர்தல், முப்படைகளுக்கும் ஒரே தளபதி, ஒரே புலனாய்வு அமைப்பு என மத்தியில் அதிகாரங்களை குவித்து அரசமைப்பை பாசிசமாக்கி வருகிறது. அதற்காக டெல்லியை இந்துராஜ்ஜியத்தின் கோட்டையாக்க டெல்லியின் ஏழை தலித், இஸ்லாமிய மக்கள் துரத்தப்பட்டுக் கொண்டுள்ளனர்.

குவாட் கூட்டமைப்பின் ஆசிய பசுபிக் பாஸ்

அண்மையில் ஆஸ்திரேலியாவில் மோடிக்கு வானில் “வெல்கம் மோடி” என்ற வாசகத்தோடு மிகப்பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானிஸ் “மோடிதான் பாஸ்” என புகழாரம் சூட்டினார். அமெரிக்க பிரதமர் ஜோபைடனோ மோடியிடம் ஆட்டோகிராஃப் கேட்டார். எதேச்சதிகார முறையில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டு சூடு இன்னும் ஆறவில்லை. அதற்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன்-22 உரையாற்ற மோடிக்கு அழைப்பு விடுத்து, “துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியபெருங்கடல், பசுபிக் பெருங்கடலில் இருநாடுகளின் ஒன்றிணைந்த போர் நடவடிக்கைகள் தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் நிறைவேறும்” என வெள்ளைமாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இவையெல்லாம் சீனாவிற்கெதிரான குவாட் அமைப்பின் பிராந்திய முன்னணியாகவும் (“பாஸாக”), பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் சுரண்டல் சந்தையாகவும் “இந்தியா” என்ற பாசிச தேசத்தை தீவிரமாக கட்டியமைக்கும் நிகழ்வுகளாகும்.modi quat Oநிதிமூலதனத்தின் வரலாற்றுத் தேர்வு - ஆர்எஸ்எஸ்: நிதிமூலதனத்தின் பிற்போக்கான இனவெறி வடிவம் - பாசிசம்

புதிய தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தியதாலும், கொரோனா காலத்தின் பன்னாட்டு நிறுவனசார்பு பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாக அமுல்படுத்தியதாலும் இந்தியாவில் கடும் பொருளாதார நெருக்கடியும் வேலையின்மையும் தலைவிரித்தாடிக் கொண்டுள்ளது. கடந்த 41 மாதங்களில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து 7%க்கு மேல் நீடிக்கிறது. தொழிலாளர்களின் வேலை பஙகளிப்பு விகிதமும் 41% மட்டுமே நீடிக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, தொடர் பெட்ரோல்,டீசல், சந்தை பொருட்கள் விலை உயர்வு என சாமானிய மக்கள் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் மோடியின் மத்திய அரசோ பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டு முதலாளிகளுக்காக “தொழில் செய்ய எளிதான நிலைமை” (Ease of doing business), பணமாக்கல் திட்டம் என பொதுத்துறை, இயற்கை வளங்களை கொள்ளையிட முற்றிலும் திறந்து விட்டுள்ளது.

தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் 4.86 லட்சம் கோடி தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. 2014-2021 காலகட்டத்தில் பாஜகவின் மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு அளித்த வரிச்சலுகை 6.5 லட்சம் கோடியாகும். மத்தியஅரசு நாட்டு மக்களிடமிருந்தும், சிறுகுறு வணிகர்களிடமிருந்து 2017-2022 காலம் வரை கொள்ளையடித்த ஜிஎஸ்டி வரி 1,49,000 கோடியாகும். பாஜக அரசு மேற்கொள்ளும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கான கொள்ளையை எதிர்த்த தொழிலாளர்கள், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவும், திசைதிருப்பவும் இஸ்லாமியர்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிமத மோதல்களை தூண்டி விடுகின்றன. அதற்கு பழைய வேதகால பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்கிற புனைவு வரலாற்றைக் கொண்ட இந்துத்துவ பாசிசம் என்ற அடக்குமுறை ஆயுதம் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு வரலாற்றுத் தேவையாகி உள்ளது.

“இது முதலாளித்துவ பலவீனத்தின் அடையாளமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவப் பாராளுமன்றம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகம் போன்ற பழைய முறைகளில் ஆளமுடியாது என்பதும் வெளிப்பட்டது. அமைதியான வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் தற்போதைய சூழ்நிலையிலிருந்து இனி வெகு காலத்திற்கு வெளிவர இயலாது என்பது நன்கு வெளிப்படுகிறது. ஆகவே இந்தச் சூழலில் போருக்கான கொள்கையை செயல்படுத்த வேண்டியது கட்டாயமானது.” என தோழர் ஸ்டாலின் பாசிச அரசின் உருவாக்கத்தை விளக்குகிறார்.

ஏகாதிபத்தியங்களின் ஆர்எஸ்எஸின் தேவை

பாசிசம் குறித்து மூன்றாம் கம்யூனிஸ்டு அகிலத்தின் 13வது கூட்டத்தில் உள்ள விளக்கம் கூறுவதாவது: “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்.”

பாசிசத்தின் மேற்கண்ட விளக்கத்தின்படி மிகவும் பிற்போக்கான மதவெறி பாசிசம் இந்தியாவில் அரியணை ஏறியிருக்கிறது. ஆர்எஸ்எஸின் நிறுவனர் ஹெட்கேவரின் குரு மூஞ்சே 1934-ல் கூறினார், “நான் இந்து தர்மசாஸ்திரத்தின் பிரகாரம் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அதாவது நமக்கு பழைய சிவாஜியைப் போல் அல்லது ஜெர்மானிய ஹிட்லரைப் போல் அல்லது இத்தாலிய முசோலினியைப் போல் ஒரு சர்வாதிகாரியைக் கொண்ட சுயராஜ்ஜியம் நம்மிடம் இல்லையேல் இந்தக் கொள்கையை செயலுக்குக் கொண்டுவர முடியாது.” இத்திட்டத்தின் தொடர் வளர்ச்சியே இன்றைய இந்துராஜ்ஜியத்தின் புதிய நாடாளுமன்றம்.

இன்று இந்தியாவில் நிதிமூலதனம் ஏன் ஆர்எஸ்எஸின் இந்துத்துவ பாசிசத்தை வரலாற்றுரீதியாக தேர்ந்தெடுத்துள்ளது? ஒன்று உலகிலேயே 100 ஆண்டுகள் பழமையானதும் நீடித்த வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட பெரும் பாசிச அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளதும் மற்றும் அதிக அன்னிய நிதி பெறும் பெரிய மதநிறுவனமாகவும் ஆர்எஸ்எஸ் உள்ளது. மற்றொன்று இத்தாலிய நாஜிக் கொள்கையின் ஈர்ப்பினாலும்,ஜெர்மனிய ஆரிய மேலாண்மை கோட்பாட்டை ஏற்றும் 1925-ல் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு, துவக்கத்திலிருந்தே ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக, ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டுதலோடுதான், அதாவது ஆரம்பத்தில் இத்தாலி, பின்னர் ஜெர்மனி இறுதியில் பிரிட்டன் வழிகாட்டுதலோடுதான் பாசிச இயக்கத்தை கட்டி அமைத்தது. இத்தாலி, ஜெர்மன் பாசிசம் தனது சொந்த நாட்டு முதலாளிகளின் ஏகபோக நலனுக்காக, பிறதேசங்கள் மீதான அதன் ஆதிக்கத்திற்காக உருவானது. ஆனால் இந்துத்துவ பாசிசம் துவக்கம் முதலே விதேசிய முதலாளிகளின் நலனைச் சார்ந்தே உள்நாட்டில் எதிரிகளை உருவாக்கி ஆரிய மேலான்மையோடு பேரம் பேசி தனக்கான அதிகாரத்தை பெறவே தோன்றியது. இந்த அடிப்படையிலிருந்து இன்றைய புதியதாராளமய காலகட்டத்தில் நிதிமூலதனத்திற்கு இந்துத்துவ பாசிசம் தேவைப்படுகிறது.

பாசிசத்தை முறியடிப்போம்!

“பாசிசத்தின் வெற்றி ஒரு பக்கம் பாட்டாளி வர்க்கத்தின் பலவீனங்களை எடுத்துக் காட்டுகிறது. பூர்ஷ்வா வர்க்கத்துடன் வர்க்க சமரசம் செய்து அதனுடன் கூட்டாளியாக நிற்கும் சமூக-ஜனநாயகத்தின் சீர்குலைவுக் கொள்கையின் காரணமாய் ஸ்தாபனரீதியில் வலுவிழந்து பாட்டாளி வர்க்கம் சிந்திச் சிதறி சின்னாபின்னமாகிக் கிடைப்பதைக் காட்டுகிறது. மறுபக்கத்தில் பூர்ஷ்வா வர்க்கம் தன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் உருவாவதைக் கண்டு பயப்படுகிறது. புரட்சியை கண்டு பயப்படுகிறது. பூர்ஷ்வா வர்க்கம் தனது சர்வாதிகாரத்தைத் தங்கள் பழைய முறைகளில் பூர்ஷ்வா ஜனநாயகம், பார்லிமெண்ட் முறைகள் மூலம் நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது.

 ஒரு பாசிஸ்ட் நாட்டில் பாசிஸ்டுகளின் கட்சி அதனுடைய ஏகபோக ஆதிக்கத்தை நீண்டநாள் நிலைத்து வைத்திருக்க முடியாது. காரணம் அது வர்க்கங்களையும், வர்க்க முரண்பாடுகளையும் ஒழிப்பதைத் தனது கடமையாகக் கொள்ள முடியாது. அது பூர்ஷ்வாக் கட்சிகள் சட்டபூர்வமாக இருப்பதற்கே ஒரு முடிவு கட்டி விடுகிறது. இன்னும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பணியாற்றி மேலும் பலமடைந்து முன்னேறுகிறது. மேலும் உறுதிப்பட்டு வார்த்தெடுக்கப்பட்டு பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துகிறது. எனவே வர்க்க முரண்பாடுகளின் அடிதடிகளில் பாசிசத்தின் அரசியல் ஏகபோக ஆதிக்கம் நிச்சயம் வெடித்து உடைந்தே தீரும்.” – ஐக்கிய முன்னணி தந்திரம், டிமிட்ரோவ்

டிமிட்ரோவ் கூறியுள்ளவாறு கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தர்ப்பவாதத்தாலும், திருத்தல்வாதத்தாலும், புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகளின் பிளவுகளினாலும், பாட்டாளிவர்க்கத்திற்கான ஒரு வலுவான புரட்சிகர கட்சியின் வெற்றிடத்தினாலுமே இன்று இந்துத்துவ பாசிசம் அரியணை ஏறியுள்ளது. ஆகவே அன்னிய நிதிமூலதன அடிமைத்தனத்திலிருந்தும், இந்துத்துவ பாசிச ஆட்சியிலிருந்தும் நம் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கவும் சுதந்திர தேசத்தை கட்டியமைக்கவும் உடனடியாக புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைத்து பாசிசத்தை முறியடிக்க வேண்டும்.

பாசிசம் நிரந்தரமானதல்ல...

வரலாற்றில் பாசிசமே நிரந்தரமானது என கொக்கரித்தார்கள் ஹிட்லரும், முசோலினியும். ஜெர்மன் ரீச்ஸ்டாக் பாராளுமன்றத்தை எரித்து சர்வாதிகாரியான ஹிட்லரின் பாசிசம் ரஷ்ய செம்படையால் தோற்கடிக்கப்பட்டதுதான் வரலாறு. இத்தாலியில் முசோலினி பாசிச எதிர்ப்புக்குழுவால் அடித்தே கொல்லப்பட்டதுதான் வரலாறு. வரலாற்றில் எந்த ஆட்சிமுறையும் நிரந்தரமானது அல்ல. மாற்றமே, வளர்ச்சியே நிரந்தரம். பெரும்பான்மை மக்களுக்கான வளர்ச்சியை நோக்கி நடைபோடாத எந்த உற்பத்திமுறையையும் ஆட்சிமுறையையும் காக்கும் மந்திரக்கோல் இதுவரை வரலாற்றில் வரவில்லை.

 செங்கோல் என்பது பேரரசின் எதேச்சதிகாரம் மட்டுமல்ல, அது நால்வர்ண ஷத்ரிய தர்மத்தின்படி படிநிலையை நிறுவுகிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் கரங்களாலும் வியர்வையினாலும் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில், மோடியின் நடுங்கிய கரங்களால் நிறுவப்பட்ட இந்துராஜ்ஜியத்தின் செங்கோல் வீழ்ந்துதான் தீரும்!

துணை நின்றவை

  1. https://youtu.be/wM4OoFUxi9Y, Journalist N Ram Exclusive: ‘Involvement Of Mountbatten & Rajaji In Sengol Ceremony Is Made Up’
  2. https://fb.watch/l7VHbu_4iH/, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் காத்திருந்த அதிர்ச்சிகள், அதிர்ந்து போன சு.வெங்கடேசன் எம்.பி!
  3. https://time.com/6282819/india-parliament-narendra-modi-controversy/
  4. பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு - தொகுப்பு நூல்
  5. நவீன பாசிசம் கருத்துகளும் வாதங்களும் - தொகுப்பு நூல்
Pin It