08.10.2017 ஞாயிற்றுக் கிழமை. NPR மகால், கூடுவாஞ்சேரி, சென்னை
மாநாட்டுத் தீர்மானங்கள்
உலகு தழுவிய அன்பென்னும் மைத்ரியையும், உயிர் கொலைகளுக்கு எதிரான அகிம்சையும், ஓருலக உறவையும் உலகிற்கு போதித்த பகவன் புத்தரை இம்மாநாடு நன்றியோடு வணங்குகிறது.
மேலும் புத்தரின் போதனைகளையும் வழிக்காட்டுதல்களையும் மக்களிடையே கொண்டு செல்லும் மேன்மையான நோக்கில் கூட்டப்பட்ட இம்மாநாட்டிற்கு வருகைத் தந்த அனைவருக்கும் பகவன் புத்தரின் பெயரால் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது இம்மாநாடு.
இரங்கல்
1. பண்டிதர் அயோத்திதாசரின் நேரடி சீடர் ஐயாக்கண்ணு புலவர் அவர்களின் மகனும், தங்கவயல் பௌத்த சங்கத்தின் தலைவருமான உபாசகர் ஐ.உலகநாதன் அவர்களின் மறைவிற்கும்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் கூட்டமைப்புகளின் தலைவரும், இந்தியக் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பெரியவர் டாக்டர் சேப்பன் அவர்களின் மறைவிற்கும்
இந்துத்துவ வாதிகளின் தொடர் பொய் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியதால் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் நாரயன் தபோல்க்கர் ,கோவிந் பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ்வர் ஆகியோரின் மறைவிற்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி அறிவிப்புகள்
2. மிக நீண்டகாலம் அழிக்கப்பட்டிருந்த பௌத்தத்தை இந்தியத் துணைக்கண்டத்தில் துளிர்த்தெழச் செய்து மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பௌத்த மறுமலர்ச்சியாளர்கள் க.அயோத்திதாசப் பண்டிதர், அனகாரிக தர்மபாலா, ம.சிங்காரவேலர், பேராசிரியர் லட்சுமி நரசு, தங்கவயல் க.அப்பாதுரையார், சாசனத்தாயகா முருகேசம், பெரியசாமி புலவர், ஐயாக்கண்ணு புலவர் ஆகியோருக்கும்.
இந்திய துணைக்கண்டத்தின் வடபுலத்திலிருந்து இந்தியா முழுமைக்கும் பௌத்த மறுமலச்சியை உருவாக்கி பௌத்தத்தை தழைக்கச் செய்த போதிசத்துவர் அம்பேத்கர் அவர்களுக்கும் இம்மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கொடிக் குழுத் தலைவராக இருந்து இந்துத்துவ சக்திகளின் சதிகளை முறியடித்து இந்தியக் கூட்டமைப்பின் அரச கொடியில் அசோக தம்ம சக்கரத்தினை பொறித்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் அவரது குறிக்கோளுக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களுக்கும் இம்மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
4. இந்து மதத்திலிருந்து புத்தமதம் தழுவிய பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டினை மீட்டுத் தந்த ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் மறைந்த பிரதமர் வி.பி.சிங் ஆகியோருக்கு இம்மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
கோரிக்கைகள்
5. இந்தியக் குடிமக்கள் யாவரும் தமது மனச் சான்றின்படி எந்த ஒரு மதத்தினையும் சுதந்திரமாகவும், பயமின்றியும், பாதுகாப்புடனும் தேர்வு செய்துக் கொள்ளவும் கடைபிடிக்கவும் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையான மத சுதந்திர உரிமையை மைய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த அடிப்படை உரிமைக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களை அடியோடு ஒழிக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
6. இந்திய அரசமைப் சட்டம் பிரிவு 25ல் விளக்கப் பகுதி பிரிவு 2 நீக்கப்பட வேண்டும்.
பிரிவு 25 Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly
என்று சேர்க்கப்பட்டுள்ள இந்த விளக்கம் இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. சீக்கியம், ஜைனம் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்களை இந்து மதத்தின் பிரிவாக கருதுவது அம்மதங்களின் தனித் தன்மையினை கேலி செய்வது மட்டுமின்றி, அம்மதங்களின் தற்சார்பு உரிமையை ஒடுக்குகிறது. எனவே மேற்கண்ட இந்த விளக்கப் பிரிவு அரசமைப்புச் சட்டத்திலிருந்து முற்றாக நீக்கப்பட்டு அனைத்து மதங்களும் தற்சார்புடனும், மாண்புடனும் நிலவுதற்கு இந்திய அரசு தேவைப்படும் திருத்தங்களை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.
7. இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 26ல் வழங்கப்பட்டுள்ள Freedom to manage religious affairs எனும் அடிப்படை உரிமையை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
8. இந்தியா என்பது மதச் சார்பற்ற நாடு என்பதை நமது அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது. அதை பாதுகாக்கவும், இந்து மத அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுருத்தல்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்கவும், மதச் சுதந்திரத்தைப் பேணவும் தகுந்த பாதுகாப்புகளை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
9. புத்தர் நிறைவெய்திய இடமான புத்தகயாவை சர்வதேச புனிதத்தளமாக அறிவிக்கை செய்ய வேண்டும். புத்தர் தமது வாழ்நாளில் மக்களுக்கு தமது தம்மத்தைப் போதிப்பதற்காக முழு நிறைவெய்திய இடமான நிரஞ்சனா நதிக்கரையோரம் அமைந்துள்ள கயை நகரம் புத்தர் நிறைவெய்தியக் காரணத்தினால் புத்த கயை என்று அழைக்கப்படுகிறது. அந்நகரில் பல பௌத்த நாடுகளைச் சேர்ந்த அரசு அமைப்புகள் தமது பண்பாட்டுக் கிளைகளை நிறுவியுள்ளதின் வாயிலாக அந்நகரம் சர்வதேச தன்மையைப் பெற்றுள்ளது. மேலும் உலகம் முழுமைக்கும் வாழும் பௌத்தர்களுக்கு புனிதத்தளமாகவும் அது விளங்குகிறது. எனவே அந்நகரை சர்வதேச புனிதத்தளமாக அறிவித்து அதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
10. மேலும் புத்தகயை விகரையின் அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ள பௌத்தர்கள் அல்லாதவர்களை வெளியேற்றி உண்மையாக புத்தரின் தம்மத்தைப் பின்பற்றுவோரும், அதை பரப்பும் முனைப்பில் இருப்போரையும் மட்டுமே அந்த அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என பீகார் மற்றும் மத்திய அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
11. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக மத சண்டைகளின் பேரால் அதுவரை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த புத்த விகாரைகள் மற்றும் கோயில்களை இந்துக் கோயில்களாக மாற்றியுள்ளர். இந்தக் கொடுமை இந்தியா முழுமைக்கும் நடந்துள்ளது. எனவே அப்படி மாற்றப்பட்ட கோயில்களைப் பற்றின வெள்ளையறிக்கையை இந்தியத் தொல்லாய்வு நிறுவனத்தில் பட்டியலில் உள்ளபடி அறிவிக்கை செய்ய வேண்டும்.
12. புத்தகயையில் உள்ள விஷ்ணுபாதம் கோயில், திருப்பதி எம் பெருமான் கோயில், ஸ்ரீரங்கம் சயனப் புத்தர் ஆலயம், திருவள்ளூர் வீர ராகவர் ஆலயம் என்னும் வீர ராகுலர் விகாரை, காஞ்சி காமாட்சி அம்மன் எனும் தாராதேவி திருக்கோயில், என ஏராளமான திருக்கோயில்கள் புத்தர் விகாரைகளாகவும், பௌத்த பெண் தெய்வக் கோயில்களாகவும் இருந்தவை. அப்படி இந்தியா முழுமைக்கும் இருந்தவை இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே இக்கோயில்களை மீட்டுக் கொள்ளும் உரிமை பௌத்தர்களுக்கு உள்ளது என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது. எனவே மேற்கண்ட கோயில்களை மீட்டு மீண்டும் புத்த வழிப்பாட்டைக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
13. தமிழக அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தரின் சிலைகள் மற்றும் பௌத்த தெய்வங்களின் சிலைகளை அருங்காட்சியகங்களில் வைப்பதின் மூலம் மக்கள் பார்வையிலிருந்து அவை விலக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட சிலைகள் அவை கிடைத்த இடங்களில் முறையாக சிறு விகாரைகள் கட்டி அவற்றை அங்கே நிர்மாணிக்க வேண்டும் என்றும், மக்கள் வழிபாட்டிற்கு அவற்றை மீண்டும் கொண்டு வர உதவ வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
14. மத்திய மற்றம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறுபான்மையினர் ஆணையங்கள் பௌத்தர் மற்றும் ஜைனர்களை முற்றாக புறக்கணித்துள்ளன. எனவே இந்த சிறுபான்மையினர் ஆணையங்கள் கலைக்கப்பட்டு, அவை நேரடியாக பௌத்த சிறுபான்மையினர் ஆணையம், ஜைன சிறுபான்மையினர் ஆணையம், கிறுத்துவர் சிறுபான்மையினர் ஆணையம், இசுலாமியர் சிறுபான்மையினர் ஆணையம் என பிரிக்கப்பட்டு ஓர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறையாக மாற்றப்பட வேண்டும் எனவும், பௌத்தர்கள் தமது சிறுபான்மையின அரசியல் மற்றம் பொருளாதார நலன்களை பெறுவதற்கும் தகுந்த சட்டப்பாதுகாப்புகளை உருவாக்கித் தரவேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்திக் கோருகிறது.
15. மத்திய மாநில அரசுகள் சிறுபான்மையினர் நல நிதியத்தை உருவாக்கி பௌத்த சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது சமூக அரசியல் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் கல்வி மற்றும் மருத்துவ அமைப்புகளை உருவாக்கி மக்களுக்குப் பணியாற்றும் வகையிலும் தேவைப்படும் நிதி உதவிகளை மேற்கண்ட நிதித் தொகுப்பிலிருந்து பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், வங்கிக் கடன்களைப் பெறுவதில் இவர்களுக்கு சிறப்பு முன்னுரிமையை அளிக்க வகை செய்யும் படியும் மத்திய அரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
செயல்திட்ட தீர்மானங்கள்
16. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து புத்தமத அமைப்புகளும் ஒரு குடையின் கீழ் திறள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளிலிருந்து தமிழகத்திற்கென ஒரு தலைமை பிக்குவும் அவருக்குத் துணையாக நிர்வாக அமைப்பு முறையும் உருவாக்கப்பட வேண்டும். இந்த நிர்வாக அமைப்பின் மூலமாக இந்தியாவிலுள்ள புத்த மத சங்கங்களையும், உலகின் பிற நாடுகளில் உள்ள புத்த மத சங்கங்களோடு தொடர்பையும் ஐக்கியத்தையும் உருவாக்க இந்த அமைப்பு முயல வேண்டும்.
17. தமிழகத்தில் புத்த தம்மத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்கென பெரும் எண்ணிக்கையிலான பிக்குகளும், அனகாரிக்குகளும், களப்பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள். எனவே பிக்குகளை அங்கீகரிப்பது, அவர்களைப் பயிற்றுவிப்பது, அவர்களுக்கான பிற உதவிகளைச் செய்வது ஆகியவற்றை மேம்படுத்தவும் மேற்கண்ட பிக்குகள் மற்றும் அனகாரிக்குகள் குறித்த புதிய விதிமுறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும். அவை விநயப்பீடகத்தின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து நவீன காலத்திற்கான மாற்றங்களை உள்வாங்கியதாகவும் இருக்க வேண்டும்.
18. தமிழகத்தில் மேற்கண்டவாறு உருவாக்கப்படும் பிக்குகள், அனகாரிக்குகள், மற்றும் களப்பணியாளர்களுக்கு அவர்கள் மக்களிடையே சென்று பணியாற்றும் வகையில் தேவைப்படும் போக்குவரத்து பொருளாதார உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த சங்கத்தின் மூலம் ஒரு சிறப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த நிதியத்தில் பௌத்த அன்பர்களும் ஆர்வலர்களும் தம்மால் இயன்ற உதவிகளை செய்து நிறைவேற்ற வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
19. மேற்கண்ட அமைப்பில் உருவாக்கப்படும் பிக்குகள் அனகாரிக்குகள், மற்றும் களப்பணியாளர்கள் மக்களிடையே புத்தரின் தம்மத்தை பரப்புவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தாலும் ஒரு மதமாக அதைப் பரப்புவதை முன் நிபந்தனையாக வைக்கக்கூடாது. அதற்கு மாறாக ஒவ்வொரு கிராமத்திலும் மாலை நேரப் பள்ளிகள் , மருத்துவ முகாம்கள், கிராம தற்காப்புக் கலைகள், சுற்றுப்புறச் சூழல் தூய்மை மேம்பாடு, மரங்களை வளர்த்தல், மக்களுக்குப் பொருளாதார மேம்பாட்டு ஆலோசனைகளை அளித்தல், மற்றும் சக உயிர்களிடத்தில் அன்பை பராமரித்தல் ஆகியவற்றினை தொடர்ந்து முன்னெடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
20. சமூகத்தில் மக்களிடையே உருவாகியிருக்கும் சாதி மற்றும் மத அடிப்படையிலான பதட்டங்களைத் தனித்து மக்கள் மன அமைதி பெறவும், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் தேவைப்படும் மன பயிற்சிகளையும், புத்தர் போதித்த தியான முறைமைகளையும் மக்களிடையே பயிற்றுவிக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை மக்களுக்குத் தொடர்ந்து உணர்த்த வேண்டும்.
21. இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மது, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்ற கொடுமையான சூழலில் அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுவிக்கவும் அதன் மூலம் குடும்பங்களில் அமைதியை உருவாக்கவும், தேவைப்படும் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
22. தமிழகத்தில் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கும் மற்றும் சிதலமடைந்து கிடக்கும் புத்தரின் சிலைகளையும், புத்த சிறு தெய்வங்களின் கோயில்களையும் அடையாளங்கண்டு, அவற்றை ஒரு தகவல் தொகுப்பாகத் தொகுத்து வைக்கவும் அவற்றுக்கான வரலாற்று ஆதாரங்களைத் திரட்டி உலகின் முன் கொண்டு வரவும் தேவைப்படும் முயற்சிகளையும் இணைய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட புத்தரின் சிலைகளைக் கொண்டு சிறு விகாரைகளையும் கோயில்களையும் கட்டுவதற்கு பௌத்த அன்பர்கள் முன்வர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
23. ஒவ்வொரு மாவட்டத்திலும் பௌத்த தம்ம பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். திரிசரணம், பஞ்சசீலம், எண்வழிப்பாதை ஆகியவற்றை பயிற்றுவிப்பதுடன் அம்பேத்கர் எழுதிய புத்தமும் அவர் தம்மமும் மற்றும் பண்டிதர் எழுதிய ஆதிவேதம் ஆகியவற்றினை கிராமங்கள் தோறும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான பயிற்சிகளை அளித்தல் வேண்டும்.
24. தமிழகத்தில் உருவாக்கப்படும் தலைமை அமைப்பின் மூலமாக சிறு துண்டு பிரசுரங்கள், சிறு வெளியீடுகள் மற்றும் இணைய வழியிலான ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றினை மேற்கொள்வதற்கும், புத்த தம்ம போதனைகள் தமிழில் கொண்டு வருவதற்குமான அறிஞர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். மட்டுமன்றி தமிழக பௌத்த வரலாற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும் பணியையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
25. பௌத்த தம்மத்தை இளைஞர்கள் மேற்கொள்ளும் வகையில் பௌத்த இளையோர் கழகம், Young People’s Buddhist Association (YPBA), எனும் அமைப்பினை உருவாக்கி இளையோர்கள் மூலமாக இளையோர்களுக்கு தம்ம பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
26. பாபாசாகேப் டாக்டர். அம்பேட்கர் காட்டிய பாதையில் தீண்டாமையிலிருந்து விடுபட்டு சம மரியாதை மற்றும் சம உரிமை பெற பௌத்தம் திரும்புதல் எனும் வழியில் மக்கள் மறுமலர்ச்சி் தடம் தொடர்ந்து பணியாற்றும் என்று இம்மாநாடு வாயிலாக அறிவிக்கை செய்யப்படுகிறது.
அறைகூவல்
இந்தியத் துணைகண்டத்தில் ஆசிய ஜோதி பகவான் புத்தர் உருவாக்கிய தம்மப்பேரொளி இத்துணைக்கண்ட மக்களையும் மற்றும் உலகத்தின் ஏராளமான நாடுகளைச் சேர்ந்த மக்களையும் நல்வழிப்படுத்தி சமூகப் பொருளாதார வாழ்வில் ஏற்றத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கியிருக்கிறது. அந்த நற்சூழல் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் இம்மாநாட்டின் பணிகளோடு தங்களின் கைகளைக் கோர்க்க வேண்டும் என அனைவருக்கும் அறைகூவல் விடுத்து அன்பெனும் ஒரு குடையின் கீழ் உலகத்தினை கொண்டு வரும் நோக்கில் அணிவகுப்போம் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.